வெறும் ’23 வயதான’ கிராமத்தலைவி ஜப்னா தன்னுடைய கிராமத்தை எப்படிச் சிறப்பாக்கினார் என்று தெரிந்துகொள்ளுங்கள்
ஒரு கிராமத்தில் வசிக்கிற எல்லாரும் சேர்ந்து அங்குள்ள குப்பைகளைச் சுத்தம்செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? மதுக்கடை இல்லாத கிராமமொன்றைப் பார்த்திருக்கிறீர்களா? எந்நேரமும் சூதாடிக்கொண்டிருந்த ஆண்கள் இப்போது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதெல்லாம் இருக்கட்டும், ஒரு கிராமத்தின் சர்பஞ்ச் (தலைவி) வெறும் 23 வயதுப் பெண்ணாக இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
அப்படியொரு கிராமத்தைப்பற்றி நீங்கள் எப்போதும் கேள்விப்பட்டதில்லையென்றால், நீங்கள் ஹிமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் தஜுன் கிராமத்துக்கு அவசியம் செல்லவேண்டும்.
அங்கு செல்லும்போது மறக்காமல் அந்த ஊரின் தலைவி ஜப்னாவைச் சந்தியுங்கள். தன்னுடைய கடின உழைப்பால் தன் கிராமத்தின் தோற்றத்தையே மாற்றியமைத்துள்ளவர் அவர்.
எம்ஜி மோட்டர் இந்தியா (MG Motor India) மற்றும் தி பெட்டர் இந்தியா (The Better India), யூஎன் விமென் (UN Women) ஒத்துழைப்புடன் நம்முடைய சேஞ்ச்மேக்கர் பிரசாரமானது இப்படிப்பட்ட ‘மாற்றத்தைக் கொண்டுவருவோரை’ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது; இவர்கள் தங்களுடைய மனவுறுதியால் சமூகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளார்கள்.
வாருங்கள், ஜப்னாவின் கதையைத் தெரிந்துகொள்வோம்-
ஒவ்வோர் அடியிலும் துணை நின்ற தந்தை
22 வயதில் தன்னுடைய கிராமத்தின் தலைவியானார் ஜப்னா. அதன்பிறகு, தன்னுடைய திறமையை ஒவ்வொருவருக்கும் நிரூபித்துள்ளார்.
மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு வயது ஒரு பொருட்டில்லை, நல்ல எண்ணம்தான் முக்கியம் என்று எல்லாருக்கும் நிரூபித்துள்ளார் அவர். தன்னுடைய கண்களில் பெரிய கனவுகளோடு இருக்கிற ஜப்னா ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
ஆரம்பத்திலிருந்தே ஜப்னாவின் மனத்தில் கல்வியின்மீது மிகுந்த ஆர்வம் இருந்தது; அதைப்பற்றி வலுவான எண்ணங்களை வளர்த்துக்கொண்டிருந்தார், ஆனால், அவருடைய வீட்டின் பொருளாதார நிலைமை காரணமாக, அவரை மேற்படிப்புக்கு அனுப்புவதுபற்றி யாரும் யோசிக்கவில்லை.
இன்னொரு காரணம், அவருடைய கிராமத்தில் பட்டப்படிப்புக்கான கல்லூரி எதுவும் இல்லை. அவருடைய தந்தை ஹரியாவுக்கு மகள் மேற்படிப்புக்குச் செல்ல விரும்புவது தெரியும்.
ஆகவே, அவர் ஜப்னாவை மேலே படிக்கவைப்பதற்காகத் தன்னுடைய தம்பியிடம் உதவி கேட்டார். சித்தப்பா அதற்கு ஒப்புக்கொண்டதால், மண்டி மாவட்டத்திலிருக்கும் ஒரு பட்டப்படிப்புக் கல்லூரியில் சேர்ந்தார் ஜப்னா.
அதன்பிறகு, ஜப்னாவின் புதிய பயணம் தொடங்கியது.
