Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நாங்கள் அவர்கள்! கிழக்கிலங்கைக் கரையேரங்களில் வாழ்ந்து வருகின்ற பூர்வகுடிகள் பற்றிய ஒரு பதிவு

‘நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக்கொடுத்தானே பூர்வக்குடி’ இந்த பாடல் வரிகள் இன்று உலகெங்கும் ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களின் வாழ்வில் ஒளியிழந்து பல நூறு ஆண்டுகள் ஆகி விட்டமை எத்துணை பேருக்குத் தெரியும். உலகரங்கிலும் நிலமையிதே. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இயற்கையுடன் இணைந்து அதை தன்வயப்படுத்தி வாழ்ந்து வந்த எம்மை, மனித முன்னேறுகைகளின் படிப்படியான ஈடேற்றங்கள் அனைத்தும் கால வர்த்தமானங்களுக்கு அமைய ஓர் கை பார்த்துக் கொண்டே வந்துள்ளமைதான் வரலாறு. இன்று இலங்கைக்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பல்லினத்தவரும் நாம் தான் உரித்துடையவர்கள் என்று கூறிக்கொண்டு இனத்துக்கிடை சண்டை பிடித்தாலும் சரி, அதை வைத்து வங்குரோத்து அரசியல் செய்து கொண்டு இருந்தாலும் சரி இந்த நாடு வேட்டுவரான எமக்குச் சொந்தமான எமது உத்தியாக்கள் ( முன்னோர்கள்) பாதுகாத்து வளப்படுத்திய நாடு.. நாம் சிங்களவரும் அல்லர் தமிழரும் அல்லர் முஸ்லிமும் அல்லர். நாம் வேடர்கள். இந்நாட்டின் ஆதிப்பிரஜைகள். ஆனால் பருவ காலங்களுக்கு  புகுந்து கொண்ட வரத்தினங்கள் நாடு பிடிச்சண்டையில். காலங்காலமாக இடம் பெற்ற பண்பாட்டசைவுகளுக்கு அமைய சிங்களவருடன் அண்டிய வாழ்ந்த நாம் சிங்கள மொழியையும், தமிழருடன் அண்டி வாழ்;ந்த நாம் தமிழ் மொழியையும் வரிந்து புகுத்திக் கொண்டதுதான் வரலாறு. ஆனால் இது பல நூறு ஆண்டுகளாக படிப்படியாக நடந்தேறிய செயற்பாடு.

இலங்கையின் கிழக்கிழங்கைக் கரையேரங்களில் வாழ்ந்து வந்த, வருகின்ற பூர்வகுடிகளின் நாட்டாரியலுள் ஆழ உட்புகாத ஆய்வாளர்களிளாலும், ஏனைய சமூகங்களினாலும், நாம் கரையோர வேடர்கள் அல்லது கடல் வேடுவர்கள் என அடையாளப் படுத்தப் படுகிறோம். ஆனால் இவ்வாறு தொழில் ரீதியாகவோ, புவியியல் ரீதியாகவோ அழைக்கப் படுவதை நாம் விரும்பவில்லை. இது பற்றி நான் குஞ்சப்பாவிடம் கேட்கும் போதெல்லாம் ‘சூரியன் என்றால்  அது பூமிக்கு ஒன்றுதான்’ என்பார். அதற்கு அவர் இந்த பாடலையும் அடிக்கடி பாடிக்காட்டுவார்.

‘ கண்டியோ காலியோ கொழும்போ…….. ஓ……..

செல்ல பட்டணமோ…….ஓ…….

கதிரமலையோ வேல மலையோ கணவந்தா……

உமகிரி…… கோபாலபுரி……..

குஞ்சுமப்பா கணவந்தா……

சுல்லித்தீவு….. கரடிமல…… ஆமபதி….’ (வேட்டுவ சடங்கு வழிபாடுகளின் போது பாவிக்கப்படும் வேட்டுவ வழிபாட்டுப் பாடல்.)

