டிஜிட்டல் யுகத்தின் பிரிவினைகள்: இலங்கையில் e-Learning பற்றி மீளாய்வு செய்வது அவசியமா?

காலையில் எழுதல், தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல், நித்திரைக்கு செல்லல், இவைதான் கடந்த இரு மாதங்களாக தாருஷ (13)* எனும் சிறுவனின் வாழ்வில் அன்றாட நடந்தேறிவரும் செயற்பாடுகள். ஆனால் தாருஷவின் வகுப்பில் அவன் மாத்திரமே இவ்வாறானதொரு  வாழ்வை அன்றாடம் கழிக்க நேர்ந்துள்ளது. ஏனென்றால், கடந்த இரு மாதத்தில் அவனது நண்பர்கள் மீண்டும் புத்தகங்களை கையிலெடுத்து கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டவண்ணமுள்ளனர். அவர்களுக்கு அவர்களது ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமாக பாடங்களை அனுப்புகின்றனர். மாணவர்களும் வீட்டிலிருந்தவாறே அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்றனர். 

துரதிஷ்டவசமாக, தாருஷவின் குடும்பமானது ஒரு ஸ்மார்ட் ஃபோன் (திறன் பேசி) வாங்குமளவுக்கு வசதிபடைத்தது அன்று. 

தெஹிவளையில், கடற்கரையோர போக்குவரத்து வீதியான மரைன் டிரைவிற்கு அருகாமையில் உள்ள, ஒரு சிறு வீட்டில் வாழ்ந்து வருகிறது தாருஷவின் குடும்பம். அவனது தந்தை சிறு அளவில் காய்கறி வியாபாரம் செய்பவர், தாய் ஒரு நிறுவனத்தில் சுத்திகரிப்பு பணியாளராக இருக்கிறார். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டில் இருக்கும் பாட்டியுடன் தான் அவன் பொழுதைக்கழிப்பான். 

கற்கும் தளமாக உருவெடுத்து வரும் வாட்ஸ்அப்

இணையவழி கற்றல் நடவைக்கைகளுக்கு சரியான வசதிகள் இல்லாத நிலையில், இலங்கையில் WhatsApp ஒரு மாற்று வழிமுறையாக கையாளப்படுகிறது.
Photo Credit: Reuters/Amanda Perobelli

“அவனது ஆசிரியர்கள் வாட்ஸ்அப் பிரயோகிக்கும் வசதியுள்ளதா எனக் கேட்டனர். ஆனால் நாம் எம்மிடம் சாதாரண பயன்பாட்டிற்கு உதவும் கையடக்க தொலைபேசி மாத்திரமே உள்ளதென்று கூறினேன்”, என் ரொசலின் நோனா(62)*, என்றழைக்கப்படும் தாருஷவின் பாட்டி Roar மீடியாவிற்கு பதிலளித்தார்.   

COVID-19 பரவுவதை தடுக்கும்பொருட்டு முன்னேற்பாடாக மார்ச் 12 அன்றே அனைத்து பாடசாலைகளும் காலவரையறையின்றி மூடப்பட்டன. (கடந்த வாரம், இலங்கை கல்வி அமைச்சினால் பாடசாலைகள் ஜூன் 29 தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது). பாடசாலை நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்த நிலையில், நிர்வாக தலைமைகளும் ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு மீள கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கேட்டுகொள்ளப்பட்டனர். பாவனை இலகுத்தன்மை மற்றும் ஏனைய வசதிகள் மூலம் திறன்பேசி பாவனையாளர்கள் மத்தியில் ஏலவே பிரசித்தி பெற்றிருந்த வாட்ஸ்அப்,பெரும்பாலான ஆசிரியர்களின் கற்பிக்கும் தளமாக தெரிவானது. 

“புதுவருட விடுமுறைக்கு பின்பதாக மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்றதாக எமது அதிபர் கூறினார்” என தாருஷவின் வகுப்பாசிரியை ஹேமா(53)* அவர்கள் Roar மீடியாவிற்கு பதிலளித்தார். 

