தன் கவிதைகளுக்காக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் ஒடுக்கப்படும் தமிழ் கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் !
அஹ்னாஃப் ஜசீம் இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை எனும் கிராமத்தை சேர்ந்த ஒரு தமிழ் முஸ்லிம் கவிஞர் ஆவர். 2017 ஆம் ஆண்டில், மாணவராக ஜசீம் தனது முதல் புத்தகமான நவரசம் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அவர் தனது படிப்பை முடித்து புத்தளத்தில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் இலக்கியம் கற்பிக்கத் தொடங்கினார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மே 16, 2020 அன்று, அவரது கவிதைகள் மதத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) மன்னாரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர்கள் அவரது தொலைபேசி, மடிக்கணினி மற்றும் அவரது புத்தக அலுமாரிகளை சோதனை செய்த பின், சுமார் ஐம்பது புத்தகங்களையும், நவரசத்தின் பல நூறு பிரதிகளையும் பறிமுதல் செய்தனர். மூன்று நாள் விசாரணைக்குத் தயாராகுமாறு மட்டுமே அவரிடம் கூறியிருந்த நிலையிலேயே.கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.