விம்பிள்டன்: எப்படித் தொடங்கியது

உலகின் மிகப்பெரிய டென்னிஸ் திருவிழாக்களில் ஒன்றான விம்பிள்டன் இன்று தொடங்குகிறது. அடுத்த இரண்டு வாரங்கள் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

கிரிக்கெட், கால்பந்துபோன்ற அணி விளையாட்டுகளில் அணிகள் மோதுகின்றன; ஏராளமான வீரர்கள் இவற்றில் பங்கேற்பதால், அவற்றில் உலகக்கோப்பைபோன்ற ஏற்பாடுகள் நான்காண்டுகளுக்கு ஒருமுறைதான் சாத்தியம்.

டென்னிஸ் அப்படியல்ல

ஆனால், டென்னிஸ் அப்படியில்லை. இங்கே மோதுவோர் தனிநபர்கள். பெரும்பாலான தொழில்முறை வீரர்களுடைய விளையாட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்ய ஊழியர்கள், அமைப்புகள் இருக்கின்றன. ஆகவே, கிட்டத்தட்ட உலகக்கோப்பைக்கு இணையான போட்டிகள் ஆண்டுக்கு நான்குமுறை நடைபெறுகின்றன; இவற்றை ‘Grandslam’ போட்டிகள் என்றழைக்கிறார்கள்.

இவைதவிர, ஆண்டுமுழுவதும் வெவ்வேறு நகரங்களில் அதிகாரப்பூர்வமான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். இவற்றிலும் முக்கிய வீரர்கள் மோதுவதால் டென்னிஸ் ரசிகர்கள் ஆண்டுமுழுக்கத் தங்கள் விருப்ப விளையாட்டைப் பார்த்து ரசிக்கலாம். இத்துடன் கூடுதல் இன்பமாக நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக்ஸிலும் டென்னிஸ் உண்டு.

கிராண்ட்ஸ்லாம் எனப்படும் முக்கியமான டென்னிஸ் போட்டிகளில் வெல்வோர் இவ்விளையாட்டின் முடிசூடா மன்னர்களாக, அரசியர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆகவே, உலகின் தலைசிறந்த வீரர்களெல்லாம் இவற்றில் மோதுவது வழக்கம்; போட்டி கடுமையாக இருக்கும்; ஆகவே, ஒவ்வோர் ஆட்டமும் சுவையோடு அமையும்.

நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் உலகின் வெவ்வேறு மூலைகளில், ஆண்டின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன. ஜனவரியில் நடைபெறும் ஆஸ்திரேலியன்ஓபன் 1905முதல் நடைபெற்றுவருகிறது; மே, ஜூனில் நடைபெறும் ஃப்ரெஞ்ச்ஓபன் 1891முதல் நடைபெற்றுவருகிறது; ஜூலையில் நடைபெறும் விம்பிள்டன் 1877முதல் நடைபெற்றுவருகிறது; ஆகஸ்ட், செப்டம்பரில் நடைபெறும் அமெரிக்கஓபன் 1881முதல் நடைபெற்றுவருகிறது.

Shield (Pic: theweek)

விம்பிள்டன்

ஆக, இந்த நான்கு கிராண்ட்ஸ்லாம்களில் மிகப் பழமையானது, விம்பிள்டன்தான். புல்வெளி மைதானங்களில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியும் இதுதான்.

இன்னொரு சுவையான விஷயம், மற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம்களின் பெயர்களும் ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், அமெரிக்கா என அவை நடைபெறும் நாட்டின் பெயரைக் கொண்டுள்ளன. விம்பிள்டன்மட்டும் தனித்துத் தெரிகிறது.

இங்கிலாந்துத் தலைநகரமான லண்டனின் ஒரு பகுதிதான் விம்பிள்டன். இந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் இவ்வூரில் நடைபெறுவதால் போட்டிக்கும் இதே பெயரை வைத்துள்ளார்கள்.

