கோலாகலமாக ஆரம்பமான FIFA உலகக் கிண்ணத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இம்முறை இத்தொடர் கட்டாரில் நடைபெறுவது குறித்து ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன எனினும் தற்போது அவை அனைத்தையும் தாண்டி FIFA தொடர் கோடிக்கணக்கான ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு நடைபெறுகின்றது.
ஆர்ஜெண்டீனாவின் அதிர்ச்சித் தோல்வி
கால்பந்து உலகில் அசைக்கமுடியாத பலம் வாய்ந்த அணியாக இருக்கும் ஆர்ஜெண்டீனா, சவூதி அரேபியாவிடம் அதிர்ச்சி மிக் தோல்வியைத் தழுவியது. எதிர்பார்ப்பு மிக்க அணியான ஆர்ஜெண்டீனா கடந்த செவ்வாய் அன்று குழுநிலைப் போட்டியில் சவூதியுடன் மோதியது. ஆர்ஜெண்டீனா தலைவர் போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பெற்றார். எனினும் அடுத்த 48 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலே அல்சேஹ்ரி கோல் புகுத்தி சமப்படுத்தினார். தொடர்ந்த 53 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் சலீம் அல்தாவ்சரி மற்றுமோர் கோலை தன் அணிக்கு பெற்றுக் கொடுக்க 2 – 1 என்ற கணக்கில் சவூதி வெற்றி பெற்றது.
சர்வதேச கால் பந்து தரவரிசையின் படி சவூதி 51 ஆவது இடத்திலும், ஆர்ஜெண்டீனா 3 ஆவது இடத்திலும் உள்ளன. இரு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீனா தொடர்ச்சியாக 36 போட்டிகளில் தோல்வியடையாமல் இந்த உலக கிண்ண சுற்றுப்போட்டிக்குள் பிரவேசித்தது. எனினும் சதியுடனான இத்தோல்வி இம்முறை கால்பந்து உலகை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
இந்த நிலையில், சவுதி அரேபிய அணியின் வெற்றியை அந்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன. அதன்படி, சவுதி அரேபியாவிலும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் கடந்த புதன் ஒருநாள் தேசிய விடுமுறையை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளமை அவர்களின் வெற்றிக்களிப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
வியாழக்கிழமை நடைபெற்ற மற்றுமோர் போட்டியில் பெல்ஜியம் அணியும் கனடா அணியும் மோதிக்கொண்டன. அஹமட் பின் அலி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. பெல்ஜியம் அணி சார்பில், மிச்சி பாட்சுவாய் போட்டியின் 44ஆவது நிமிடத்தில் இந்த வெற்றி கோலை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணி, 3 புள்ளிகளுடன் குழு எஃப் பிரிவில், முதலிடத்தில் உள்ளது.
ரொனால்டோ சாதனை
மற்றுமோர் குழுநிலைப் போட்டி போர்த்துக்கல் எதிர் கானா அணிகளுக்கிடையில் நேற்று (வெள்ளி) இடம்பெற்றது. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்ற ரீதியில் போட்டி ஆரம்பம் முதலாகவே விறுவிறுப்பாக நடந்தது. போட்டியின் 65 ஆவது நிமிடத்தில் போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கோல் பெற்றார்.
இந்த கோல் மூலமான 5 உலகக் கிண்ண சுற்றுப் போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை அவர் வசமாகியது. அடுத்த 73 ஆவது நிமிடத்தில், கானா வீரர் அண்ட்றே அயேவ் கோல் கோல் அடிக்க போட்டி சமநிலையில் தொடர்ந்து. மீண்டும் 73 ஆவது நிமிடத்தில் போர்த்துகலின் ஃபீலிக்ஸ் செகுய்ராவும், அடுத்த 80 ஆவது நிமிடத்தில் கொன்சிகாவோ லியோவும் அடுத்தடுத்து கோல்களை அடிக்க போர்த்துக்கல் 3 – 1 என்று முன்னிலையில் இருந்தது. இறுதியாக 89 ஆவது நிமிடத்தில் கானா வீரர் புகாரி அணிக்காக கோல் அடித்த போதிலும் போர்த்துக்கல் 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
1934 முதல் தோல்வியே அடையாத அணி
நேற்று பிரேஸில் மற்றும் செர்பியா அணிகளுக்கு எதிராக மற்றுமோர் போட்டியும் நடைபெற்றது. இதில் பிரேசிலின் ரிச்சர்லிஸன் சிறப்பாக செயல்பட்டு 62 ஆவது நிமிடத்திலும், 73 ஆவது நிமிடத்திலுமாக இரு கோல்களைப் பெற்றார். எதிரணி எந்த கோல்களையும் பெறமுடியாத நிலையில் 2 – 0 என்ற கணக்கில் பிரேசில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக 1934 ஆம் ஆண்டு முதலாகவே பிரேசில் அணி உலகக்கிண்ணத் தொடரில் தனது முதல் போட்டில் தோல்வியையே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தோல்வி
முடிந்த டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மீதான விமர்சனங்களை கடந்து அவ்வணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, முதலில் நடந்த டி20 தொடரிரை 1 – 0 என்ற கணக்கில் வென்றது. அடுத்து அவ்விரு அணிகளும் மோதிக் கொள்ளும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (வெள்ளி) நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. நியூசிலாந்தின் டாம் லாதம் 76 பந்துகளில் சதம் பெற்றது முக்கிய கட்டம். தொடர்ந்த 47.1 ஓவரில் 309 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து வெற்றி பெற்றது. டாம் லாதம் 104 பந்தில் 145 ஓட்டங்களுடனும், வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்து சிறப்பு.
சாமிக கருணாரத்னவிற்று போட்டித்தடை
அவுஸ்ரேலியாவில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத் தொடரில் போது இலங்கை வீரர்கள் சிலரின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டவாரே இருந்தது. அதன் அடுத்த கட்டமாக இலங்கையின் முன்னணி வீரர் சாமிக கருணாரத்னவிற்கு போட்டித்தடை விதிக் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாமிக கருணாரத்னவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை விதித்துள்ளது. டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இலங்கை கிரிக்கெட் சபை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை கருணாரத்ன ஒப்புக்கொண்ட நிலையில் போட்டித் தடைக்கு மேலதிகமாக, 5000 டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
தோல்வியடைந்தது இலங்கை
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று ( வெள்ளி) நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
கண்டி பல்லேலயில் இடம்பெற்ற முதல் ஒருநாள் 50 ஓவர்கள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இப்ராகிம் சந்ரான் 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். மற்றும் குர்பாஸ் 53 ஓட்டங்களையும் ரஹ்மத் ஷா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்யின் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
295 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்
ஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் (ATP Finals) டென்னிஸ் தொடர் நிறைவுக்கு வந்தது. இதன் இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று செர்பியாவின் நோவக் ஜோகோவிச் செம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நோர்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நோவக் ஜோகோவிச், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று பட்டத்தை தனதாக்கினார்.
இந்த வெற்றியின் மூலமாக ஏ.டி.பி. பைனல்ஸ் (ATP Finals) டென்னிஸ் வரலாற்றில், அதிக சம்பியன் பட்டங்களை வென்ற சுவிஸ்லாந்தின் ரொஜர் பெடரருடன் ஜோகோவிச் இணைந்தார். இருவரும் தலா ஆறு முறை சம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.