இருபது வருடங்களுக்கு மேலாக கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியை ஹேமா அவர்களை பொறுத்தவரை வாட்ஸ்அப் மூலம் கற்பிக்கும் அனுபவம் நூதனமானது. “நான் இவ்வாறு செய்வது இதுவே முதல்முறை. நாம் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு குழுவை(வாட்ஸ்அப் குழு) உருவாக்கியுள்ளோம், உரிய ஆசிரியர்களை மாணவர்களுடன் அவற்றில் ஒருங்கிணைத்துள்ளோம். ஒவ்வொரு ஆசிரியரும் அதில் பாடங்களை பதிவிடுவர். எங்கள் அறிவுறுத்தல்களை மாணவர்கள் பின்பற்றவேண்டும், ஆனால் இந்த பரிசோதனையின் பிரதிபலனை பாடசாலை மீள திறக்கப்ப்படும்போதே அறிய முடியும்” இவ்வாறு அவர் கூறினார். 

ஆனால் தாருஷ போன்று திறன்பேசியின் வசதி இல்லாத மாணவர்களின் நிலை என்ன? 

“பாவம் அக்குழந்தைகள்”ஆசிரியை ஹேமா கூறினார். “அவர்களுக்கு இந்த பாடங்களை கற்க வேறுவழியே இல்லை, அது அவர்களது தவறும் இல்லை. நான் மாணவர்களுக்கு எளிதில் புரியும் பயிற்சிகளையே தற்போது வழங்கி வருகிறேன். பாடசாலை மீள ஆரம்பித்ததும் கடினமான பாடவிதானங்களைக் கற்பிப்பேன். இதன் மூலம் திறன்பேசி அற்ற மாணவர்கள் ஏனையோரை விட பாரியளவில் பின்னடைவதை இயன்றளவு மட்டுப்படுத்தியுள்ளேன்” என அவர் கூறினார். 

Error 404: Device Not Found – (சாதனம் கண்டறியப்படவில்லை]

1978ல் இலங்கை திறந்த பல்கலைக்கழக முறைமையை ஆரம்பித்ததன் மூலம் தொலைதூர கற்றல் முறையை ஏற்றுக்கொண்ட உலகின் வெகு சில நாடுகளில் இலங்கையும் இணைந்தது. அதுவும் குறித்த இவ் முறையானது ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகமாகி வெறும் 9ஆண்டுகள் ஆன நிலையில் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து, இன்று கணனிமய கல்விமுறை உலகை ஆக்கிரமித்திருக்கும் கால்த்துடன் ஒப்பிடுகையில், இலங்கையில் இணைய வழிக்கற்றலின் வளர்ச்சியானது பலவிதமான காரணங்களால் தடைபட்டு காணப்படுவதை காணமுடிகிறது. முக்கியமாக ஆரம்ப நிலை மற்றும் இடைநிலை கல்வியில் அதிகளவில் இப்பாதிப்பு உள்ளதை காணலாம். முறையான இணையத்தொடர்பும் அதற்குரிய சாதனப் பயன்பாடும் குன்றியுள்ளமையே இவற்றில் பிரதானமானது. 

10-19 வயதிற்குற்ற மாணவர்களிடம் குறிப்பிடும்வகையில்
அதிகளவான கணணியறிவு காணப்படுகிறது. 
மூலம்: Department of Census & Statistics, June 2019.
வடிவமைப்பு: ஜேமி அல்போன்சஸ்.

 

மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத்துறை புதிதாக வெளியிட்ட தகவலின் படி, இலங்கையின் கணினியறிவு வீதம்(ஒருவரால் சுயமாக ஒரு கணினியை பாவிக்கமுடியும் என வரையறையின் அடிப்படையில்) 30.1 வீதமாகக் காணப்படுகிறது. இருப்பினும் டிஜிட்டல் அறிவு வீதம்(ஒருவர் சுயமாக கணினி, மடிக்கணினி, டேப்லெட் அல்லது திறன்பேசியை பாவிக்கமுடிதல்) குறிப்பிடத்தக்களவு அதிகரித்து 44.3 சதவீதமாக உள்ளது. 

