இலங்கையில் காந்தி: நூற்றாண்டை நெருங்கும் நினைவு

மகாத்மா காந்தி இலங்கைக்கு வர முன்னதாகவே, அப்போது வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளில் அதுபற்றிய செய்திகள் வெளிவந்துவிட்டன. அதனால் இலங்கையின் பல பகுதிகளிலும் அந்தச் செய்தி பரவியிருந்தது. 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி, மகாத்மா காந்தி எனப்படும் மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி கொழும்பை வந்தடைந்தார். அன்று ஒரு சனிக்கிழமை! அவருடன் அவருடைய மனைவி கஸ்தூரிபாயும் அந்தப் பயணத்தில் பங்கு கொண்டிருந்தார். பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் தமது கரங்களை உயர்த்திக் கொண்டிருந்த காலம்! இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியிருந்தனர். இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரரான ஊ.நு. கொரியா மற்றும் அவருடைய சகோதரரான விக்டர் கொரியா ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே, மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது விஜயத்தை மேற்கொண்டார்.

மஹாத்மா காந்தி அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் சென்ற பொது எடுக்கப்பட்ட புகைப்படம்
படஉதவி : thehindu.com

மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவியுடன், பிற்காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவரும் தமிழில் பல நூல்களை எழுதியவருமான ராஜாஜி எனப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியும் இலங்கைக்கு வந்திருந்தார். மேலும் மகாத்மா காந்தியின் செயலாளர்களான மஹாதேவ் தேசாய் மற்றும் ப்யாரேலாலும் இந்த விஜயத்தில் பங்கெடுத்திருந்தனர். இலங்கையில் மூன்று வாரங்களே தங்கியிருந்த மகாத்மா காந்தி இலங்கையின் பல பகுதிகளுக்கும் பயணித்தார். அவரை இலங்கைக்கு அழைத்த, C.E. கொரியாவின் வசிப்பிடமான சிலாபம் பகுதிக்கே அவர் முதலில் சென்றார். அதனையடுத்து கண்டி, காலி, யாழ்ப்பாணம், நுவரெலியா, மாத்தளை, பதுளை, பண்டாரவளை, ஹட்டன் மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளும் மகாத்மாவின் தரிசனத்தைப் பெற்றன. இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்தில் மெய் மறந்த மகாத்மா, “இந்தியா என்னும் ஆரத்தில் பொருந்திய அழகிய பதக்கம்” என, அதனை வர்ணித்தார்.

1970 களில் இலங்கையின் நுவரெலியா 
படஉதவி : outboundholidays.com

சிலாபத்தின் மையப்பகுதியில்C.E. கொரியாவின் அழகிய வீடு அமைந்திருந்தது. அதற்கு “சிகிரியா” என்று பெயரிடப்பட்டதிலிருந்தே, அந்த வீட்டின் அழகினை உணர்ந்து கொள்ள முடியும். அந்த வீட்டில் தான் மகாத்மா காந்தி சிலாபத்தில் தங்கினார். சில நாட்களுக்கு அங்கு தங்கியிருந்த அவர், அண்மையிலிருந்த “நைனாமடம்” என்ற கிராமத்திற்கும் பயணித்தார். அவரது வருகையின் காரணமாக அந்தக் கிராமம் அப்போது “ஸ்வராஜ்ய புரம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. “சிகிரியா” வீட்டில் அப்போது ஒரு அழகான சிறுமி வசித்து வந்தாள். அந்தக் குட்டிப் பெண்ணின் பெயர் டொரீன். அவளுடைய அழகான “சிகிரியா” வீட்டுக்கு மகாத்மா வந்தபோது அவளுக்கு ஒன்பது வயது. அவளது வீட்டில் காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை அவள் இப்படி விபரித்தாள்.

