“வண்ணம் கொண்ட வெண் நிலவே
வானம் விட்டு வாராயோ”
என்கிற பாடல் தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. கதாநாயகன் துவண்டு கிடக்கும் நிலையில் வரும் பாடல் இது. இதில் இடையில் வரும் வேறொரு வரியில்
”கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீலத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !
என்று வரும். கவிப்பேரரசு வைரமுத்து இந்த வரிகளுக்கு சொந்தக்காரர். இது கதையில் கதாப்பாத்திரத்தின் நிலையினைக் குறிக்கும் என்றாலும் மேலே குறிப்பிட்ட வரிகளின் நேரடியான அர்த்தம் நமது தலைப்பை சுருக்கமாக விவரிக்கும். ஆம் வண்ணங்கள் இல்லையேல் நம்மால் ஏதும் புரிந்துக்கொள்ளக்கூட முடியாது. பொருள்களைப் பார்க்க முடியாது, ஒன்றினை அடையாளப்படுத்த முடியாது. உயிரினங்களின் உணர்வுகளைத் தவிர வேறு எதையும் உணர முடியாது.
ஓவியம் என்பது யாதெனில் மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் கற்பனையின் காட்சி வடிவமே ஆகும். அதனை வண்ணங்கள் இல்லாமல் வெளிப்படுத்தல் இயலாது.
ஓவியத்திற்கான முதல் வண்ணங்கள்
வண்ணங்கள் கொண்டு ஓவியம் வரையும் முறை 40,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. அதுவும் முதலில் ஓவியர்கள் வெறும் ஐந்து நிறங்களைக் கொண்டு தான் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவை, சிவப்பு. மஞ்சள், காவி, கருப்பு மற்றும் வெள்ளை. சரி முதல் நிறமிகள் எது எது என்று தெரியுமா? இரும்புச்சத்து அதிகம் கொண்ட மண்ணைக் கொண்டு தான் சிகப்பு வண்ணம் கண்டறியப்பட்டு குகைகளின் கலாச்சாரத்தைப் பற்றிய ஓவியங்களை தீட்டினர். “லபிஸ் லசுலி” என்ற அறிய வகை கல்லைக் கொண்டுதான் நீல வண்ணத்தினை தீட்டினர்.
ஓவிய உலகுக்கு மஞ்சள் நிறத்தை அறிமுகம் செய்த ஜோசப் மல்லார்டு வில்லியம் டர்னர் மற்றும் வின்சண்ட் வான் கோக், இதனை உபயோகப்படுத்த அவர்கள் செய்த முயற்சி விசித்திரமானது. மாம்பழங்கள் உண்ட மாட்டின் கோமியத்திலிருந்து திரித்து பதப்படுத்தப்படும் வண்ண திரவமே மஞ்சள் நிறமாக அவர்கள் வரைந்த ஓவியத்தில் மிளிர்ந்தது. மஞ்சள் நிறத்தின் ஆதி விசித்திரமானது என்றால், பச்சை நிறத்தை கண்டறிந்தவர்கள் விஷப்பரிட்சையே செய்தனர் எனலாம். மிகவும் விஷத்தன்மை வாய்ந்த அரிதார நஞ்சின் நிறத்தை, ஓவியங்களில் இயற்கை எழில் காட்சிகள் வரைய பயன்படுத்தியதற்கு காரணம், அது இயற்கையின் நிறமான பச்சை நிறத்தில் இருந்தது. மாவீரன் நெப்போலியன் இறந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவரது படுக்கை அறையின் சுவற்றில் இருக்கும் ஓவியத்தில் பச்சை நிறம் நிறைந்திருந்ததால், அந்த திரவக் காற்றை சுவாசித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு சர்ச்சை எழுந்தது.
கிளாட் மோனெட் வளிமண்டலத்தின் வண்ணம் ஊதா என்பதை உணர்ந்து, ஊதாவை, ஓவியத்தில் உள்ள வளிமண்டலத்தில் தீட்ட அவர் உபயோகித்தது பன்றியின் சிறுநீர்ப்பையில் வண்ணத்தை வைத்து பாதுகாக்கும் முறையைத்தான். இந்த முறை தான் பின் நாளில் வண்ண திரவங்களை சிறிய பேழையில் வைத்து பாதுகாக்கும் முறையாக மாறியது.
எகிப்தியர்களும் வண்ணங்களும்
பண்டைய எகிப்தியர்கள் நோய்களை குணப்படுத்த வண்ணங்களை பயன்படுத்தி வந்தனர். வெளிச்சமில்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் சூரியனை வணங்கினர். அவர்கள் இயற்கையை பார்த்து தங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் அதை நகலெடுத்தனர். அவர்களின் கோயில்களின் மாடிகள் பெரும்பாலும் பசுமையாக இருந்தன அதன் நதி, நைல் உடன் வளர்ந்த புல் போன்றது. நீலம் எகிப்தியர்களுக்கு மிகவும் முக்கியமான நிறமாக இருந்தது; வானத்தின் நிறம்.
