சிரியா, மத்திய கிழக்கு நாடுகளில் தொன்மையான கலாச்சாரத்தினையும், அழகியலையும் கொண்டு விளங்கிய நாடு. சுற்றிலும் ஈராக், லெபனான், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டு விளங்கும் அரேபிய நாடுகளில் ஒன்றாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிரியாவின் உள்நாட்டு போரில் உலக நாடுகளின் பங்கீடானது ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகின்றது என்று அறிந்தால், சிரியாவில் நடப்பது நிச்சயமாக உள்நாட்டுப் போர் என்று கூறிவிட இயலாது. இதில் பங்கு கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும், தனக்கான இனம், அதிகாரம், சுதந்திரம், உரிமை ஆகியவற்றை மீட்டெடுக்கும் ஒரு வகையான குழப்பம் மிகுந்த அதிகார மையத்திற்காக போரில் ஈடுபட்டிருக்கின்றார்கள் . ஒவ்வொரு நாடும் தனக்கான அங்கிகாரத்தினை நிலை நிறுத்தும் பொருட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது வரை 5 லட்சம் மக்கள் இறந்திருக்கின்றார்கள். பலர் கண்டம் விட்டு கண்டம் தாண்ட கடலில் பயணித்து மாண்டும் போகின்றார்கள்.
அசாத்தின் இனமும் இனம் சார்ந்த எதிர்ப்பும்
பஷர் அல் அசாத், முப்பது ஆண்டுகளாக சிரியாவினை ஆட்சி செய்த திரு. ஹஃபேஸ் அல் அசாத் அவர்களின் மகன் ஆவார். 2000ல் ஹஃபேஸ் மாரடைப்பால் மரணமடைய பஷர் அல் அசாத் தன்னை நாட்டின் அதிபரென அறிவித்து பொறுப்பில் அமர்ந்தார். அசாத் குடும்பமனாது இஸ்லாமிய சிறுபான்மை அமைப்பான சியா இனத்தில், அலாவைத் வகுப்பினைச் சார்ந்ததாகும். இவர்களின் இறை நம்பிக்கை மற்றும் கோட்பாடுகள், சிரியாவின் பெரும்பான்மை இனமான சன்னி இஸ்லாமிய மார்க்கங்களில் இருந்து வேறுபடுகின்றது.
சன்னி அமைப்பானது உலக இஸ்லாமிய மக்கள் தொகையில் தோராயமாக 85% பேர் ஆவார்கள். 15% பேர் சியா இனத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ஆவார்கள். ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் சியா இன மக்கள் அதிகமாகவும், சவுதி அரேபியா, எகிப்து, மற்றும் சிரியா நாடுகளில் சன்னி இன மக்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். சிரியா போன்ற சன்னி இனமக்கள் அதிகம் வாழும் இடத்தில் சியா அலாவைத் இனத்தை சேர்ந்த பஷர் அல் அசாத்தின் ஆட்சியானது வருந்தத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
1970ல் தொடங்கி 2000 ஆண்டு வரை சிரியாவினை ஆட்சி செய்தவர் ஹஃபேஸ் அல் அசாத் ஆவார். அலாவைத் எனும் சியாவின் கிளை இனமானது முற்போக்கு சிந்தனைகளை கொண்ட அமைப்பாகும். இதன் மார்க்கங்கள் அனைத்தும் வேறு மதக்கொள்கைகளில் இருந்து எடுத்து சீரமைக்கப்பட்டதாகும். சன்னி இஸ்லாமியர்கள், சியாவில் இருக்கும் அலாவைத் மக்களை இஸ்லாமியர்கள் என்று குறிப்பிடுவதே இல்லை. சிரியாவினைத் தொடர்ந்து துருக்கி மற்றும் லெபனான் நாடுகளில் அலாவைத்கள் அதிகம் வசிக்கின்றார்கள். ஆனால் மறுபுறம், ஹஃபேஸ் ஆட்சியில் இருக்கும் போது, அலாவைத் மற்றும் சியா இஸ்லாமிய கோட்பாடுகளையோ எழுத்து அளவிலும் மக்களிடம் புகுத்த முற்படவில்லை.
