போருக்குப்பின்னான மனிதம் – இலங்கையின் வரலாற்றுப் பக்கங்கள்

போர், 30 ஆண்டுகால வன்முறை நிறைந்த சூழல், இந்நாட்டு மக்களை இன்னும் விடுவித்த பாடில்லை. மழை ஓய்ந்தபின்னும் மிஞ்சியிருக்கும் தூறல்போல பெயரளவில்  முடிவுற்ற யுத்தம் அதன் மாறா வடுக்களை இன்னும் இப்பூந்திரு நாட்டில் மிச்சம் வைத்தே சென்றிருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களில் நிகழ்த்தப்பட்ட சமூக நினைவூட்டல் கலந்துரையாடைகளில் இன்றும் அவர்கள் கடந்துவந்த கசப்பான அனுபவங்களை சுமந்தவர்களாகவே அம்மக்கள் வாழ்ந்துவருவது மீண்டும் மீள வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் இவ்வாறான கலந்துரையாடல்களில் அம்மக்கள்  பல்வேறுவிதமான பாதிப்புக்களுக்குண்டான மனோநிலைகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. கோபம், வெறுப்பு, பயம், விரக்தி, அவமானம், கவலை, தனிமை, போன்ற உணர்ச்சிகள் மற்றும் மனோபாவங்கள் இன்னும் அவர்களைத் தொற்றிக்கொண்டு இருப்பது யுத்த சூழல் எம்மில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் பாரதூரத்தை விளக்க வல்லன. கடந்தகாலங்களில் போர்ச் சூழலில் நாம் அனுபவித்துவந்த வாழ்க்கை இன்னல்கள், இடர்கள், அடக்குமுறைகள், அத்துமீறல்கள், ஏமாற்றங்கள், வாக்குறுதிகள், காத்திருப்புக்கள், இழப்புக்கள், இறப்புக்கள், அவமானங்கள் இப்படி ஒவ்வோர் சமூகத்தின்மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட செயற்பாடுகள் அம்மக்களின் மனங்களில் மாறாத வடுவாக, கறையாக படிந்திருப்பது எம் அனைவராலும் மறுக்கமுடியாத உண்மை.

Image : imkiran.com

அதேவேளை, போரை தமது அன்றாட வாழ்க்கையோடு அனுபவித்த உள்ளங்கள், அதன்மூலம் பல்வேறு இழப்புக்களை கடந்துவந்த மக்கள், தமது சொந்த நாட்டினிலேயே புறக்கணிக்கப்பட்டு பயத்தோடும், அச்சத்தோடும் வாழ்ந்தவர்கள், பல அரசியல் காரணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு தரப்பினர் ஆடிய பகடையில் சிக்குண்டு அவதிப்பட்ட மனங்கள் அவர்கள் எம்மதம் எவ்வினம் எக்கலாச்சாரத்தை சேர்ந்தவராயினும் அவர்களது போர் சார்ந்த எண்ணப்பாடுகள் கால ஓட்டத்தில் அடுத்த சமூகத்தை, இனத்தை சேர்ந்த மக்கள் மீதான காழ்ப்பு மற்றும் நம்பிக்கையின்மை போன்ற எண்ணப்பாடுகளை உருவாக்கிச் சென்றிருப்பது நிதர்சனம். அதனால்தான் சிங்களவன், தமிழன், சோனி, என்ற விழிப்புகளும், ஒரு பிணக்கு இடம்பெறும்போது, அதனோடு தொடர்புடையவர் வேற்று சமூகத்தை அல்லது சாதியைச் சேர்ந்தவராக இருப்பின், பிரச்சினையை விடுத்து அவரை அவர் சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதி விம்பமாக நோக்குவதும், சாடுவதும், இன மத மொழி வர்க்கங்களை அவதூறாக பேசுவதும் இன்றைய சமூகங்களில் சாதாரணமாக மாறிவிட்டது.

அடிப்படையில் இது எமது கலாசாரத்திற்கு ஏற்புடையதா? உலகமக்கள் வியந்துநோக்கும் சீரிய பண்பாட்டு விழுமியங்களை உருவாக்கி, வாழ்ந்துவந்த எமது கலாசாரம் இதனை ஏற்கிறதா? வழிப்போக்கர்களும் தங்கிச்செல்ல திண்ணைகள் வைத்து வீடுகட்டிய எமது சமூகம், வீதியில் செல்வோருக்கும் தாகசாந்தி வேண்டி படலையோரங்களில் தண்ணீர் பந்தல்களை அமைத்த எமது கலாச்சாரம், இன்று பத்தடி உயரத்திற்கு மதில்சுவர் எழுப்பி, கண்காணிப்புக் கருவிகள் பொருத்தி, அண்டை வீட்டானையும் திருடனாகப் பார்க்கும் பண்பாட்டை நோக்கி பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் நிலை எமது கடந்தகாலம் எமக்கு ஏற்படுத்தித்தந்த அநுபவமேயன்றி வேறில்லை.