Nadal (Pic: howmanydaysuntil)

விம்பிள்டன் விதிமுறைகள்

டென்னிஸ் விளையாடுவோரும் சரி, ரசிகர்களும் சரி, விம்பிள்டனை விரும்பிப்பார்க்க ஒரு முக்கியமான காரணம், இங்கு விதிமுறைகள் மிகக் கடுமையானவை. சுமார் 140ஆண்டுகளுக்குமுன் உருவாக்கிய அதே விதிமுறைகள்தான் பெரும்பாலும் அமலில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மைதானத்தில் விளையாடுவோர் வெள்ளை ஆடைதான் அணியவேண்டும், ஒருவேளை அதில் வேறு வண்ணங்கள் இடம்பெற்றிருந்தாலும் இந்த அளவுக்குமேல் செல்லக்கூடாது என்றெல்லாம் விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள்.

இப்படி விம்பிள்டன் நிர்வாகிகள் ‘நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ என்று கண்டிப்பாக இருந்தாலும், இது ஒரு பாரம்பரிய அனுபவமாகவே மதிக்கப்படுகிறது. ‘விம்பிள்டனில் நான் ஒரு போட்டியை நேரில் பார்த்திருக்கிறேன்’ என்று ஒரு ரசிகர் சொன்னால், மற்றவர்கள் அவரை மரியாதையுடன் பார்ப்பது உறுதி.

விம்பிள்டன் போட்டிகளின் சரித்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இதை நடத்தும் அமைப்பின் பெயரைக் கவனிக்கவேண்டும்: All England Lawn Tennis and Croquet Club.

க்ரொக்கெட்

இங்கிலாந்து புரிகிறது, புல்வெளி டென்னிஸ் புரிகிறது, க்ளப் புரிகிறது, நடுவில் அதென்ன க்ரொக்கெட்?

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ஒரு புல்வெளி விளையாட்டு க்ரொக்கெட். புல்வெளியில் ஆங்காங்கே ‘ஹூப்ஸ்’ எனப்படும் வளையங்களைப் பதித்துவைத்திருப்பார்கள், பந்துகளை அடித்து அவற்றினிடையே அனுப்பவேண்டும், கிட்டத்தட்ட கால்ஃப்மாதிரிதான், ஆனால் குழிகளுக்குப்பதில் வளையங்கள்.

க்ரொக்கெட் விளையாட்டு அறிமுகமானவேகத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. ஏராளமானோர் இதனை விளையாட விரும்பியதால், 1868ல் இங்கிலாந்தில் இதற்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கினார்கள். சுமார் நான்கு ஏக்கர் புல்வெளி நிலத்தில் அமைக்கப்பட்ட இந்தத் தனியார் குழுவின் பெயர், ‘All England Croquet Club.’

கிட்டத்தட்ட இதே நேரத்தில், இங்கிலாந்தில் புல்வெளியில் டென்னிஸ் விளையாடும் பொழுதுபோக்கும் புகழ்பெற்றுக்கொண்டிருந்தது. க்ரொக்கெட் விளையாடுவது, அதற்கான போட்டிகளை நடத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த இந்த அமைப்பினர், ‘நம்மிடம்தான் புல்வெளி இருக்கிறதே, அதில் டென்னிஸ் விளையாடுவதற்கும் ஓரிடத்தை ஒதுக்குவோமே’ என்று யோசித்திருக்கிறார்கள்.

விரைவில், அங்கே வருகிறவர்களெல்லாம் க்ரொக்கெட்டுக்கு இணையாக டென்னிஸையும் விளையாட விரும்பினார்கள். ஆகவே, அமைப்பின் பெயர் ‘All England Croquet and Lawn Tennis Club’ என்று மாற்றப்பட்டது.

சும்மா டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தால் எப்படி? ஒரு போட்டி நடத்தினால்தானே பரபரப்பாக இருக்கும், மக்களிடையே டென்னிஸ் விளையாடுவதற்கு, அதைப் பார்ப்பதற்கு ஆர்வத்தை உண்டாக்கும் வாய்ப்பல்லவா இது?

