விளையாட்டுக்களில் எவ்வித வரையறையும் இல்லாதது தான் கிரிக்கெட். இதற்கென ஏகப்பட்ட விதிகள் இருந்தாலும் பல்வேறு ஓட்டைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கால்பந்து, கபடி, றக்பி, கரப்பந்தாட்டம், கூடைப்பந்து என எந்த போட்டியாக இருந்தாலும் மைதானத்தில் அளவு, உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் மாறாது. பயன்படுத்தப்படும் பந்துகளின் அளவும் மாறுபடாது, அதை மாற்றவும் முடியாது.
கிரிக்கெட் என வந்து விட்டால் அவ்வளவு தான். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு அளவு வைத்திருப்பர். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் மிகவும் பெரியதாக இருக்கும். இங்கு பவுண்டரி அடிப்பது என்பதே பெரிய விஷயம். நியூசிலாந்தின் ஓக்லண்ட் , ஹெமில்டன் போன்ற மைதானங்கள் செவ்வக வடிவில் சிறியதாக இருக்கும். மெல்போர்னில் பவுண்டரி நீளம் சுமார் 81 மீ., எனில், நியூஸிலாண்டில் 45 மீ., தான் இருக்கும். துடுப்பு மட்டைக்கு என ஒரு வரையறையும் கிடையாது. ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு ஸ்டைலில், தங்கள் வசதிக்கு ஏற்பட விசேஷமாக செய்து தயாரித்துக் கொள்கின்றனர்.
இதேபோல பந்திலும் ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை இருக்கும். ஒருநாள் போட்டிகளுக்கென்று ஒருவித பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. டெஸ்ட் என்று வரும் போது ஒவ்வொரு அணியும் மாறுபடுகின்றன. இப்படியாக தங்களுக்கு ஏற்பட விதிகளை மாற்றிக்கொண்டாலும் கிரிக்கெட்டின் தன்மை என்னவோ அப்படியேத்தான் இருக்கின்றது. ஜென்டில்மன் கேம் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் ஆட்டமானது உலகின் அதிகம் பேரால் கவரப்பட்ட ஒரு விளையாட்டாக இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப உலக மாறுதல், தொழில்நுட்ப புரட்சிக்கு ஈடு கொடுத்து தன்னை மாற்றிக் கொண்டு கிரிக்கெட் உலகத்தோடு வேகநடை போட்டு வருகின்றது.
ஆம்… எப்போதோ ஆரம்பமானதாகச் சொல்லப்படும் கிரிக்கெட்டானது தற்போது 12 ஆவது உலகக் கிண்ணத்தைக் ஆடிக்கொண்டிருக்கிறது. உலகக் கிண்ணம் தொடர்பான பல தகவல்களை நாம் அறிந்து வைத்திருந்தாலும் கிரிக்கெட்டின் மூலம் குறித்து நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால் அது கேள்விக் குறிதான். காரணம் கிரிக்கெட்டின் வரலாற்றை தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.
கிரிக்கெட் ஆட்டத்தின் வரலாற்றைத் தேடிப் போனால் எமக்கு ஒரு சில ஆதாரங்கள் கிடைத்தாலும் அதில் பல ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டவையும் எழுதப்பட்ட வையாகவும் இருக்கின்றன. ஆக கிரிக்கெட்டானது ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதும் அப்படியான ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட விளையாட்டில் இலங்கை உலகக் கிண்ணத்தை வென்று சம்பியனாகியமையும் எமக்கு பெருமை சேர்க்கும் ஒரு விடயம்தான்.
