இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும், உலக சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய அடிப்படை இலக்குகளை மையப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பில் 193 நாடுகள் இணைந்துள்ளன. அதில் இலங்கையும் ஒன்றாகும்.
இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ உறுப்புரிமையை 1955 டிசம்பர் 14 ஆம் திகதி பெற்றுக்கொண்டது. அன்று முதல் இன்று வரை 60 வருடங்களுக்கு மேற்பட்ட இந்தக் காலப்பகுதியில், இந்த அமைப்பின் செயற்பாடுகள் இலங்கையில் நடைபெறுகின்றன. 202-204, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரியில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக் காரியாலயம் அமையப் பெற்றுள்ளது.
இப்போது இலங்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் 21 கிளை அமைப்புக்கள் இயங்குகின்றன. இந்த அமைப்புக்கள் இலங்கை அரசு, பொது மக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகள் மற்றும் நோக்கங்களுக்கேற்ப செயற்படுகின்றன.
இதுவரையிலான பயணத்தின் முக்கிய விடயங்கள்
1948 – ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), உலக தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பின் கிளைகள் இலங்கை தொடர்பில் ஸ்தாபிக்கப்படல்.
1952 – உலக சுகாதார அமைப்பின் (WHO) இலங்கைக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் ஸ்தாபிக்கப்படல். இதன் மூலம் இலங்கையின் சுகாதார துறை முன்னேற்றத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
1954 – இலங்கை, உலக வங்கி குழுவின் (WBG) உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளல். இதன் மூலம் இலங்கைக்கான முதல் கடன், எபர்டீன் – லக்சபான மின் உற்பத்தி செயற்றிட்டத்துக்காக 1954 இல் வழங்கப்பட்டது.
1955 – 1955 டிசம்பர் 14 ஆம் திகதி, இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ உறுப்புரிமையை பெற்றுக்கொண்டது.
1956 – அப்போதைய இலங்கை பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க முதன் முறையாக 11 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் மாநட்டில் உரையாற்றினார்.
1967 – ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இருந்த யூ தான், இலங்கைக்கு 1967 ஏப்ரல் 10 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார். அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) இலங்கையில் ஆரம்பமானது.
1968 – உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் (WFP) இலங்கையில் செயற்படத் தொடங்கியது.
1969 – ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் (UNFPA) இலங்கையில் ஆரம்பிக்கப்படல்.
1973 – யுனிஸெப் அமைப்பு இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்படல்.
1978 – விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) ஸ்தாபிக்கப்படல்.
1982 – முதலாவது யுனெஸ்கோ உலக மரபுரிமைகளாக இலங்கையின் அநுராதபுர புனித நகரம், பொலன்னறுவை புனித நகரம் மற்றும் சீகிரிய பிரகடனப்படுத்தப்படல். இப்போது இந்தப் பட்டியலில் கலாசார முக்கியத்துவம் வாய்நத 03 இடங்களும், இயற்கை மரபுரிமைகள் இரண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவையாவன, 1988 இல் பிரகடனப்படுத்தப்பட்ட காலி கோட்டை உயர்மேடை உள்ளிட்ட காலி நகரம் மற்றும் கண்டி புனித நகரம், 1991 இல் பிரகடனப்படுத்தப்பட்ட ரன்கிரி தம்புள்ளை விகாரை, 1988 இல் பிரகடனப்படுத்தப்பட்ட சிங்கராஜ வனம் மற்றும் 2010 இல் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையின் மத்திய மலைநாடு என்பனவாகும்.
1990 – புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச நிறுவனம் (IOM) ஸ்தாபிக்கப்படல்.
1998 – ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிட்டங்கள் தொடர்பிலான அலுவலகம் (UNOPS) ஸ்தாபிக்கப்படல்.
2001 – UNAIDS நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்படல். இதன் மூலம் 2030 ஆகும்போது இலங்கையிலிருந்து எயிட்ஸ் நோய் முழுமையாக இல்லாமலாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
2004 – சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, பொருள் மற்றும் ஆள் உதவிகளை வழங்கல்.
