ரமழான் புனித ரமழான்

நாம் இப்போது கடந்துகொண்டிருக்கின்ற இந்த மாதமானது, உலக முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதம் எனும்போது ஜூன் மாதத்தை நாம் குறிப்பிடவில்லை. மாறாக, இஸ்லாமிய சந்திரக் கணக்கு நாற்காட்டியில் வரும் ரமழான் மாதத்தையே குறிப்பிடுகின்றோம். இப்போது, நாகூர் ஹனீபா பாடும் “ரமழான்… புனித ரமழான்…” என்ற பாடல் உங்கள் ஞாபகத்துக்கு வந்திருக்குமே? ஆம், அந்த ரமழான்தான்.

இந்த ரமழான் மாதத்திலேயே உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றனர். உலக சனத்தொகையில் 1.8 பில்லியன் பேர், அதாவது உலக சனத்தொகையில் கால்வாசிப் பேர் பின்பற்றுகின்ற இஸ்லாமானது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்குமாறு முஸ்லிம்களை பணித்துள்ளது. இக்கட்டுரையில் நாம், முஸ்லிம்களின் நோன்பு குறித்த அடிப்படைத் தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கின்றோம்.

ரமழான், நோன்பு என்றால் என்ன?

இஸ்லாமிய சந்திரக் கணக்கு நாற்காட்டியின் ஒன்பதாவது மாதமாக ரமழான் மாதம் வருகின்றது. இந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்குமாறு இஸ்லாம் முஸ்லிம்களைப் பணித்துள்ளது. எனவே, உலகம் முழுவதும் வாழ்கின்ற முஸ்லிமான ஆண்களும், பெண்களும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கின்றனர்.

முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பது ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் உணவு உட்கொள்வதன் மூலமாகும். பின்னர், மஃரிப் தொழுகைக்கான அழைப்பு பள்ளியில் (அதனை ‘அதான்’ என்று வழங்குவர்) ஒலிக்கும்போது ஈத்தம் பழமும் நீரூம் அருந்தி நோன்பு துறப்பர். (pakistantribe.com)

எப்போது நோன்பு நோற்பது?

முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை இறைவனைத் தொழ வேண்டும். இந்த ஐந்து வேளையும் வரையறை செய்யப்பட்டுள்ளது. அவையாவன, ஃபஜ்ர் (வைகறைப் பொழுது), ழுஹர் (மதியம்), அஸர் (மாலை), மஃரிப் (இரவின் ஆரம்பப் பொழுது), இஷா (இரவு) தொழுகைகளாகும். முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பது ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் உணவு உட்கொள்வதன் மூலமாகும். பின்னர், மஃரிப் தொழுகைக்கான அழைப்பு பள்ளியில் (அதனை ‘அதான்’ என்று வழங்குவர்) ஒலிக்கும்போது ஈத்தம் பழமும் நீரூம் அருந்தி நோன்பு துறப்பர். அதுவரையிலும் உணவு ஒரு சொட்டு நீர் கூட அருந்துவதில்லை.

ஏன் நோன்பு நோற்கிறார்கள்?

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதானது இஸ்லாத்தின் ஐம் பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ஐம் பெரும் கடமைகளில் ஏனையவை, ஷஹாதா (இஸ்லாத்தின் மீதான நம்பிக்கையை பிரகடனப்படுத்தல்), தொழுகை, ஸகாத் (வருடாந்தம் தம்மிடமுள்ள செல்வங்களிலிருந்து 2.5 சதவீதமான பகுதியை தானமாக வழங்குதல்), ஹஜ் (சவூதி அரேபியாவிவின் மக்க நகரிலுள்ள பள்ளிவாசலை தரிசித்தல்) என்பனவாகும்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுடனான தொடர்பை அதிகரித்தல், உள்ளத்தை தூய்மைப்படுத்தல், சுய கட்டுப்பாட்டை பயிலல், உலக இன்பங்களிலிருந்து ஒதுங்குதல், எளியோர் குறித்து அக்கறை காட்டல் ஆகிய விடயங்களை அடைந்துகொள்வதற்கு முஸ்லிம்கள் முயற்சிப்பர்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது மட்டுமா கடமை?

பசி, தனிமை, விழிப்பு இவை மூன்றும் மனிதனின் உள்ளத்தை பண்படுத்தும் மூன்று விடயங்கள். இப்பண்பட்ட உள்ளத்தில் கல்வியும் பயிற்சியும் இலகுவாக உள்வாங்கப்படும் (thesun.co.uk)

இம்மாதம் முழுவதும் ஃபஜ்ர் தொழுகைக்கான அதான் ஒலித்தது முதல் மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கும் வரையில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது மட்டுமன்றி, சாதாரண வாழ்க்கையின் ஒழுங்குமுறைகளை பேணுவதற்கான பயிற்சிக்காலமாக அம்மாதத்தை உபயோகிப்பர். கல்வி குறித்த கருத்துக்களில், தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்ற வாசகம் பிரபல்யம். பசி, தனிமை, விழிப்பு இவை மூன்றும் மனிதனின் உள்ளத்தை பண்படுத்தும் மூன்று விடயங்கள். இப்பண்பட்ட உள்ளத்தில் கல்வியும் பயிற்சியும் இலகுவாக உள்வாங்கப்படும் என்பதே இறைவழிகாட்டலான திருக் குரான் மனித வாழ்வின் பண்பாடுகள் மற்றும் ஒழுக்க நெறிகளின் தொகுப்பாக வந்திறங்கிய இம்மாதத்தில் நோன்பிருந்து அக்கல்வியை உள்வாங்கி பயிற்சிபெறுகின்றமைக்கு காரணம்.