கிராமவாசிகளின் சிரமங்களைப் புரிந்துகொண்டபோது
மண்டியில் படிக்கச்சென்ற ஜப்னா அங்குள்ள உள்ளூர்ப் பத்திரிகையொன்றில் வேலை தேடினார். இதனால், ஜப்னாவின் பொருளாதாரப் பிரச்னைகள் சிறிதளவு குறைந்தன.
அத்துடன், புதியவர்களைச் சந்திக்கவும், அவர்களுடைய பிரச்னைகளை நன்கு புரிந்துகொள்ளவும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. கிராமவாசிகள் முன்னேற விரும்புகிறார்கள், ஆனால், அவர்களுடைய பாதையில் பல தடைகள் உள்ளன என்பதை அவர் புரிந்துகொண்டார்.
அதன்பிறகு, ஜப்னாவுக்கு ‘ஓரியன்டல் டைம்ஸ்’ என்ற ஒரு செய்தி சானலில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர் பணி கிடைத்தது.
இந்த வேலை கிடைத்தபிறகுதான், ஜப்னாவின் வாழ்க்கையில் நேர்விதமான மாற்றம் ஏற்படத்தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில்தான் அவர் தன்னுடைய கிராமத்து மக்களைப்பற்றியும், அவர்களுடைய பிரச்னைகளைப்பற்றியும், அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதுபற்றியும் சிந்திக்கத்தொடங்கினார்.
பெண்களுக்குத் துணையாக நின்ற ஜப்னா!
விரைவில், ஜப்னா தன்னுடைய செய்தியாளர் பணியின்மூலம் கிராமவாசிகளுடைய பிரச்னைகளை மேலதிகாரிகளுக்குக் கொண்டுசெல்லத் தொடங்கினார்.
ஜப்னா இப்படிப் பிரச்னைகளை மேலதிகாரிகளிடம் சொல்வதுடன் நிறுத்தவில்லை, அவை தீரும்வரை தொடர்ந்து அவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தார், என்ன நடக்கிறது என்று விசாரித்துத் தீர்வை நோக்கி நகர்ந்தார்.
தன்னுடைய கிராமத்திலிருந்த பெண்கள் பலவிதமான சுரண்டல்களுக்கு ஆளானார்கள் என்கிறார் ஜப்னா. அங்கு பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை மிக இயல்பாகக் கருதப்பட்டதாம்.
இத்துடன், பெரும்பாலான பெண்களுக்கு 16 வயதில் திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு எதிராகவும் ஜப்னா உரக்கக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
அடுத்த ஓராண்டில், மண்டி மாவட்டத்தில் எல்லாருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் ஜப்னா. அவர் சமூகத்தின் தீமைகளுக்கு எதிராகப் போராடினார், ஏழை மக்களுடைய பிரச்னைகளை விரட்டி அவர்களுக்கு நன்மையைக் கொண்டுவந்தார்.
சில ஆண்டுகள் சென்றன, 2016ல் தஜூன் கிராமத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் வந்தது. அதில் ஜப்னா போட்டியிடவேண்டும் என்று கிராமவாசிகள் ஒருமனதாக அவரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
ஏனெனில், அவர்கள் எல்லாரும் ஜப்னா தங்களுக்காக இரவு, பகல் பாராமல் தன்னலமின்றி உழைப்பதைக் கண்டார்கள், கிராமத்தைச் சரிப்படுத்தவேண்டும் என்பதற்காக அவர் பாடுபடுவதைக் கண்டார்கள், ஜப்னாபோன்ற ஒருவர்தான் தங்கள் தலைவராக வரவேண்டும் என்று நினைத்தார்கள்.
மக்கள் திரும்பத்திரும்பச் சொல்லியும் ஜப்னா தேர்தலில் நிற்க ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை, அவருக்கு அரசியல் அனுபவம் ஏதும் இல்லை என்பதுதான் அதற்குக் காரணமோ என்னவோ.
