ஒரு குறிப்பிட்ட இடத்திற்குத்தான் செல்லப்போகிறோம் என்பதை உறுதி செய்யாது, என்றாவது பயணம் மேற்கொண்டிருக்கிறீர்களா? அனைத்திற்கும் எல்லை வகுத்துப்பார்க்கும் பகுத்தறிவு எனும் அறிவைக்கடந்து சென்றால், எல்லை எனும் ஒன்று இல்லவே இல்லை என்பது புலப்படும்(லூப் எனும் சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள்).
இயற்பியல் கோட்பாடுகளும், குவாண்டம் எனும் வரையறையற்ற சாத்தியங்களுக்கு ஆதரவளிக்கும் இந்த நேரத்தில், மனித இனம் உண்மையில் எந்த அளவிளான முன்னேற்றைத்தான் பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்.
வினாக்கள்:
முதலில், சில பொதுவான வினாக்களை முன்வைக்கிறேன்; நான் யார்? நான் உண்மையாகவே ஏன் இவற்றையெல்லாம் செய்கின்றேன்? இதன் அந்தம் என்ன? ஆதியில் எதுவுமில்லையெனில், ஒட்டுமொத்தமும் எப்படி உருவானது? (அ) யார் உருவாக்கினார்கள்? உருவாக்கியது இறைவன் என்றால், அந்த இறை எவ்வாறு மற்றும் எதனால் உண்டானது? எல்லையற்ற பிரபஞ்சமாக கருதப்படும் இடத்தில், நான் மனிதன், பிறகு இந்தியன், தென்னிந்தியன், தமிழன்(உற்றுநோக்கின் தங்கள் பெயருடன் நிற்கும்) எனும் அடையாளங்கள் உண்மையில் எதற்கு? கலாச்சாரம் எனும் சொல்லும் தமிழில் பண்பாடு எனும் சொல்லும் ஒன்றென்பதும் தெரியாது, எதைக்காத்துக்கொண்டிருக்கிறேன்?
Up Quark, Down Quark-கிற்கு அடுத்தடுத்து என்னதான் உள்ளது? ஏன் பறவைகளின் அசைவுகள் நம் காலக்கணக்கீடுகளோடு ஒப்பிட்டால், படபடக்கின்றன? காலமும், வேகமும் இயைந்த ஒன்றா? அல்லது வேறு வேறா? ஈர்ப்புவிசை என்று ஒன்று உண்டெனில், எதிர்ப்புவிசை(Anti-Gravity) எனும் ஒன்றும் உண்டல்லவா? இரு விசைகளும் சமநிலை அடைய விடாமல் தடுக்கும் விசை எது?(சமநிலை பெற்றால் இயக்கம் நின்று விடும் என்று நினைக்கிறேன்). இவ்வாறு, இக்கட்டுரை முழுக்க வினாக்கள் மட்டுமே கொண்டு நிரப்பிட இயலும் அல்லவா?
நம் அண்டத்தின் அளவு
1 ஒளி ஆண்டு = ஒளியால் ஒரு ஆண்டு காலத்தில் பயணிக்க முடிந்த தூரம். ஒளியானது தோராயமாக, ஒரு ஆண்டிற்கு 9.5 டிரில்லியன் கிலோ மீட்டர் பயணிக்கும்.
சரி, நாம் கொண்ட தலைப்பிற்கு வருவோம். தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் அதீதமாக வளர்ந்துவிட்ட இந்தக்காலகட்டத்திலும், மேற்கூறிய எந்த வினாக்களுக்கும் தெளிவான விடை இல்லை என்பது உண்மையே. நம்மிடம் இருக்கும் அறிவியல் கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைக்கொண்டு நம்மால் இந்த அண்டவெளியில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? நவீன அறிவியலின் படி நாம் சுருள் வடிவமைப்பைக்கொண்ட பால்வெளி அண்டத்தின் ஏறத்தாழ இடைப்பகுதியில் இருக்கிறோம்(சூரிய குடும்பத்தில் வியாழன் கோள் போல). நம் அண்டத்தின் அளவு சராசரியாக 1,00,000 ஒளி ஆண்டுகளை தாண்டும்.
