கிரேக்கத்தில் மின்னிய மதுரை முத்து

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவி மொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித்

திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே

நகைமுத்த வென்குடையாண் நாடு

– முத்தொள்ளாயிரம் 58

முத்து விளையும் இடங்களான இலங்கையும் இந்தியாவும் படம் –
newsfirst.lk

முத்தொள்ளாயிரம் கூறும் தென்னாடாம் மதுரையின் அழகியல் வர்ணனை இது. முத்து என்றால் மதுரை, மதுரை என்றால் பாண்டியர்கள், பாண்டியர்கள் என்றால் கடல் கடந்த வணிகம் என்று ஒரு நூலின் முனையைத் தொட்டுக் கொண்டு சென்றால் அது முடியும் இடம் கிரேக்கமாகவும், ரோமாபுரியாகவும், எமனாகவும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளாகவும் இருக்கும். இது கடலுக்கும் அலைக்குமான உறவு  என்றில்லாமல், கடலுக்கும் தமிழனுக்குமான, முத்திற்கும் முத்தமிழுக்குமான வரலாறாகும்.

கடல் விழுங்கியிருக்கும் கீழக்கடலில் ஒளிந்திருக்கின்றது நமக்கு சொல்லப்படாத ஓர் வரலாறு. கொஞ்சமாய் தெரிந்த வரலாறுகளை ஒன்றிணைத்தால் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். இந்தியாவின் தெற்கு எனப்படுவது மூன்று பக்கங்களாலும் கடலால் சூழப்பட்டு, மூவேந்தர்களால் ஆளப்பட்ட பண்டைய தமிழகமாகும். மதுரையை ஆண்ட பாண்டியர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள். கொற்கை, சோதிக்குரை (முத்துக்குளித்துறை என அழைக்கப்பட்ட தூத்துக்குடி), காவேரிப் பூம்பட்டினம், எயிற்பட்டினம் (மரக்காணம்), நீர்ப்பெயற்று போன்ற நகரங்கள் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வாழும் துறைமுக நகரங்களாக இருந்தன. முத்துகள் அதிகம் விளைந்த முத்துக்குளித்துறைகளாகவும் இருந்திருக்கின்றன. இலங்கையின் பல்வேறு கடற்கரை நகரங்களும் எ.கா பொற்கேணி, மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை முத்துக்குளித்துறையாக இருந்திருக்கின்றன.

முத்துக்களை தேர்வுசெய்யும் வியாபாரி படம் -media.finedictionary.com

இடை மற்றும் கடை சங்ககால மதுரையின் தலைநகரங்களாக முத்துக் குளித்துறைகளை தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் பாண்டியர்கள். மேலும், அவ்விடங்களில் பல நாட்டினை சேர்ந்த மக்கள் வந்து செல்லும் அளவிற்கு பல்வேறு வசதிகளையும் பாண்டியநாடு செய்து கொடுத்திருக்கின்றது. விடுதிகள், கேளிக்கை மையங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் அவர்களுக்காக உருவாக்கித் தரப்பட்டது.

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும்

என்ற பட்டினப்பாலை வரிகள் மேற்கூறியவற்றை உண்மையாக்குகின்றன.

முத்து என்பதனை வணிகம் சார்ந்து பாராமல், அதனை வாழ்வியலாகப் பார்த்தால், பண்டைய தமிழக மக்களும் அரசர்களும் எத்தகைய பண்பட்ட நாகரீகத்தில் இருந்து வந்திருக்கின்றார்கள் என்பது புரியும். மிளகிற்காக போர்த்துக்கீசர்கள் கேரளத்தில் கால்வைப்பதற்கு சற்றேறக்குறைய 1800 வருடங்கள் பழமையானது தமிழர்களின் கடல்வழி பயணமும், வணிகமும்.

ஒரு வணிகத்தினை வெற்றியாக மட்டுமல்லாமல், சிறப்பாகவும் செய்ததற்கான அடையாளங்கள்தான் மேலே கூறப்பட்ட சிறு குறிப்புகள். தென்னாட்டு மக்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத சிறப்பான இடத்தினை பெற்றிருக்கின்றது இந்த முத்து. தென்னாட்டு மக்களை அவர்களின் பெயர் வைத்து அடையாளப்படுத்திவிடலாம். பொதுவாக முத்து என்று பெயர் வைத்திருந்தால் அவர்களின் பூர்வீகம் நிச்சயம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் ஒன்றாகத் தான் இருக்கும்.

தூத்துக்குடி துறைமுகம். படம் – tvaraj.files.wordpress.com

மதுரையின் வீதிகளின் இறங்கி நடக்கும் போது, அந்த தெருக்கள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டு கால பழமையின் பெருமையை நம்மிடம் பேசிச் செல்வது போல் ஒரு பிரம்மையை உருவாக்கும். அதற்கு ஈடிணையைத் தரும் ஓர் தமிழக நகரம் இல்லை என்றும் சொல்லலாம். நாமும் கொஞ்சம் அந்த இரண்டாயிரம் ஆண்டு கால பழமைக்குள் பயணிப்போம்.