வண்ணங்களின் பாடம்
நமது பள்ளி காலங்களில் நாம் பயன்படுத்தியது மிகவும் அடிப்படையான வண்ணங்களான 12 வண்ணங்கள் தான். பொதுவாக அடிப்படையாக வண்ணங்கள் என்று பார்த்தால் சிவப்பு, பச்சை மற்றும் நீலம். ஆனால் 12 வண்ணங்களை மழலைகளுக்கு அறிமுகப்படுத்தும் எண்ணம் கொண்டு இவ்வாறு செய்தார்களோ என்னவோ . அது கொஞ்சம் கொஞ்சமாக 24 வண்ணங்கள் ஆகியது அப்படியே படிப்படியாக வளர்ந்து இன்று லட்சக்கணக்கான வண்ணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.ஒரு பிரபல துணிக்கடை கூட சாதனைக்காக 50,000 வண்ணங்களில் ஒரு புடவையை நெய்து வெளியிட்டனர். வண்ணங்கள் ஒவ்வொரு உருவங்களையும் வடிவங்களையும் வெளிப்படுத்த உதவுவன என்றானாலும் அதனுள் இருக்கும் உணர்வுகளை விட்டுவிட முடியாது. ஒவ்வொரு வண்ணத்திற்கென்று ஒரு உணர்வு இருக்கின்றது. இங்கே பொருளின் தன்மையை உணர்ந்தவருக்கு ஒரு விதமாகவும், பொருளின் தன்மையை உணராதவருக்கு ஒரு விதமாகவும் வண்ணங்கள் வெளிப்படுத்துவதில்லை, ஆனால் காண்போர் உணர்வு கொண்டும், அறிவு கொண்டும் தான் பொருளின் தன்மை உணரப்படுகின்றது.
திரைப்படமும் வண்ணமும்
உதாரணமாக திரைப்படங்களில் காட்சி மொழியில் வண்ணங்கள் மூலமாக சில விஷயங்கள் தெரிவுப்படுத்தும் ஒரு காட்சி வடிவம் யதார்த்த படங்களில் அதிகம் இருக்கும். உதாரணத்திற்கு ஒருவன் தன் கையில் ஒரு பூவை வைத்துக்கொண்டு நிற்கின்றான். அவன் கையில் இருப்பது என்ன பூ மற்றும் அது என்ன வண்ணத்தில் இருக்கிறது என்பது பார்வையாளனுக்கு தெரிந்தால் போதும், பார்வையாளனால் நிச்சயம் காட்சியின் தன்மை புரிந்துவிடும். சிகப்பு ரோஜாவாக இருந்தால் அடுத்து வர இருப்பது காதல் காட்சி, வேறு வண்ணத்தில் இருந்தால் காட்சியின் தன்மை வேறு.
உணர்வுகளும் பொருளும்
வண்ணங்களுக்கென்று ஒரு அர்த்தம் மற்றும் உணர்வு என்றெல்லாம் இருக்கின்றது. அதனை கீழே குறிப்பிட இருக்கும் குறிப்பீடுகளைக் கண்டு ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம். நமது தேசியக்கொடியை எடுத்துக்கொள்ளலாம். மூவண்ணக்கொடியில் குங்குமப்பூ (saffron) புனிதத்தின் வண்ணமாக கருதப்படுகிறது. மேலும் இது தைரியத்தையும், தன்னலமற்ற தன்மையையும் குறிக்கிறது. வெள்ளை, தூய்மையின் வண்ணமாகவும், சமாதானம் மற்றும் அமைதியையும் குறிக்கின்றது. மூன்றாவது வண்ணமான பச்சை நம்பிக்கை மற்றும் இயற்கை வளத்தை குறிப்பிடுகிறது. இவ்வாறு சிவப்பு, உணர்ச்சி மற்றும் தூய்மையை குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. அதுபோல ஊதா வண்ணமும் உண்மையையும் நம்பகத்தன்மையையும் குறிப்பதாக இருக்கிறது.
இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்று இருக்கின்றது. இந்த வண்ணத்திற்கு இது தான் பொருள் என்று நாம் தீர்மானித்துவிட முடியாது. ஏனென்றால், இந்த வண்ணம் சார்ந்த பொருள் மற்றும் புரிதல்கள் நாட்டிற்கு நாடு வேறு படுகிறது. இதே வண்ணங்களுக்கு மேற்கத்திய நாடு வேறு விதமான விளக்கங்களில் பொருளைக் கூறுகின்றது.சரி வண்ணங்களின் உணர்வுகள் என்று எடுத்துக்கொண்டால் அது பொதுவாகவே இருக்கின்றது.