மேலும், இலங்கை போன்றதொரு நாட்டில் ஒரு மனிதன் சக மனிதனுடன் காட்டுகின்ற நடத்தை மற்றும் உபசார முறைமைகள், இலங்கை மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சமூக சிக்கல்கல்களிலும் தங்கியுள்ளது. தனது வாழ்க்கையை வாழ்வதற்கான வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கின்ற நிலையில் அடுத்த வீட்டுக்காரனின் மனதறிந்து கருமமாற்றுவது இன்றைய காலகட்டத்தில் நடைமுறைச் சாத்தியமானது.

விளைவுகள்

யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் சமூகங்களுக்கிடையிலான வெறுப்பு, கோபம் போன்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்க பல்வேறு விஷமிகளால் ஏற்படுத்தப்படும் சதித்திட்டங்கள், வெறுப்புணர்வுகள், இனங்களுக்கிடையிலான சுமுகமான போக்கை சீர்குலைக்கும் நடவடிக்கைள் போன்றவை கட்டுக்கடங்காது கொப்பளிப்பதையும் போருக்குப் பின்னான காலப்பகுதியில் நாம் காண்கின்றோம். ஏற்கனவே இருக்கின்ற அசாதாரண மனோநிலைகளை மேலும் மேலும் இவை காயப்படுத்துவதாகவே இருக்கிறது.

ஏதோ ஒரு நிலையில் முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து முன்பு மக்கள் அனுபவித்துவந்த கோர சம்பவங்களுக்கு விடிவுகாலம் வந்திருந்தாலும் அதன்மூலமாக நல்லதொரு சுமுகமான சமூகச் சூழலை கட்டியெழுப்புவதில் இவ்வாறான பிரச்சினைகள் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன.

கல்வியில் புறக்கணிப்பு, நூலக எரிப்பு, இன மத மொழி மீதான பாகுபாடுகள் போன்ற விடயங்கள் எப்படி ஒரு கோரமான போருக்கு வித்திட்டதோ, அதேபோன்று இன்று நடக்கின்ற இவ்வாறான சம்பவங்கள் இன்னுமொரு போருக்கு வழிசமைத்துவிடும் அபாயம் நேர்வது யாருக்கும் உகந்ததல்ல. இவ்வாறான பிணக்குகளுக்குள் நாமும் அகப்பட்டு மனிதத்தை கொன்று குவிகாத்திருப்பது எம்மனைவர்மீதும் கடமை.

மனிதன் மனிதனாக வாழ, மனிதம் அவனோடு சேர்ந்து வளர தேவையான சந்தர்ப்பத்தையும் சூழ்நிலைகளையும் இழந்து வந்த நமது சமூகம் மனிதகுலத்திற்கு அடிப்படையான மனிதத் தன்மையையும் சேர்த்து இழந்து வருகிறோமா என்ற கேள்வியை கேட்டுப்பார்ப்பது கட்டாயம். எமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இன்று நடந்தேறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் எமக்கு இதனைத்தான் போதிக்கின்றன. அரசியல், பொருளாதார, அதிகார, ஆதிக்க தேவைகளுக்காக, வலியோர் எளியோரை நசுக்கி வாழும் கலாசாரம் இவ்வுலகுக்குப் புதிதல்ல.

குழந்தைகள், வயோதிபர்கள், பெண்கள், அப்பாவி குடிமக்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் யுத்தம் என்ற பெயரால் சொல்ல முடியாத அளவு வேதனைக்கும் வதைக்கும் ஆளாகின்றனர். இது இந்த நொடியிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது

தமிழன் பார்க்கிறான், சிங்களவன் போகிறான், சோனி வாழ்கிறான் என வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விடயத்தையும் சக மனிதர்களின் சமூக பிரதிநிதித்துவத்தை அடிப்படையாக வைத்தே நோக்குவதும், சக மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல் எதிரியாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், துரோகிகளாகவும், சாதிக்காரர்களாகவும் மட்டுமே நோக்கும் பண்பும் எம்முள் வித்தைவிட்டு விருட்சமாக வளர்ந்து இன்று அப்பண்புகளின் வெளிப்பாடு புதிய பிணக்குகளை தோற்றுவிப்பதும், சமூக இணக்கப்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதுவும் இனிவரும் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் அன்றாடம் பரிமாறப்படும் கருத்துக்களில் காணப்படும் நெறிபிறழ்வுகள், வெறுப்புணர்வுகள், வாதப் பிரதிவாதங்கள், போன்றவை கூட தார்மீகப் பொறுப்பற்ற சமுதாயமொன்றின் பாராமுகமான செயற்பாடுகளையே சுமந்து வருகின்றன. இதன்மூலம் முகம் தெரியாத பல சமூகத்தாரின் மத்தியில் வெளிப்படையாக ஒரு இனம் பற்றியோ, மதம் பற்றியோ வீணான வெறுப்புக்கள் விதைக்கப்படுகின்றன.

தீர்வு?