இம்மாதத்தில் பொய், புறம், அனாவசியமான கேளிக்கைகள், அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள், மானக்கேடான விடயங்கள் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து நடப்பதன் மூலம் வருடத்தின் அனைத்து மாதங்களிலும் இந்நன்னடத்தைகளை பின்பற்றி நடக்க பயிற்சி எடுக்கப்படும்.

அது மட்டுமல்லாது, மனித நேயம், தர்மம், போன்ற நல்ல பழக்க வழக்கங்களையும் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பது கடமை.

நோன்பு நோற்காமலிருக்க முடியுமான சந்தர்ப்பங்கள் உள்ளனவா?

ரமழான் மாத்தத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக உள்ளபோதும், நோன்பு நோற்பதற்கு விதிவிலக்குடைய சாராரும் உள்ளனர்.

பொதுவாக இஸ்லாத்தின் அனைத்து கடமைகளிலிருந்தும் சிறுவர்கள் விதிவிலக்களிக்கப்படுகின்றனர். எனவே, சிறுவர்கள் நோன்பு நோற்பது கடமை அல்ல. ஆனாலும், 07, 08 வயது முதலே முஸ்லிம் சிறுவர்கள் நோன்பு நோற்கப் பழகிவிடுகின்றனர்.

வயது முதிர்ந்தோர், நோயாளர்கள், கர்ப்பிணித் தாய்மார், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நோன்பு நோற்பதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளனர்.

ரமழான் கால விசேட வணக்கங்கள் உள்ளனவா?

இஸ்லாத்தின் திருமறையான அல் குர்ஆன் அருளப்பட்ட புனித ‘லைலதுல் கதர்’ எனப்படும் இரவு, ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களிலேயே வருகின்றது. (wikimedia.org)

முஸ்லிம்கள் தினமும் ஐவேளை இறைவனைத் தொழ வேண்டும் என்று ஆரம்பத்தில் பார்த்தோம். எனவே, ரமழான் காலத்திலும் முஸ்லிம்கள் தினமும் ஐவேளைத் தொழுகையை மேற்கொள்வர். அதுவல்லாது ரமழான் காலத்தில் இரவு நேர விசேட தொழுகைகளையும் மேற்கொள்வர். இது சாதாரணமான ஐவேளை தொழுகையைவிட நீண்ட தொழுகையாகும்.

இஸ்லாத்தின் திருமறையான அல் குர்ஆன் அருளப்பட்ட புனித ‘லைலதுல் கதர்’ எனப்படும் இரவு, ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களிலேயே வருகின்றது. இவ்விரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரவுகளில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் தங்கி, கூட்டாக நீண்ட நேர வழிபாடுகளில் ஈடுபடுவர்.

இஃப்தார் என்றால் என்ன?

இப்போது சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் “இஃப்தார் நிகழ்வின்போது…” என்று பகிர்ந்துகொள்ளும் படங்களைப் பார்த்து, அது என்ன நிகழ்வு என்று முஸ்லிம் அல்லாதோர் சற்றே குழம்பிப் போகின்றனர். நாம் ஆரம்பத்தில் ‘நோன்பு துறத்தல்” பற்றி கூறினோமே… அந்த நோன்பு துறக்கும் நிகழ்வைத்தான் இஃப்தார் என்று முஸ்லிம்கள் குறிப்பிடுகின்றனர்.

நோன்பு துறக்கும் நிகழ்வில் பொதுவாக ஈத்தம் பழமும் தண்ணீரும் காணப்படும். ஈத்தம் பழம் ஒரு சீரான வேகத்தில் குளுக்கோசை மெது மெதுவாக வெளியிடும். நோன்பிருந்து உண்ணும் உணவுகளில் திடீரென குளுக்கோஸின் அளவு அதிகரிப்பது உடலுக்கு உகந்ததல்ல, ஆதலாலே ஈத்தம் பழமும் நீரும் நோன்பு துறத்தலுக்கு பொருத்தமான உணவாக கருதப்படுகிறது. பின்னர், சுவையான திண்பண்டங்களும் பரிமாறப்படும். நம் தெற்காசிய சூழலில் சமூசா, கட்லட் உள்ளிட்டு ஏனைய சிற்றுண்டிகள் பரிமாறப்படுவது வழக்கம். ஆனால் இவ்வாறான எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது சிறப்பு.