கிரிக்கெட்டின் ஆதியைத் தேடி பலரும் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். இங்கிலாந்தில் தோன்றியது என்றும் இங்கிலாந்து அணிதான் கிரிக்கெட்டின் தலைமகன் என்றும் பலராலும் அறியப்பட்டாலும் இடம், நாள், நாடு என்று எந்தவித உறுதிப்பாடும் இல்லாமல்தான் கிரிக்கெட் வரலாறு கூறப்பட்டு வந்திருக்கிறது. அடி நுனி தெரியாமல் கிரிக்கெட் வரலாறு போய்க்கொண்டிருந்தாலும் பிரான்ஸில் விளையாடப்பட்ட கிரோகெட் (Croquet) என்ற விளையாட்டிலிருந்து கிரிக்கெட் தோன்றியதாக பல ஆராய்ச்சியாளர்கள் அபிப்பிராயங்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் விளையாடப்பட்டுவந்த கிரோகெட் எனும் ஆட்டமானது திருத்தமடையாத ஒருவிதத் தொடக்க நிலையில் இருந்ததாகவும் அதை பிரான்ஸ் மக்கள் மிகவும் உற்சாகத்துடன் ஆடி மகிழ்ந்திருக்கலாம் என்றும், கிரோகெட் ஆட்டத்திலிருந்தே தற்பொழுது அழைக்கப்படும் கிரிக்கெட் ஆட்டம் கிளைவிட்டுப் பிரிவது போல் உருமாறி வந்திருக்கலாம் என்றும் இந்த இனிய ஆட்டத்தைக் கண்ட ஆங்கிலேயர்கள் ஆட்டத்தின் அமைப்பையும் கருத்தையும் ஏற்று இங்கிலாந்துக்குக் கொண்டு வந்து திருந்திய ஆட்டமாகப் பொலிவுபெற அமைத்துக் கொண்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் அந்தக் காலத்தில் மிகவும் நெருக்கமான அரசியல் மற்றும் மண உறவு இருந்ததால் கிரிக்கெட் ஆட்டம் பிரான்ஸ்காரர்களின் கிரோகெட் ஆட்டத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று கருதுகின்றனர். இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆட்டம் மிகப்பெரிய இடத்தைப் பிடித்து மக்களால் விளையாடப்பட்டு வந்த காலத்தில் பிரான்ஸ் நாட்டினர் கிரிக்கெட் பற்றியே தெரிந்திருக்கவில்லை என்றும் ஒருசாரார் தெரிவிக்கின்றனர். எனினும் கிரிக்கெட் ஆட்டம் எங்கே தோன்றியது என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிட இயலாது. இலைமறை காய்களைப் போன்று இங்குமங்குமாக ஒரு சில குறிப்புகள் வரலாற்றுப் பின்னணியிலே ஆங்காங்கு மறைந்து கிடப்பதை சுட்டிக்காட்டி இப்படியும் இருக்கலாம் என்கின்ற தங்களது குறிப்பையும் கூறிக்கொண்டிருக்கின்றனர். கிளப் போல் (Club Ball) என்பதாக ஓர் ஆட்டம் இங்கிலாந்தில் முன்னாளில் ஆடப்பட்டு வந்துள்ளது. பிரபலமாக ஆடப்பட்டு வந்த கிளப் போல் ஆட்டத்திலிருந்து கிளைவிட்டுப் பிரிந்து, சிறப்பாகத் தோன்றிய ஆட்டமே கிரிக்கெட் என்றும் ஒரு குறிப்பீடு உண்டு.
கிளப் போல் எனும் ஆட்டம் பற்றிய குறிப்பும், எந்த விதமான விவரமும் இன்னும் தெரியாமலே இருக்கிறது என்பதால், இதைப் பற்றி ஒரு முடிவெடுக்காத நிலையில் நின்று போக வேண்டி யிருக்கிறது. அடுத்ததாக ஸ்கொட்லாந்தில் ஆடப்பட்டுவந்த கேட் அண்ட் டோக் (Cat and Doug) என்ற ஆட்டத்தின் அடிப்படையில் தான் கிரிக்கெட்டின் ஆரம்ப காலம் அமைந்தது என்றும் ஒரு கருத்துண்டு.