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழந்த வாகரை பகுதியை சேர்ந்த கடலோர பூர்வக்குடிகள்  புகைப்படவிபரம் -http://vedda.org/

பின்னர் அவர் இவ்வாறு கூறுவார். ‘ நாம இலங்கையில இருக்குற வேடர்கள் எல்லாரும் ஒண்டுதான். எங்கள கரையோர வேடர் அந்த வேடர்  இந்த வேடர் எண்டு ஆதிக்க சாதிகள் அத்துறுமங்கை (நிலைகுலைதல்) ஆக்கிப்போட்டுதுகள். நாங்க அப்புடி எல்லாம் இல்ல மன. இந்த சனங்கள் தான் நம்மள இப்புடி ஆக்கிப்போட்டுதுகள். குஞ்சப்பா இப்படிச் சொல்லக்குள்ள இந்த பாட்டுல இருக்குற மானுடவியல் பார்வைகளை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆய்வாளர்கள் கூறுகின்ற படி கடல் வேடுவர்களுக்கு ஏனையவர்களுடன் தொடர்பு இல்லை என்றால் இப்பாடல் எங்ஙனம் இருந்து தோன்றின? மேற்கில்,தெற்கில் எங்கையோ இருக்கின்ற இடங்களையும் அதன் உத்தியாக்களையும் பற்றி கிழக்கின் கரையோரத்தில் ஏதோவொரு ஒரு குக்கிராமத்தில் இருக்கும் பூர்வ குடிகளுக்கு இப்பாடல்கள் எவ்வாறு கடத்தப்பட்டிருக்கும்? இது சார்ந்தும் நான் அவருடன் வினவியதுண்டு. அதற்கு அவர் இவ்வாறு கூறுவார். ‘நாங்க தொழிலுக்காகவும், மத்தாக்களுட தொல்லைக்காகவும் தான் மனே இஞ்சால வந்த. வேடர்கள் ஆன நமக்கு இந்த சனங்கள் போல ஆராவது கரச்சல் தந்தா நாம அந்த இடத்துல இருக்க மாட்டம். நம்மட ஆக்களுக்கு இந்த சச்சரவுகள் சரிவராது. அப்புடி படிப்படியாதான் நாம இஞ்சால வந்து சேர்ந்த.’ என்பார்.

கிழக்கிலங்கையில் வாழ்கின்ற எமக்கு பெரும்பாலான தொல்லை தருபவர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இன்று அதன் பட்டியலில் ஏனைய இனத்தினரும் சேர்ந்து  கொண்டு விட்டனர். ஆரம்பத்தில் எம்மை எமது கலை, பண்பாட்டு ரீதியில் நெருக்கினர். போர் கால இடப்பெயர்வுகளின் பின்னர் நில ஆக்கிரமிப்பினை படிப்படியாக முன்னெடுத்துக் கொண்டு வந்து,  நாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த கிழக்கு கரைப் பகுதிகளான மூதூர் பிரதேசத்திற்குட்பட்ட உல்லக்குளம் கிராமத்தை அண்டிய 200 ஏக்கர் வளமான காணிகள் ஆதிக்க சாதிகளினால் அபகரிக்கப் பட்டுள்ளன. வெருகல் உப்பூறல் பிரதேசத்திற்குட்பட்ட எமது அதிமுக்கிய பூர்விக தளமான மாவடியூற்று நிலப்பிரதேசமானது தாகிப் நகர் என முஸ்லிம் கிராமமாக்கப் பட்டுள்ளது. கட்டைப்பறிச்சான் பிரதேசத்திற்குட்பட்ட சந்தனவட்டை, இலக்கந்த, பாலை வனக்குளம், சாலையூர் ஆதிகிராமங்கள் பலவந்தமாக ஆதிக்கவாதிகளால் அதன் இயற்கையை சீர்குலைப்புச் செய்து கொண்டு பலவந்தமாக தமது ஆதிக்கத்தின் கீழ் சுருட்டி எடுக்கப் பட்டுள்ளது. இன்னும் சொல்வதற்கு எத்துனையுண்டு.

