நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இலங்கையின் ஒவ்வொரு இடமும் ஒரு வரலாற்றைப் பேசும் விதமாகத்தான் அமைந்துள்ளது. நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் வரலாற்றுக் கதை ஒன்றை நாம் கேட்டுவிடலாம். அதுவும் அந்த இடத்திற்கே உரித்தானதாகவும் இருக்கும்.
அந்தவகையில் இந்தக் பதிவில் நாம் பார்க்கப்போவது ஜம்புக்கோளப்பட்டினம் என்று அழைக்கப்பட்டு தற்போது நவலாந்துறையாகியிருக்கும் சம்புத்துறையை பற்றித்தான்.
சங்கமித்தை இலங்கைக்கு முதற்தடவையாக வெள்ளரசு மரக்கிளையினைக் கொண்டுவந்த இடத்தில் நினைவுச்சின்னம் ஒன்றும் விகாரை ஒன்றும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் இந்த இடத்திற்கு சென்று பார்வையிடுவதுடன் அருகில் உள்ள பௌத்த விகாரையிலும் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இடமே ஜம்புக்கோள்ளப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
பேரரசன் அசோகனின் மகளான சங்கமித்ரை இலங்கைக்கு வந்திறங்கிய இடம்தான் சம்புத்துறை. சங்கமித்ரையும் அவருடைய சகோதரர் மகிந்தனும் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக இலங்கைக்கு வந்தனர். முதலில் மகிந்தனே இலங்கைக்குச் சென்றான். அங்கே அவன் இலங்கை மன்னனுக்கு, புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்றைத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தான். இதனை நிறைவேற்று முகமாக பேரரசன் அசோகனே அவ்வெள்ளரசு மரம் இருக்கும் இடம் சென்று கிளையொன்றை வெட்டுவித்ததாகவும் இலங்கையின் பௌத்த வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகின்றது.
இந்த வெள்ளரசு மரக்கிளையை இலங்கைக்கு எடுத்துச் செல்வதையும், இலங்கையில் பெண் துறவிகளின் மரபுவழி ஒன்றை உருவாக்குவதையும், அங்குள்ள அரச குடும்பப் பெண்கள் சிலரை பிக்குணிகளாக நிலைப்படுத்தும்படியான கோரிக்கையை ஏற்றும் சங்கமித்தை இலங்கைக்கு அனுப்பப்பட்டாள்.
சங்கமித்தையுடன் ஏராளமான ஆளணிகளுடன் இலங்கை வந்து சேர்ந்தார். இவர்கள் அனைவரும் முன்னர் ஜம்புகோளத்துறை என்றும் இன்று சம்புத்துறை என அழைக்கப்படும், இடத்தில் வந்து இறங்கினர்.
இது இலங்கையின் வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளது. இவர்கள் இறங்கிய இடத்திலிருந்து அனுராதபுரம் வரையான நெடுஞ்சாலை இதற்கெனச் செப்பனிடப்பட்டதாகவும், வந்தவர்கள் தங்குவதற்காகக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நாவலந்தீவு என்றழைக்கப்படும் ஜம்புல்லைத்தீவிலேயே இப்பட்டினம் அமைந்துள்ளமையால் சம்புத்துறை எனவும் நாவல் என்றால் ‘ஜம்பு’ என்று சிங்களத்தில் கூறப்படுவதால் ஜம்புகோளப்பட்டினம் என்று தமிழ் நூல்களும், பாளி நூல்களும் அழைத்தன.
ஆனாலும் நாவல் பழத்திற்கு சிங்கள மொழியில் வேறு பெயர் இருப்பதால் ஜம்பு என்ற சொல் நாவல் பழத்தைத்தான் குறிக்கின்றதா என்பதில் ஒரு கேள்வியும் எழுகின்றது.
இந்த நாவலந்தீவு தீவு என்ற பெயருகேற்ப வலிகாமம் முன்பு நாற்புறமும் கடலால் சூழப்பட்டிருந்தது. கிழக்கே உப்பாற்றையும் தொண்டமான் ஆற்றையும் பிரித்து காலகதியில் ஓர் நிலமேடு ஒன்று தோன்றியது. இந் நாவலந்தீவிலேயே ஐம்புகோளப்பட்டினம் என்ற துறை உள்ளது.