மூன்றாவதாக, கிரிக்கெட் ஆட்டம் தோன்றுவதற்கும், ஆட்ட அமைப்பு உருவாவதற்கும் ஸ்டூல் போல் (Stool Ball) தான் காரணமாக இருந்தது என்றும் கூறுகின்ற ஆசிரியர்களும் உண்டு. ஹேண்ட் இன் அல்லது ஹேண்ட் அவுட் (Handyn or Handoute) மறு வடிவுதான் கிரிக்கெட் என்பதாகவும் சிலர் கூறுவார்கள். ஆனால் இங்கிலாந்தில் லண்டன் நகரத்திலுள்ள அரசர்கள் நூலகத்தில் கிரிக்கெட் ஆட்டம் பற்றி கி.பி. 1344ஆம் ஆண்டே எழுதப் பெற்றிருக்கிறது என்று சான்றுகள் கூறுகின்றன. 1344ஆம் ஆண்டில் வரையப் பெற்றிருந்த ஓவியம் ஒன்றில் கிரிக்கெட் குறித்து உள்ளது. இதனால் கிரிக்கெட் ஆட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே இங்கிலாந்தில் சிறப்பான வளர்ச்சியுற்றிருக்க வேண்டும் என்றும், அப்படிப் பார்த்தால், கிரிக்கெட் ஆட்டம் ஏறத்தாழ 12 அல்லது 13ஆவது நூற்றாண்டிலே தோன்றியிருக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப்படுகின்றார்
வில்வித்தைப் பயிற்சியில் மக்கள் விருப்பமுடன் ஈடுபடாமல் ஹேண்ட் இன் ஹேண்ட் அவுட் மற்றும் கிரிக்கெட் ஆட்டத்திலும், அதிகமாக ஈடுபடுவதால், வில்லாற்றலில் மக்கள் தேர்ச்சி பெறாமல் போகின்றனர். ஆகவே நாட்டின் பாதுகாப்புக்கு உரிய கலையான வில் பயிற்சியைக் கற்கும் பொருட்டும், அதனைக் காக்கும் பொருட்டும், மேலே குறிப்பிட்ட இரண்டு விளையாட்டுகளையும் மக்களை ஆடவிடாமல், தடைச்சட்டத்தை நான்காம் எட்வர்ட் மன்னர் இயற்றித் தடை செய்தார். மக்கள் இந்த ஆட்டங்களை ஆடக்கூடாது என்று சட்டம் போட்டு தடை விதித்ததோடல்லாமல், மீறியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்றும் குறிப்பிட்டிருந்தார். மீறி விளையாடுபவருக்கு இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை நீடித்தது. அதுமட்டுமன்றி விளையாட இடம் தருபவருக்கும் இந்த தண்டனைச் சட்டம் பாய்ந்தது. இவ்வாறாக, 185 ஆண்டுகள் தடை போட்ட சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாமல் இந்த இரண்டு ஆட்டங்களும் முடங்கிக் கிடந்தன என்று வரலாறு கூறுகின்றது. ஆயுள் காலம் வரை தடைபோட்டவாறே ஆட்சியை முடித்துக் கொண்ட நான்காம் எட்வர்ட் மன்னருக்குப் பிறகு, தொடர்ந்து அரியணை ஏறியவர்கள் அனைவரும் இவ்வாறே தடை போட்டனர் என்பதால், ஹேண்ட் இன் ஹேண்ட அவுட் ஆட்டத்துடன் கிரிக்கெட்டும் இணையாகவே இருந்தது என்பதும், அதனால் கிரிக்கெட் ஆட்டத்தின் முன்னோடி என்று இதனைக் கூற முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
எப்படிப் பார்த்தாலும் கிரிக்கெட் எங்கு ஆரம்பித்தது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதற்கு இதுவரையில் சரிவர எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் இங்கிலாந்தில் 15 மற்றும் 16ஆ-ம் நூற்றாண்டுகளில் சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 17ஆ-ம் நூற்றாண்டில் பெரியவர்களால் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் உலகின் மற்ற இடங்களுக்கும் பரவியது. அதே வேளையில் கிரிக்கெட்டை ஒத்த வடிவில் இரு வேறு அளவுகளைக் கொண்ட குச்சிகளை வைத்து சிறுவர்களால் கிட்டிப்புல் விளையாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகக் கருதப்படும் இந்த விளையாட்டு கில்லி தாண்டு, குச்சி கம்பு, சில்லாங்குச்சி, கரக்குட்டி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்தக் கிட்டிப்புள்ளுக்கும் கிரிக்கெட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆனாலும் இதிலிருந்து கிரிக்கெட் வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆதிக்கம் மற்றும் ரயில் போக்குவரத்தின் வளர்ச்சியால் உலகின் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் விளையாடப்பட்டாலும் முதல் சர்வதேசப் போட்டி 1844இ-ல் நியூயோர்க் நகரில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே நடைபெற்றதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளது. இருந்த போதிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்த இரு நாடுகளும் தற்போது பங்கேற்கவில்லை. ஆதி காலத்தில் முடிவு தெரியும் வரை விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் போட்டிகள் காலம் கருதி முதலில் 6 நாட்களாக வரையறுக்கப்பட்டு பின்னர் 5 நாட்கள் என தற்போதைய வடிவத்தைப் பெற்றன.