2005 – ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கொஃபி அனானின் இலங்கை விஜயம்.
2007 – இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வடகிழக்கு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அகதிகளுக்கும் மனிதாபிமான உதவி வழங்கல்.
2009 – ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரான பேன் கீ மூனின் இலங்கை விஜயம்.
2014 – 15 ஆவது சர்வதேச இளைஞர் மாநாடு கொழும்பில் நடைபெறல்.
2015 – இலங்கையின் புத்தாயிரம் அபிவிருத்தி இலக்கை அடைவது தொடர்பிலான தகவல் பரிசீலனை
இலங்கைக்கு கிடைத்த ஒத்துழைப்புக்கள்
அன்று முதல் இன்று வரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெருமளவு அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரனை கிடைத்துள்ளது. அத்தோடு, இலங்கையர்களின் கல்வி மற்றும் சுகாதார மட்டத்தை முன்னேற்றுவதற்கும், பொருளாதார சமூக முன்னேற்றத்தை அடைவதற்கும், இந்த அமைப்பு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
இலங்கையர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாகவும், இந்த அமைப்பு தலையிட்டுள்ளது. யுத்த சூழ்நிலை மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின் பின்னர் மீளவும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில், ஐக்கிய நாடுகள் சபை பெருமளவு பணிகளை மேற்கொண்டுள்ளது.
இப்போது இந்த அமைப்பின் ஊடாக அரச அனுசரனையுடன், வேறு அமைப்புக்களளுடன் ஒத்துழைத்து, பல்வேறு நிகழ்ச்சிகள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு வழங்குகின்ற வறுமையை ஒழித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டம் எனப்படும் EU-SDDP நிகழ்ச்சித்திட்டம், காடுகள் அழிவதை தடுப்பதற்கான UN-REDD நிகழ்ச்சித்திட்டம் என்பன அவற்றில் சிலவாகும்.
சர்வதேச பேண்தகு அபிவிருத்தி இலக்குகள்
ஐக்கிய நாடுகள் சபை 2015 செப்டம்பர் மாத்தில் நிறைவேற்றப் பார்த்த சர்வதேச நீடித்து நிற்கும் 17 அபிவிருத்தி இலக்குகளை, இலங்கை அடைவதற்கு இந்த அமைப்பு அனுசரனை வழங்குகின்றது. அந்த இலக்குகளாவன, வறுமை ஒழிப்பு, பசியை இல்லாதொழித்தல், சிறந்த சுகாதார மற்றும் சேமநலன், சிறந்த கல்வி, ஆண் – பெண் சமத்துவம், சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கல், அனைவருக்கும் நீடித்து நிலைக்கும் சக்தி வளங்களை அணுகுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பான தொழில் சூழலை உருவாக்கல், கைத்தொழில், அடிப்படை வசதிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை முன்னேற்றல், நாடுகளுக்கு இடையில் வருமானங்கள் பகிரப்படும் ஏற்றத்தாழ்வை குறைத்தல், நீடித்து நிலைக்கும் நகரங்கள் மற்றும் குடியிருப்புக்களை ஏற்படுத்தல். உத்தரவாதமுள்ள நுகர்வு மற்றும் உற்பத்தி, காலநிலை மாற்றத்துக்கு நடவடிக்கை எடுத்தல், கடல், கடல் வள மற்றும் நீர்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல், உயிர் பல்வகைமை மற்றும் உயிரியல் தொகுதிகளை பாதுகாத்தல், சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் நீதியை ஏற்படுத்தும் பொறிமுறையை பலப்படுத்தல், இந்த இலக்குகளை சாத்தியப்படுத்துவதற்கு பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்கல் மற்றும் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்படுதல் என்பனவாகும். 2030 ஆம் ஆண்டாகும்போது இந்த இலக்குகள் அடையப்படவுள்ளன.
ஹிமாலி அநுருத்திகா
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்