எதனால் தொடங்கியது இந்த போர்?
பஷர் அல் அசாத் அதிபராக பொறுப்பேற்ற காலத்தில் இருந்து அவரின் ஆட்சியில் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்கள், குர்த் இன மக்களின் போராட்டங்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த ஆட்சியினை கொடுங்கோல் ஆட்சியாக பார்க்கத் தொடங்கினார்கள். மேலும் முடியாட்சி என்று இல்லாமல் குடியாட்சி தேவை என்று தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்வைத்தார்கள். ஆனால் எதற்கும் அசைந்து தரவில்லை அசாத்தின் ஆட்சி. இந்நிலையில் 2011ம் ஆண்டு, டாரா நகரத்தில் இருந்த பள்ளி ஒன்றில் மாணவர்கள் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக பள்ளிச் சுவற்றில் ஓவியம் வரைந்திருக்கின்றார்கள். இதனை அறிந்த காவல் துறையினர், அவர்களை கைது செய்து அடித்து துன்புறுத்தி இருக்கின்றார்கள். இதில் 11 வயது மாணவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனை கேட்க சென்ற சிறுவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசவும் அதன் விளைவு சிரிய உள்நாட்டுப் போரினை கொண்டு வந்திருக்கின்றது.
அம்மாணவர்களை விடுதலை செய்யக் கோரி தலைநகர் டமாஸ்கஸ்ஸில் மார்ச் 15ம் தேதி கல்லூரி மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டார்கள். ஆனால் காவல் துறையினர் அடிதடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தார்கள். ஏற்கனவே வேலையின்மை, ஊதிய உயர்வு, வரட்சி, மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை சந்தித்து வந்த டாரா நகரவாசிகள் மார்ச் 18, அக்குழந்தைகளை விடுதலை செய்யச் சொல்லி நடைபயணம் மேற்கொண்டார்கள்.
ஆனால், அமைதிப் போராட்டத்தில் காவல் படை துப்பாக்கிச் சூடு நடத்தவும் அதில் நான்கு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். அச்சமயத்தில் மக்கள் யாரும் அசாத்தினை குறை கூறவில்லை மாறாக குழந்தைகள் விடுதலையாக வேண்டும் என்றே விரும்பினார்கள். ஆனால் அத்துப்பாக்கிச் சூட்டினை தொடர்ந்து அசாத் மார்ச் 30 அன்று நெருக்கடி நிலையினை பிரகடனப்படுத்தினார். அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அசாத்தின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின.
சிரியா அரசு மற்றும் சிரிய அரசிற்கு ஆதரவாக ஈரான், இரஷ்யா, மற்றும் லெபனானின் ஹெஸ்புல்லா இயக்கம் இயங்கி வருகின்றது. கிளர்ச்சியார்களுக்கு ஆதரவாக துருக்கி, சவுதி அரேபியா, மற்றும் அமெரிக்க ஐக்கிய குடியரசு இயங்கி வருகின்றது. ஹஜேம் இயக்கம், ஃப்ரீ சிரியன் ஆர்மி, முஜாஹீதின் அமைப்பு, மற்றும் ISIS ஆகிய குழுக்கள் மக்களில் சிலரை இணைத்துக் கொண்டு சிரிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை தொடங்கினார்கள். இங்கு கிளர்ச்சியாளர்களும், ISIS இயக்கத்திற்கு ஆதரவாக இருப்பவர்களும் வெவ்வேறு நோக்கத்துடன் அசாத்தினை எதிர்த்து வருகின்றார்கள்.