அதன்பிறகும் அவர் தொடர்ந்து சமூக முன்னேற்றத்துக்காக உழைத்துக்கொண்டிருந்தார்.
இந்தியாவின் மிக இளம் கிராமத்தலைவர்
ஒருபக்கம், சிலர் ஜப்னாவைக் கிராமத்தலைவராக்க விரும்பினார்கள். இன்னொருபக்கம், பலர் அவருடைய தந்தையிடம் ஜப்னாவின் திருமணத்தைப்பற்றிப் பேசத்தொடங்கினார்கள்.
இப்போது ஜப்னாவுக்குத் திருமணம் செய்துவைத்தால், அதன்பிறகு அவரால் பெரிதாக எதையும் சாதிக்க இயலாது என்பது ஜப்னாவின் தந்தைக்குத் தெரிந்திருந்தது.
அவர் இதைப்பற்றி ஜப்னாவிடம் பேசினார். அதன்பிறகு, ஜப்னா கிராமத்தலைவர் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார்.
இதையடுத்து, ஜப்னா கிராமத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். 2016 ஜனவரி 1ம்தேதி, ஜப்னா தஜூன் கிராமத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் அவர் இந்தியாவின் மிக இளம் கிராமத்தலைவரானார்.
ஜப்னா கிராமத்தலைவராகக் காரணம், தான் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தபோது தன்னால் செய்ய இயலாத சமூகப்பணிகளையெல்லாம் இப்போது அவர் தலைவர் பொறுப்பிலிருந்து சிறப்பாகச் செய்யலாம்.
ஜப்னாவின் கிராமத்தில் பல பெண்கள் உழைத்துப் பணம் சம்பாதித்தார்கள், அவர்களுடைய கணவர்கள் அந்தப் பணத்தைப் பிடுங்கிச்சென்று குடித்தார்கள்.
அதன்பிறகு, அவர்கள் தங்கள் மனைவியைப் போட்டு அடிப்பதும் வழக்கமாக இருந்தது. ஆகவே, கிராமத்தலைவரான ஜப்னா செய்த முதல் பணி, குடியின் தீமைகள், பின்விளைவுகளைப்பற்றி மக்களுக்கு எடுத்துச்சொன்னதுதான்.
ஜப்னாவின் தலைமையில், அவருடைய கிராமத்திலிருந்த பெண்கள் எல்லாரும் உதவி ஆணையரிடம் ஒரு கோரிக்கை மனுவைத் தந்தார்கள். அதில் அவர்கள் தங்கள் கிராமத்தில் இயங்கிவரும் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடவேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.
மிரட்டல்களுக்கு அஞ்சாத உறுதி
மண்டி மாவட்டத்திலிருக்கும் பிற கிராமத்தலைவர்களிடமும் இதுபற்றிப் பேசினார் ஜப்னா, அவர்களுடைய கிராமங்களில் இதேபோன்ற பிரசாரத்தை நடத்தச்சொன்னார். 2017 பிப்ரவரியில் தஜூன் கிராமப் பஞ்சாயத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி, இந்தக் கிராமத்தில் மது மற்றும் புகையிலையை யாரும் விற்கக்கூடாது, பயன்படுத்தக்கூடாது, இவை இரண்டுக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டது.
ஆனால், உண்மையில் இதைச் செயல்படுத்துவது எளிதாக இல்லை. இதற்காக ஜப்னாவுக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன, ஆனால், அவர் அஞ்சவில்லை, தொடர்ந்து துணிவுடன் செயல்பட்டார்.
மெதுவாக, அவருடைய கிராமத்திலிருந்தவர்கள் குடிப்பதை நிறுத்தினார்கள். இந்தப் பிரசாரம் அதே மாவட்டத்திலிருந்த பிற கிராமங்களுக்கும் சென்றது, அங்கும் மது, புகையிலை தடை செய்யப்பட்டது.
