காலத்துக்குக் காலம் தமிழின் மாண்பை நிலைநிறுத்துவதற்காக யுகபுருஷர்கள் தோன்றுகின்றார்கள். அவர்களுடைய செயற்கரிய செயல்களாலேயே தமிழ் குறித்து புத்துணர்ச்சி புதுவேகம் கொண்டு அடுத்த தலைமுறையினருக்கு காட்டாற்று வெள்ளமாகப் பரவுகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் பக்தித் தமிழின் மாண்பை வட இந்தியாவில் நிலை நிறுத்திய குமரகுருபரர், தமிழ்ப்பண்பாட்டுத் தளத்தில் முக்கியமானவராக போற்றப்படுகின்றார்.
இன்று தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் என்றழைக்கப்படும் திருவைகுண்டத்தில் வாழ்ந்து வந்த, சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் பிறந்த இவரது சிறு பிராயம் குறித்த கதை மிகவும் பிரசித்தமானது. பின்னாளில் வண்ணத் தமிழ்ப்பாடல்கள் பாடிய குருபரர், பிறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் ஒரு வார்த்தை பேசவில்லை என்ற கவலை பெற்றவர்களின் மனதை வாட்டியது.
அவர்களது ஊருக்கு அருகே, தமிழ்க் கடவுளான முருகன் அலைவாய்க்கரையில் கோயில் கொண்டிருந்தான். ஆறுபடைவீடுகளுள் ஒன்றாகப் போற்றப்படும் அந்த திருச்செந்தூர்க் கோயிலுக்கு குருபரனை அழைத்துச் சென்ற அன்னையும் தந்தையும், தங்கள் பிள்ளைக்கு பேசும் திறன் அருளும்படி வேண்டினார்கள். பிறந்து அன்று வரை பேசாதிருந்த அந்தப் பிள்ளை அப்போது, புலவர்களும் திணறும்படியான வெண்பா யாப்பில், “கந்தர் கலி வெண்பவினைப்” பாடியது. குமரன் அருளால் தமிழ்க்கவி இயற்றும் அருள் பெற்றதால், அன்றிலிருந்தே அவருக்கு குமர குருபரர் என்ற நாமம் வாய்த்தது.
தமிழகத்தில் அப்போதிருந்த நிலைபெற்ற ராஜ்ஜியமாக மதுரை நாயக்கர் அரசு காணப்பட்டது. அந்த அரச வம்சத்தில் புகழ்பெற்ற அரசரான திருமலை நாயக்கரின் செங்கோல் ஆட்சி நிலவிய மதுரைக்குச் சென்றார் குமரகுருபரர். தமிழ் மாணவர்கள் இன்றும் போற்றிப் படித்துவரும் ”மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்” நூலை அவர் அங்கெயே இயற்றினார்.
மதுரை அரசர் திருமலை நாயக்கர் முன்னிலையில், மதுரை மீனாட்சி அம்மை கோயிற் சன்னதியில், அந்த நூல் அரங்கேற்றப்பட்டது. அப்போது இடம்பெற்றதாக ஒரு கதையும் கூறப்படுகின்றது. பிள்ளைத் தமிழின் ஒவ்வொரு செய்யுளாக குமரகுருபரர் பாடிக்கொண்டிருந்த வேளையில், மீனாட்சி அம்மை சிறுமி வடிவில் வந்தாள் என்று, திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்து கொண்டு, அந்த அரங்கேற்றம் முழுவதையும் கண்டுகளித்தாள் என்றும் கூறப்படுகின்றது. அரங்கேற்றம் முடிந்ததும், அரசரின் கழுத்திலிருந்த ஆரத்தைக் கழற்றிய அந்தச் சிறுமி அதை எடுத்துக் கொண்டு போய், குமர குருபரரின் கழுத்தில் அணிவித்தாள் என்றும் அதன் பின்னர் அவள் மறைந்து போய்விட்டாள் என்றும் அந்த செவிவழிக் கதை குறிப்பிடுகின்றது.
அந்தச் சம்பவத்தின் பின்னர் குமரகுருபரரின் புகழ் மேலும் அதிகரித்தது. தமிழகத்தில் திருவாரூர், சிதம்பரம் முதலான பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள இறைவனை புகழ்ந்து, தனது ஈடு இணையற்ற தமிழ்ப்புலமையால் கவி படைத்தார். எனினும், இன்றுவரை அவரது புகழ் நின்று நிலைப்பதற்கான முதற்காரணம் வட இந்தியப் பகுதியான காசியில் அவர் படைத்த சாதனையே!
சைவர்களுக்கு பிரதானமானது காசித் திருத்தலம். அந்தத் தலத்திற்கு யாத்திரை செய்த குமர குருபரர், அங்கு தமிழ்ப்பாரம்பரியப்படி மடம் அமைப்பதற்குத் தீர்மானித்தார். அப்போது, காசியானது, டெல்லியிலிருந்து ஆண்டுவந்த மொகலாய மன்னர்களுடையதாக இருந்தது. இதனையடுத்து இஸ்லாமிய ஆட்சியாளரைச் சந்தித்துப் பேசுவதற்காக, அவருடைய இந்துஸ்தானி மொழி வல்லமையை தந்தருள வேண்டுமென, கல்வித் தெய்வமான சரஸ்வதியை வேண்டி அவர் பாடியதே, இன்றும் பிரபல்யமான “சகலகலா வல்லி மாலை”. அதன் மூலம் பெற்ற மொழியறிவு கொண்டு, அந்த ஆட்சியாளருடன் பேசி, காசியில் மடம் அமைப்பதற்கு இடம் கோரினார். அவரது புலமை கண்டு வியந்த இஸ்லாமிய ஆட்சியாளர் அவரது கோரிக்கைக்கு இணங்கினர். காசியில் தமிழ் மடம் தோன்றியது.
கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுள் கோவை, பண்டார மும்மணிக் கோவை, காசிக் கலம்பகம், சகல கலாவல்லி மாலை, காசித் துண்டி விநாயகர் பதிகம், மதுரை மீனாட்சி அம்மை குறம், கயிலைக் கலம்பகம், மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை, தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை ஆகிய 16 நூல்களையும் குமரகுருபரர் இயற்றித் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்தார். எனினும் துரதிஷ்டவசமாக, கயிலைக் கலம்பகம், காசித் துண்டி விநாயகர் பதிகம் ஆகியன கால வெள்ளத்தில் அடிபட்டுப் போய் மறைந்தன.
குமரகுருபரரினால் காசியில் அமைக்கப்பட்ட மடத்தின் கிளை, தமிழகத்தின் திருப்பனந்தாளிலும் அமையப்பெற்றது. இந்த மடங்கள் இன்றும் தமது தமிழ்ப்பணியினைத் தொடர்ந்தும் ஆற்றிக்கொண்டு வருகின்றன. தமிழ்மக்கள் வாழ்கின்ற நிலம் தாண்டிச் சென்றும் தமிழை நிலை நிறுத்த வேண்டும் என்பதை தமிழ்கூறும் நல்லுலகிற்குச் சொன்ன குமரகுருபரரின், கருத்து இன்றும் தமிழர்களின் நெஞ்சில் ஆழப்பதிந்ததோடு மட்டுமல்லாது, செயல்வடிவம் பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.