இப்படி யோசித்த அமைப்பினர், 1877 ஜுன் 9ம்தேதி ஒரு பத்திரிகை விளம்பரம் கொடுத்தார்கள், ‘இங்கிலாந்துவாழ் டென்னிஸ் ஆர்வலர்களே, விம்பிள்டனில் புல்வெளி டென்னிஸ் போட்டியொன்றைத் தொடங்குகிறோம், ஆர்வமுள்ள எல்லாரும் இதில் கலந்துகொள்ளலாம்.’

Crouqet (Pic: wikipedia)

விம்பிள்டன் தோற்றம்

அந்த முதல் ‘விம்பிள்டன் டென்னிஸ்’ போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் ஒரு சிறு தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும்; டென்னிஸ் ராக்கெட்களையும் அவர்களே கொண்டுவரவேண்டும்; பந்துகளைமட்டும் போட்டியை நடத்துவோர் தருவார்கள்; ஒருவரையொருவர் எதிர்த்து மோதவேண்டும்; இறுதிப்போட்டியில் வெல்பவருக்குப் பரிசுக்கோப்பை.

இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு 22 பேர் விளையாட முன்வந்தார்கள். இவர்களுக்கிடையே 1877 ஜூலை 9ம் தேதி அகில இங்கிலாந்து க்ரொக்கெட் மற்றும் புல்வெளி டென்னிஸ் அமைப்பின் மைதானத்தில் போட்டிகள் தொடங்கின.

ஒருவாரம் கழித்து, அதாவது, ஜூலை 16ம்தேதி இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் வில்லியம் மார்ஷல், ஸ்பென்சர் கோர் ஆகியோர் மோதினார்கள்.

ம்ஹூம், மோதவில்லை. அன்றைக்கு மழை பெய்ததால் இறுதிப்போட்டி 19ம்தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

முதல் விம்பிள்டன் போட்டியில் தொடங்கிய அந்த மழைப் பாரம்பரியம் இன்றைக்கும் தொடர்கிறது. ஒவ்வோராண்டும் ஏதாவது சில போட்டிகளின்போது மழை எட்டிப்பார்த்துவிடுகிறது. ரசிகர்கள் அதையும் ஓர் அனுபவம் என்று ரசிக்கப்பழகிவிட்டார்கள்.

ஜூலை 19ம்தேதி நடைபெற்ற முதல் விம்பிள்டன் இறுதிப்போட்டியில், ஸ்பென்சர் கோர் வெற்றிபெற்றார், முதல் விம்பிள்டன் சாம்பியன் ஆனார்!

ஒரு விஷயம், இந்த முதல் விம்பிள்டனில் பெண்கள் யாரும் விளையாடவில்லை. ஆகவே, ஆண்களுக்கான போட்டிகள்மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, கோப்பையும் ஒன்றுதான். பின்னர், 1884ல்தான் பெண்களுக்கான போட்டிகள் தொடங்கப்பட்டன.

இன்று, ‘விம்பிள்டன் கோப்பை’ என்பது ஒருமையல்ல, ‘கோப்பைகள்’ என்று பன்மையில் சொல்லவேண்டும், ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர், சிறுவர், சிறுமியருக்கான ஒற்றையர், இரட்டையர் போட்டிகள், ஏன், சக்கர நாற்காலியில் விளையாடுவோருக்கான காட்சிப்போட்டிகள்கூட நடைபெறுகின்றன.

கோப்பை, உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்/வீராங்கனை என்கிற கௌரவத்துடன், விம்பிள்டனில் வெல்வோருக்குக் கணிசமான பரிசுத்தொகையும் உண்டு. இந்தப் போட்டிகளின்மீது ஏற்பட்டுள்ள கவர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனால், 1877ல் நடைபெற்ற விம்பிள்டன் போட்டிகளைப் பார்க்க அதிகப்பேர் வரவில்லை; போட்டியை நடத்தியவர்களும் அதை எதிர்பார்க்கவில்லை; மொத்தமே 30 பேர் அமர்வதற்குதான் ஏற்பாடுசெய்திருந்தார்களாம்; இறுதிப்போட்டியைப் பார்க்கவந்தவர்கள்கூட, வெறும் 200பேர்தான்.