மது, புகையிலைப் பிரச்னையைச் சரிசெய்தபிறகு, கிராமத்தைத் தூய்மையாக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜப்னா. இதற்காக அவர் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு குப்பைத்தொட்டிகளை வைத்தார்.
அழுக்குச் சாக்கடை நீர் திறந்த நீர்மூலங்களில் சேரும் இடங்களிலெல்லாம் தனியே குழி தோண்டப்பட்டு அழுக்கு நீர் அவற்றில் சேர்க்கப்பட்டது. பசுக்கள், எருமைகளுடைய சாணத்தை ஓர் இடத்தில் சேர்ப்பதற்காக ஆங்காங்கே கொட்டகைகள் அமைக்கப்பட்டன.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக தஜூன் கிராமம் முழுமையாகத் தூய்மையடைந்தது. இவை அனைத்தும் ஜப்னாவின் கடின உழைப்பால் சாத்தியமாகின.
வானமே எல்லை
தூய்மைப் பிரசாரத்துக்காக ஜப்னா தந்த உழைப்புக்கு விரைவில் பலன் கிடைத்தது. ஜப்னாவின் கிராமம் அந்த மாவட்டத்திலேயே மிகத் தூய்மையான கிராமம் என அறிவிக்கப்பட்டது.
இத்துடன், ஜப்னாவுக்கு அந்த மாவட்டத்தின் மிகச்சிறந்த கிராமத்தலைவர் என்ற பெருமையும் கிடைத்தது. இந்தச் சிறு வயதில் இவ்வளவு சாதித்தபிறகும் ஜப்னா அதே ஊக்கத்துடன் இருக்கிறார்.
அவருடைய புத்துணர்ச்சி நிறைந்த கண்களில் இன்னும் எத்தனைக் கனவுகள் உருவாகிக்கொண்டிருக்கின்றனவோ, யாருக்குத் தெரியும்? ஜப்னாவுடைய இப்போதைய இலக்குகள், தன்னுடைய கிராமத்தில் சரியான விளக்கு அமைப்பை உருவாக்குவது, ஒரு பட்டப்படிப்புக் கல்லூரி திறப்பது.
பெண்களுடைய வருவாய்க்கு ஏற்பாடு செய்யும் ஓர் என்.ஜி.ஓ.வைத் தொடங்கவும் அவர் முனைகிறார்.
ஜப்னா வயதில் இளையவர்தான், ஆனால், அவருடைய எண்ணங்கள் மிகப் பெரியவை. அதனால்தான் அவரால் தன்னுடைய கிராமத்தில் இத்தனை பெரிய மாற்றத்தைக் கொண்டுவர இயன்றுள்ளது. அவர் எப்போதும் தன்னுடைய கனவுகளை விட்டுக்கொடுக்கவில்லை. அதனால்தான் அவரால் அவற்றை நனவாக்க இயன்றது.
எம்ஜி மோட்டர் இந்தியா (MG Motor India) மற்றும் தி பெட்டர் இந்தியா (The Better India), யூஎன் விமென் (UN Women) ஆதரவில் இந்தியப் பெண்களுடைய சாதனைகள் கொண்டாடப்படுகின்றன; அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை நிகழ்த்துகிறார்கள், இந்தியாவை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் சிறப்பாக அழைத்துச்செல்கிறார்கள்.
இப்படிப்பட்ட பிரசாரங்களை ஆதரிக்க, நீங்கள் உங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம். நன்கொடை வழங்க இந்த இணைப்பைப் பின்பற்றுங்கள்: https://milaap.org/ fundraisers/mgchangemakers
எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) பற்றி மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் அவர்களுடைய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் பக்கங்களுக்குச் செல்லலாம்:
ஃபேஸ்புக்: https://www.facebook.com/ MGMotorIN/
இன்ஸ்டாக்ராம்: https://www.instagram.com/ mgmotorin/
Web Title: Jabna Chauhan The Youngest Sarpanch Of India,
Feature Image Credit: thebetterindia