அது கோடிக்கணக்கான விண்மீன்களையும், வாயு மேகங்களையும், இருள் பொருளையும், கருந்துளைகளையும், நியூட்ரான் விண்மீன்களையும், கோள்களையும் மற்றும் அண்டத்தின் நடுப்பகுதியில் மிகப்பிரம்மாண்டமான ஒரு கருந்துளையையும் கொண்டுள்ளது. தொலைவிலிருந்து காண நமது அண்டம் மிகவும் அடர்த்தி உள்ளதாக தெரிந்தாலும், உண்மையில் பெரும்பாலும் அது வெற்றிடத்தையே கொண்டுள்ளது.
இரண்டு விண்மீன்களுக்கு இடையில் உள்ள தூரம், சராசரியாக 47 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். நமது தற்போதைய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி நம் அருகே இருக்கும் நட்சத்திரத்திற்கு மனிதர்களை அனுப்பினால், அவர்கள் போய்ச்சேர குறைந்தது 1000 வருடங்களுக்கு மேலாவது தேவைப்படும். பில்லியன் கணக்கில் விண்மீன்களைக் கொண்ட நம் அண்டம் எத்தனை பெரியது என்று எண்ணிப்பாருங்கள்! இருப்பினும் நம் பால்வெளி அண்டம் ஒன்றும் இங்கு தனியாக இல்லை. லோக்கல் குரூப் என்று அழைக்கப்படும் தொகுதியில், நம் பால்வெளி அண்டம், ஆன்ட்ரமேடா அண்டம் மற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட குள்ள அண்டங்கள் போன்றவை அடங்கும். இந்த லோக்கல் குரூப் தொகுதியின் விட்டம் மட்டுமே ஒரு கோடி ஒளியாண்டுகளைத் தாண்டும்.
சூப்பர் க்ளஸ்டர்
வியப்பினை ஒருபடி அதிகப்படுத்துவோம். இந்த லோக்கல் குரூப் அண்டத்தொகுதியானது, நூற்றுக்கணக்கான அண்டத்தொகுதிகளைக் கொண்ட ‘லேனிக்கே சூப்பர் க்ளஸ்டர்’ என்பதற்குள் இருப்பதாகும். இன்று நம்மால் அறிய முடிந்த பிரபஞ்சத்தில் இதுபோன்று மில்லியன் கணக்கில் சூப்பர் க்ளஸ்டர்கள் உள்ளன.
இப்போது, நாம் கொண்டுள்ள இயற்பியல் அறிவுடன், விண்வெளியில் அதீத வேகத்தில் பயணம் செய்யும் தொழில்நுட்பத்தையும் பெற்றுவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஓடத்தில் நம்மால் எவ்வளவு தூரம் பயணித்துவிட முடியும்? நாம் இதுவரை அறிந்திட்ட பிரபஞ்சத்தில் நம் ‘லோக்கல் குரூப்’ 0.00000000001% மட்டும்தான். அதாவது, நாம் நூறாயிரம் கோடிகளில் ஒரு சிறு துரும்பின் எல்லையினை அடைவதே மிகப்பெரிய விடயமாகும். நம்மால் ஒருபோதும் அடையவே முடியாத பகுதிகள்தாம் இப்பிரபஞ்சத்தில் 100%-0.00000000001%=?%.