“நீ எதனை விரும்புகிறாயோ அதனையே உனது சகோதரனுக்கும் விரும்பு”என்ற நபிகள் நாயகத்தின் ஏவலுக்கு அமைய, தன்னைப்போல் பிற மனிதனையும் மதிக்கும், கண்ணியப்படுத்தும், அவனது துன்பத்தை உணர்ந்து நடக்கும் பாங்கு விருத்தியடையாத பட்சத்தில் மாறுபட்ட கலாச்சார விழுமியம் கொண்ட சமூக அமைப்பு இடர்தரும் வாழ்க்கைமுறைக்கானதாக மட்டுமே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Image : Pixabay.com

நாம் இதுவரை எமது அனுபவத்தில் கற்றுக்கொண்ட மனிதனின் அடிப்படை பண்புசார் விழுமியங்களுக்கு பிறழ்வாக இருக்கும் எண்ணப்பாடுகளையும் கருத்துக்களையும் மீள்பரிசோதனை செய்துபார்த்தல் மனிதன் என்ற வகையில் எம்மனைவர்மீதும் கடமை என்றே சொல்லவேண்டும். இனியும் ஓர் யுத்தம், வெறுப்பு, சமூக பாதுகாப்பின்மை, அவதி போன்றவற்றை நாமே உருவாக்கிவிடாதிருப்பதன் முக்கியத்துவம் உணரப்படல் வேண்டும். சமூக ஒருமைப்பாடு சகிப்புத்தன்மை போன்ற பண்புசார் விடயங்கள் கருத்தில் கொள்ளப்படல் அவசியம்.

பல்வேறு இன, மத, மொழி, பண்பாட்டுப் பல்வகைமை உள்ள ஓர் நாட்டில் இப்பல்வகைமை எவ்வளவு சிறப்புக்குரிய அம்சமாக கருதப்படுகிறதோ, அதேயளவு சமூகங்களுக்கிடையிலான இடர்பாடுகளை ஏற்படுத்தவும் வல்லது.

ஆகவே, மற்றவர்களின் கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ளல், அதனை மதித்தல், கண்ணியப்படுத்தல், அவர்களது சமய வழிபாட்டு நம்பிக்கைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளல், மாற்று சமூகத்தாரை அவர்களது நடைமுறைகளோடு சேர்த்து உளவாங்கிக்கொள்ளல், அங்கீகரித்தல், தன்னைப்போல் ஏனையவரதும் பாதுகாப்பிற்கு உறுதிசெய்தல், நல்லிணக்கத்தோடு தனது குடும்பம் சகோதரர்களாக அவர்களை நடத்துதல் போன்ற புதைந்துபோன மனிதப் பண்புகளை தோண்டி எடுக்கவேண்டிய கட்டாயம் எமக்கும் எமது சந்ததிக்கும் இருப்பதை இனியாவது நாம் உணர வேண்டும்

வரலாறு, கலை, கலாசாரம், இயற்கை வளம், காலநிலை, சீதோஷணம் போன்ற பல்வேறு சிறப்புக்கள்  பொருத்திய இந்நாட்டில் இவையனைத்தும் இடம்பெற காரணமாக அமைந்த பல்லின மக்கள் தங்கள் பெருமையை தாமே அழித்துவிடும் நிலை ஏற்பட்டமை மிகப்பெரிய துர்ப்பாக்கியம். அவ்வாறான நிலை இன்னுமொருமுறை நிகழ்வதை எம்மில் யாரும் விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அது யாருக்கும் நன்மை பயக்கப்போவதும் இல்லை.

ஆசியாவின் அதிசயமாக இவ்விலங்கைத் திருநாடு தொடர்ந்தும் திகழவேண்டுமாயின், தனிமனித அளவில் நாமொவ்வொருவரும் எமது சக மனிதர்களை, அவர்களின் இனம், மதம், மொழி, கலாசாரம் என்ற வேறுபாடுகளைக் கடந்து எம்மைப்போன்ற மனிதன் என்ற கண்ணோட்டத்தில் காணவேண்டும். தன்னைப்போலவே அவனும் இரத்தமும் சதையுமாக பல்வேறு உளவியல் தேவைகளோடும் ஆசாபாசங்களோடும் இவ்வுலகில் வாழ்கின்றான் என்ற புரிதலை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெறுமனே எழுத்தளவில் இன்றி, நடைமுறையில் நமது அன்றாட வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இதனை மனத்தில் கொள்ளல் வேண்டும்.

எமது கலாசாரம் எமக்கு போதித்துள்ள பண்பாட்டை தனிமனித, குடும்ப அளவில் செம்மைப்படுத்தி அதனூடு ஓர் சமூக மாற்றத்தை வெளிக்கொணர திடசங்கர்ப்பம் பூணவேண்டும்! நீங்கள் தயாரா?

 

கட்டுரையில் மேற்கோளிடப்பட்டுள்ள நிஜ வாழ்க்கை வாக்குமூலங்கள் memorymap.lk எனப்படும் சமூக நினைவூட்டல் தளத்திலிருந்தும் Herstories நிகழ்ச்சித் திட்டத்திலிருந்தும் பெறப்பட்டவை 

*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

Featured Image : aljazeera.com

Related Articles

Exit mobile version