நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பன் ஒருவனைச் சந்திந்தேன். மலேசியாவில் உணவகம் ஒன்றில் வேலை பார்ப்பதாகச் சொல்ல, என்ன பங்காளி கபாலி படத்துல மலேசியால நம்மள கெத்தா காட்டிருக்காங்க ! அங்க தமிழன்னா செம பேர்ல என்று சொன்னதும் , தன் முழு புலம்பலையும் கொட்டினான் நண்பன். டேய் பங்கு ஹோட்டல் வேலை கஷ்டம்னு தெருஞ்சு தான் போனேன். ஆனா அங்க தமிழனை ‘’ஊரான்னு “ கூப்டுறாங்கடா ! சீனாக்காரன், மலேயாகாரன்லாம் நம்மள ரோட்ல பாத்து காச அடுச்சு புடுங்குனாலும் ஒன்னும் கேக்க முடியாது . கேட்டா இந்த ஊர்க்கு தமிழர்கள் அடிமையா வந்தவங்கனு சொல்வாங்கடானு தான் படும் கஷ்டத்தை விட தன் இனம் சார்ந்த கேலி அவனை வேதனை படுத்துவதை உணர முடிந்தது. அவனை மகிழ்விக்கவே மலேசியா தமிழர்களை பற்றித் தேடினேன் கிடைத்த தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது !.
தெற்காசியாவின் செழிப்பான நாடுகளில் ஒன்றாக மலேசியா இருந்தாலும் அதன் இன்றைய கலாச்சாரத்திற்கும், செழிப்பிற்கும் முக்கியக் காரணம் இந்தியச் சீன வர்த்தகம் அந்த கடல் வழியை மையமாகக் கொண்டு நடந்ததால் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் அங்கு இந்து மதமும், புத்த மதமும் இன்றும் அதிக அளவு உள்ளது . இப்போதைய மலேசியா வாழ் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 2௦ இலட்சம் அதாவது மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே. மலேசியாவில் இருக்கும் அவர்களின் வரலாறு என்று சொல்லப்படுவது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் பிரிட்டிஷ்காரர்களின் காலத்தில் மலேசியாவில் குடியேறிய தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்த தமிழர்களைப் பற்றி மட்டுமே !
தோட்ட வேலைக்காகவும் , ரயில் பாதைகள் அமைப்பதற்காகவும் கிட்டதட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் தமிழர்களை மலேசியாவிற்கு வேலைக்காகக் கொண்டு சென்றுள்ளார்கள்! தாம் கொள்ளை அடிப்பதை இரயில் மூலமாக தனது நாட்டிற்குக் கொண்டு செல்ல மட்டுமே பிரிட்டிஷ்காரர்கள் ரயில் பாலங்களை அமைத்தனர். அதற்கு கொத்தடிமைகளாக நமது தமிழர்களைக் கொண்டுசென்றனர். மிகக் குறைந்த உணவு, அதிக வேலை என முடியாமல் காய்ச்சல் மற்றும் பட்டினியால் கிட்டத்தட்ட அறுபதாயிரம் பேர் இறந்தார்கள். அவர்கள் அந்த ரயில் பாதையின் அருகிலேயே புதைக்கவும் பட்டனர். ( கடந்த சில மாதங்களுக்கு முன் மலேசியா அதிபர் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய மத்த நாட்டு மக்களுக்கு நன்றி சொல்லும் போது உயிரைக் கொடுத்து அந்த நாட்டை கட்டமைத்த தமிழர்களை குறிப்பிடவில்லை என்பது வருத்தமே ). தம்பி! அப்ப தமிழர்கள் அடிமையாக அங்க குடியேறினார்கள் என்பது தானே உண்மை ? இந்தக் கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை விளக்கும் முன் மலேசியாவில் இன்னும் சிலவற்றைப் பார்த்துவிடலாம்.