ஏன் நம்மால் அடையவே முடியாது என்றால், ‘ஒன்றுமில்லாத நிலை’ எனும் இயற்கைதான் அதற்கு காரணம். ஒன்றுமில்லாத நிலை (அ) வெற்றிடம் என்று அழைக்கப்படும் இடம், உண்மையில் வெறுமனே காலியாக இல்லை. அது தனக்குத்தானே ஒரு உள் ஆற்றலைக்கொண்டுள்ளது. அவற்றைத்தான், ‘குவாண்டம் பிளக்சுவேஷன்ஸ்’ என்கின்றனர்.
அவற்றை நுணுக்கமாக பார்த்தால், அதில் துகள்களும் எதிர்த்துகள்களும் எப்பொழுதுமே உருவாகவும் மறைந்துவிடவுமாய் இருக்கின்றன. கடந்த காலத்தில் 13.8 பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிப்போவோம். அங்கே, பிக் பேங் நடந்ததற்கு பின், ‘காஸ்மிக் இன்ஃபிலேஷன்’ எனும் நிகழ்வின்போது, நாம் அறிந்திருக்கும் இந்த பிரபஞ்சம், ஓரிரு நொடிகளிலேயே, ஒரு சிறிய அணு அளவிலிருந்து டிரில்லியன் கணக்கான கிலோ மீட்டர்கள் வரை விரிவடைந்திருந்தது. இந்த விரிவடைதல், மிக வேகமாகவும், மிகப்பிரமாண்டமான முறையிலும் ஏற்பட்டபோது, அதனுள் குவாண்டம் பிளக்சுவேஷன்ஸூம் விரிவடைந்தது. விரிவடைதலால், அணுக்களிடையே இருந்த தூரங்கள், அண்டங்களுக்கு இடையிலிருக்கும் தூரங்களாயின. ஈர்ப்புவிசையின் வரையறை ஒரு குறிப்பிட்ட அளவுகோல் பருமனில் செயல்பட, ஆங்காங்கே அடர்த்தியானவை, நம் அண்டத்தொகுதிகள் போல ஆயின.
நமக்கு தெரிந்த ஒரு செய்தி என்னவென்றால், நம் ‘லோக்கல் குரூப்’ ஆனது ஈர்ப்புவிசையால் பிணைக்கப்பட்டுள்ளது என்பதுதான். சரி, அப்போது நாம், நமது லோக்கல் குரூப்பிலிருந்து மற்ற குரூப்பிற்கு செல்ல என்னதான் தடை?
இருள்பொருள்
இங்குதான் இருள் பொருள் அதை கடினமாக்குகிறது. இந்த பிரபஞ்ச விரிவடைதலுக்கு காரணமாகவும், அதனை துரிதப்படுத்தும் வேலையினையும், இருள்பொருள் தான் செய்கிறது. அது ஏன் அவ்வாறு செய்கிறது அல்லது இருள்பொருள் என்பது உண்மையில் என்ன என்பது நமக்கு தெரியாது. ஆனால் அதன் தாக்கத்தினை நன்றாக உணர மட்டுமே முடியும்.
நம் லோக்கல் குரூப்பினை தாண்டி உள்ள எந்த அமைப்புகளும், குரூப்களும் நம்முடன் ஈர்ப்புவிசையால் பிணைக்கப்பட்டவை அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஈர்ப்புவிசையின் செயல்பாட்டிற்கு அவை கட்டுப்படுகின்றனவா என்பதும் நாம் அறிந்திராத புதிர்தான். எனவே, பிரபஞ்சம் விரிவடையும் ஒவ்வோர் நொடியும் நமக்கும் மற்ற குரூப்களுக்கும் உள்ள தூரமும் அதிகமாகிக்கொண்டேதான் செல்லும்.
நேரம் செல்லச்செல்ல, இருள்பொருளானது, மீதமுள்ள மொத்த பிரபஞ்சத்தையும் நம்மிடம் இருந்து தள்ளிக்கொண்டே இருக்கும். அதாவது, நம்மால் மற்ற கிளஸ்டர்களையோ, அண்டங்களையோ, பெருவெளியில் எந்த குரூப்களையோ தொடர்புகொள்ளவே இயலாத நிலை ஏற்படும்.
