கடந்த வாரம் இலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களில் பலருக்கு அடையாளம் காணப்படாத வெளிநாட்டு இலக்கங்களில் இருந்து பெறப்பட்ட தொடர் அழைப்புக்கள் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. பொதுவாக இவ்வழைப்புக்கள் ஒரு தடவை மாத்திரம் ஒலித்த பின்னர் துண்டிக்கப்படும். சாதாரணமாக எவ்வித அழைப்புக்களுக்கும் பதிலளிக்காதவர்கள் இதனை உதாசீனப்படுத்தி விடக் கூடும். ஆனால் ஆர்வக்கோளாறினால் சில பாவனையாளர்கள் குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த தூண்டப்படுவர். கடந்த காலத்திலும் இது போன்ற அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றிருக்க வாய்ப்புக்கள் உள்ள போதிலும், அண்மைய சில தினங்களில் ஏராளமான நபர்களது தொலைபேசிகளுக்கு இவ்வாறான அழைப்புக்கள் வந்த காரணத்தினால் இவ்விடயம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
ஆச்சரியத்திற்கிடமின்றி, குறித்த அழைப்புக்களை மேற்கோள் காட்டி பல வதந்திகளும் மக்கள் மத்தியில் பரவியிருந்தன. ஒரு சிலர் இவ்வழைப்புக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழுவிடமிருந்து கிடைக்கப் பெறுவதாகவும், வேறு சிலர் இந்த அழைப்புக்களை பதிலளிக்கும் பட்சத்தில் தொலைபேசியிலுள்ள தொடர்புகள் மற்றும் பணப்பரிமாற்று விபரங்கள் மோசடியாளர்களினால் தரவிறக்கம் செய்யப்படுவதாகவும் வதந்திகளை உருவாக்கியிருந்தனர். இவை மட்டுமன்றி ஏனைய வதந்திகளும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
ஒருமுறை ஒலித்து பணத்தினை சூறையாடும் உத்தி
எனினும் இந்த அழைப்புக்கள் மோசடியாளர்களினால் மேற்கொள்ளப்படுபவை என்பது உண்மையான விடயமாகும். மோசடியாளர்கள் தானியங்கி சாதனங்களின் மூலம் பெருமளவிலான அழைப்புக்களை ஏற்படுத்துகின்றனர். சில பாவனையாளர்கள் ஆர்வத்தின் காரணமாக குறித்த இலக்கத்திற்கு மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தக் கூடும். பின்னர் அவர்களது அழைப்புக்கள் நிமிடமொன்றிற்கு அதிக கட்டணத்தை அறவிடும் தொலைபேசி இலக்கமொன்றுடன் இணைக்கப்படும். பாவனையாளர்களை இவ்வாறு அழைப்புக்களை ஏற்படுத்தச் செய்து அதன் மூலம் பாரிய கட்டணமொன்றை அறவிடுவதே மோசடியாளர்களின் திட்டமாகும். அவற்றில் பெரும்பாலான இலக்கங்கள் வயது வந்தோருக்கான கேளிக்கைகள் சார்ந்தவை என்றும் ஒரு பரவலான கருத்து காணப்படுகின்றது.
எனினும் குறித்த இலக்கங்களுக்கு அழைப்புக்களை ஏற்படுத்துவதினால் அறவிடப்படும் பணத்தின் தொகையும் பலரினால் மிகைப்படுத்திக் கூறப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கிலான டொலர்கள் அறவிடப்படுவதாக பரவிவரும் செய்திகளும் உண்மைக்கு புறம்பானவையாகவே காணப்படுகின்றன. எவ்வாறாயினும் பாரிய தொகை அறவிடப்படும் பட்சத்தில் தொலைபேசி சேவை வழங்குநரை தொடர்பு கொண்டு பணத்தை மீள்பெற்றுக் கொள்ள இயலும்.
பழமையான மோசடி முறையே..
Roar குழுவானது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்து ஆணையத்தின் உதவி பணிப்பாளரும் செய்தி தொடர்பாளருமான மேனகா பதிரன-விடம் இது பற்றி வினவிய போது, இம்மோசடி உண்மையில் புதிய வகையிலான மோசடி ஒன்று அல்ல எனத் தெரிவித்தார். இம்மோசடி முறையானது சில வருடங்களாக இடம்பெற்று வருவதுடன், ஐக்கிய அமெரிக்காவின் மத்திய தொடர்பாடல் ஆணையம் இம்மோசடி தொடர்பிலான பிரத்தியேக கையேடு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்து ஆணையம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
பெரும்பாலான அழைப்புக்கள் டொமினிகாவின் தலைநகரான ரோசோவிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், வேறு பகுதிகளில் இருந்தும் அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்து ஆணையமானது அடையாளம் காணப்படாத வெளிநாட்டு இலக்கங்களிடம் இருந்து அழைப்புக்கள் வரும் பட்சத்தில் மீளழைப்பு செய்வதை தவிர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகின்றது. அத்துடன் மோசடியின் தன்மை குறித்தும் குறித்த இலக்கங்களுக்கு அழைப்புக்கள் மேற்கொள்வதை தவிர்க்கும் படியும் சிங்கள மொழியில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
மோசடி அழைப்புக்கள் அதிகரித்து வருவது தொடர்பில் Roar குழுவானது டயலொக் நிறுவனத்திடமும் வினவியிருந்தது. டயலொக் நிறுவனம் குறித்த மோசடியின் ஆரம்பம் முதலே விழிப்புடன் இருந்து வருவதாக தெரிவித்தது. மோசடி அழைப்புக்களை ஏற்படுத்தும் இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஜூன் 11 ஆம் திகதி குறித்த இலக்கங்களை தடை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. இதன் காரணமாக பாவனையாளர் ஒருவர் மோசடி இலக்கமொன்றிற்கு அழைப்பை மேற்கொண்டாலும், அவ்வழைப்பு துண்டிக்கப்பட்டு எவ்வித கட்டணமும் அறவிடப்படாது தவிர்க்கப்படும்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்து ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி மொபிடெல் நிறுவனமும் மோசடி இலக்கங்களை தடை செய்துள்ளதாக அறியப்படுகின்றது. ஏனைய தொலைத்தொடர்பு நிறுவனங்களை பொறுத்தமட்டில் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான வலையமைப்புக்கள் மோசடி இலக்கங்களை தடை செய்துள்ள காரணத்தினால் மோசடி அழைப்புக்கள் கணிசமான அளவில் குறைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். மோசடி அழைப்புக்களின் தீவிரத்தன்மை மற்றும் அபாய நிலை சமூக வலைத்தளங்களில் மிகைப்படுத்தப்பட்டு பலரையும் பீதிக்குள்ளாக்கியிருந்த போதிலும், குறுகிய காலப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதே உண்மை.
அதே போன்று வெளிநாட்டு இலக்கமொன்றிற்கு மீளழைப்பு செய்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டிருக்கும். எவ்வகையில் நோக்கினும் இலங்கை பாவனையாளர்களை இலக்குவைத்த மோசடியாளர்கள் பெற்ற இலாபத்தினை விட சந்தித்த இழப்பே அதிகமாக இருக்கும்.
ஆக்கம் – அன்றூ ஹோவ்சன்
தமிழில் – ப்ரணீத் மனோகரன்