யூரி காகரின் – விண்வெளியில் பயணித்த முதல் நபர்

விண்வெளியில் பயணிப்பது; அதில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டதாக கருதும் இக்காலத்திலும் நாம் எதிர்கொண்டு கொண்டிருக்கும் சிக்கல்களை பார்ப்போம். முதல் சிக்கல் உடற்கூறியல். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக உந்தப்படும் போது ஏற்படும் அழுத்தம் மற்றும் அதிர்வினை தாங்கும் திறன் நம் உடலுக்கு வேண்டும்.

நிலத்திலிருந்து விண்கலனில் கிளம்பிய சில மணித்துளிகளிலேயே தொழில்நுட்பக்கோளாறுகளால், வெடித்துச்சிதரும் அபாயம். அதைத்தாண்டி விட்டால், நமது வளிமண்டல அடுக்கினை கடக்கும்போது ‘எஸ்கேப் வெளாசிட்டியால்’ ஏற்படும் அழுத்தம், அதையும் சமாளித்துவிட்டால், ‘வேன் ஆலன் ரேடியேஷன் பெல்ட்’ எனும் ஆற்றல்மிக்க துகள் பொருள் கொண்ட புவியின் காந்தப்புல பகுதி, அதன் பின்பு வெற்றிடத்தின் வரவேற்பு என விண்வெளியில் பயணம் மேற்கொள்வது என்பது ஒவ்வொரு நிலையிலும் மறுபிறப்பு எடுப்பதைப்போன்றதாகும்.

பனிப்போர் – விண்வெளி ஆய்வின் அரங்கேற்றம்

அது 1950-களின் இடைப்பகுதி. அமெரிக்க – இரசிய பனிப்போரில் இரு நாடுகளும் அணு ஆயுதங்கள், போர் பலம் மற்றும் பத்திரிக்கை, ஊடகங்களில் கருத்துகள், எதிர் கருத்துகள் என பரபரப்பினை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.

விண்வெளி ஆய்வு, பனிப்போர் போட்டியின் மூலம் அரங்கேறத்துவங்கியது. அக்டோபர் 4, 1957, சோவியத் R-7 எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம், புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்போகும் முதல் மனிதத்தயாரிப்பான, ‘ஸ்புட்னிக் 1’ எனும் செயற்கைக்கோளினை இரசியா, விண்ணில் ஏவியது. அது அதிகபட்சமாக புவியிலிருந்து 940 கி.மீ சென்று, புவியின் சுற்றுவட்டப்பாதையில் 1958 வரை தங்கி, பின் புவியின் வளிமண்டலத்தில் விழுந்து எரிந்து அதன் வாழ்வை முடித்துக்கொண்டது.

அதே ஆண்டு, 1957, நவம்பர் 3 ஆம் தேதி, அடுத்த செயற்கைக்கோளான ‘ஸ்புட்னிக் 2’, அதன் விண்கலனுடன் இரசியாவால் அனுப்பப்பட்டது. விண்வெளியின் வெப்பநிலை, அழுத்தம், துகள் பொருள், கதிர்வீச்சு, காந்தப்புலம் மற்றும் உயிர்வாழ்தல் போன்றவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு, அந்த விண்கலனில் ‘லைகா’ எனும் நாய் ஒன்றினையும் கூடவே அனுப்பி சோதனை செய்தது.

அதன்பின், இரசியாவிற்கு பதிலடி கொடுக்க எண்ணி, அவசர அவசரமாக, ராக்கெட் விஞ்ஞானி வெர்ன்ஹெர் வோன் ப்ரான் என்பவரை வைத்து, அமெரிக்க ராணுவம் 1958-ல் அதன் சொந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. அதே ஆண்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அன்றைய ஜனாதிபதி ‘ட்வய்ட் ஐஸேன்ஹோவர்’ மூலம் துவங்கப்பட்டது.

அடுத்தடுத்து பல ‘ஸ்புட்னிக்’ செயற்கைக்கோள் விண்கலன்களை ஏவிமுடித்த பின்னர், இரசியா 1959-ல் விண்வெளி ஆய்வில் அடுத்த படி எடுத்துவைத்தது. நிலவினை அடையும் நோக்கத்துடன் ‘லூனா 2’ எனும் விண்கலனை ஏவியது. செப்டம்பர் 14, 1959-ல் நிலவில் திட்டமிடப்பட்டபடி மோதிய அது, நிலவினை அடைந்த முதல் மனிதன் உருவாக்கிய பொருளாகும்.