நமது அடுத்த அண்டத்தொகுதி ஏற்கனேவே பல மில்லியன் ஒளியாண்டுகள் தாண்டி உள்ளன. ஆனால், அவையனைத்தும் நாம் ஒருபோதும் எட்டவே முடியாத அளவு வேகத்தில் நம்மை விட்டுத்தள்ளிச் சென்றுகொண்டிருக்கின்றன. நாம் இந்த லோக்கல் குரூப்பிலிருந்து சென்று, இன்டெர்கேலக்ட்டிக் வெளியில், முழுக்க இருளில் பயணிக்கலாம். ஆனால், நாம் எந்த பகுதியையும் எப்போதுமே அடையமுடியாது. அது ஒரு முடிவில்லா பயணமாகிவிடும்.
நாம் இங்கே தனியாக இருக்கும் நேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாக நமது லோக்கல் குரூப்-பும் சுருங்கிக்கொண்டே வரும். அண்டங்கள் ஒன்றோடொன்று இணைந்து, இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய பேரண்டத்தினை உருவாக்கும். அதனை மில்க்ட்ராமேடா என்று அழைக்கலாம்(ஏனெனில், பால்வெளி அண்டமும், அன்ரோமேடா அண்டமும் இணைந்துவிடுதலால்). இன்னும் நிலைமையை சற்று கடினமாக்கப்போவது எதுவென்றால், ஒவ்வோர் அண்டமும் வெகுதொலைவிலும், மற்றும் அவை தொடர்ந்து விலகிச்சென்று கொண்டே இருப்பதால், அவற்றிலிருந்து வெளிவந்து பயணிக்கும் எந்தவொரு ஃபோட்டான் துகள்களும் நம்மை அடையும் முன்னரே, அந்த அலைவரிசைகளால் மாறி மாறி, சிதைந்து, நம்மால் அவற்றை கண்டறிய முடியாத ஒன்றாகவே மறைந்துவிடும். இது நடக்குமேயானால், நமது லோக்கல் குரூப்பிற்கு வெளியே இருந்து எந்த ஒரு தகவலும் நமக்கு கிட்டாது.
மில்க்ட்ரோமேடா
பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக நம் பார்வையிலிருந்து மறையத்துவங்கியிருக்கும். ஒரு காலத்தில், எப்பொழுதும், எங்கு நோக்கினும் வெறும் வெற்றிடமும், இருளும் மட்டுமே தோன்றும். அந்த காலக்கட்டத்தில் உள்ள மனிதர்கள், மில்க்ட்ரோமேடா எனும் ஒரே ஒரு அண்டம்தான் உள்ளது என்று நினைத்தாலும் வியப்புறுவதற்கில்லை. அவர்களால் ஒரு போதும் பிக் பேங் பற்றி அறிந்துகொள்ளவே முடியாது. எங்கு நோக்கினும் அவர்கள் காண்பது வெறும் இருளாகத்தான் இருக்கும். நமக்கு தற்போது தெரிந்திருப்பது கூட, அவர்களுக்கு தெரிந்திருக்குமா என்பதும் ஐயமே! அவர்கள் பிரபஞ்சம் என்பது எல்லையற்ற ஒன்றென்பதை மறந்து எல்லைகளைக்கொண்ட தங்கள் அண்டத்தினை பிரபஞ்சமாக கருதுவர்.
இருப்பினும், நாம் விண்மீகளுக்கிடையில் பயணிக்க எப்போதும் முயன்று கொண்டிருக்கிறோம். நம் தலைமுறைதான் மிகச்சரியான காலத்தின் தருணத்தில் உள்ளோம். நம்மால், நமது எதிர்காலத்தினை மட்டுமன்றி, நம் தொலைவிலிருக்கும் கடந்த காலத்தினையும் காண முடியும்.