“வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே”

இதமான சூழ்நிலை மற்றும் தேன் போல் தித்திக்கும் கொங்கு தமிழின் மணம் நிறைந்தது இக்கோவை. வார்த்தைக்கு வார்த்தை மரியாதையையும் ஆர்பரிக்கும் அன்பையும் கொட்டும் கொங்கு மக்கள் இக்கோவை மண்டலத்தை அழகாக்குகின்றார்கள். நீல மலைகள் சூழ அமைந்திருக்கும் கோவையின் சீதோஷண நிலையும் எழில் கொஞ்சும் இயற்கையும் இம்மக்களுக்கு வரப்பிரசாதம். சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக விளங்கும் இத்தொழில் நகரம் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நகரங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 398 மீட்டர் உயரத்தில் இருப்பதால் மிதமான நல்ல காலநிலையே வருடம் முழுமைக்கும் இருக்கும்.

சங்க காலத் தமிழ் நாடு (blogspot.com)

பண்டைய தமிழகத்தை ஆறு நாடுகளாக வரலாற்று அறிஞர்கள் பிரிக்கின்றார்கள். அவைகள் முறையே சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, துளு நாடு, கொங்கு நாடு மற்றும் தொண்டை நாடாகும். இவற்றில் துளு மற்றும் கொங்கு நாடு மேற்கு கடற்கரை எல்லையில் அமைந்திருந்தன. சேரர்களின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை கொங்கு நாடானது பல்வேறு சிறுகுறு மன்னர்கள் மற்றும் படைத்தளபதிகளால் ஆட்சி செய்யப்பட்டது. கொங்கு என்பதற்கு தேன் என்று பொருள். இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கொங்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  சேர, சோழ, மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு கனவு மண்டலமாக  விளங்கிய கொங்குவில் ஆட்சி அமைப்பதற்கு ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் சேர மன்னர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொங்கு மண்டலத்தை கை பற்றினார்கள்.

பிரதான சேர நாட்டை ஆட்சி செய்பவர்கள் கொட்டுவர்கள் என்றும், மூத்த மரபினர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.  கொங்குவினை ஆண்ட சேர மன்னர்கள் இரும்பொறை என்றும் அவர்கள் இளைய மரபினர் என்றும் அழைக்கப்பட்டார்கள். சேரர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள கருவூர் என்ற இடத்தை தலை நகராகக்கொண்டு கொங்கு தேசத்தை ஆட்சி செய்தார்கள். சேரர்களுக்கென இயற்றப்பட்ட எட்டுத் தொகை நூலான பதிற்றுப்பத்தில் முதல் ஆறு பத்து பாடல்கள் சேரர்களின் ஆட்சி பற்றியும் மன்னர்கள் பற்றியும், பின் நான்கு பத்தில் கொங்குவினை ஆண்ட இரும்பொறை மன்னர்கள் பற்றியும் பாடியிருக்கின்றார்கள். பதிற்றுப்பத்தில் முதல் பத்தும், இறுதி பத்தும் கிடைக்கவில்லை.

சேரர்களின் ஆட்சி வலுவிழக்க, மேலக்கங்கர்கள்வசம் கொங்கு நாடு சென்றது. அதன் பின்னர் 13ம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசின் ஆட்சிக்கு கீழ் கொண்டு வரப்பட்டு 24 சிறுசிறு நாடுகளாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. விஜய நகர பேரரசின் ஆட்சியைத் தொடர்ந்து தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாடு கொங்கு மண்டலமாக்கப்பட்டது. மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்கு வருகையில், பாளையக்கார முறையை கொங்கு மண்டலத்தில் அறிமுகம் செய்துவைத்தார்கள். அதற்கான அடையாளங்களை கொங்கு மண்டல சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களின் மூலம் காணலாம். எ.கா. பாப்பன்நாயக்கன் பாளையம், பெரிய நாயக்கன் பாளையம், உடையார்பாளையம் போன்ற இடங்களை சொல்லலாம். கொங்கு மண்டலம் முழுவதும், ஆநிரை செல்வங்கள் அதிகம் கொண்டிருந்த வேளிர் மரபினர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்கின்றது, கார்மேகக்கவிஞர் எழுதிய கோவை மண்டல சதகம்.

