மன்னர் காலத்து நினைவுச் சின்னமான யாழ்ப்பாணம் மந்திரிமனை

வரலாற்றுக்குப் பெயர்போன இலங்கை யாழ்ப்பாண மண்ணானது, இயற்கை கொடைகள், வரலாற்று சின்னங்கள், பிரசித்தி பெற்ற ஆலயங்கள் என தன்னுள் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பல தொன்மையான சின்னங்கள் அழிந்து போனாலும், ஆங்காங்கே சிலவற்றை இன்னமும் இறுக்கப்பிடித்துக் கொண்டுள்ளது. அந்தவையில் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள் காலத்தில் மன்னனின் மந்திரி ஒருவருக்கு கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த மாளிகை தான் மந்திரிமனை என அழைக்கப்படுகின்றது.

ஆரம்பகாலங்களில் யாழ்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் அங்குள்ள நல்லூரினை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்து போது, இம்மனையானது கட்டப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. அதேவேளை இம்மந்திரி மனையின் கட்டிட அமைப்பு முறையானது முழுவதுமாக யாழ்ப்பாண அரச காலத்துக்கு உரியது எனக் கூறிவிட முடியாது என்பது ஆய்வாளர்களின் கருத்து. சில சுதேசகலை மரபுகளும், தமிழரின் தொழில்நுட்பமும் காணப்பட்டாலும் கட்டிடத்தின் முகப்பு தோற்றமானது, யாழ்ப்பாண அரசிற்குப் பின்னர் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பிய கலை மரபுக்குரியவையாக காணப்படுகின்றன.

மந்திரிமனை தோற்றம்
பட உதவி : amazinglanka

இம்மனையின் முகப்பில் வாசல் பகுதியை ஒட்டியவாறு இரண்டு பக்கங்களிலும் காணப்படும் கல்லிருக்கைகளானது இங்கு வருகை தருபவர்கள் வெளிப்புறத்தில் அமர்த்திருப்பதற்காக அக்காலத்து திண்ணை அமைக்கும் முறையில் அமைக்கப்பட்டவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மந்திரிமனையின் திண்ணை முகப்பு
பட உதவி : stalktr.net

சுமார் 70 * 80 மீற்றர் கொண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ள இம்மந்திரிமனையின் சிறந்த வேலைப்பாடுடன் கூடிய பழங்காலத்து முறையில் செய்யப்பட்டுள்ள தரமான ஜன்னல்களும் கதவுகளும் இன்னமும் நல்ல நிலையில் காணப்படுகின்றது. இரண்டு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் மேல் மாடிக்கு செல்லும் படிகள் மற்றும் பிடி கம்பிகள் எல்லாம் ஆங்காங்கே சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. காற்றோட்ட வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இக் கட்டிடத்தின் உயர்ந்த கூரையை தற்காலக் கூரை அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்துவமாக காட்டியுள்ளனர்.  

மந்திரிமனையின் உள்மண்டபமும் மேல்மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளும்
பட உதவி : exploresrilanka
மந்திரிமனையில் பழங்காலத்து முறையில் செதுக்கப்பட்டுள்ள
மரத்தாலான தூண்களில் ஒன்று
பட உதவி : ttnotes.com

பழங்காலத்து முறையில் செய்யப்பட்ட தூண்கள், தமிழ் கல்வெட்டுக்கள், மற்றும் கருங்கல்லாளான வட்டத்தொட்டிகள் , கிணறுகள் என சில தனித்துவமான கட்டிட அமைப்பு முறைகளையும் தன்னுள்ளே கொண்டுள்ள இக் கட்டிடத்தின் வெளிக்காட்டுமானத் தோற்றமானது, ஐரோப்பியர் காலத்து கட்டிடக்கலை முறையைக் கொண்டிருந்தாலும் உயர்தர உள்வேலைப்பாடுகள் மொத்தமும் தமிழரின் திராவிட கட்டிடக்கலைக்குரிய அம்சங்களை வெளிப்படுத்தி நிற்கின்றது.

மந்திரிமனையில் எஞ்சி இருக்கும் பழங்காலத்து சான்றுகள்

சமீபத்திய ஆராச்சியின் போது இம்மனைக்கு பின்புறத்தில் இருக்கும் ஓர் அறையில் இருந்து சுரங்கவாசல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இம் மந்திரிமனையின் பின்புறத்தில் நிலஅறை ஒன்றும் மண்டபம் ஒன்றும் இடிந்த நிலையில் இன்னமும் காணப்படுகின்றன.

மந்திரிமனையின் சுரங்கவாசல்
பட உதவி : blogspot.com
இடிந்த நிலையின் காணப்படும் மண்டபம்
பட உதவி : sundayobserver.lk

அப்போது நல்லூரினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த மன்னர்களிடமிருந்து போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின் நல்லூரிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு தலைநகரை  மாற்றியமைத்துள்ளனர். இருப்பினும் நல்லூரில் எஞ்சியிருந்த அரச கட்டிடங்களும், நிலங்களும் போத்துக்கீசரின் அப்போதைய பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறது வரலாறு.

போத்துக்கீசர் காலத்து மரவேலைப்பாடுகள்
பட உதவி : 41a.net

இக்கட்டிடமானது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஆரம்பகாலங்களில் பராமரிக்கப்பட்டு வந்தாலும், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டது. பின்னர் இதன் அருகிலுள்ள கோவிலொன்றுக்கு தொடர்புடைய குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

பின்னாட்களில் இதன் சரித்திர முக்கியத்துவம் கருதி 2003 ஆண்டின் காலப்பகுதியில் யாழ் அரச செயலகம் இதற்கென நிதியை ஒதுக்கி, திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் வேலையை தனியார் நிறுவனமொன்றிடம் கையளித்திருக்கின்றது. தற்போது பராமரிப்புகள் ஏதுமின்றி தனித்த நிலையில் கண்டுகொள்ளப்படாத கட்டிடமாக ஒதுங்கி நிற்கும் இம்மந்திரிமனையானது, இலங்கையின் எஞ்சியுள்ள மிகச் சில புராதன அம்சங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

இது போன்ற தொன்மையான வரலாற்று சின்னங்களை பேணிப்பாத்துக்க வேண்டியது அரசின் கடமையும் மக்களின் பொறுப்பும் ஆகும்.

Related Articles

Exit mobile version