கால்பந்து மோகம் உலகில் தீயாய் பரவி இருந்த நிலையில் கிரிக்கெட்டையும் அவ்வாறு பிரபலப்படுத்தலாம் என்ற நோக்கில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே 1912ஆ-ம் ஆண்டு முத்தரப்பு டெஸ்ட் போட்டித் தொடர் நடத்தப்பட்டது. இருப்பினும் பாரம்பரியமிக்க ரசிகர்களால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விரும்பப்பட்டாலும் கால்பந்துக்கு இருந்த மோகம் கிரிக்கெட்டுக்கு அப்போது இல்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் 1962 ஆம் ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புது முயற்சியாக இங்கிலாந்தில் ஒரு நாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உள்ளூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த ஒருநாள் தொடருக்கு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் 1971ஆம் ஆண்டில் மெல்போர்னில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைப்பட்டதால் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அந்த இரு அணிகளும் பங்கேற்ற ஒருநாள் போட்டியாக நடத்தப்பட்டது. இதுவே சர்வதேச அளவிலான முதல் ஒருநாள் போட்டியாகும். ஒரு ஓவருக்கு 8 பந்துகள் வீதம் 40 ஓவர்கள் கொண்ட இந்த ஒருநாள் போட்டிக்கு கிடைத்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இதனை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முயற்சியே ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஆகும்.
முதல் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நடத்தும் முன்னர் பரீட்சார்த்த முயற்சியாக 1973ஆம் ஆண்டில் மகளிர்க்கான சம்பியன் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இங்கிலாந்து, அவுஸ் திரேலியா, நியூஸிலாந்து என்று 7 நாடுகளுக்கு இடையே ரவுண் ரொபின் முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது. ரசிகர்களின் மத்தியில் இந்தத் தொடர் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதலாவது உலகக் கிண்ணத்தை 1975-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தியது.
இலங்கையில் கிரிக்கெட்
இலங்கைக்கு கிரிக்கெட் அறிமுகமானது 1832 களில். அப்போது இலங்கை பிரட்டிஷின் ஆட்சியின்கீழ் இருந்தது. சிலோன் என்று அறியப்பட்டிருந்த அப்போதைய இலங்கையில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட விளையாட்டுக் கழகம்தான் சி.சி.சி கொழும்பு கிரிக்கெட் கிளப். பழம்பெரும் இந்தக் கழமானது 1882ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதல்தர போட்டிகளில் சிலோன் நெஷனல் கிரிக்கெட் டீம் என்ற பெயருடன் ஆடிவந்த இலங்கை அணி 1965ஆம் ஆண்டுதான் ஐ.சி.சி.யில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டது. அதன்பிறகு 1975ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியும் பங்கேற்றிருந்தது. உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் வெஸ்ட் இன்டீஸை எதிர்த்தாடி 9 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது. இதன்தொடர்ச்சியாக இலங்கையில் வளர்ந்துவந்த கிரிக்கெட்டானது உலகின் முதல் பத்து நாடுகளுக்குள் இலங்கை அணியை நிக்கவைத்துள்ளது.