யானை மோதி மரித்தது தமிழ்!

எப்பொழுதும் எழுதுவதற்கும் இப்பொழுது எழுதுவதற்கும் இமாலய வேறுபாடு எழுகிறது என்னுள். பாரதிக்காக சமர்ப்பிக்கும் இக்கட்டுரை முழுமையடையப்போவதில்லை என்பது உறுதி. எவ்வளவு எழுதினாலும் முடியாத அவன் பெருமையை ஒரே கட்டுரையில் எழுதித் தீர்க்கும் பெரும் பேராசையில் ஆரம்பிக்கிறேன்.

“சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே” என்ற தாலாட்டில் தொடங்குகிறது தமிழ்க் காதலர்க்கும் பாரதிக்குமான உறவு.

தொட்டிலிலிருந்து பள்ளிக்காலம், வாலிபம், காதல், வாழ்வியல், அரசியல், சமூக நீதி, பக்தி, போராட்டம், கற்பனை, புரட்சி என வாழ்வில் எந்தப் பொழுதுக்கும், எந்த நிலைக்கும், எக்காலத்திற்கும்  தேவையான பாடல்களையும் பாடுபொருள்களையும் முப்பத்தொன்பது வருடத்தில் முழக்கி முடித்த மகாகவிஞன்மேல் காதல்கொள்ளாதோரும் உளரோ!

படம் – britannica.com

பாரதியின் வாழ்வும் அவன் விட்டுச்சென்ற தீந்தமிழ்க் கவியும் என்றைக்கும் எம்முலகத்தாரை நோக்கி கேள்வி எழுப்புவதாகவே இருக்கும். பார்போற்றும் மாகவிஞன் அவன் வாழ்வில் கடந்துவந்த சவால்களும், தனது சித்தாந்தம் பிறழாத வாழ்வை வாழ்ந்து முடிக்க அவன்பட்ட இன்னல்களும், அவனது இறுதி நாட்கள் கழிந்த விதமும், இறுதி மூச்சுவரை தனது சமூகத்தின் மடமையொழிக்கவும் அதேசமூகம் விடுதலைபெற்று தலைநிமிர்ந்து நடக்கவுமென அவன்கொண்ட வேட்கையும், அப்படிப்பட்ட நன்மகனை இவ்வுலகு உதாசீனம் செய்த விதமும் உலக வாழ்வின் சித்தாந்தத்தை எமக்கு பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.

கவிதையும், கவிஞன் என்ற அடையாளமும் வேண்டி இயல்பு, தன்னிலை, நேர்மை, உண்மை அனைத்துமிழந்து நிற்கும் கோடிக்கணக்கான நவகவிஞர்கள் உலவுகின்ற இதே பூவுலகில், நெஞ்சிலுரமும் நேர்மைத்திறமும் கொண்டு, அதன் விளைவை, தத்துவத்தை, கேள்வியை, ஆதங்கத்தை கவிதையாக கொணர்ந்து, அதனின்று சற்றும் பிறழாது தனது வாழ்வை வாழ்ந்துமுடித்த பாரதியை பெற்றது பாரதத்தின் பேறன்றோ?

“சிற்றிலக்கியங்களில் வழிந்த சீழ்

சிலேடைகளில் தெறித்த இந்திரியம்

கட்டளைக் கலித்துறைகளில் வழிந்த கட்டில் வேர்வை

கடவுள் பாடல்களில் கசிந்த கண்ணீர்”

இப்படி அன்றைய தமிழ்க்கவி கண்டிருந்த பாடுபொருள்களை கவிப்பேரரசு வைரமுத்து விவரிக்கிறார். அப்படிக் கவலைக்கிடமாகக் கிடந்த தமிழை புதிய வீச்சோடும் உரிய பாடுபொருள்களோடும் தனது சமூகம் எதிர்கொண்டிருந்த பெரும்சவால்களை தகர்த்தெறியவென தேர்ச்சியோடு கையாண்டவன் பாரதி. தங்கப் பேழைகளில் புழுதிபடியக் கிடந்த மொழியை அனைவரது பாவனைக்குமாய் அவிழ்த்துவிட்டவன் அவன்.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று அவன் கூறியது தமிழுக்கும் சேர்த்தோ என்னவோ!

உலகின் பார்வைக்கு பித்தனாகத் தெரிந்த பாரதியின் கவிதைகள் ஒவ்வொன்றும் அவன் எப்பேர்ப்பட்ட சிந்தனையாளன்  என்பதனை இன்னும் கோடானகோடி ஆண்டுகளுக்குப் பின்னால் வரவிருக்கும் தலைமுறைக்கும் எடுத்தியம்பவல்லவை.

“வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று

வேதம் புகன்றிடுமே – ஆங்கோர்

வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்

வேத மறியாதே.”

அறிவொன்றே தெய்வமென்று அன்று அவன் பாடியதன் உண்மை புலப்பட இவ்வுலகு இன்னும் எத்தனை ஆண்டுகள் சுழல வேண்டும் என்பதும் நினைக்க நினைக்க வியப்பளிக்கும் உண்மை.