மலேசியா தமிழர்கள் என்றதும் தமிழ்நாட்டில் இருந்து போன தமிழர்கள் என்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டாம். அதில் இலங்கைத் தமிழர்களும் அடங்குவர் ( தமிழர்கள்னு வந்த பின்னாடி நாட்டுல என்ன பாஸ் வித்தியாசம்). தோட்டத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்களின் நிலைமை இன்னும் மோசமாகவே இருந்தது. இறந்து போன மக்களைப் பற்றிய முழுமையான தகவல்களை அப்போது இருந்த பிரிட்டிஷ் அரசு வெளியிடவில்லை. அதற்கு முன் 1887 இல் இந்தியாவில் இருந்த மருது சகோதர்களின் உறவினர் சிலரையும், அவர்களின் ஆதரவாளர்களையும் பிரிடிஷ்காரர்கள் மலேசியாவிற்குக் கொண்டு சென்றதாக தகவல்கள் உள்ளன. இவை மட்டும்தான் இன்றைய மலேசிய தமிழர்களுக்குச் சொல்லும் அவர்களின் குடியேற்றம் பற்றிய தகவல். அங்கு வேலை செய்யும் நண்பர்கள் சிலரும் இதையே உறுதி செய்தனர். ஆனால் உலகத்தின் பல முனைகளில் தனது ராஜ்யத்தை நிலை நாட்டிய தமிழன் மலேசியாவில் அடிமையாக மட்டுமா குடியேறியிருப்பான் ?
மலேசியாவில் மர்வோ பகுதியில் உள்ள ‘கெடா’வின் பூஜாங் பள்ளத்தாக்கில் நடந்த அகழ்வாராய்ச்சியில் இந்திய மன்னர்களின் வருகையை உறுதி செய்யும் வகையில் பல அறிய தகவல்கள் கிடைத்தன. தங்களின் ஆட்சியையும், வணிகத்தையும் விரிவாக்க நினைத்த முதலாம் ராஜேந்திர சோழன் மேற்கொண்ட பயணம் அவனைக் கொண்டு சென்ற இடம்தான் இந்த பூஜாங் பள்ளத்தாக்கு ! அன்று அந்த இடத்தின் பெயர் “கடாரம்’ என்றும் ‘காழகம்’ என்று அழைக்கப்பட்டது. அதை குறிக்கும் விதமாக ‘பட்டினப்பாலையில்’,
“கங்கை வாரியம் காவிரிப் பயுனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும்”
என்ற பாடல் வரிகள் சோழ மன்னனின் பயணத்தை விளக்குகிறது. இதில் உள்ள காழகம்தான் இன்று கெடா வாக உள்ளது . அங்கு ஆட்சி மற்றும் வணிகம் செய்ததின் அடையாளமாக இன்னமும் சிதிலம் அடைந்த தமிழக கோயில்கள் மற்றும் சிலைகள் உள்ளன. இன்னும் பின் நோக்கிச் சென்றால் முதலா =ம் நூற்றாண்டில் இந்த இடத்தை ‘மாறன் மாஹா வம்சன்’ என்ற தமிழ் மன்னன் ஆண்டதாகவும், அப்போது இந்த இடம் ‘லங்கா சுகம்’ என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள் சொல்கின்றன. நம் மன்னர்கள் ஆண்டார்கள் என்பது பழங்கதை, நிகழ்காலத்தின் ஆதாரங்கள் வேண்டும் அல்லவா ? அதுவும் இருக்கிறது .
