இலங்கைக்கும் சீன அரசுக்குமிடையிலான அரசியல் உறவுகள் – பகுதி -02

பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை  சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான  அரசியல் ரீதியான உறவுகளை பற்றி நாம் கடந்த கட்டுரையில் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியினை  இக்கட்டுரையில்  நாம் தொடரலாம் 

1977_ 1986 வரையான காலப்பகுதி 

1977 _  1986 வரையான காலப்பகுதியில் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசாங்கமானது திறந்த பொருளாதாரக்கொள்கையை பின்பற்றியதோடு சர்வதேச முதலாளித்துவ அரசுகளுடன் தீவிர ஈடுப்பாட்டையும், உறவையும் கொண்டிருந்தது.

1989 _ 2002   வரையான காலப்பகுதி 

1989 _ 2002 புதிய உலக ஒழுங்கு முறையில் இலங்கையை ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்கா, ஆகிய இரு தலைவர்கள் ஆட்சி செய்திருந்தனர். இருவருமே மேற்குலகம் _ இந்தியா என்ற தெளிவான பிரிப்பை தமது வெளிநாடுகளுடனான உறவில் கையாண்டு இருந்தனர். இந்த காலப்பகுதியிலும் சீனா தனது இராஜதந்திர நகர்வை செய்துகொண்டேதான் இருந்தது.

2002 _2010 வரையான காலப்பகுதி 

2002 _ 2010 வரையான காலப்பகுதியில் இலங்கையின் அரசியல் வரலாற்று காலத்தில் முக்கியமான காலப்பகுதியாகும். விடுதலைப்புலிகள் மிகமுக்கியமான ஒரு பிரிவாக வளர்ச்சியடைந்து நின்றனர். விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரம் நோர்வே மத்தியஸ்துடன் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்த காலகட்டம். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தனது வெளியுறவு கொள்கையில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவது, இந்தியாவை இராஜதந்திர ரீதியில் அணுகுவது, மேற்குடன் ஒத்துழைப்பது, சமாதான உரையாடல் மூலம் சர்வதேச வலைக்குள் விடுதலைப்புலிகளை விழவைப்பது என்பவற்றை கொண்டிருந்தது.

2017ம் ஆண்டு உத்தியோகபூர்வ  விஜயமொன்றினை மேற்கொண்டு சீன  சென்றிருந்த அப்போதைய பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மற்றும் சீன மக்கள் குடியரசின்  தலைவர் சீ சின்பிங் அவர்கள் – புகைப்பட உதவி  -www.eastasiaforum.org

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதான வெளியுறவு கொள்கையாக அமைந்ததே இந்தியாவை கையாள்வதும், மேற்குலகுடன் ஒத்துழைப்பதுமாகும் . சீனா, இந்தியா, பாகிஸ்தான், சிங்கபூர், தாய்லாந்து, போன்ற நாடுகளுடன் வர்த்தக வாய்ப்புகளை பெருக்குவதை இது பிரதானமான நோக்கமாக கொண்டிருந்தது.

சீனாவிற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் செல்வாக்கு செழுத்த இடமளித்திருந்தது. சீனா மீன்பிடித்தொழிலை இலங்கையின் கிழக்கு பகுதியில் மேற்கொள்ளத்தொடங்கியது. இது தொடர்பில் பலதரப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது. அப்போது பாராளுமன்றத்தில்  ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பார். 

“ இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு பொருளாதார இராணுவ மட்டத்தில் பாரம்பரியம் மிக்கது. தேசிய பொருளாதாரத்திலும், தேசிய அபிவிருத்தியிலும் சீனாவின் உதவிகள் இலங்கைக்கு நீண்ட காலமாக கிடைத்துள்ளது. இலங்கையில் நிகழும் சமாதான நடவடிக்கைகளின்  முக்கியத்துவத்தை  சீனா அரசாங்கத்திற்கு தெரியபடுத்தியவுடன், சீனாவின்  ஆதரவை எமது அரசாங்கம் கோரியிருந்தது ”    இவ்வாறு இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்காது இருக்கும் வகையில் அரசாங்கம் சீனாவையும்,  பிற நாடுகளையும்  வைத்து  அரசியல் நகர்வுகளை செய்திருந்தது.  

