இலங்கையில் கறுப்புச் சந்தைகளை உயிர்ப்பிக்கும் இறக்குமதி கட்டுப்பாடுகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 300 வகையான பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது அந்த கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து 150 இற்கும் அதிகமான பொருட்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலும், நாட்டின் இறக்குமதித் துறை இன்னும் பெரியளவு சரிவிலேயே சென்ற வண்ணம் உள்ளது. ஏற்கனவே உயர்ந்து வரும் விளைவாசியெனும் தீயில் இது எண்ணெய் அள்ளியூற்றியது போல பல பொருட்களின் விலையை மேலும் ஏற்றிவிட்டது. பொருளாதார நெருக்கடிக்குள் நுழைந்த இலங்கை மீண்டும் தன்னுடைய வளர்ச்சிப் பாதைக்கு மீள பல்வேறு உத்திகளை கையாண்டு தோல்வியடைந்தது. தற்போது பொருளாதார வளர்ச்சியை விடுத்து பொருளாதார ரீதியாக தப்பிப் பிழைப்பதற்கு தேவையான அனைத்து கடுமையான நடைமுறைகளையும் கையாண்டு வருகிறது.

அதன் ஒரு அங்கமே இந்த இறக்குமதி கட்டுப்பாடு. இந்த இறக்குமதி கட்டுப்பாடு எனப்படுவது இலங்கையில் அமுலாவது இதுவே முதல் தடவை அல்ல. இதற்கு சில மாதங்களுக்கு முன்னரும் இந்த இறக்குமதி தட்டுப்பாடு அமுலானது. ஆனால் இந்த இறக்குமதி தட்டுப்படுகளால் எட்டப்பட என்னும் இலக்கு என்ன? இந்த இறக்குமதி கட்டுப்படுகளால் உண்டாகும் பாதகமான விளைவுகள் என்ன? கடந்த நாட்களில் கள்ளத்தனமாக ஒரு லிட்டர் பெற்றோல் சந்தை விலையை விட 5-7 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டதன் பின்புலம் என்ன? இறக்குமதி கட்டுப்பாடுகள் எவ்வாறு கறுப்புச் சந்தைகளை தோற்றுவிற்கின்றன? என்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதிலளிக்கிறது.

இவற்றையெல்லாம் தெளிவாக புரிந்து கொள்ள இலங்கை போன்ற நாடுகள் எந்தளவு சர்வதேச வணிகத்தில் தங்கியுள்ளது என்பதை முதலில் நாம் அறிய வேண்டும். பல்லாண்டு கால திறனற்ற ஆட்சியமைப்பு, ஊழல், போதிய பௌதீக உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, மற்றும் ஏனைய நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்துடன் போட்டியிட முடியாமை போன்ற பல்வேறு காரணங்களின் விளைவாக பல்வேறு நாடுகளும் தங்களது பொருளாதாரத்தில் கடுமையான பிரச்சினைகளை பிரச்சினைகளை நெடுங்காலமாக முகம் கொடுத்து வருகின்றன. இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்கள் எந்தளவு இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றைப் பூரண வினைத்திறனுடன் பயன்படுத்தத் தேவையான மூலதன உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருப்பதில்லை. 