ISIS அமைப்பானது ஒருங்கிணைந்த இஸ்லாமிய சிரிய மற்றும் ஈராக் நாடு அமைவதை விரும்பி அசாத்திற்கு எதிராக போராட்ட களத்திற்கு வந்தவர்கள். இவை அனைத்தையும் எதிர்த்து தன்னுடைய சுதந்திரத்திற்காக போராடும் நிலைமையினை பெற்றிருக்கின்றார்கள், குர்த் இன மக்கள்.
அதிபருக்கு ஆதரவு தரும் நாடுகள்
இதில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி தேவைகள் இருக்கின்றன
இரஷ்யா
மத்தியத் தரைக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளை இரஷ்யாவுடன் இணைக்கும் ஒரே புள்ளியாக செயல்படுகின்றது, சிரியாவின் கடற்கரை நகரமான டர்டஸ். அசாத் இப்போரில் தோல்வி அடையும் பட்சத்தில் மத்தியத்தரைக்கடல் வழியாக இரஷ்யாவிற்கு நடக்கும் அனைத்து கடல் சார்ந்த போக்குவரத்துகளும், தடவாள விற்பனைகளும் தடைபடும். 1971 முதல் இத்துறைமுகத்தினை கட்டமைக்கும் பணியில் இரஷ்யா மிகப் பெரிய அளாவில் பணத்தினை முதலீடு செய்திருக்கின்றது. இக்காரணமே, தன்னுடைய ஆயுதங்களையும், தடவாளங்களையும் சிரிய அதிபருக்கு அளித்து, வான் வழித் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றது இரஷ்யா.
ஈரான்
ஈரான் அதிக அளவில் சியா மக்களை கொண்டிருக்கின்றது. இனம் ரீதியான கொள்கை காரணம். மற்றொன்று சியா இனத்தினை அடிப்படையாக கொண்டு செயல்படும் லெபனான் நாட்டு ஹெஸ்புல்லா இயக்கத்திற்கு ஆயுதங்களை அனுப்ப ஈரானிற்கு இருக்கும் ஒரே மையப்புள்ளி சிரியா மட்டுமே. இரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் தளவாடங்களுடன் சேர்ந்து போர் குறித்து திட்டம் அமைத்து தர வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் என பலரையும் அசாத்தின் உதவிக்கு அனுப்பியுள்ளார்கள்.
ஹெஸ்புல்லா இயக்கம்
மற்ற இரு நாடுகளும் அசாத்திற்கு துணையாக பொருளாதாரம் மற்றும் ஆயுத ரீதியில் உதவ, லெபனானின் ஹெஸ்புல்லா இயக்கம் பயிற்சி அளிக்கப்பட்ட இராணுவத்தினை அசாத் படைக்கு பலம் சேர்க்க அனுப்பி இருக்கின்றது. காரணம், லெபனான்-இஸ்ரேல் நடைபெற்ற போரில், சிரிய அரசாங்கம், லெபனானின் தென்பகுதியில் இருந்த ஏராளமான மக்களை காப்பாற்றி, உயிருடன் லெபனானிற்கு மீட்டுக் கொடுத்திருக்கின்றது. லெபனானிற்கு இஸ்ரேலினை எதிர்த்து பதிலடி தர ஆயுத உதவிகள் தேவை. ஈரானில் இருந்து கிடைக்கவேண்டிய இராணுவ உதவிகள் அனைத்தும் சிரியா வழியாகவே கிடைக்கின்றது. போரில் அசாத் தோல்வி அடையும் பட்சத்தில், இஸ்ரேல் – லெபனான் மீண்டும் உரசல்கள் வர வாய்ப்பு இருக்கின்றது.
