இலங்கை வரலாற்றில் பதிவுசெய்யப்படாத வகையில் பாரியதோர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் வாழ்வதற்கு சாத்தியமற்ற பூமியாக இலங்கை மாறிவிடக்கூடாது என்பதற்காக இனிவரும் தலைமுறை நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் சேர்த்து அரசாங்கத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக பொதுமக்கள் போராட ஆரம்பித்துவிட்டனர்.
என்னசெய்தாலும் பொறுத்துக் கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவார்கள் என்ற கண்ணோட்டத்தில் இதுவரையிலும் இலங்கையை பார்த்து வந்தனர். முதல் முறையாக மக்கள் தங்கள் சக்தியை நிரூபித்துவிட ஆயத்தமாகியுள்ளனர். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். தற்போது ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தினை மிகவும் சரி எனவோ அல்லது தவறு என்றோ வாதிட வேண்டிய சூழல் இப்போது உருவாகிடவில்லை ஆனால் அது ஜனநாயக நாட்டின் உரிமைகளில் ஒன்று என்று கூறலாம்.
மக்கள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை “நாட்டில் இப்படியானதோர் நிலைமை உருவாக காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும்” அதன் சாத்தியப்பாடு பற்றி ஆராய முனையவில்லை. என்றாலும் அதற்கடுத்து? எந்தவொரு போராட்டமும் முறையான மிகச் சரியான பதிலையும் தீர்வையும் எதிர்பார்த்து முன்னெடுக்கப்படாவிட்டால் அதனால் எத்தகைய நன்மை விளையும் என்பது கூறமுடியாது.
மக்கள் கோரிக்கை சரி என்றால், அதன் பின்னர் அந்த இடத்திற்கு யார் வரப்போகின்றார்கள்? இலங்கையின் வரலாற்றுக் கடப்பினை உற்று நோக்கும் போது என்றோ இந்நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறியிருக்க வேண்டும் ஆனால் அது நடக்காமல் போனதற்கு அரசியலும், ஆட்சியாளர்களுமே காரணம் என்பது தெளிவாகிவிடும்.
இலங்கையின் அண்மைக்கால அரசியலில் ஒரு கண்துடைப்பு அல்லது திசைமாற்றும் நாடகம் மிக நேர்த்தியாக செய்யப்பட்டு வந்தது. ஏதேனும் பிரச்சினை உருவாகும் போது சட்டென்று பதவியை பறிப்பதும், நபரை மாற்றுவதும், இதனால் தீர்வுக்கு பதில் அந்தப் பிரச்சினையை தள்ளிப்போட்டு மறக்கடிக்கும் யுக்தி இனியும் அது நடக்குமா?
மக்களின் கோரிக்கைகள் இனியோர் அரசியல் சாக்கடை உருவாகாத வண்ணம் இருக்க வேண்டியது அவசியம். அதற்காக போராட்டத்தின் முக்கிய கோரிக்கையோடு ஜனநாயகத்தை பாதிக்காத அரசியல் உருவாக வேண்டும் என்பதும் முக்கியம் பெறுகிறது.
20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் இலங்கைக்கு பொருத்தமானதா? அதனை முற்றாக நீக்க வேண்டும் என்பது முக்கியம். ஜனாதிபதியின் உச்சபட்ச அதிகாரங்களை குறைத்து அவற்றை நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டும். சுயாதீனமான ஆணைக்குழுக்கள் அவசியம், நாட்டின் நீதித் துறை சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதும் முக்கியம்.
உண்மையில் இந்த நாட்டுக்கு இத்தனை பெரிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் அவசியம்தானா? நாட்டின் அரசாங்கத்தை சிறியதாக்க வேண்டும். அவசியமற்ற தேவைக்கு அதிகமாக அரசியல்வாதிகளுக்கு வாரி வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்பட அல்லது நிறுத்தப்பட வேண்டும். நாட்டில் காணப்படும் அவசியமற்ற அல்லது மக்களின் பணத்தை சுரண்டும், நட்டத்தில் இயங்கும் துறைகளை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும்.
உலகத்தோடு ஒன்றிப்போகும் கல்வித் திட்டங்கள் கொண்டு வர வேண்டும். நாட்டின் பொருளாதாரம் என்பது தான்தோன்றித்தனமான முடிவுகளை கொண்டதாக இல்லாமல் அதற்காக விஷேட வல்லுனர்கள் குழுக்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுதல் அவசியம் அதற்காக துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும்; சுதந்திர வர்த்தக திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். நாடாளுமன்றத்திற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதும், பரம்பரை அரசியல் முறைமையும் இல்லாமல் ஆக்கப்பட்டு, குறைந்தபட்ச கல்வித்தகைமையும், அமைச்சுப் பதவிகளுக்கு தகுதியும், அறிவும் துறைசார் நிபுணத்துவமும் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அனைத்து மக்களின் உரிமைகளும், மும்மொழிகளின் உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும். இனவாத அரசியல் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்பதோடு இனவாதம் பேசுதலும் கூட மன்னிப்பற்ற தண்டனையாக மாற்றப்பட வேண்டும். ஊழல் அரசியலை அழிப்பதோடு இதுவரையில் அரசியல் ஊழல்களை அம்பலப்படுத்தி ஊழல் செய்பவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்து விட வேண்டும். அரசியல்வாதிகளின் சொத்துவிபரங்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இப்படியாக கோரிக்கைகள் பலப்படுத்தப் பட வேண்டும். இப்போதைய ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் தீர்வு கிடைத்து கிடைத்து விடுமா? அடுத்து வரப்போகின்றவர் எப்படி இச்சிக்கல்களை தீர்க்கப் போகின்றார்? எதற்காக போராடுகின்றோம் தேவை என்ன என்பது பற்றிய தெளிவு அவசியம். மாற்றம் என்பது வெறும் மாறுதல் அல்ல அது தேவை எனும் அவசியம்.
மக்கள் எழுச்சிக்கு அரசியல் சாயம் படவிடாமல் இருக்க வேண்டியதும் முக்கியம். இல்லாது விட்டால் இலங்கை இன்னும் பாதாளத்திலேயே வீழுமே தவிர மீளெழ முடியாது போகும். எப்படி பார்த்தாலும் முறையான தெளிவு அற்ற போராட்டம் இறுதியில் “ச்சீ இந்தப் பழம் புளிக்கும்” கதையாகும் என்பது திண்ணம்.