புகைப்பட உதவி: Forbes.com

இந்த நவீன யுகத்தில் காலத்துக்கு ஏற்ப மக்களின் தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்து வருவதால் ஒரு நாடு பொருளாதார தன்னிறைவை அடைவதென்பது மிகவும் சாத்தியப்பாடு குறைந்த ஒன்றாகும். எனவே உலக நாடுகள் அனைத்தும் ஒன்றையொன்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ சார்ந்திருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொள்வோமாயின் பல அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யத் தேவையான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன. அரிசி, பருப்பு, கோதுமை, பால் மா, எரிவாயு, பெற்றோலியம், இலத்திரனியல் பொருட்கள், வாகனங்கள், வாசனைத் திரவியங்கள் என அனைத்தும் பிற நாடுகளில் இருந்தே இறக்குமதியாகின்றன. இந்த பொருட்களை சர்வதேச சந்தையில் இருந்து இறக்குமதி செய்ய இலங்கைக்கு அமெரிக்க டொலர்கள் தேவை. எனவே இலங்கை தனது உற்பத்திகளை உலக சந்தையில் விற்பனை செய்து டொலர்களை சமாதித்தாக வேண்டும். ஆனால் முன்னரே குறிப்பிடப்பட்டது போல இலங்கை தனது வளங்களை பூரண வினைத்திறனுடன் பயன்படுத்த முடியாது உள்ளதால் நாம் டொலர்களை ஈட்டிக்கொள்ள வேறு வழிகளைத் தேட வேண்டியுள்ளது. 

இவ்வாறு இலங்கை போன்று சிக்கலில் இருக்கும் பல்வேறு நாடுகளுக்கும் திறந்த பொருளாதார கொள்கை என்பது ஆபத்துதவியாக அமைகிறது. திறந்த பொருளாதாரக் கொள்கைகள் ஒரு நாடு பிற நாடுகளுடன் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய வழியமைத்துத் தருவதுடன், அந்நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய சாதகமான சூழ்நிலையொன்றை வழங்குகிறது.  திறந்த பொருளாதாரக் கொள்கைகள் மூலம் ஒரு நாட்டின் பொருளாதார வளங்கள் மீது பிற நாட்டு முதலீட்டாளர்கள் (அரச மற்றும் தனியார்) முதலீடுகளை செய்யும் வாய்ப்பு உருவாகிறது. இதன் மூலம் நாட்டிற்கு முதலீட்டைக் கொண்டு உருவாகும் வர்த்தகங்கள் நாட்டின் வேலையின்மை வீதத்தைக் குறைப்பதுடன், அந்நாடுகளுக்கு மிகத் தேவையான அமெரிக்க டொலர் உட்பாய்ச்சலைக் கொண்டு வருகிறது. 

இந்த புது முதலீடுகளால் விருத்தியடையும் நாட்டின் பொருளாதார மட்டம், நாட்டின் உற்பத்தியளவைப் பெருக்கும். இந்த அதிகரித்த உற்பத்தி யை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் உருவாகும் டொலர்களைக் கொண்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிற்குள் கொண்டு வரும் முதலீடுகள் வழியாகக் கிடைக்கும் கொண்டும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் தங்களுக்கு தேவையான இறக்குமதிகளை மேற்கொள்வதுடன், நாட்டின் ஏனைய அபிவிருத்தி பணிகளையும் ஒரு நாடு முன்னெடுக்கும். இலங்கையில் 1980 களில் இருந்து திறந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்பட்ட சாதகமான அரசியல் சூழல் காரணமாக வெளிநாட்டு முதலீடுகளும், இறக்குமதிகளும் பெருகலாயின. அபிவிருத்தியடைந்து வந்த சுற்றுலாத் துறையும், வெளிநாட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் அனுப்பும் அந்நிய செலாவனியும் இலங்கையின் டொலர் வரத்தை அதிகரித்தது. இந்த அந்நிய செலாவணி வருமானங்களைக் கொண்டு இறக்குமதிகளை மேற்கொள்ளும் ஒரு நுகர்வுப் பொருளாதாரமாக இலங்கை மெல்ல மெல்ல மாறியது. 