அந்நூலில் கொங்குவின் எல்லைகள் இவ்வாறு முறையே கூறப்பட்டுள்ளன.

மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்

கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு

விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே,

விளக்கவுரை: கிழக்கில் மதிற் (கோட்டைக்) கரையும், தெற்கில் பழநியும், மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின் எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது கொங்கு.. .

பட்டீஸ்வரர் கோவில் (blogspot.com)

தற்போதைய கோவை மாவட்டத்தினை வடிவமைத்து கட்டமைத்தவர் இருளர் இனத் தலைவர், கோயன். அவரின் பெயரிலேயே கோயன்முத்தூர் என்று இப்பகுதி அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அப்பெயர் மருவி கோயமுத்தூர் என்று அழைக்கப்படுகின்றது. தொழில் நகரமாக மாறிவரும் மாவட்டத்தை அதிகம் ஈர்க்கின்றது தொன்மை வாய்ந்த புராதான கோவில்களும், சமய வழிபாட்டுத் தலங்களும். கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தானால் ஆட்சிசெய்யப்பட்டது இவ்வூர். அவரின் ஆட்சிக் காலத்தில் பிப்பிலாராண்யம் என்ற அரசமரக்காட்டினில் கட்டப்பட்டதே பட்டீஸ்வரர் திருக்கோவில். கோவையில் இருக்கும் மிகவும் பழமையான கோவில் அதுவே ஆகும். அக்கோவிலின் வரலாறு மற்றும் அன்றைய ஆட்சியினைப் பற்றியும் கோவில் சுவற்றில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. பன்னிரு சைவத் திருமறைகளில் ஒன்றான தேவராத்தை அய்யன் சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு பாடியிருக்கின்றார். தேவார வைப்புத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். கோவையின் பிரதான அம்மனான கோணியம்மனிற்கு விழா எடுத்தல் என்பது இங்கு மிகவும் சிறப்பான திருவிழாவாகும். இக்கோவிலினை மையப்படுத்தி இராஜவீதி, தேர்வீதி, கடைவீதி போன்ற பெயர்கள் இன்றைய நகர மண்டபத்தில் நிலைத்துவிட்டன.

நகரினைச் சுற்றி பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. 1860 களில் திருநெல்வேலியில் இருந்து குடிபெயர்ந்த வாசனைத் திரவிய விற்பனையாளர்களால் கட்டப்பட்டது அத்தர் ஜமாத் மசூதி. இது இந்நகரத்தின் மையப்பகுதியில் இருக்கின்றது. 1860ல் தொடங்கி 1904ல் கட்டிமுடிக்கப்பட்ட இப்பள்ளிவாசலில் சமையலறை ஒன்றும் நூலகம் ஒன்றும் இருக்கின்றது. கோவையின் மிகப் பழமையான மசூதிகளில் இதுவும் ஒன்று. 1830 – சி.எஸ்.ஐ இம்மானுவேல் சர்ச்  கோவையில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் ஆகும். கோவை நகர் மண்டபத்தில் இருக்கும் மைக்கேல் தேவாலயம், ஜெருசலேமில் கட்டப்பட்ட தேவாலயத்தின் மாதிரி தோற்றத்துடன் கட்டப்பட்டதாகும்.  இந்து மதத்தார் அதிகம் வாழும் பகுதி என்றாலும், கணிசமான அளவில் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், மற்றும் ஜென் மதத்தவர்களும் வாழ்கின்றார்கள். அவர்களுக்கான தனித்தனி வழிபாட்டுத் தலங்களும் இங்கு இருக்கின்றன. இந்து இஸ்லாமியர்களுக்கு இடையில் கலவரம் மூட்டும் வகையில், 90களின் பிற்பாதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.  இவையனைத்தும் கடந்து இங்கு மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதும் கூட இந்நகரின் பெருமையாக இருக்கின்றது.