மட்டக்களப்பின் கடலோர பகுதியில் வாழும் ஆதிக்குடி சமூகத்தினர்  வறுமையில் வாடுவதுடன்   ஊட்டச்சத்து குறைபாடு  போன்ற காரணிகளும் இந்த சமூகத்தனரை அதிகமாக பாதித்துள்ளது -புகைப்படவிபரம் -http://vedda.org/

இன்று நாம் அமைப்பு ரீதியாக ஒன்று சேர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எமது பின்வாங்காத காத்திரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றமை இலைமறை காயாகவே வெளிவராமலுள்ளது. எம்மை அமைப்பாக பதிவு செய்வதற்கே ஒன்றரை வருடமாக இழுத்தடித்தார்கள். இருந்தும் இன்றும் ஆதிக்கத்துக்கு எதிராக பின்வாங்காத தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதும், இவ்வாறான இக்கட்டான சூழ் நிலைகளைத் தமச்சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக பேரினவாதம் எமக்கு உதவுவதான பாசாங்கு செய்து கொண்டு எம்மை அவர்களின் கீழான பூர்வகுடிகளாக அடையாளம் காட்ட எத்தணித்துக் கொண்டு இருப்பதும் இங்குதான் ஈடேறிக் கொண்டு இருக்கின்றன.

சில நேரங்களில் நான் குஞ்சப்பாவிடம் வினவுதுண்டு எமது ஆதி நிலங்கள் எவ்வாறு அவர்களிடம் போனதென்று. அதற்கவர் ‘ மன இவனுகள் எல்லாம் அந்த நேரம் நம்மட ஆக்களுட்ட வந்து நிண்டு   இந்த பருவத்துக்கு மட்டும் கொஞ்சம் பயிர் செய்யலாமா எண்டு கேட்பானுகள். நம்மட ஆக்களும் பாவத்துக்காக ஒத்துப் போய் குடுத்திருவாங்க. இது கண காலமா நடந்து வந்த. இப்ப கொஞ்சக் காலத்துக்குள்ளதான், வன்செயல் நேரத்துலதான் எல்லாத்தையும் இப்புடி கண்கெட்ட வேல செய்றானுகள்.’ இவ்வாறு பதிலளிப்பார். இது முற்றிலும் உண்மை கூட. போலித் தமிழ்த்தேசியமும், அதனூடே முகிழ்ந்த வன்செயல் ஈடேற்றங்களில் அறுவடைகளும் இவ்வாறுதான் இன்றும் 20 வருடங்கள் எம்மை பின் தள்ளியே வைத்துள்ளமையை யாராவது மறுக்க முடியுமா?

குஞ்சப்பா சொல்லுவார் ‘மனே இந்த பாவிகள் எல்லாம் என்னவோல்லாம் செய்றானுகள் அதுகள பொறுத்துக் கொண்டாளும், இந்த காடுகள, குளங்கள, கடல் வளத்த படுத்துற பாடுகளத்தாண்டா பாத்தும் கேட்டும் வாழ ஏலுதில்ல. வெள்ளக்காரன் இருக்கக்குள்ள கூட இப்புடி அத்துறுமங்கப் படுத்தல. அந்நேரம் எங்களுக்குள்ள ‘பட்டாங்கட்டி’ பட்டம் எடுத்தவருதான் தலைவர். அவருக்கு வெள்ளக்காரன் சம்பளமும் கொடுத்தவன். அவருட பேச்சுக்குதான் எல்லாரும் கட்டுபட்டு நடப்பம். ஒரு நேரத்துக்கு கிழங்கு எடுக்குற பருவம் வந்தா அவருட நடவடிக்கைகள் அப்புடி இரிக்கிம். நாங்க கவலக்கிழங்கு, அல்லக் கிழங்கு, ஒல்லிக் கிழங்கு, பண்டிக்கிழங்கு எண்டு ஏகப்பட்டதுகள் எடுப்பம். கவலக்கிழங்கு எடுக்குறது கொஞ்சம் நூதனமான வேல. என்னனெண்டு கேட்டா கவலக்கிழங்குட கொடி நூலாட்டம் மெல்லிசா ரெண்டு பாகத்துக்கு மேல கிடக்கும். அத தோண்டி எடுக்க அகப்பையில பெரிய கம்ப கட்டி பாவிப்பம். ஆத நெட்டகப்ப எண்டு சொல்ற. பட்டாங்கட்டி சொல்லுவார் ஆரெண்டாலும் கிழங்கு கல்லப் போகலாம். ஆனா கிழங்க எடுத்த உடனே அதுட கொடிய கல்லின(தோண்டிய) மடுவுக்க போட்டு மூடிப்போட்டு வரனும். அப்புடி யாராவது செய்யாட்டி அவங்க அந்த பருவம் முழுக்க கிழங்கு எடுக்க போக ஏலாது. ஆனா அப்புடி குற்றம் செய்தவங்களுக்கு கிழங்கு எடுக்கப்போற மத்தவங்க ஆளுக்கொரு பங்கு கொடுக்கனும். இது பட்டாங்கட்டியோட கட்டளை.