வளர்ச்சியடைந்து வரும் நாடு என்ற அடிப்படையில் பல்வேறு அபிவிருத்தி நோக்கங்களுக்காக இலங்கை முதலான நாடுகள் பல்வேறு வகையான கடன்களைப் பெறுவதுண்டு. இவ்வாறு பெறப்படும் கடன்களும், அந்த கடன்களுக்கான மீள் கொடுப்பனவும் கூட அமெரிக்க டொலர்களிலேயே மேற்கொள்ளப்படும். எனவே கடன் மீள் செலுத்தல்களுக்கும் டொலர் தேவையாகிறது. இவ்வாறானதொரு நிலையில் 2019இல் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் வரவிருக்கும் கோவிட்-19 எனும் பேராபத்துக் குறித்து அறியாமல் அரச வருமானத்தையும், விவசாயத்துறையையும் கடுமையாக பாதிக்கும் சில விவேகமற்ற தீர்மானங்களை மேற்கொண்டனர். இதனோடு இணைந்து உலகையே முடக்கிய கோவிட் பெருந்தோற்று இலங்கையின் பெரும்பாலான டொலர் வரத்துக்களையும் நசுக்கியது. ஏற்றுமதிகள் குறைந்தன, வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிலிருந்து வெளியேறின, வெளிநாடுகளில் வேலை செய்த இலங்கையர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு நாட்டுக்குத் திரும்பினர், சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது, இவற்றால் நாட்டுக்கு டொலர் வருமானம் குறைவடைந்த போதும் நாட்டிற்காக செலவு செய்ய வேண்டிய டொலர்களின் அளவு அதிகரித்த வண்ணம் சென்றது. கோவிட் தொடர்பான சுகாதார செலவுகள், பொது முடக்கத்தால் ஏற்பட்ட உணவுப்பற்றாக்குறையை தீர்க்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அதிகரித்து வந்த கடன் மீள் கொடுப்பனவுகள் என்பன அதிகளவு டொலர்களை நாட்டிலிருந்து வெளியேறச் செய்தது. இதனால் டொலருக்கான தேவை அதிகரித்தது, அந்த தேவை டொலரின் விலையை அதிகரித்தது.

பட உதவி:onetext.org

அதிகரித்து செல்லும் டொலர் பெறுமதியால் இலங்கையின் பல்வேறு துறைகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக மோட்டார் வாகனங்கள், சுகாதாரத் துறை, வியாபாரத்துறை மற்றும் விவசாயத்துறை போன்றன கடுமையாக தாக்கமடைந்துள்ளன. மேற்சொன்ன துறைகள் அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வெளிநாட்டு இறக்குமதிகளை நம்பியே உள்ளன. எனவே அதிகரிக்கும் டொலர் பெறுமதிக்கு அமைய முன்னரைப் போன்று இறக்குமதி செய்யமுடியாது உள்ளதுடன், இறக்குமதி விலையதிகரிப்பால் மக்களும் அப்பொருட்களை வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டனர். வியாபாரங்கள் வருமான குறைவு காரணமாக நாட்டின் வரி வருமானமும் குறைவடைந்து வருகிறது. 

இதற்கெல்லாம் தீர்வாக அமையக்கூடியது இலங்கையில் அமெரிக்க டொலர் இருப்பை அதிகரிப்பது மட்டுமே, இன்று இதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. நலிவடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது, இலங்கையர்களை வெளிநாடுகளில் வேலைக்கமர்த்துவதன் மூலம் அந்நிய செலாவனியை பெருக்குவது மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து நிதியுதவிகளைப் பெறுவது என தன்னால் முடிந்த அனைத்தையும் இலங்கை செய்துவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கை உத்தியோக பூர்வமாக வங்குரோத்து அடைந்துவிட்ட நிலையில், நெருக்கடியை சீர்ப்படுத்த IMF இன் உதவியை இலங்கை நாடி வருகிறது. IMF இன் உதவிகள் ஓரிரவில் நாட்டின் நிலைமையை சீர்திருத்தப் போவதில்லை. எனவே இலங்கை தனது பொருளாதார நிலையை ஓரளவேனும் சரிப்படுத்த தனது டொலர் இருப்பை பேணுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது இறக்குமதித் தடை. 

