இந்த உலமானது பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் தன்னுள் கொண்டு இயங்குகின்றது. ஆதி மனிதனின் வாழ்க்கை முதல் தற்கால மனிதனின் வாழ்க்கை வரை நாம் எத்தனையோ நவீன மாற்றங்களைக் கண்டு கடந்து சென்றாலும் அறிவியலுக்கும் விஞ்ஞானத்திற்கும் விடை கிடைக்காத பல கேள்விகள் இன்னமும் இப்பிரபஞ்சத்தில் இருந்த வண்ணமே உள்ளன. நம்மை நாளுக்கு நாள் இயற்கை அழகில் திளைக்க வைக்கும் இதே பூமிதான், பல மர்மங்களை மனிதனின் கண்பார்வையில் தென்படவிட்டு அந்த மர்மத்திற்கான சூட்சுமத்தை முடிந்தால் அறிந்துகொள் என ஐயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆயினும் பல மர்மங்களுக்கான விடையை இன்றளவும் மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியான மர்ம தேசங்களை இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்…
எல்லஜ்ட் பொஸ்னியா பிரமிடு மலை – (The alleged Bosnian Pyramid)
2005 ஆம் ஆண்டளவில் Bosnia and Herzegovina பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மலையானது எகிப்திய பிரமிடு வடிவம் கொண்டு காணப்படுகின்றது. இவ்விடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள் இம்மலையானது 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இது இயற்கை மலை போலவே அமைந்திருந்தாலும் அதன் நேர்த்தியான தோற்றமானது அனைவராலும் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகின்றது. இவ்வாறு நேர்த்தியானதொரு தோற்றத்தில் ஒரு மலை எப்படி உருவாக்கி இருக்க முடியும் என பல ஆய்வாளர்களாலும் பேசப்படுகின்றது.
ஸ்டோன்ஹெஞ் – Stonehenge
இங்கிலாந்தின் Wiltshire என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த இடமானது வரலாற்றுக்கு முந்தய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக விளங்குகின்றது. கற்களை அடுக்கி வைத்த வண்ணம் கம்பீரமாய் நிற்கும் இதன் தோற்றம் அனைவராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றது. 13 அடி உயரமான கற்களுக்கு மேல் 13 அடி உயரம் கொண்ட கற்கள் படுக்கையாக காணப்படுகின்றது. இக்கற்கள் சுமார் 25 டன்க்கும் மேல் இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மற்றும் இது கி.மு. 2000 முதல் 3000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகின்றது. இக்கட்டமைப்பானது எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என இன்றளவும் அறிந்துகொள்ள முடியாத மர்மமாகவே உள்ளது.
மெக்சிகோ தாஹோஸ் ஹம் – The Taos Hum
மெக்சிகோ நாட்டிலுள்ள தாஹோஸ் கிராமமானது விசித்திரமானதொரு சத்தத்தினை வெளியிட்ட வண்ணமுள்ளது. இந்த சப்தமானது அப்பகுதியில் அடிவானத்தில் இருந்து வருவதாக சிலர் சொல்கின்றார்கள். தூரத்தில் ஒரு வாகனத்தின் எஞ்சின் இயங்குவது போல இந்த சத்தத்தினை உணர்கின்றனர் அப்பகுதி மக்கள். ஒலி அதிவெண்களை ஆய்வு செய்யும் பலரால் இப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரும் இந்த சப்தத்திற்கான காரணம் என்னவென இன்றளவும் கண்டுபிடுக்க முடியவில்லை.
பதிவு செய்யப்பட்ட சப்ததின் காணொளி இணைப்பு பின்வருமாறு :
நஸ்கா மர்ம கோடுகள் – Nazca Lines
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள நஸ்கா எனும் இடத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்டுள்ள கோடுகள் தான் நஸ்கா மர்ம கோடுகள். இந்த இடத்தினை சுற்றி உள்ள சில கிலோமீட்டர்கள் தூரத்திற்கு மனித குடியேற்றங்கள் ஏதும் இல்லை. மிகப்பெரிய வெட்ட வெளிகளில் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ள இந்த சித்திரங்களும் கோடுகளும் தான் உலகின் அதிக மர்மங்கள் நிறைந்த இடங்களில் முதன்மையானதாகப் பார்க்கப்படுகின்றது. இவை ஆறாம் நூற்றாண்டின் காலப்பகுதிகளில் வசித்த நசுகா நாகரிக மக்களால் வரையப்பட்டது என நம்பட்டாலும், வழக்கம் போல இது வேற்று கிரக வாசிகளின் விமானங்களுக்காக வரையப்பட்ட கோடுகள் என்று கருதும் சிலரால் சொல்லப்பட்டுவருகின்றது. இப்படியாக பல கருத்துகள் சொல்லப்பட்டாலும் இது யாரால் எதற்காக வரையப்பட்டது என இன்றளவும் உறுதியாக சொல்லப்படவில்லை. 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஒவியங்களையும் கோடுகளையும் விமானதில் இருந்து மட்டுமே முழுமையாகப் பார்க்கமுடியும்.
பெருவயிறு மலை அல்லது பானைவயிறு மலை – Gobekli Tepe
உலகில் இதுவரை கட்டுபிடிக்கப்பட்ட வழிபாட்டுத் தளங்களில் மிகப் பழமையானதாக கருதப்படுவது தான் இந்த Gobekli Tepe எனப்படும் பெருவயிறு மலை. இது துருக்கி நாட்டின் சான்லியூர்பா மாகாணத்தில் அமைந்துள்ளது. இதனை துருக்கி மொழியில் “Potbelly Hill” அதாவது பானைவயிறு மலை என்று அழைகின்றனர். இது சுமார் கி.மு. 8000 என்ற காலகட்டமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. தொழிநுட்பம் என்ற வார்த்தை கூட உருவாகாத அந்த காலக் கடத்தில் இப்படி ஒரு படைப்பு எப்படி சாத்தியம் என பல விஞ்ஞான ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏராளமான கோட்டுச் சிற்பங்களாக வேட்டையாடும் வழிமுறைகள் இங்குள்ள தூண்களில் வடிக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். பல ஆய்வுகளின் பின்னரும் இந்த வழிபாட்டுத்தலம் உருவாக்கப்பட்ட தொழிநுட்ப மர்மம் இன்றளவும் அறியப்படாதவைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.