நகராட்சியின் வளர்ச்சியினை கவனத்தில் கொண்டு ஏராளமான பருத்தியாலைகள் கட்டப்பட்டன. ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்பட்டது கோவை. (squarespace.com)

1866ல் கோவை நகராட்சியாக உருப்பெற்றது. கோவையின் மண்வளம் பருத்தி உற்பத்திக்கு ஏதுவாக இருந்தது. நகராட்சியின் வளர்ச்சியினை கவனத்தில் கொண்டு ஏராளமான பருத்தியாலைகள் கட்டப்பட்டன. ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்பட்டது கோவை. பருத்தியாலைகளுக்குத் தேவைப்படும் மெஷின்கள் மற்றும் இதர உதிரி பாகங்கள் செய்ய சில தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன. இந்தியாவில் முதல் முறையாக எலக்ட்ரிக் மோட்டார் உருவாக்கப்பட்ட இடமும் கோவை தான். ஆவாரம்பாளையத்தில் இருந்த திரு. பாலசுந்தரம் அவர்களினால் உருவாக்கப்பட்ட டெக்ஸ்டூல் நிறுவனம் உள்நாட்டு உதிரிப்பாகங்களை உருவாக்கியது. கோவை வெட்கிரைண்டர் மற்றும் கோரப்பட்டு ஆகியவற்றிற்கு புவிசார்குறீயிடு கிடைக்கப் பெற்றுள்ளது. இத்தொழில் சார்ந்த அனைத்து மக்களுக்கும் போதுமான வகையில் வருமானம் கிடைக்கவும் அவர்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்தவும் இந்த புவிசார் குறியீடு உதவுகின்றது. மேட்டூர் அணை கட்டும் வேலை தொடங்கப்பட்ட காலத்தில் தன்னிறைவு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கேரளக் கடற்கரை நகரங்கள் பலவற்றையும் கோவையுடன் இருப்புப்பாதைகள் வழியாக இணைத்தனர். மாவட்டத்தில் எப்பகுதிக்கு செல்லவும் நிறைவான போக்குவரத்து வசதிகளும், இரயில் வசதிகளும், ஒரு பன்னாட்டு விமான நிலையமும் இருக்கின்றது. சிறுவானி மற்றும் அத்திக்கடவு குடிநீர் திட்டம் மாவட்டத்தின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. தொடர்ந்து மக்களின் தேவைகள் கவனிக்கப்பட்டு அதனை சீரான முறையில் நிறைவேற்றியும் தருகின்றது மாநகராட்சி அமைப்பு.

மேட்டூர் அணை கட்டும் வேலை தொடங்கப்பட்ட காலத்தில் தன்னிறைவு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் எப்பகுதிக்கு செல்லவும் நிறைவான போக்குவரத்து வசதிகளும், இரயில் வசதிகளும், ஒரு பன்னாட்டு விமான நிலையமும் இருக்கின்றது (ndia-wris.nrsc.gov.in)

தொழில் நகரமென்றாலும், இன்றும் விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றார்கள் கோவை வாசிகள். பெரும் அளவில் விவசாயம் செய்யப்படும் காய்கறிகள் அனைத்தும் விவசாயிகளால் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள  எம்.ஜி.ஆர் சந்தையில் ஏலத்திற்கு வைக்கப்படுகின்றன. அங்கிருந்து வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி, மாவட்டம் முழுமைக்கான காய்கறி விநியோகத்தை மேற்கொள்கின்றார்கள். அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியால் சில நேரங்களில் காய்கனிகளை அருகில் இருக்கும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் வாங்குகின்றார்கள். அருகில் கேரளம் இருப்பதால் மசாலாப்பொருட்கள் மற்றும் பாக்கு முதலானவை இங்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு இருக்கும் குறைந்த விலை சந்தைப் பொருளாதாரம், வேறெந்த தமிழக மாவட்டத்தைக் காட்டிலும் இங்கு பொருளாதார சிக்கலின்றி வாழும் முறையை உறுதி செய்கின்றது.