அதன்பிறகு, ஆண்டுதோறும் விம்பிள்டன் போட்டிகள் தொடர்ந்து (உலகப்போர்க் காலகட்டங்களைத்தவிர எல்லா ஆண்டுகளிலும்) நடைபெற்றுள்ளன; படிப்படியாக அது புகழ்பெற்று ஏராளமான ரசிகர்கள், வீரர்களை ஈர்க்கத்தொடங்கியது; ஆரம்பத்தில் ‘அமெச்சூர்’ எனப்படும் பொதுவான ஆர்வலர்களுடைய ஆட்டமாக இருந்த விம்பிள்டன், 1968முதல் ‘ப்ரொஃபஷனல்ஸ்’ எனப்படும் தொழில்முறை வீரர்களுடைய ஆட்டமாகிவிட்டது; மற்றபடி அதன் விதிமுறைகளிலோ, மக்கள் காட்டும் ஆர்வத்திலோ மாற்றமில்லை.

அது சரி, டென்னிஸுக்குமுன்னால் விம்பிள்டனில் கால்பதித்த க்ரொக்கெட்டுக்கு என்னாச்சு?

டென்னிஸ் புகழ்பெறத்தொடங்கியபிறகு, மக்களிடையே க்ரொக்கெட்டுக்கு அவ்வளவாக வரவேற்பில்லை. ஆகவே, விம்பிள்டன் க்ளப்பின் பெயரில் பின்னாலிருந்த டென்னிஸ் முன்னால் வந்தது, க்ரொக்கெட் பின்னுக்குத்தள்ளப்பட்டது. பிறகு க்ரொக்கெட்டை மொத்தமாக நீக்கிவிட்டார்கள், பின்னர் வரலாற்றுக்காரணங்களுக்காக அதைச் சேர்த்துக்கொண்டார்கள்.

இதனால், இன்றைக்கு டென்னிஸ் மற்றும் க்ரொக்கெட் க்ளப் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் முக்கியப்பணி, டென்னிஸை ஊக்குவிப்பதுதான். ஆர்வமுள்ளவர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாகவும் சேர்ந்து டென்னிஸ் விளையாடலாம்; ஆனால், அதற்குப் பலமான பரிந்துரை தேவை.

பரிந்துரை இல்லாதவர்கள் இந்த க்ளப்பில் சேர இன்னோர் எளிய வழி இருக்கிறது: விம்பிள்டன் விளையாடி ஜெயித்துவிடுங்கள், வெற்றிபெறும் சாம்பியன்களுக்குக் க்ளப்பில் சேரச் சிறப்பு அழைப்பிதழ் அனுப்பப்படுமாம்.

Caption

 

ஸ்ட்ராபரி க்ரீமும் விம்பிள்டனும்

விம்பிள்டன் பாரம்பரியத்தில் இன்னொரு சுவையான விஷயம், ஸ்ட்ராபெர்ரி, க்ரீம். அந்தக்காலத்தில் விம்பிள்டன் பார்க்கவந்தவர்கள் இவற்றைச் சாப்பிடுகிற வழக்கமிருந்ததாம், ஆகவே, இன்றைக்கும் ரசிகர்கள் இதனைப் பின்பற்றுகிறார்கள்; கிலோக்கணக்கில் ஸ்ட்ராபெர்ரி, க்ரீம் வாங்கி உள்ளே தள்ளுகிறார்கள்.

Strawberry Cream (Pic: culinaryginger)

லண்டன்வரை சென்று போட்டிகளைப் பார்க்கும் வாய்ப்பு, வசதி இல்லாதவர்கள் உலகெங்கும் தொலைக்காட்சியின்வழியே அவற்றைப் பார்த்து ரசிக்கிறார்கள். அவர்களும் கையில் ஒரு கிண்ணம்நிறைய ஸ்ட்ராபெர்ரி, க்ரீமுடன் அமர்ந்திருக்கக்கூடும். பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்கமுடியுமா?

Web Title: The Tournament of Tennis Wimbledon

Featured Image Credit: betsaver

Related Articles

Exit mobile version