கவிஞன் என்ற நிலைக்கு அடிப்படை ரசிகனாக இருப்பதே! காணும் பொருளையெல்லாம் வியக்கும் வல்லமையும் காட்சிப் பிழையென அவற்றை கண்டு தெளிவதுவும் கவிதைமூலம் பொருட்செறிவை உலகுக்கு வழங்கி வளமளிக்கும் சத்தியக் கவிஞனின் ஆயுதம்.

“காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்

கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால்

மறைந்ததெல்லாம் காண்பமன்றோ

நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?”

வரிகள் ஐந்தில் சர்வ மண்டலத்தின் தத்துவத்தையும் முத்தாய்ப்பாய் மொழிந்த பாரதி வெறும் கவிஞனாக இருக்க முடியாது. “என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்” என்று சக்தியிடம் அவனிட்ட மன்றாட்டமும் அர்த்தமற்றதன்று.

பாடுகின்ற பொருளையும் அதுகொணர் சந்தர்ப்பத்தையும் பாடுபொருளாகவே மாறி கவிதைகொள்ளும் பாங்கு அனைவருக்கும் வாய்க்காத கலை. ஆனாக இருந்துகொண்டு பெண்ணின் மனநிலையை எடுத்தியம்புவதில் பாரதி காட்டிய அற்புதம் இன்னும் விடையறியாக் கேள்வியாகவே எம்முள் இருக்கிறது.

“கண்ணன் என் காதலன்” கொண்ட அத்தனை பாடல்களும் அதனை எழுதியது ஒரு ஆண் என்ற உண்மையை ஒப்பாது. பாங்கியைத் தூதுவிடும் பெண் சொல்லும் ஒவ்வொரு விடயமும் பெண்ணின் மனதுக்குள் பாரதி இறங்கிச்சென்று பொருள் சேகரித்து பின்னர் அதனைப் பாட்டாக மாற்றியிருப்பானோ என்று சிந்திக்க வைக்கிறது.

ஓவியம் – கட்டுரையாசிரியர்

சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே – அவன்

சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்

வீர மறக் குலத்து மாதரிடத்தே

வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

என்ற வரிகள் பெண்ணுக்கே உரிய மனப்பான்மையையும், இயலாமையையும், காதலையும், அட்சரம் பிசகாமல் பதிவுசெய்கின்றன.

சொல்லாட்சி ஒரு கவிஞனின் பேனாவுக்கு மை, கவிக்களத்தில் அவனது கேடயம்! புதுக்கவிதை எழுமாற்றல் இதுதான் என தனது தேர்ந்த சொற்தேர்வுகளால் காட்டித்தந்தவன் பாரதி. பிள்ளையின் அழகிய அசைவுகளை கண்டு பூரிக்கும் தாயுள்ளம் உணர்கின்ற உணர்வை அவனைவிட அழகாகச் சொன்னவர்கள் இல்லை எனலாம். சொற்களை பிணைத்து/சேர்த்து புதுப்புது அர்த்தங்களை இன்னும் மெருகோடு சொல்லிய பெருமை அவனுக்கானது.

“ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ” என்ற அடியில் ‘ஆவி தழுவுதல்’ என்ற சொற்சேர்க்கை அழகிய எடுத்துக்காட்டு!

‘சுடர்மிகு அறிவுடன்’ என்ற அறிவின் அடைமொழி அக்கவியின் அடிப்படைக்கே பலம் சேர்க்கும்.

பாரதி கவிதைகளையும் அவனது கவிதைகளின் சிறப்பையும் ஒரே கட்டுரையில் ஒடுக்கவொண்ணா! அவனது எழுத்தை ஆய்வுசெய்து கரைகாண்பது கடிது. அவன் எழுப்பியிருக்கின்ற கவிக்கோட்டையை ஓர் சிற்றெறும்பளவான நாம் ஆங்காங்கே நின்று அண்ணார்ந்து வியக்க முடியும். அப்பொழுதும் அவனது கவிப்புலமையை முற்றாக அறிந்துவிட்டதாய் அர்த்தமாகாது. ஒவ்வொரு பொழுதும் புதுப்புது அனுபவத்தை இடத்திற்கும் காலத்திற்கும் தகுந்தாற்போல் தந்துகொண்டே இருக்கும் அட்சய பாத்திரம் வெறும் முப்பத்தொன்பது வருடங்களில் பூர்த்திசெய்யப்பட்டது அதிசயம்தான்.

தனது முழு வாழ்வின் அர்த்தத்தையும் ஒரே வரியில் “சூழ்கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே” என்று எளிதாகப் பாடிய பாரதியின் வாழ்வு  மொத்தமும் சமூகத்தின் அறியாமையை ஒழிக்கவென தமிழை தனது ஆயுதமாகப் பயன்படுத்தியதை, சமூகத்தின் விடிவு என்னும் பெரும் குறிக்கோளில் தமிழ் வளர்த்த சாதுர்யத்தை எடுத்தியம்புகின்றது.

வாழ்வின் ஒவ்வோர் பொழுதிலும் எம்மோடு பின்னிப்பிணைந்த பாரதியின் வாழ்க்கையும், அவன் கவியும் பொக்கிஷமாகப் பார்க்கப்படவேண்டியவை. கறுப்புவெள்ளை வாழ்வுக்கு பாரதி கொணர்ந்தது வர்ணஜாலம்!

வெல்க பாரதி! வாழ்க தமிழ்!!

Related Articles

Exit mobile version