எந்த ஒரு நாட்டிலும் ஒரு அடிமைச் சமூகத்திற்கு ஒரு ஊரின் பெயர் வைக்கும் உரிமை எல்லாம் தரமாட்டார்கள் அல்லவா ? , மலேசியாவில் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட ஊர் இன்னமும் இருக்கிறது. கொஞ்சம் காலப்போக்கினால் மருவி வேறு விதமாக அழைக்கபடுகிறது அவ்வளவே !, கடாரம் (கெடாஹ் kedah ), மூவார் (மூஆர் muar) செலாங்கூர் (selangore) இவ்வூர்கள் எல்லாம் நமது முன்னோர்கள் மலேசியாவில் குடியேறியபோது அங்கு உருவாக்கிய இடங்களுக்கு வைத்த பெயர்களே . இதில் கடாரம் என்ற ஊர்ப் பெயர் அதிகம் மதுரையை சுற்றிக் காணலாம். அதைத் தவிர்த்து ‘கடாரம் கொண்டான்’ என்ற ஊர் மயிலாடுதுறை அருகில் இருப்பது குறிபிட்டத்தக்கது. இங்கு குறிப்பாக ‘மூவார்’ என்னும் இடத்தை கவனிக்க வேண்டும். இரண்டு நதிகள் மூன்றாவது ஒரு நதியில் கலக்கும் இடம் அதாவது மூன்று நதிகள் இணைவதால் அந்த இடத்திற்கு மூவாறு என்று பெயர் வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
எந்த ஒரு அடிமைச் சமூகமும் இவ்வளவு நுணுக்கமான ஆளுமையுடன் எங்கும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை . எனவே மலேசியாவில் குடியேறிய தமிழ்ச் சமூகம் கண்டிப்பாக அடிமை சமூகமாக இருந்திருக்க வாய்ப்புகளே கிடையாது. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பே தமிழர்கள் எல்லைகள் கடந்து பயணம் செய்துள்ளார்கள் என்பதை பெரும்பாலும் இன்றைய நவீன உலகமும், தமிழர் அல்லாதோரும் மறுக்கிறார்கள் . அதெப்படி அவர்களுக்கு மட்டும் இது சாத்தியமானது? என்றும் கேள்வி கேட்கிறார்கள் . ஆமாம் நம் பண்டைய தமிழ்ச் சமூகத்தின் அறிவாற்றலும், அவர்கள் கடல் வழியாக செய்த பயணமும் வியப்பை தரலாம். உலகம் முழுவதும் காற்றைக் கொண்டு கடல் வழியைத் தீர்மானித்தார்கள். அவை எங்கெல்லாம் அழைத்து செல்கிறதோ அதை சார்ந்து மட்டுமே அவர்களின் பயணம் இருந்தது( பாய்மரங்களை பயன்படுத்தி ) . ஆனால் தமிழர்கள் ‘ஆமைகளின்’ கடல் வழித்தடங்களை பயன்படுத்தி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். இது என்னப்பா புது பொரளியா இருக்கு என்று என்ன வேண்டாம் . ஆமைகள் உலகம் முழுவதும் சுற்றினாலும் அது தான் பிறந்த இடத்திற்கு வந்துதான் முட்டையிடும் சென்னையில் திருவான்மியூர் ( ஆமையூர் என்பதே திருவான்மியூர் என்றானது ). கடற்கரையில் இன்னமும் ஆமைகள் வந்து செல்வதை நீங்கள் செய்தியாக கேள்விப்பட்டிருக்கலாம். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடக்கிறது . நம் தமிழக பெண்கள் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு செல்வதும் இதன் தொடர்ச்சியே ( இயற்கையிடம் இருந்து வாழ்க்கையை கற்பது ) என்று கடல்வழி ஆராய்சியாளர் ஒரிசா பாலு குறிப்பிடுகிறார்.
இப்படி இயற்கையின் சக்தியையும், தங்களின் அறிவையும் பயன்படுத்தி தமிழர்கள் பல நாடுகளின் பூர்வகுடிகளாக வாழ்ந்துள்ளார்கள். அவ்வாறே மலேசியாவிலும் குடியேறினார்கள் . என்ன , வரலாற்றை தொலைத்த இன்றைய தலைமுறை தமிழர்கள் அடிமைகளாகவே உள்ளோம் என்பதே சரித்திர முரண் ! டேய் ,வேற நாட்டுல தமிழர்கள் அடிமையா இருக்கறத விடு. முதல உங்க நாட்டுல நீங்க ஆளுமையோடவ இருக்கீங்க ? . இது என் நண்பனுடன் வேலை செய்யும் மலேசிய நண்பன் கேட்ட கேள்வியாம். இதற்கு சத்தியமாக என்னிடமும் பதில் இல்லை !..