அலையும் கடலும் காதலுக்கான உவமையன்று அது நம் காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றின் உவமையாக இருக்கின்றது. மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் வாழ்ந்த செழித்த வாழ்விற்கு காரணமாய் இருந்தது வேளாண்மையும் வணிகமும். ரோமாபுரியில் இருக்கும் விலையுயர்ந்த மதுவின் மணம் மதுரை வீதிகளில் வீசியது. கீழக்கடலில் முங்கிக் குளித்து எடுத்த முத்து மௌரிய நாட்டு அரசவையில் வைத்து சிறப்பிக்கப்பட்டது. இரத்தினங்கள் ஒன்பது இருக்க, முத்து ஏன் தமிழோடு இணைந்து, தமிழர்களின் வாழ்வோடு இணைந்து, அவர்களின் பெயர்களோடு நிலைத்திருக்கின்றது என்று யோசித்தால் முத்தானது அவர்களின் பூர்வீகத்தில் குடி கொண்டிருக்கின்றது.

முத்தெடுக்கும் தொழிலாளர்கள். படம் – .lynairekibblewhite.co.nz

“தென்கடல் முத்தும் குணகடல்துகிரும்” – பட்டினப்பாலை சொல்லும் வரிகளால் புரிந்து கொள்ள முடியும் முத்திற்கும் தென்னாட்டிற்கும் இடையேயான பந்தத்தை. புகாரில் ஏற்றுமதியாகும் பொருட்களை வரிசைப்படுத்துகையிலும் முத்து தவறாமல் இடம் பெற்றிருக்கின்றது.

மௌரியாவில் இருந்து ஏமன் வரை

தமிழர்களின் முத்தானது, மௌரிய பேரரசின் பொருளாதார முன்னோடி சாணக்கியன் எனப்படும் கௌடில்யரின் அர்த்தசாஸ்த்திரத்தை அலங்கரித்தது. வீர மௌரியர் சந்திரகுப்தர் அரசவையில் ஒளிவீசும் முத்துக்கள் கவாடபுரத்தில் இருந்து பெறப்பட்டது. தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் இடத்தில் நிலைத்திருந்த துறைமுகத்தில் அறுத்தெடுக்கப்பட்ட முத்து என்று குறிப்பிட்டிருக்கின்றார் சாணக்கியர். கி.மு. நான்காம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டில் கவாடபுரம், இடைச்சங்க மதுரையின் தலைநகரமாக விளங்கியது.

இந்த காலத்தில் தான் செல்யூகஸின் தூதுவரான மெகஸ்தனிஸ் மௌரிய நாட்டிற்கு விருந்தாளியாக வருகை தருகின்றார். அவர் கண்களால் கண்டு வியந்த மிக முக்கியமான ஒரு பொருள் முத்தாக இருந்தது. அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற பயணக் குறிப்பு தான் பண்டைய தமிழகத்திற்கும் கிரேக்கத்திற்குமான இணைப்பினை கடலோடு இணைத்த பாலமாக செயல்பட்டது. கிரேக்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அகஸ்டஸின் 35 வருட பார்த்திய போர் (கி.மு. 55 முதல் கி.மு.20) என இரண்டும் இந்த இணைப்பிற்கு பலம் சேர்த்தது.

ஹங்கேரி மன்னரின் முத்துப் பதிக்கப்பட்ட கிரீடம். படம் – wikimedia.org

இந்த போர் காரணமாக தரை மார்க்க வணிகம் இந்தியாவிற்கும், கிரேக்கத்திற்கும் இடையில் தடைபட்டு போக கிரேக்கர்கள் நீர் மார்க்கமாக வந்து சேர்ந்த இடம் தமிழகம். செல்யூகஸ் வியந்த முத்தானது கவாடபுரத்தில் விளைந்தது. அவனின் தோன்றல்களான அகஸ்டஸிற்கு வியப்பளித்த முத்தானது கொற்கையில் விளைந்தது.

கிரேக்கர்களின் வருகையானது கி.மு 21ம் ஆண்டில் தொடங்கி, அடுத்து வந்த 37 வருட வணிகத்தில் தமிழக – கிரேக்க உறவுமுறையை ஓர் கலாச்சாரமாக மாற்றியது. யவனர்கள் (கிரேக்கர்கள்) தமிழகத்திலும், தமிழர்கள் கிரேக்கத்திலும் வசிக்க வழிவகை செய்தது இந்த கலாச்சாரம். கி.மு. 21ஆம் ஆண்டில் இரண்டு பேரரசிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்திலிருந்து சுமார் ஆறு லட்சம் பவுணிற்கு இணையான முத்துக்கள், மஸ்லீன் துணிகள், மிளகு போன்றவை ரோமாபுரிக்கு பயணித்தது.கி.பி 16ம் ஆண்டில் கிரேக்கத்தில் பெண்கள் அணியும் முத்து நகைகளின் எண்ணிக்கை அதிகமாகவே, கிரேக்கத்தின் திபெரியஸ் மன்னன், பெண்கள் பொது இடங்களில் முத்து அணிய தடை விதித்தார். மேலும் அவர்களின் நகைக்காக ஆகும் செலவால் நாட்டின் பொருள் வளம் குறைந்து வருவதாகக் கூறி செனட் சபைக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.