நமது பிராந்தியத்தில் இஃப்தாரின்போது காணப்படுகின்ற மிக முக்கிய உணவுகளில் ஒன்றுதான் கஞ்சி. நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாத நிலையில் வயிற்ருக்கு இதமான, உடனடி சக்தியை தரக்கூடிய உணவாக அனைவராலும் விரும்பி சேர்க்கப்படும் கஞ்சியானது வெறும் வெள்ளைக் கஞ்சியாகவும், கோழி அல்லது மாட்டு இறைச்சி கலந்து தயாரிக்கப்படும் கஞ்சியாகவும் பரிமாறப்படும்.

நம் தெற்காசிய சூழலில் சமூசா, கட்லட் உள்ளிட்டு ஏனைய சிற்றுண்டிகள் பரிமாறப்படுவது வழக்கம். ஆனால் இவ்வாறான எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது சிறப்பு. (tawheedcenter.org)

ஒவ்வொரு ஊர்களிலும், கிராமங்களிலுமுள்ள பள்ளிவாசல்களில் அப்பிரதேச மக்களின் நன்கொடைகளினால் கஞ்சி தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு குடும்பமும் ரமழான் மாதம் முழுவதும் தமக்கு தேவையான கஞ்சியை பள்ளிவாசலில் தாராளமாக இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

ஈத் என்றால் என்ன?

இஸ்லாமிய நாட்காட்டி சந்திரக் கணக்கை அடிப்படையாக் கொண்டிருப்பதனால், அடுத்த மாதம் ஆரம்பமாவதற்கான பிறை தென்பட்டதுமே ரமழான் மாதம் முடிவடைந்து விடுகின்றது. இனி அடுத்து பிறக்கின்ற நாள் “ஈதுல் ஃபித்ர்” பெருநாள் தினமாகும். இதனை நம் தமிழ்ச் சூழலில் “நோன்புப் பெருநாள்” என்று வழங்குவர்.

இந்த பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் காலையிலேயே குளித்து, புத்தாடைகள் அணிந்து, நறுமணங்கள் பூசிக்கொள்வர். பின்னர்,  “பெருநாள் தொழுகை”யை நிறைவேற்றுவர். கிராமத்தில் உள்ள பெரும் மைதானத்தில் அல்லது பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை நடைபெறும்.

இந்த பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் காலையிலேயே குளித்து, புத்தாடைகள் அணிந்து, நறுமணங்கள் பூசிக்கொள்வர். பின்னர், “பெருநாள் தொழுகை”யை நிறைவேற்றுவர். (pinimg.com)

பெருநாள் தொழுகையில் பங்குகொள்வதற்காக கிராமத்தில் உள்ள அனைவருமே வந்திருப்பதால், அங்கு பெரும் சந்தோசமும் கலகலப்பும் நிரம்பி வழியும். தொழுகை முடிவடைந்ததுமே தத்தம் வீடுகளுக்குச் சென்று காலை உணவருந்துவர்.

பெரு நாள் தின உணவுகள் மிகவும் விசேடமானவையாக இருக்கும். பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் பகல் நேர உணவு “பிரியானி”யாகவே இருக்கும். இலங்கையில் பெருநாள் தினமன்று பரிமாறப்படும் விசேடமான இன்னுமொரு உணவும் இருக்கின்றது. “வட்டிலப்பம்”…. பெயரைக் கேட்கும்போதே சுவை நரம்புகள் நடனமாடுகின்றன அல்லவா!

பெரு நாள் தினத்தன்று நண்பர்களை சந்தித்தல், உறவினர்களை தரிசித்தல் என்று முஸ்லிம்கள் பிஸியாகி விடுவர். போகும் இடமெல்லாம் சிறுவர்களுக்கு பெரியொர் வழங்கும் “பெருநாள் காசு”ம் குவிந்து விடும். இனி என்ன கொண்டாட்டம்தான் சிறுவர்களுக்கு!

சரி நண்பர்களே ரமழான் மாதம், நோன்பு, நோன்புப் பெருநாள் குறித்து சுருக்கமாகப் பார்த்தோம். முஸ்லிம்களுக்கு இரு பெரு நாட்கள் இருக்கின்றன. ஒன்று நோன்புப் பெருநாள். மற்றையது ஹஜ்ஜுப் பெருநாள். ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்கும்போது, அது குறித்த கட்டுரையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வோம்.

ஹலோ… கட்டுரை இன்னும் முடியவில்லை. ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்ல மறந்து விட்டேன். அதாவது, பெருநாள் தினம் என்றால் பிரியானிக்கும், வட்டிலப்பத்துக்கும் பஞ்சமேயில்லை. எனவே, உங்களது முஸ்லிம் நண்பருக்கு ஒரு அழைப்பை எடுத்து, “பெருநாளன்று உன் வீட்டுக்கு வந்து பிரியானியும், வட்டிலப்பமும் ஒரு கட்டு கட்டலாம்ன்னு இருக்கேன்” என்று இப்போதே முற்பதிவு செய்துவிடுங்கள்!

 

Related Articles

Exit mobile version