இத் துறைமுகம் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவடிநிலைக்கு சிறிது தூரத்தில் இருக்கின்றது. இத் துறைமுகம் சிறந்த வாணிப நிலையமாக விளங்கியது . சாம்பில்துறை வலிகாமத்தில் அமையும் ஊராகும். இதன் பழைய பெயர்களாக சம்புககோவலாம், ஜம்புகோளம், சம்புகள், ஜம்புகோளப்பட்டினம், ஜம்புத்துறை என்று அழைக்கப்படுகின்றது.
சம்புத்துறை ஜம்புக்கோள எனக் கூறப்படுகின்றது. இது சம்புக்கோளம் என்ற பழைய பெயரின் மாறுபாடு ஆகும். இது மாதகல் எனும் இடத்திற்கு அருகில் உள்ளது. இந்த சம்புத்துறையிலிருந்தே தேவநம்பிய தீசனால் அசோக மன்னனிடம் அனுப்பட்ட தூதுவர்கள் மரக்கலம் ஏறிச்சென்றனர்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரேயே இப் பெயர் கொண்டதாக இவ்விடம் திகழ்ந்துள்ளது. சிங்கள இலக்கியங்களில் ஜம்புக்கோளம் என குறிப்பிடப்பட்டாலும் தமிழ் பெயரே முதன்மையானது.
அனுராதபுரத்தில் நடப்பட்ட போதிமரத்தினின்றும் உண்டான ஒரு போதிமரக்கன்றை ஜம்புக்கோளத்துறைமுகத்தில் வளர்த்ததாகவும் ,தேவநம்பியதீசன் அங்கு பௌத்த பிக்குகளுக்காக ஒருவிகாரையை கட்டினான். அவ்விகாரை ஜம்புகோளவிகாரை என்று அழைக்கப்பட்டது.
சங்க இலக்கியங்களிலும் மணிமேகலையிலும் குறிப்பிடப்படும் மணிப்பல்லவமும் ஜம்புக்கோளப்பட்டினமும் ஒன்றுதான் என்று ஒருசிலர் விவரிக்கின்றனர். ஆனாலும் மணிப்பல்லவம் நயினாத்தீவைக் குறிப்பதாகவே பலரது கருத்துக்கள் அமைந்துள்ளன.
இலங்கை அரசனான தேவநம்பிசதீசன் அரிட்டன் எனும் பௌத்த தேரரை சக்கரவர்த்தியிடம் அனுப்பி போதிமரத்தை இலங்கைக்கு கொண்டுவரச் செய்த போது, அவர் மரக்கலமேறி சென்றது இந்த ஜம்புகோளப்பட்டினத்திலே என்றும் சொல்லப்படுிகன்றது. மீண்டும் போதி மரத்துடன் திரும்பி வந்து இறங்கியதும் இந்த ஜம்புகோளப்பட்டினத்திலே ஆகும்.
தமிழில் பட்டினம் என்பதன் திரிபே ‘பட்டின’ ஆகும். ஜம்புகோளப்பட்டினம் இத்தகைய விளக்கத்துக்கு உரியதாகவே காணப்படுகின்றது எனினும் இச் சொல்லில் ‘ஜம்புகோளம்’ என்பது கோள என மருவியது. ஜம்புகோளப்பட்டினம் காரைதீவில் உள்ள பெரிய ஒரு துறைமுகம் ஆகும்.
தமிழ்நாட்டவர், ஈழத்தின் மீது மேற்கொண்டிருந்த வர்த்தக நடவடிக்கைகளை குறிக்கும் கல்வெட்டுகள் ஈழத்தின் கிழக்கு பகுதியிலும் காணப்படுகின்றது. இவற்றுள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குடுவில் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு முக்கியமாகின்றது.
இதுவும் அநுராதபுரம், வவுனியா, ஆகிய பகுதிகளில் காணப்படுகின்ற கல்வெட்டுக்களை ஒத்த காலத்திற்குரியதுதான். குடுவில் கல்வெட்டு “தீகவாபி பொறன வணிஜன ” பற்றியும் அவர்களின் மனைவியாகிய திஸ்ஸ என்ற பெயரை தாங்கிய தமிழ் பெண்மணி பற்றியும் குறிப்பிடுகின்றது.
சங்கமித்தை இறங்கிய இடமாக சொல்லப்படும் இதே இடத்தில் (முகப்புப் படம்) அவர் வந்திறங்கும் காட்சி… மற்றும் மாதிரி கப்பல் ஒன்று அத்தோடு விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.