2018 ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா போட்டியில் வென்ற பெண்ணை பற்றியது தான் இந்த கட்டுரை. அந்த பெண்ணைப் பற்றி தேட தொடங்கிய சில நிமிடங்களில் 2018 போட்டியில் வென்றது தமிழகத்தைச் சேர்ந்த பெண் என்று எனக்கு தெரிய வந்தது. அடடே நம்ம ஊர் பெண் தானே என்று முழுமையாக அறிந்து கொள்ள முற்பட்டேன். கிடைக்கப்பெற்ற தகவல்களும் குறைவு தான் இருந்தாலும் அதை வைத்து சுவாரஸ்யமாக எழுத முயன்றுள்ளேன்.
மிஸ் இந்தியா 2018
திருச்சியை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் என்ற இளம் பெண் மும்பையில் ஜுன் 19ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல் இன்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்
இந்தியாவில் மிகவும் உச்சபட்சமாக பார்க்கப்படும் அழகி போட்டிகளில் ஒன்று ‘ஃபெமினா மிஸ் இந்தியா’. இதில் வெற்றி பெறும் போட்டியாளர் தான் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ள முடியும். இந்த முறை நடைபெற்ற நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் மற்றும் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
கிரிக்கெட் வீரர்கள் இர்ஃபான் பதான், கே.எல்.ராகுல், நடிகர்கள் பாபி டியோல், மல்லிகா அரோரா மற்றும் குனால் கபூர் ஆகியோர் இந்தப் போட்டியில் நடுவர்களாக இருந்தனர். போட்டியின் போது பாலிவுட் நடிகர்கள் கரீனா கபூர், மாதுரி திக்ஷித் மற்றும் ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். 29 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் என நாடெங்கிலுமிருந்து 30 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்ற இந்த இறுதிப் போட்டியில் பட்டத்தை 19 வயதேயான தமிழ்நாட்டுப் பெண் அனுக்ரீத்தி வாஸ் ”மிஸ் இந்தியா” பட்டம் பெற்றார். 21 வயதான ஹரியானாவை சேர்ந்த மீனாக்ஷி சவுத்ரி இரண்டாவது இடத்தையும், 23 வயதான ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷிரேய் ராவ் கம்வரபு மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர்.
ராம்ப் வாக், காஸ்ட்யூம் கன்டெஸ்ட் எனப் பல போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று நல்ல மதிப்பெண்ணைப் பெற்றிருந்தார். இறுதி சுற்றில், 5 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்,அதில் மிக சிறப்பாக செயல் பட்ட அனுவுக்கு `மிஸ் இந்தியா 2018′ மகுடத்தைச் சூட்டியவர் 2017-ன் `உலக அழகி மனுஷி சில்லர்.
எளிமையான குடும்பத்தில் செப்டம்பர் 28, 1998 பிறந்த அனுக்ரீத்தி,திருச்சியை சொந்த ஊராக கொண்டவர். சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்த அனுக்ரீத்திக்கு தனது தாய் தான் முழு பலம். இவரது தாயின் பெயர் சலீனா. சலீனா நீண்ட கடுமையான போராட்டத்திற்கு இடையில் தனி நபராக தன் மகளை வளர்த்துள்ளார். அனுக்ரீத்தியின் மாடலிங் கனவுக்கு, தான் தடையாக இருக்க வேண்டாம் என்று தன் வாழ்க்கையில் கடுமையாக போராடியுள்ளார். இந்திய அழகிப் போட்டியில் வென்ற ’அனு’ திருச்சி ஆர்.எஸ்.கே மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இப்போது, சென்னை லயோலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. பிரெஞ்சு பட்டப்படிப்பில் பயின்று வரும் ‘அனு’வுக்கு மாடலிங் மீது இருந்த ஆர்வத்தில், கிடைக்கின்ற நேரத்தில் சென்னையில் மாடலிங்க செய்து கொண்டுந்திருக்கிறார்.
அனுவின் அம்மா
இந்த வெற்றியை பற்றி அவர் தாய் சலீனாவிடம் கேட்கும் போது ஒரு சிறு நகரத்தில் இருப்பதால் எனது மகளின் மாடலிங் முயற்சியை ஆதரிக்க போதிய சூழல் இல்லை. என் மகளை ஊக்குவிப்பதற்கு சரியான தளமும் அமையவில்லை. ஆனால் நான் என் மகளுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்து வந்ததன் விளைவாகத்தான் என் மகள் வலிமையான துணிச்சல் மிக்க பெண்ணாக வளர்ந்திருக்கிறாள் என்று நான் நம்புகிறேன். இப்போது அனைவரும் அனுக்ரீத்தியின் தாய் என்று என்னை சொல்வது எனக்கு பெருமையாக உள்ளது. இதற்கு மேல் ஒரு தாய்க்கு என்ன வேண்டும். நான் அனுக்ரீத்தியின் மாடலிங் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்ததற்கு கடுமையான விமர்சனத்திற்கு ஆளனேன். ஆனால் என் மகளின் கனவுக்கு தடையாக இருக்க என் மனம் ஒப்பவில்லை.