அடுத்த இரண்டே ஆண்டுகளில் மனித இனம் பெருமைகொள்ளும் ஒரு மிகப்பெரும் சாதனை இரசியாவால் நிகழ்த்தப்பட்டது.

12 ஏப்ரல் 1961, சோவியத் விண்வெளிவீரரான, யூரி காகரின்(Yuri Gagarin) வோஸ்டாக் 1 எனும் விண்கலன் மூலம் விண்வெளியில் புவியின் சுற்றுவட்டப்பாதை வரை சென்ற, விண்வெளியில் பயணித்த முதல் மனிதர் எனும் புகழினைப்பெற்றார்.

Sputnik 1 – The First Artificial Sattelite Reached Space(Pic:flipboard)

யூரி காகரின்

முழுப்பெயர்: யூரி அலெக்ஸேய்விக் காகரின்

பிறப்பு: மார்ச் 9, 1934 கஜட்ஸ்க், இரசியா, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம்.

அவர் பிறந்த இடமான கஜட்ஸ்க், அவர் மறைந்த பின் ‘ககாரின்’ எனும் அவரது பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது.

நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை யூரி அலெக்ஸிவிக் ககாரின். மாஸ்கோவில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இளைஞனாக இருந்தபோது, காகரின் ஒரு ரஷ்ய யாக் போர் விமானம் தனது வீட்டிற்கு அருகே, அவசரகால தரையிறக்கம் செய்யப்பட்டதை கண்டார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு, பறக்கும் கிளப் ஒன்றில் சேர வாய்ப்பு வர, அவர் அதை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார். 1955-இல் தனது முதல் தனி விமானத்தை இயக்கினார். அதிலிருந்து சில ஆண்டுகளிலேயே, அவர் ஒரு விண்வெளி வீரராக தன்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டார்.

Yuri Gagarin at Spacecraft Vostok 1(Pic:Peter Rooney)

ஒரு புகழ்பெற்ற விண்வெளி வீரர் ஆன கதை

200-க்கும் மேற்பட்ட இரசிய விமானப்படை போர் விமானிகள் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உயர் அழுத்த நிலைமைகளையும் சமாளிக்கும் அனுபவங்கள் காரணங்களாக கருதப்பட்டன. அந்த நேரத்தில் 27 வயதான மூத்த லெட்டினன்ட் காகரின், தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகளில் ஒருவராவார்.

ஏப்ரல் 12, 1961 அன்று, மாஸ்கோ நேரத்தில் காலை 9:07 மணிக்கு, ‘வோஸ்டாக் 1’ விண்கலன் சோவியத் ஏவு தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. உந்து விசையின் காரணமாக ஏற்படும் எடை இழப்பு ஒரு பைலட்டை எவ்வாறு பாதிக்கப் போகிறது, அதாவது விமானியால் அந்த அளவு அதிர்வு மற்றும் அழுத்தத்தில் விண்கலனை சரியாக கட்டுப்படுத்த முடியுமா? என்பது எவருக்கும் உறுதியாக தெரியாது என்பதால், விண்கலனில் அவர் இருந்த கோள வடிவ உறையினுள், தானாக இயங்கும்படி அல்லது தரைக்கட்டுப்பாட்டுத்தளம் நிலத்திலிருந்தே இயக்கும்படியாக அந்த விண்கலன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஒருவேளை விண்கலன் செல்லும்போது ஏதேனும் தவறு நேர்ந்தால், காகரின் விண்கலனை அவர் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர, தரைக்கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்து, தானியக்கத்தினை ரத்துசெய்யும் குறியீட்டை(Override Code) பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சோவியத் விண்வெளி திட்டத்தின் அப்போதைய தலைமை வடிவமைப்பாளர் ‘செர்கி கொரோலெவ்’ விதிமுறைகளை மீறி, காகரினிடம் அவர் விண்கலனில் ஏறும் முன்னரே அந்த குறியீட்டை கொடுத்திருந்தார்.

ஒருவேளை, எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு, சுற்றுவட்டப்பாதையில் இயற்கையாக அது சுற்ற ஆரம்பிக்க எடுக்கும் காலம் வரை காத்திருக்கும் நிலை வந்தால், காகரினுக்கு 10 நாட்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் நீர் போன்றவையும் அக்கலனில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பொருட்கள் காகரினுக்கு தேவைப்படவில்லை.

108 நிமிடங்களில், ‘வஸ்டோக் 1’ பூமியைச் ஒரு முழு சுற்று சுற்றியிருந்ததோடு, அதிகபட்சமாக புவியிலிருந்து சுமார் 203 மைல்கள் (327 கிலோமீட்டர்) உயரத்தை அடைந்திருந்தது.