இறக்குமதித் தடையை (கடுமையான கட்டுப்பாடுகளை) விதிப்பது என்பது தனியார் துறையினர் தங்கள் விருப்புக்கு ஏற்ப டொலரை செலவு செய்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் நாட்டின் டொலர் இருப்பை எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு போன்ற மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தவும், டொலரின் பெறுமதியை நிலைப்படுத்தவும் அரசாங்கம் முயல்கிறது.  ஆனால் இதன் பக்கவிளைவுகள் அரசாங்கத்திற்கு மேலும் தலைவலியையே உண்டாக்கும்.

முன்னரே குறிப்பிடப்பட்டது போல இலங்கையில் உற்பத்தி மட்டம் என்பது உத்தம நிலையில் இல்லை. இதனால் இலங்கையர் அன்றாடம் உட்கொள்ளும் பருப்பு முதல், பாணுக்கும், ரொட்டிக்கும் தேவையான கோதுமை வரை அனைத்ததுக்கும் நாம் வெளிநாட்டு சந்தைகளையே சார்ந்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையில் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்ட இலத்திரனியல் பொருட்கள், வாகனங்கள் முதல், மருந்துகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நாம் உட்கொள்ளும் பழங்கள் வரை அனைத்துமே இறக்குமதியூடாகவே நாட்டுக்கு வருகிறது. எனவே ஒரே நாளில் இந்த பொருட்களின் இருக்குமதிக்கு அரசாங்கம் தடை விதிக்கும் போது மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பல ஆண்டுகளாக பழகிவிட்ட வாழ்க்கை முறையை ஒரேடியாக கைவிட இயலாது. எனவே அந்த கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான கேள்வி தொடர்ந்தும் சந்தையில் நீடிக்கும். ஆனால் அந்த கேள்விக்கு போதியளவு பொருட்களை சந்தையால் வழங்க முடியாது போகும். எனவே கேள்வியின் போட்டித்தன்மை உயரும்,  கறுப்புச் சந்தை உருவாகும். 

கறுப்புச் சந்தை எனப்படுவது அனைத்து பொருளாதரங்களிலும் ஏதோவொரு சூழ்நிலையில் உருவாக்கக்கூடிய ஒன்று தான். கறுப்புச் சந்தைப் பற்றி அறிந்துகொள்ள பொருளியலின் அடிப்படை சக்திகளுள் ஒன்றான கேள்வி-நிரம்பல் பற்றிய சிறு புரிதல் வேண்டும். ஒரு பொருளுக்கு சந்தையில் (மக்களிடையே) நிலவும் தேவை, கேள்வி (Demand) எனப்படும், அந்த தேவையை பூர்த்தி செய்ய சந்தையின் வியாபாரிகளால் வழங்கப்படும் பொருட்களின் அளவு நிரம்பல் (Supply) எனப்படும். ஒரு பொருளுக்கான கேள்வியும், நிரம்பலும் சந்திக்கும் புள்ளியே சந்தையில் அப்பொருளின் விலையையும், விற்பனை அளவையும் தீர்மானிக்கும். இந்த புள்ளி சந்தை சமநிலை என அறியப்படும். 

இவ்வாறு சமநிலையான ஒரு சந்தையில் அரசாங்கம் தலையிட்டு அப்பொருளின் விலையிலோ அல்லது விற்பனை அளவிலோ மாற்றத்தை உண்டாக்கும் போது அச்சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பல் சக்திகள் தளம்பலடையும். நிர்ணயமான புதிய விலை அல்லது அளவின் விளைவாக கறுப்புச்சந்தை விலை உண்டாகும்.