சியா இனக் குழுக்கள்
ஈராக், ஏமன், ஆஃகானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பயிற்சி பெற்ற சியா இனக்குழுக்கள் பல அசாத்திற்கு ஆதரவினை அளித்து களத்தில் குதித்திருக்கின்றன.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தரும் நாடுகள் மற்றும் குழுக்கள்
சவுதி அரேபியா மற்றும் குவைத்
இவ்விரு நாடுகளும் சிரியாவினைப் போல் முடியாட்சியினை செயல்படுத்துகின்றார்கள். ஆனால், இவர்களின் பெரும்பான்மையினர் சன்னி இஸ்லாமியர்களாவார்கள். ஆதால் இவர்களின் ஆதவானது கிளர்ச்சியாளர்களுக்கு தான். பொருட்செலவுகள் அனைத்திற்கும் பக்கபலமாக இருந்து இவ்விரு நாடுகளும் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுகின்றது. சவுதி அரேபியா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய எல்லையினை பலப்படுத்தி, ஆட்சியினை விரிவுப்படுத்த கிளர்ச்சியாளர்களுக்கு உதவுகின்றது. ஆனால் சவுதி ISIS அமைப்பிற்கு துளியும் ஆதரவினைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் சபையுடன் இணைந்து ISIS மீதான தாக்குதல்களிலும் ஈடுபட்டிருக்கின்றது.
துருக்கி
துருக்கி மிகவும் வெளிப்படையாகவே கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்து வருகின்றது. மேலும், சிரியாவில் இருந்து வெளியேறிய 20 லட்சம் மக்களுக்கு அடைக்கலத்தினை அளித்து அம்மக்களுக்கு உதவி செய்திருக்கின்றது துருக்கி. இந்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள்கள் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். ஆயுதம், பொருளாதார உதவி, மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றையும் வழங்குகின்றது. ஆனால், ISISக்கான ஆதரவினையோ எதிர்ப்பினையோ வெளிப்படையாக தெரிவிக்கவில்லை இந்நாடு.
அமெரிக்கா
2014 வரை, அமெரிக்கா இதில் நடுநிலையினை கடைபிடித்தது. ஆனால், போரின் தீவிரத்தினையும், ISISன் போக்கினையும் கண்டித்து கிளர்ச்சியாளர்களுக்கு (Hazem moment, FSA) அடிப்படைப் பயிற்சிகள் மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகின்றது. ஒபாமா அதிபராக இருக்கும் காலத்தில் இருந்தே, அதிபரை பதவியில் இருந்து விலகக் கோரி வலியுறுத்தியது. 2014க்கு பிறகே ISISன் செயல்பாட்டினை கட்டுப்படுத்த இங்கிலாந்து, ஜோர்டான் போன்ற நாடுகள் முன்வந்தன. ஜோர்டான், கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து தேவைகளுக்குமான போக்குவரத்து மையமாகவும், பயிற்சி மையமாகவும் விளங்குகின்றது.
குர்த் இன மக்கள்
ஒரு சில அமைப்புகள் இந்த வன்முறையினை பயன்படுத்தி, அதிகார சுரண்டலில் இருந்து தப்பித்து தனித்த சுதந்திரமான நாட்டினை எதிர்பார்க்க போராட்டத்தில் குதித்தார்கள். குர்த் இன மக்கள் அவ்வாறே, துருக்கி, சிரியா, அர்மேனியா, ஈரான் மற்றும் ஈராக்கிலிருந்து குறிப்பிட்ட எல்லையை வகுத்து 2014 குர்த்திஸ்தான் என்ற தனி நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. மத்திய கிழக்கு தேசங்களில் நான்காவது மிகப்பெரிய இனம் குர்த் இனமாகும். ஆனால் இவர்களுக்கு தனி நாடு கிடையாது. அதனால் அவர்கள் சுதந்திரத்தினை எதிர்பார்த்து இப்போரினை பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் இவர்கள் கிளர்ச்சியாளார்களுக்கோ, அசாத் படையினருக்கோ எந்தவிதமான ஆதரவினையோ எதிர்ப்பினையோ தரவில்லை மாறாக ISISஐ எதிர்த்து பலமாக போராட்டம் நடத்தினார்கள். இதன் விளைவாக, ISISஐ அழிக்க, அமெரிக்கா இம்மக்களின் இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனியர்கள்
1948ல் இஸ்ரேல் நாடு உருவாகவும், அப்பகுதிகளில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனியர்கள் அருகில் இருக்கும் பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள். லெபனானிலும், சிரியாவிலும் அவர்களின் வாழ்வானது மதிக்கும் படியாக இருந்தது என்று கூறலாம். ஹஃபேஸ் ஆட்சியில் இருக்கும் போது பாலஸ்தீனியர்கள் அனைவரும், சிரிய மக்களுக்கு இணையாக நடத்தப்பட்டார்கள். இலவச மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பினை உறுதி செய்வது போன்றவற்றில் எவ்வித குறையும் இன்றி நடத்தப்பட்டார்கள். கிட்டத்தட்ட 5 லட்சம் பாலஸ்தீனிய அகதிகள் சிரியாவில் இருந்திருக்கின்றார்கள். இப்போர் அவர்களை மேலும் பல்வேறு இடங்களுக்கு அகதிகளாக அலையவைத்திருக்கின்றது. சிரிய அதிபருக்கு உதவ இவர்கள் முன் வந்திருந்தாலும், அகதிகளில் பெரும்பாலானோர் சன்னி மரபில் வந்தவர்கள்.