ஏனெனில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த விதம் வேறாக இருந்தாலும், ரசனை நபருக்கு நபர் வேறுபட்டாலும் உணர்வுகள் ஒன்று தானே. வண்ணங்களின் உணர்வுகள் பின் வருமாறு.
பெஞ்சமின் பஸ்காச் 1926 ல் முதன் முதலில் ஸ்கெட்ச் பேனாவின் காப்புரிமை பெற்றிருந்தாலும், ஸ்கெட்ச் பேனாக்கள் 1910 ல் லீ நியூமன் மூலமாக காப்புரிமை பெற்று தயாரிப்பில் இறங்கினர்.. இந்த பேனாக்கள் 1950 களில் அதிக அளவில் பிரபலமடைந்து லேபிள்கள், கடிதங்கள் மற்றும் சுவரொட்டிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. இந்த பேனாக்களின் பிரகாசமான நிறங்கள் கண்களைப் பறிக்கும் வண்ணம் அமைந்திருந்தது. முழுவதுமாக ரசாயன முறையில் வண்ணங்களை தயாரிக்கும் முறை வந்தபின், அதாவது ஸ்கெட்ச் அறிமுகமானபின் வண்ணங்களைக் கொண்டு வரையும் பழக்கம் பலருக்குள் தொற்றிக்கொண்டது. பலர் தனது கற்பனைகளை வண்ணங்களின் மூலம் காகிதத்திலோ அல்லது சுவற்றிலோ தீட்டி தனது கனவின் வடிவத்தை பலருக்கு காட்சிப்படுத்த, அது பலரது மனதிலும் பல விதமான மாற்றங்களை ஏற்படுத்தியது எனலாம்.
பெரும்பாலான வண்ணங்கள் பியூட்டனால், ப்ரோபனால் போன்ற திரவங்கள் கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் 1990கள் வரை அவை சைலின் டௌலின் போன்ற திரவம் கொண்டு தான் தயாரிக்கப்பட்டது. இது ஸ்கெட்ச் மட்டும் தான் என்றாலும் வாட்டர் கலர், ஃபாப்ரிக் கலர், கலர் பென்சில் என்று பல உள்ளது. அனைத்துமே ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுபவை தான்.
வண்ணங்களின் நிழல்கள்
இந்த வண்ணங்களின் தன்மையை பற்றி அதிகம் விவாதிப்பதற்குள் இந்த நவீன உலகில் இருக்கும் அனைத்து வண்ணங்களுக்கும் பல நிழல்கள் மற்றும் பரிமானங்களை கண்டறிந்து, இன்றைக்கு 1000 வண்ணங்களில் நகலைகள் மற்றும் உதட்டுச் சாயம் என்று பல வர்ணஜாலங்களுடன் வியாபாரங்கள் நடந்துக்கொண்டு இருக்கின்றது. இவை அனைத்தையும் தயாரிக்கும் பொருட்டு ஆலைகளைச் சுற்றியுள்ள நீர் நிலைகளை மாசுப்படுத்துவது குறைந்தால், அனைத்து தரப்பு மக்களும் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கும். அதனை கடைப்பிடிக்கும் நிறுவனங்கள் குறைவு என்றாலும், இன்று வழக்கத்தில் இருக்கும் லட்சக்கணக்கான வண்ணங்கள் கலைஞர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து துறையில் உள்ளவர்களுக்குள் இருக்கும் கற்பனைத் திறனை கடுகளவு மாறாமல் அழகாக பிரதிபலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றம் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் தான். இன்றைக்கு ஒரு களத்தில் எடுத்த புகைப்படத்தில் ஏதேனும் பிழை இருந்தால் அதனை எளிதில் கலரிங் மென்பொருள் கொண்டு சரிசெய்து விடுகிறார்கள். இறுதியாக ஒன்று,வண்ணங்களால் ஏற்பட இருக்கும் அடுத்த புரட்சி என்னவென்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. ஆனால் எளிமையாக வாழ்பவர்கள் நிறைந்து இருக்கும் நம் இந்தியாவில் நாம் இப்போது செய்யக்கூடிய ஒன்று வண்ணங்களை ரசிப்பது, உணர்வது மற்றும் புரிந்துகொள்வது. ஒரு ஓவியத்தையோ அல்லது ஒரு பொருளையோ நாம் பார்க்கின்றோம் என்றால் வண்ணங்களை மறந்து அந்த படைப்பை ரசிக்கிறோம் என்றால் அதற்கான பெறுமை அந்த வண்ணங்களுக்கும் சாரும். வண்ணங்களைக்கொண்டும் விழாக்கள் கொண்டாடும் இந்தியாவில் பிறந்து வண்ணங்களை ரசிக்கவில்லை என்றால் எப்படி. வாழ்வின் ஒவ்வொரு நாளும் நம்மோடு இருக்கும் வண்ணங்களை ரசிப்போம்.
Web Title: History of colors
Featured Image credit: pinkcolumn