படவடிவமைப்பு:Jamie Alphonsus/Roar Media

கேள்வியும், நிரம்பலும் எதிரான போக்குடையவை. விலை கூடும் போது கேள்வி குறையும், நிரம்பல் அதிகரிக்கும். கேள்வி நிரம்பலுக்கு ஏற்ப சந்தையில் நிலவ வேண்டிய சமநிலை விலையை விட அரசாங்கம் குறைவான விலையை நிர்ணயிக்கும் போது (இலங்கையில் டொலர் சந்தையில் ஏற்பட்ட நிலை) சந்தையில் அக்குறித்த பொருளுக்கான நிரம்பல் குறைவடையும், எனவே அக்குறைந்தளவு பொருட்களை கொள்வனவு செய்ய கேள்வி அதிகரிக்கும் அதன் விளைவாக கள்ளச்சந்தையில் அரசு நிர்ணயம் செய்த விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலைக்கு அப்பொருளை வாங்க நுகர்வோர் முன்வருவார்கள்.

இதே போல அரசாங்கம் சந்தையின் கிடைப்பனவை குறைக்கும் போது, வழங்குனர்களால் அரச விதிகளுக்கு அமைய குறைவான பொருட்களையே விற்பனை செய்ய முடியும். மேற் குறிப்பிட்டது போல கிடைப்பனவு குறையும் போது அதனை பெற்றுக்கொள்வதற்காக நுகர்வோர் அந்த அளவுக்கான உச்சபட்ச கேள்வி விலையை செலுத்த முன்வருவார்கள். இலங்கையின் எரிபொருள் மற்றும் இறக்குமதி பொருட்கள் சந்தையில் இன்று காணப்படுவது இந்நிலையே, கேள்வி விலைக்கும், தொகைக்கும் இடையிலான எதிர்மறைத் தொடர்பின் விளைவால் குறைந்தளவு பொருட்கள் அதிக விலையில் விற்கப்பட்ட முடியும். 

பொருளொன்றுக்கு தட்டுப்பாடு வரும் என்னும் நிலை உருவாகும் போது அனைவரும் தாங்கள் எவ்வாறேனும் மிஞ்சியிருக்கும் பொருட்களில் முடிந்தளவை வாங்கி விட வேண்டும் என்ற வேகத்தோடு கூறும் விலைக்கு மறுபேச்சு பேசாமல் பணத்தைக் கொடுத்து வாங்கி விடுவோம். பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தங்களை பிழைக்க வைத்துக்கொள்ள பிறரைப் பற்றி சிந்தியாமல் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் ஒரு எண்ணப்போக்கு நம் அனைவருக்கும் இயற்கையிலேயே இருக்கும். ஆனால் நாம் இவ்வாறான இக்கட்டான நிலைகளில் மனித நேயத்தோடு நம்மைப்போல, சமயங்களில் நம்மை விடவும் அதிகம் பாதிக்கப்படப் போகும் பிறருக்காகவும் ஒரு கணம் நிதானித்து கிடைக்கும் பொருட்களை அவர்களுக்கும் விட்டுச்செல்வது என்பது அரிதாகிவிட்டது.

இவ்வாறு பணமுள்ளவர்கள் தங்கள் நலன்களை மட்டுமே எண்ணி கறுப்புச் சந்தை விலை எவ்வளவாயினும் கொடுத்து வாங்குவதற்கு தயாராக இருப்பதன் விளைவாலேயே வணிகர்களும் தங்கள் இறுதி இருப்புக்களை உயர்வான விலை தருவோருக்கு விற்கத் துணிகிறார்கள். இதனால் இறுதியில் நேரடி பாதிப்பை அடையப்போவது அன்றாட பிழைப்புக்காக அல்லலுக்கு ஆளாகும் எளிய மக்களே. இலங்கை அரசாங்கம் இவ்வாறான கறுப்புச் சந்தை நடவடிக்கைகளை இல்லாதொழிக்கவும், கறுப்புச் சந்தை நடவடிக்கைகளுக்கு காரணமாக அமையும் ஆக்கபூர்வமற்ற கொள்கைகளை கைவிடவும் ஆகியவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முழு நாடும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்நேரத்தில் மனிதாபிமானம் உடையவர்களாக நாம் ஒருவரை ஒருவர் ஆதரித்து முன்னகர வேண்டிய கபாய்மை நம் எல்லோருக்கும் உள்ளது.

Related Articles

Exit mobile version