இந்த அதிகரிப்பு உற்சாகமூட்டுவதாக இருக்கும் அதே வேளை பெரும்பாலான இலங்கையர் இன்றளவும் இணையப்பாவனைக்கான வழி இன்றி உள்ளனர் என்பதையும் எமக்கு உணர்த்துகிறது. முன்னைய அரசாங்கமானது மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கும் திட்டமொன்றை முன்வைத்தது, இத்திட்டம் அவர்களின் சாதன குறைபாட்டை பெருமளவு குறைத்திருக்கும், ஆனால் இதுவும் கைகூடவில்லை. 

தகவல் உள்ளடக்கம் மற்றும் மொபைல் data-விற்கான கேள்வி

“வாட்ஸ்அப் மூலம் கற்பதற்கு நான் அம்மாவின் திறன்பேசியை தான் பாவிக்கிறேன். ஆனால் கற்பதற்கு இதனை விட சுவாரசியமான வழி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இம்முறை மிகவும் அலுப்பூட்டுகிறது”, கண்டி மகளிர் பாடசாலையில் கற்கும் டில்மி(16)*  Roar மீடியாவிடம் தன் கருத்துகளை இவ்வாறு பகிர்ந்தார்.  தற்போது க.பொ.த. சா/தர பரீட்சைக்கு தயாராகும் அவர் மேலும் கூறுகையில் “என்னைப்போன்று முக்கியமான பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பின்னூட்டலை பெறுவதற்கு இலகுவான ஒரு வழி இருக்கவேண்டும். விளக்கங்களுடனான காணொளிகள் இருந்தாலும் நலம். ஆனால், அதற்கான Data கட்டணங்களை பற்றியும் சிந்திக்க வேண்டும்” என்றார்.

e-Learning முறையில் திறம்பட செயற்பட, சாதனங்களுக்கான அணுகல் மற்றும் இணைய வசதியானது தடையற்ற சூழலில் இலகுவானதும் அனைவராலும் கொள்ளக்கூடியதுமான உள்ளடக்கத்துடனும், இருபுறமும் கலந்துரையாடும் வகையிலும்  கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் பொருட்டு இலங்கையானது அதன் சொந்த e-Learning தளமான e-Thaksalawa எனும் தளத்திய  கொண்டிருக்கிறது. இது Moodle மூலம் வலுவூட்டப்படுகிறது.  Moodle என்பது உலகளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் மத்தியில் பிரசித்தம் பெற்ற ஒரு திறந்த கற்றல் முகாமைத்துவ பொறிமுறையாகும். இந்த தளம் இலவசமானது இதனை பாவிப்பதற்கும் பாவனையாளரிடமிருந்து, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கமைய எந்த விதமான Data கட்டணமும் அறவிடப்படமாட்டாது. 

e-Thaksalawa, தரம் 1 – 13 வரையிலான அனைத்து பாடப்பரப்பையும் மூன்று மொழிகளிலும் கொண்டிருப்பினும் அதன் இலகுத்தன்மையற்ற பாவனை மற்றும் திறன்பேசிகளில் சரிவர செயற்படாமை போன்றவை, பாரிய குறைபாடுகளாகும். நாட்டில் இணையம் பாவிப்போரில் ஏறத்தாழ 71 சதவீதமானோர் திறன்பேசிகளை தமது இணையத்தீர்வாக கொண்டிருக்கும் போது இது போன்ற குறைபாடுகள் காரணமாக குறைந்தளவு மாணவர்களே இந்த தளத்தின் பயனை அனுபவிக்கின்றனர். 

“அவர்கள் விளையாட்டுக்களையும் வினாவிடை போட்டிகளையும் சேர்ப்பார்களாயின் கற்றல் என்பது உற்சாகமாகவும் அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்கும்” என டில்மி உரக்க வலியுறுத்தினார். 

அவர் கூறியது சரிதான். ஒருவேளை திறன்பேசி யுகத்தில் தன் இருப்பை உறுதிசெய்யும் பொருட்டு இலங்கையானது தன் e-Learning எனும் இணைய வழி கற்றல் முறையை மீளாய்வு செய்வதற்கான தருணம் இதுவாக இருக்கலாம். 

*தனியுரிமை கருதி பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Exit mobile version