2005 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமும் சீனாவுடன் அதன் உறவுகளும் 

2005  ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாப்பக்கம்  சாயும் போக்கினை கொண்டு காணப்பட்டிருந்தது. இந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் சீனாவின் “ முத்துமாலை “  கடற்கொள்கைக்கு பெரிதும் ஆதரவு அளித்திருந்தது. அம்பாந்தோட்டை  துறைமுக அபிவிருத்தி, புத்தளம் நுரைச்சோலை அனல் மின்நிலையதிட்டம், BMICH மீளமைப்பு திட்டமிடல், மன்னார் எண்ணெய் ஆய்வு திட்டம்,  என இருபக்கமும் பலத்த நட்புறவுடன் காணப்பட்டது. மகிந்த ராஜபக்ச   அரசு சீனாவை இலங்கையில் பலப்படுத்துவதன் மூலம் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் இராஜதந்திர அரசியல் நகர்வுகளை நிகழ்த்தியது. சீனாவிடம் இருந்து இராணுவ, பொருளாதார உதவிகளை அதிகளவில் பெற்றது. சீனா சார்பு கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலமாக நவகாலனித்துவ ஊடுருவலை இலங்கை அரசு உடைக்க முயன்றது. இவ்வரசு பின்பற்றிய இராஜதந்திரம் சீனாவை  இந்த பிராந்தியத்தில் ஸ்த்திரப்படுத்தியது. இந்த காலப்பகுதியில் இலங்கையில்  ஊடுருவியப்படி சீனா இந்து சமுத்திர  போட்டியையும், கடலாதிக்க  போட்டியையும் முன்னெடுத்து தன்னை பலப்படுத்திக்கொண்டது. 

2014ம் ஆண்டு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த  சீன மக்கள் குடியரசின்  தலைவர் சீ சின்பிங் அவர்கள் மற்றும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி  கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது – புகைப்பட உதவி www.chinadaily.com.cn

 2005 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  சீனாவுடனான அவரது கொள்கையில் “ மகிந்த சிந்தனை என்ற அவரது  கொள்கை தாக்கத்தை செலுத்தியிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 2010 வரையான ஆட்சிக்காலத்தில் சீனாவுடனான உறவு ஒருவகையாகவும் 2010 இன் பின்னரானகாலம் இன்னொரு வகையாகவும் பரிணாமமடைந்தது.  அது எப்போதும் இந்தியாவையும், மேற்கையும் கையாளுவதற்காக சீனா பக்கம் சாயும் போக்கினை கடைபிடித்திருந்தது எனலாம் . முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியமைத்த போதெல்லாம்    சீனாவுடன்  மிகநெருக்கமான   உறவை பேணி வந்திருக்கின்றது.  பொருளாதாரத்தையும்   , பாதுகாப்பையும்  அடிப்படையாக கொண்டு  சீனா முன்னெடுக்கும் முத்துமாலை திட்டத்துக்கு அமைவாக அம்பாந்தோட்டை துறைமுகம், புத்தளம் நுரைச்சோலை அனல் மின்நிலையம், BMICH மீளமைப்பு திட்டம், மன்னார் எண்ணெய் ஆய்வு திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு மகிந்த அரசு முழுமையான  ஆதரவை சீனாவுக்கு வழங்கியிருந்து. சீனாவை பலப்படுத்துவதன் மூலம், மேற்கு நாடுகள் இலங்கையின் விடயத்தில் தலையிடுவதை தவிர்க்க முயற்சித்தன. அதாவது நவகாலனித்துவ சக்திகள் இலங்கையில் ஊடுருவுவதை தவிர்க்க மகிந்த அரசு விரும்பியது. அதனால் சீனா பக்கம்  சாயும் போக்கை மகிந்த அரசு  வெளிப்படையாகவே  பின்பற்றியது. 