ISIS
சிரியாவில் இருக்கும் பெரும்பான்மை சன்னி மக்களையும், ஈராக்கில் இருக்கும் சிறுபான்மை சன்னி மக்களையும் (35-40%) வைத்து இரு நாடுகளுக்கும் இடையேயான நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த இஸ்லாம் நாடாக ISIS இருக்க வேண்டும் என்று எண்ணி நிறைய தீவிரவாத இயக்கங்கள் இப்போரில் பங்கேற்றார்கள். பால்மைரா போன்ற புராதான நகரத்தில் இருந்த கோவில்கள் மற்றும் அருங்காட்சியக பொக்கிசங்களை பெயர்த்தெடுத்து வெளிநாடுகளில் விற்று வரும் பணத்தில் போரினை மிகவும் வலிமையுடன் நடத்தி, 7 ஆண்டு இறுதியில் ஒரு நகரத்தினை கூட தன் கையிருப்பில் வைத்திருக்க இயலாமல் போன இயக்கம் இதுவாகும். கலை, கலாச்சார, அறிவுசார் பாதிப்பினை இப்போரில் அதிகம் ஏற்படுத்தியது இவ்வமைப்பாகும்.
இத்தனை நாடுகளின் பங்கீடு இன்றி ஒரு இனத்தின் அழிப்பு சாத்தியப்படுவதில்லை. உள்நாட்டு போர் என்ற பெயரில் நடைபெறும் உலகமயாக்கலின் அதிகாரத்துவ நகர்வாக இருக்கின்றது இப்போர். மத்திய கிழக்கு தேசங்களில் அமெரிக்கா மற்றும் இரஷ்யாவின் நிலைப்பாட்டினை நிலை நிறுத்தும் வகையிலேயே இப்போர் நீண்டு கொண்டே போகின்றது. ஒருவேளை அசாத் தோல்வி அடையும் பட்சத்தில் சீரமைப்பு பணிகளுக்காக, சிரியாவில் அமெரிக்காவின் பங்கு அதிகப்படும்.
பின்பு டர்டஸில் இருந்து இயங்கும் தன்னுடைய கடல் மார்க்க சந்தைகளுக்கு இரஷ்யா முற்றுப்புள்ளி வைக்க நேரிடும். இவ்விரு நாடுகளுக்கும் ஆதரவு தெரிவித்து சிரியாவின் அனைத்து பகுதிகளையும் ஆயுதங்களாலும், இரத்தத்தினாலும் காயப்படுத்தியிருக்கின்றார்கள். வெற்றி பெறுபவர்களின் கை அரேபிய தேசத்தில் காலத்திற்கும் நிலைத்து ஓங்கி இருக்கும். ஆனால், இப்போருக்கு மனிதமும், மனித குலமும் அளித்த விலை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
Web Title : The reasons behind Syrian Civil War
Featured Image Credit: pinterest.co.uk