அனுக்ரீத்தி மாடலிங்கில் மட்டும் தன் திறமையை வெளிப்படுத்தவில்லை ஒரு சிறந்த தேர்ச்சி பெற்ற நடன கலைஞர் , தடகள வீராங்கனையும் கூட.அதுமட்டுமல்லாது பைக்கிங்கிலும் இவருக்கு ஆர்வம் அதிகம் உண்டு. உலக அழகி பட்டம் பெறுவதே அனுக்ரீத்தின் கனவு. தனது தோழிகளின் ஒருவரான ஒரு திருநங்கையினால் 2015ஆம் ஆண்டு சமூக அக்கறை கொண்டு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தற்போது அந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் 30 திருநங்கைளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, உணவு மற்றும் வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இயங்கிக்கொண்டு வருகிறது.
அனுக்ரீத்தியின் அகம்
தனது வெற்றியைப்பற்றி அனுக்ரீத்தி பகிர்ந்து கொண்டது. இன்னும் என்னால் நம்பமுடியவில்லை ,இது எனது நெடுநாள் கனவு. என்னைப் பொறுத்தவரை தோல்விதான் சிறந்த ஆசிரியர். ஏனென்றால், தொடர்ச்சியான வெற்றி மனநிறைவைக் கொடுத்து, வளர்ச்சியை நிறுத்திவிடும். ஆனால், தொடர்ச்சியான தோல்வி, உங்கள் இலக்கை அடைவதற்கான தூண்டுதலையும் கடின உழைப்பையும் அதிகரிக்கச் செய்யும். கிராமத்திலிருந்து தொடங்கிய என் பயணம் பல போராட்டங்களை கடந்து, இன்று நான் இங்கு உங்கள் முன் நிற்க காரணமும் நான் சந்தித்த தோல்விகள்தான். என் அம்மாவைத் தவிர யாரும் என்னை ஆதரிக்கவில்லை. தோல்விகள் மற்றும் விமர்சனங்கள் மட்டுமே என்னை இந்தச் சமூகத்தின் நம்பிக்கையான சுதந்திரப் பெண்ணாக மாற்றியது. அனுபவமே சிறந்த ஆசிரியர் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன். அதனால், முயற்சி செய்யுங்கள். தோல்விகள் முற்றுகையிட்டாலும், வெற்றி உங்களை நிச்சயம் விரும்பும்” என்று பதிலளித்து அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளிச்சென்றார்.மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற தமிழகத்தை சேர்ந்த நான்காவது பெண் அனுக்ரீத்தி.தமிழகத்தை சேர்ந்த இந்திராணி ரஹ்மான் 1952யிலும், நளினி விஸ்வநாதன் 1977யிலும் மற்றும் கிறிஸ்டபெல் ஹோவி 1991யிலும் மிஸ் இந்தியா பட்டம் பெற்று உள்ளனர். இவர்கள் வரிசையில் “அனுக்ரீத்தி 4 ஆவது பெண்.
ஊக்கமளிக்கும் அனுவும், அவள் அம்மாவும்
உண்மையில் அனுக்ரீத்தியை பார்த்து எனக்கு சற்று மெய் சிலிர்க்கிறது. இரண்டு பெண்கள் சுயமாக இந்த சமூகத்தில் நின்று அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து இன்றைக்கு சாதித்துக் காட்டியுள்ளனர். இரண்டு பெண் என்று நான் கூறியது அனுக்ரீத்தியையும் மற்றும் அவர் தாயையும் சேர்த்து தான். தனது விருப்பங்களையும் ஆசைகளையும் சிறு வயதிலிருந்து குழந்தையிடம் திணிக்கும் பெற்றோர்கள் மத்தியில் தனது மகளின் கனவில் அவளை சிறகடிக்கவிட்டு, அவள் பின் நின்று ஊக்கமளித்துள்ள அனுக்ரீத்தின் தாய் சலீனாவும் கிரீடத்திற்கு உகந்த பெண்மணி தான். மிஸ் இந்தியாவுக்கு மேல் எதுவும் பட்டம் இருக்கிறதா நம் நாட்டில்? அது வந்த பின் சலினாவுக்கு வழங்கலாம்.
இந்த கட்டுரையை படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மனதில் தோன்றுவது போல் எனக்கும் சுயமாக நின்று போராடி சாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அனுக்ரீத்தி அழகியென்றால் சலீனா பேரழகி. அனுக்ரீத்தியின் ஒவ்வொரு சொல்லிலும் இருக்கும் தெளிவும் தாய் சலீனா வழிகாட்டுதலில் வந்தது தானே? 2018 ஆண்டின் உலக அழகிப் போட்டிக்கு இந்தியப் பேரழகியாகத் தேர்வாகியுள்ள தமிழச்சியை விரைவில் வாழ்த்தி வழி அனிப்பிவிடுவோம்.வெற்றி நமதே
Web Title: Miss Inda 2018 Anukreethy Vas
Featured Image Credit: newsbugz