சீன நிதியுதவியுடன் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமான தாமரை கோபுரம் – புகைப்பட விபரம் -www.asianews.it

நல்லாட்சி அரசாங்கமும் சீனாவுடன் அதன் உறவுகளும்

நல்லாட்சி அரசாங்கம்,  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியை கொண்டு பலவிதமான அரசியல் விம்பங்களுடன் ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதி பதவியை அடைந்த விதம் படிநிலையான அரசியல் வளர்ச்சியும், வெளிப்படை தன்மையுடையதாகவும்  இருக்கவில்லை. அவர் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்ததில்  பல சதிகள் இருந்தன. அதில் சர்வதேச சதியும் இருந்தது. முக்கியமாக இந்தியா, அமெரிக்கா போன்றவற்றின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. மைத்திரிபால  அரசு ஆட்சிக்கு வந்து இரு மாதங்களுக்கு முன்னமே இந்தியா பிரதமர் மோடி இலங்கைக்கு வந்திருந்தார்.

 முதன் முதலில் ஜனாதிபதிக்கு வாழ்த்து சொல்லி மலர்ச்செண்டு  கொடுத்தது கொழும்பிலுள்ள இந்தியாவிற்கான தூதுவரே. அமெரிக்காவில் இருந்து பல  இராஜதந்திரிகள் இந்தகாலத்தில் இலங்கைக்கு வந்திருந்தனர்.  சீனாவுடனான உறவு என்பது இந்த அரசில் எப்படியிருந்தது என்று பார்க்கின்றபோது, நல்லாட்சி அரசு என்று சொல்லிக்கொண்ட மைத்திரிபால  அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் பலதடவைகள் இராஜதந்திர விஜயமாக சீனா சென்று வந்திருந்தாலும்  முன்னாள் ஜனாதிபதியின் மகிந்த அரசாங்கத்தை போல சீனாவை இலங்கையுடன் நெருங்கவிடவில்லை. அப்போது ஜனாதிபதியாக இருந்த மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் ஒரு தடவை பேசும் போது இப்படி சொல்லியிருந்தார். 

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையிலான   அரசாங்கம்  எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என அவர் சொல்லியது குறிப்பாக சீன அரசை ஆகும். வரவு செலவு திட்டம் தொடர்பில்  ஒருமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றிய  அமைச்சர் தினேஷ் குணவர்தன இப்படி கூறியிருந்தார். இலங்கையின் கடந்த அரசுபோல சீனாவிடம் நல்லாட்சி அரசு மண்டியிடாது என அவர்  கூறியிருந்தார்.  இவ்வாறு சீனா அரசுடன் மைத்திரிபால அரசாங்கம் நெருங்கிய உறவொன்றை வைத்திருக்கவில்லை. 

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அரசாங்கமும், சீனாவுடன் அதன் உறவுகளும் 

சீன நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகைப்பரப்பில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறை முக நகரம் – புகைப்பட விபரம் -www.silkroadbriefing.com.

இப்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அரசாங்கம் மிக நெருங்கிய அளவில் அரசியல், பொருளாதார, சமூக உறவை, இராணுவ உறவை சீனா அரசுடன் மேற்கொண்டு வருகிறது. இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த போதெல்லாம் சீனாவை இலங்கையில் பலப்படுத்துவதன் மூலமாக மேற்கை கையாண்டு இருந்தது. அந்த போக்கே இன்று இலங்கையில் சீனா அச்சுறுத்தலாக மாறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது எனலாம் . சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கங்களும் பின்பற்றிய சீனா தொடர்பான வெளியுறவு கொள்கைகளே இன்று சீனா இலங்கையில் அச்சுறுத்தலாக மாறுவதற்கு காரணமாகியது. அதிலும் குறிப்பாக முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசு ஆட்சியமைத்தபோதெல்லாம் சீனா இலங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே நிலைதான் இன்றைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் நிகழ்கிறது. சீனாவின் அதிகரித்து வருகிற இந்த தாக்கம், இலங்கையில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை அடுத்த தொடரில் கவனிப்போம். 

Related Articles

Exit mobile version