கிளியோபாட்ராவின் முத்து. படம் – static.artuk.org

தொடர் பயணங்களால் உருவான அனுபவத்தினை வைத்துக் கொண்டு ஹிப்பாளஸ் என்பவர் ஒரு கூற்றினை (Theory) தயாரித்து அந்த கூற்றின்படி கடலில் ஏற்படும் சுழற்சியினை பின் தொடர்ந்தால் கிரேக்கத்தில் இருந்து தமிழகத்திற்கு விரைவில் வந்துவிடலாம் என்று நிரூபித்தார். அதன் விளைவு தினமும் ஒரு கப்பல் ‘பாய்த்துணி இல்லாமல்’ கிரேக்கத்திலிருந்து தமிழகத்திற்கும், தமிழகத்திலிருந்து கிரேக்கத்திற்கும் பயணிக்கத் தொடங்கியது. இந்த கடல் மார்க்கம், மேலும் பல்வேறு நாட்டினரை தமிழகத்திற்கு வர வைத்தது. இதன் பின்னர் தான் ஏமன் நாட்டிலிருந்தும், எகிப்திலிருந்தும், அரேபியாவிலிருந்தும் வணிகர்கள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கினார்கள். முத்திற்காக விரிந்தது கடல் சார் வாணிபம்.

முத்துக்குளித்தல் தொடர்பான சில தகவல்கள்:

முத்துக்குளிக்க தயாராகும் இலங்கையர்கள். படம் – serendib.btoptions.lk

  • முத்துக்குளிக்கும் இடத்தினை பார்கள் என்று அழைப்பார்கள்
  • பெரும்பாலாக முத்துக்குளிப்பில் ஈடுபடுபவர்கள் மாமன் – மச்சான், சகோதரர்கள் என்ற முறையினராக இருப்பார்கள்
  • முசிலிப்பட்டணத்தில் இருந்து பெறப்பட்ட முத்து கிளியோபட்ராவின் அணிகலன்களில் மிக முக்கியமானதாக இருந்தது
  • ஒரு வருடம் தமிழகத்தில் முத்துக்குளிப்பு நடைபெற்றால், மறுவருடம் யாழ்பாணத்தில் முத்துக்குளிப்பு நடைபெறும்
  • முத்துக்குளிக்க வள்ளத்தில் மொத்தம் 21 நபர்கள் செல்வார்கள். ஆடப்பனார் என்பவர் வள்ளத்தை தலைமை தாங்கி செல்பவர். திண்டில் என்ற ஒரு படகோட்டி, ஒரு சமண் ஓட்டி, ஒரு தோடி, பத்து முத்துக்குளிக்கும் நபர்கள் மற்றும் பத்து முண்டக்குகள் உட்பட தான் முத்துக்குளிக்க செல்வார்கள்.

முத்து வியாபாரியின் கைப்பெட்டி. படம் –
media.vam.ac.uk

சேர்ப்பன், புலம்பன், கொண்கண், துறைவன், நுளைச்சி போன்ற சங்ககால நெய்தல் நில மக்களின் வகுப்புகள் பற்றி இக்கால மக்கள் கேள்விபட்டதும் கிடையாது. பரதவர்கள், பட்டினவர்கள், முக்குவர், கரையார், மரைக்காயர் (அரேபிய பரவர்கள் தமிழக முக்குவர்களோடு ஏற்பட்ட திருமண பந்தத்தில் உருவானது), முத்தரையர், சவளக்காரர்கள், குட்டக்காரர்கள் போன்ற மக்கள் தான் இப்போது வாழ்கிறார்கள். அவர்களின் முழுநேர வேலையும் மீன் பிடித்தலாகும்.

வைகை கடலில் கடக்கும் இடமான அழகங்குளம், தாமிரபரணி கடலில் கலந்த இடமான கொற்கை,  நொய்யல் கடலில் கலக்கும் இடமான தொடுமலை எங்கும் பல மொழி பேசும் மக்களின் சொற்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. மதுரை மண்ணில் இறங்கி நடக்கையிலும், மதுரைக் கொடியில் நிலைத்திருக்கும் மீன் சின்னமும், சொக்கன் தவிர்த்து பார்க்கையில் மதுரையை ஆண்ட பெண்ணரசி மீனாட்சியும் கடலோடு தங்கள் வைத்திருந்த உறவின் நிலைப்பாட்டினை உணர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

Related Articles

Exit mobile version