இப்புடித்தான் காட்டுல என்ன பழம் எடுக்குற எண்டாலும் சரி அந்த மரத்துட ஓரு கந்தும் உடையாக்காம ஆயனும். ஆனா இப்ப மரத்தோட வெட்டுறானுகள். குளத்துள மீன் புடிக்கிற எண்டாலும் இப்படித்தான்டா மனே. மீன் சரியான பருவத்துக்கு வரும் வரைக்கும் ஆரும் மீன் புடிக்க போக கூடாது. சரியான பருவம் வந்ததும் பட்டாங்கட்டி அறிவிப்பார்.  இனி மீன் புடிக்க போகலாம் எண்டு. போய் ஒரு பாடு வீசினாலே போதும். நாலு ஊட்டுக்கு மீன் வரும். ஓவ்வொரு மீனும் ரெண்டு மூண்டு கிலோ வரும். இப்புடி எத்தனைய மனே சொல்லலாம். காடும் குளமும் தான் நம்மட சொத்து. நாம அதுகள்ட சொத்து. ஆன இப்ப? குஞ்சப்பா இவ்வாறான உரையாடல்களைப் பேசும் போது நான் மெய் மறந்து போயிருப்பபேன். அவரது கருத்துக்களை கேட்ட பின்னர்தான் எனக்குள் பல விடயங்கள் மீழெழும்பிக் கொண்டிருக்கும். 

பனிச்சங்கர்னி போன்ற பகுதிகளில் வாழும்  கடலோர வேடர்கள் தமிழ் பேசினாலும் வேட்டைக்காரர்களாக தங்கள் மூதாதையரின் அடையாளத்தையே இன்னும் பின்பற்றுகின்றார்கள் -புகைப்படவிபரம் -http://vedda.org/

தமது வாழ்க்கை நெறிகளிலே தவறிழைப்பவற்களுக்கு தகுந்த தண்டனை கொடுத்தாலும், அவர்களும் மனிதர்கள் நமது உறவுகள் என்னும் சிந்தனையில் எவரையும் பாதிக்காத நீதிக்கையாள்கையை நாம் இன்று எங்காவது காண முடியுமா? இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என்பது  என்னவென்று அவரின் உரையாடல்களின் மூலமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். இயற்கையை தன்வயப்படுத்தும் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதும், இயற்கையை கட்டுப்படுத்தி வாழும் வாழ்க்கை எவ்வளவு மூர்க்கத் தனமானது என்றும், அதைத் தடுக்க முடியாமலும் எதிர்க்க முடியாமலும் வாழும் காலத்திலேயே அதை உணர்ந்து கொண்டிருக்கும் வக்கற்ற தலைமுறையில் இருக்கின்றேன்  என்னும் போது மனம் கணத்துப் போய்விடும். 

இன்று இலங்கையின் ஆதிப்பிரஜைகள் எம்மை பற்றிய உரையாடல்களும், செயற்பாட்டு முன்னெடுப்புக்களும் ஏதோ எம்மை பரிதாப நோக்குடன் பார்ப்பதாகவும், வேற்று ஜந்துக்கள் போலவே காட்ட முனைவதாகவுமே அமைந்து விடுகின்றமை கண்டனத்திற்கு உரிய விடயமாகும். முதலில் நாம் எம்மை எவ்வாறு அழைக்க விரும்புகிறோம்?, எவ்வாறு வாழ விரும்புகின்றோம் என்பதை ஆய்வாளர்களோ, வரத்தினங்களோ தம் பாட்டிற்கு எடுத்துக் கூவுவதை நிறுத்திக் கொள்வதே மிகச்சிறப்பாக அமையும். காரணம் நாங்களே இந்நாட்டின் வேர்கள்: நாங்கள் அவர்கள்.

Cover: paperjewels.org

Related Articles