ககாரின் பூமிக்கு திரும்ப, புவியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது, கூடுமான வரையில் சுயநினைவுடன் இருக்க முற்பட்டார். அப்போது, புவி ஈர்ப்பு விசையின் இழுவிசையானது, எட்டுமடங்கு அங்கே அதிகமாக இருப்பதை உணர்ந்தார்.

மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, விண்கலன் மெதுவாக இயக்கப்பட தேவைப்படும் எஞ்சின்களோ, பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட எந்த வழிமுறையினையோ ‘வோஸ்டாக் 1’ விண்கலன் கொண்டிருக்கவில்லை. தரையிலிருந்து 7 கி.மீ உயரத்தில், விண்கலனிலிருந்து வெளியேறி, காகரின் பாராச்சூட் மூலம் தரையிறங்கினார்.

ஃபெடெரேஷன் ஏரோநாட்டிக் இன்டர்நேஷனல்(FAI – Fédération Aéronautique Internationale) விண்வெளிவீரர், விண்கலத்துடன் தரையிறங்கினால்தான் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட விண்வெளிப்பயணமாக கருதமுடியும் எனும் விதிமுறைகளைக் கொண்டிருந்தது. சோவியத்தின் தலைவர்கள் 1971 வரை காகரின் விண்கலனுடன் தரையிறங்கியதாகவே அறிவித்திருந்தனர். எது எப்படியாயினும், புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விடுபட்டு, விண்வெளியில் பயணம் செய்த முதல் நபர் காகரின் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Fidel Castro sitting on Yuri Gagarin lap Cuba 1961(Pic:chasy)

இறுதிக்காலம்

காகரின், விண்வெளியிலிருந்து திரும்பியதும் உலகமே கொண்டாடும் நாயகனாக புகழ்பெற்றார். அவரை, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் மாஸ்க்கோவின் ரெட் ஸ்கொயர் இடத்தில் வரவேற்றனர். சோவியத்தின் இந்த சாதனையை உலகமறிய, காகரின் உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவர் இரசியா திரும்பியதும், மிகப்பெரும் பதவியான, சோவியத் யூனியனின் துணை உச்ச சோவியத் பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. விண்வெளிவீரர்கள் பிரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பொதுமக்களிடையே நன்கு அறியப்பட்ட ஒருவராக காகரின் இருந்தமையால், அவர் உயிர் மிகவும் முக்கியம் எனக்கருதிய சோவியத் அரசு, அவரை மீண்டும் விண்வெளிக்கு அனுப்புவதை விரும்பவில்லை. ஆனால், அவர் விமானப்படையில் சோதனை விமானங்களை உருவாக்கும் பணியையும் செய்துகொண்டிருந்தார்.

மார்ச் 27, 1968, MiG-15 எனும் ஜெட் போர் விமானத்தினை சோதனை ஓட்டம் செய்யும்போது, சக விமானியான விளாடிமிர் செர்யோகின் எனும் ஒருவருடன் சேர்ந்து காகரின் உயிரிழந்தார். அந்த சமயத்தில், அவருக்கு இரு குழந்தைகள் இருந்தன. பறவை அல்லது வேறு ஏதோ ஒன்றின் மீது மோதலினை தவிர்க்கும் பொருட்டு, திடீரென விமானத்தினை தவறுதலாக இயக்க, ஜெட் விமானம் தரையில் மோதி விபத்திற்குள்ளானதாக, விபத்தினை விசாரித்த ஸ்டேட் கமிஷன் அப்போது கூறியது.

Yuri Gagarin Famous Photo(Pic:ctrlmagazine)

எனினும், காகரின் இறப்பு இன்னும் சந்தேகத்திற்குரிய ஒரு விவாதப்பொருளாகவே பார்க்கப்படுகிறது. அவர் இறந்து 45 ஆண்டுகளுக்குப்பின் அலெக்ஸி லினோவ் என்ற சமகால விண்வெளி வீரர் இது பற்றின சில தெளிவான காரணங்களை கூறியிருந்தாலும், அவையும் பலருக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதே உண்மை.

புகழின் உச்சிக்கு சென்ற ஏழே ஆண்டுகளில், தான் இறக்கவிருப்பதை காகரின் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இந்த கால மனித இனம் உள்ள வரை அவரது சாதனை என்றும் நினைவுபடுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.

Web Title: Yuri Gagarin First Man in Space and Space Exploration During Coldwar, Tamil Article

Featured Image Credit: rbth

Related Articles

Exit mobile version