முதல் படம்: கொழும்பு ஆனந்த கல்லூரியில் உரையாற்றும் புகைப்படம்.
2ம் படம் : கொழும்பு மாளிகாகந்த சமயநிகழ்வில் கலந்துகொண்ட போது எடுத்த படம்.
பட உதவி: sundaytimes.lk

“மகாத்மா உள்ளே வரும் போது, நீல நிறத் தாவணி அணிந்திருந்த என்னுடைய தங்கை நேன், அவருடைய கழுத்தில் மாலை இட்டாள். அந்தக் குட்டிப் பெண்ணின் வரவேற்பில் மகிழ்ந்த காந்தி நேனை “காந்தியின் இனிமையான குட்டி இதயம்” என்று ஆங்கிலத்தில் அவளை விளித்தார். “சிகிரியா” வீட்டில் காந்திக்கு பேரீச்சம்பழங்களும் அவர் விரும்பி அருந்தும் ஆட்டுப்பாலும் அளிக்கப்பட்டன. மகாத்மா காந்தி தாம் நூல் நூற்கும் கருவியை எனது தந்தை கொரியாவுக்கு பரிசாக அளித்தார்.”

மகாத்மா காந்தி அவர்களும் அவரது மனைவி கஸ்தூரி பாய் அவர்களும்
படஉதவி : indiatoday.in

பௌத்த தியோசோஃபிகல் சொசையிட்டியினால் 1892 ஆம் ஆண்டில் மஹிந்த கல்லூரி காலியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற மகாத்மா காந்தி அங்கு கல்வி கற்ற மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். அதேபோல் கொழும்பில் அமைந்துள்ள ஆனந்தா கல்லூரிக்கும் சென்ற அவர் இலங்கையின் அழகைப் பற்றியும் அந்த மாணவர்களைக் காண்பதில் தாம் அடைந்த மகிழ்ச்சியைப் பற்றியும் கருத்துரைத்தார். கண்டி – தர்மராஜ கல்லூரிக்குச் சென்ற அவர் அங்கிருந்த மாணவர்களிடையே புகை பிடிப்பதல் தீமைகள் குறித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் மாத்தளைக்குச் சென்ற காந்தியின் கரங்களால், பாக்கியம் தேசிய கல்லூரிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பின்னாளில் அது கட்டி முடிக்கப்பட்டு சேர் பொன்னம்பலம் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டது. இன்று அது மாத்தளையின் புகழ் பெற்ற பெண்கள் கல்விக்கூடமாக திகழ்கின்றது.

மகாத்மா காந்தியின் இலங்கை வருகையின் போது அவரது அகிம்சா இயக்கத்திற்காக இங்கிருந்து நன்கொடைகள் வழங்கப்பட்டன.  ஆயிரக்கணக்கான மக்கள் அவரது பயணத்தில் பங்களித்தனர். இலங்கை சார்பில் அப்போதைய ரூபா மதிப்பில் மொத்தம் 105,000 ரூபாய் பணம் நன்கொடை வழப்பட்டது. 

இலங்கையின் சில பாடசாலைகள் முன்வந்து காந்தி இயக்கத்திற்காக
வழங்கிய நன்கொடை விபரம்.
பட உதவி : dailymirror.lk

யாழ்ப்பாணத்தில் அப்போது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (Jaffna Youth Congress) என்ற அமைப்பு இயங்கி வந்தது. இது 1924 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. பிரித்தானியரிடமிருந்து முழு இலங்கைக்குமான முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதன் முறையாக அமைப்பு ரீதியில் முன்வைத்த பெருமை இந்த அமைப்பையே சாரும். 1927 ஆம் ஆண்டு இடம்பெற்ற அந்த அமைப்பின் மாநாட்டிலும் மகாத்மா காந்தி கலந்து கொண்டார்.

படஉதவி : theguardian.com

இந்தியாவின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் மகாத்மா எவ்வளவு விரும்பினாரோ, அதே அளவு கரிசனம் இலங்கை மீதும் அவரால் காண்பிக்கப்பட்டது. 1927 ஆம் ஆண்டில் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட அந்தப் பயணமே, இலங்கைக்கான அவரது முதலாவதும் இறுதியுமான பயணமாக அமைந்தது.

Related Articles

Exit mobile version