தற்போதைய அரசினர் கலை அறிவியல் கல்லூரியாக இருக்கும் கோவை அரசுக் கல்லூரி 1852ல் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்களுக்காக ஆங்கிலோ-வெர்னாகுலர் பள்ளியாக தொடங்கப்பட்டது. 1861ல் இடைநிலைப்பள்ளியாகவும், 1867ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1870ல் இரண்டாம் நிலைக் கல்லூரியாகவும், 1964ல் முதல் நிலை முதுகலைக் கல்லூரியாகவும் மேலும் உயர்ந்தது. சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே கோவையில் கல்லூரி நிறுவப்பட்டது என்பது பெருமைக்குரிய விடயமாகும். பீளமேடு சர்வஜனா பள்ளி, பி.எஸ்.ஜீ கலை அறிவியல் கல்லூரி, சர். ஆர்தர் ஹோப் அவர்களால் கட்டப்பட்ட அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் தொன்மை வாய்ந்த கல்வி நிலையங்களாகும். பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களையும், கலைஞர்களையும் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது இக்கல்வி நிலையங்கள். தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, மற்றும் கேரளத்தின் கொச்சின், மற்றும் பாலக்காடு மாவட்ட மாணாக்கர்களின் கல்லூரி படிப்பிற்கான கனவு நகரமாகவும் விளங்குகின்றது கோவை.

“உம்பற்காடு” என்று பழந்தமிழ் செய்யுளில் கூறப்படும் இடமான யானைமலை (ஆனைமலை) அதிக அளவில் யானைகளையும் பல்வேறு காட்டுயிர்களையும் கொண்டிருக்கின்றது. (blogspot.com)

மேற்கு தொடர்ச்சி மலையும், கேரளமும் அருகருகே இருப்பதால், சுற்றுலாவிற்கென அதிக தூரம் பயணிப்பதில்லை இம்மக்கள். கோவைக் குற்றாலம், ஆனைமலை, வால்பாறை, சிதம்பரம்பிள்ளை பூங்கா, திருமூர்த்தி, ஆழியாறு மற்றும் அமராவதி அணைக்கட்டுகள் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும். மேற்கு தொடர்ச்சி மலையின் அருகாமை பல்லுயிர் வாழ்விற்கான இடமாக இம்மாவட்டத்தை மாற்றியிருக்கின்றது. “உம்பற்காடு” என்று பழந்தமிழ் செய்யுளில் கூறப்படும் இடமான யானைமலை (ஆனைமலை) அதிக அளவில் யானைகளையும் பல்வேறு காட்டுயிர்களையும் கொண்டிருக்கின்றது. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம், மற்றும் முதுமலை சரணாலயம் ஆகியவை கோவைக்கு மிக அருகில் அமைந்திருப்பவை. யானைகள், சிறுத்தைகள், புலிகள், காட்டெருமைகள் மற்றும் அரியவகை உயிரினங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன. மேலும் தொடர்ந்து ஏற்படும் ஆக்கிரமிப்பு காரணமாக வனஉயிரினங்கள் சில மலைப்பகுதி கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது.

கல்வியிலும், தொழில் நுட்பத்திலும், நற்பண்புகளிலும், இயற்கை எழில் கொஞ்சும் வாழ்விடங்களிலும் கோவை மேன்மையானதாகவே இருக்கின்றது. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை “தேசிய குற்றப் பதிவுகள்” அடிப்படையில்  மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கோவை பெண்களுக்கான பாதுகாப்பன நகரமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.

“ஒரு பண்பட்ட சமூகம் எப்படி உருவாகின்றது என்பதை அறிய, அங்கிருக்கும் பெண்களை எப்படி நடத்துகின்றார்கள் என்று கவனி” என்று காந்தி கூறிய கூற்றுகளை ஒப்பிட்டால் கோவை மிகவும் பண்பட்ட மாவட்டமாகவும், பாதுகாப்பான மாவட்டமாகவும் விளங்குகின்றது.

Related Articles

Exit mobile version