புதிய நோய்த்தொற்று பதிவுகளும் பரவும் சமூகத்தொற்று குறித்த அச்சமும்

நேற்று முன் தினம்(14) தனிமைப்படுத்தல் மையங்கள் தவிர்த்து வெளியே இனங்காணப்பட்ட புதிய நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தமையானது COVID-19ன்  சமூகத்தொற்றாக இருக்குமோ என்ற எண்ணத்தை விதைக்கின்றபோதும், அதிகாரிகள் தொடர்ச்சியாக நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மக்களிடம் மீளுறுதி செய்தவண்ணம் இருக்கின்றனர்.

“ஒருவேளை பொதுமக்கள் மத்தியில் நோய்த்தொற்றுக்கள் இனங்காணப்படின் நாம் உங்களுக்கு தெரியப்படுத்துவோம்” என்று சுகாதார சேவைகளின் பொது பணிப்பாளர் கலாநிதி அனில் ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ராகம தனியார் மருத்துவமனை

இவ்வாறான உறுதிமொழிகள் வழங்கப்படினும் ராகமவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று அதன் பொது முகாமையாளருக்கு COVID-19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டபின் மருத்துவமனையை தற்காலிகமாக மூடியுள்ளதாக அறிவித்திருக்கிறது. குறித்த பொது முகாமையாளர் ஜூலை முதலாம் திகதி பொது முகாமையாளர் பதவியை பொறுப்பேற்கும் முன்பதாக கந்தக்காடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஆலோசகராக சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நோயாளருடன் தொடர்பில் இருந்த 48 பணியாளர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கான PCR பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஹோமாகம இராணுவ அதிகாரிகள்

ஹோமாகம பகுதியில் கடந்த திங்கட்கிழமை (13) அன்று இரு இராணுவ வீரர்களுக்கு COVID-19 தொற்று உறுதியான பின்னர் அப்பகுதியிலுள்ள ஏழு குடும்பங்களை சேர்ந்த குறைந்தது 30 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இரு அதிகாரிகளும் ஹோமாகமவின் கெந்தலந்த மற்றும் கொடகம பகுதியை சேர்ந்தவர்கள், இவர்கள் கந்தக்காடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் பணி புரிந்தமையானது சமீபத்திய புதிய தொற்றலுக்கான காவி என்பதை நிரூபணம் செய்கிறது.

 கம்பஹா நோய்த்தொற்றுக்கள்

மேலும் இரு COVID-19 நோய்த்தொற்றாளர்கள் கம்பஹாவின் இரு வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் (14) இனங்காணப்பட்டனர் : ஒருவர் கந்தக்காடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றுபவர் மற்றையவர் குறித்த பணியாளரை அம்மையத்துக்கு அழைத்து செல்லும் சாரதியாவார்.

நிலைமையை மேலும் சிக்கலாக்கும் விதமாக குறித்த சாரதி கடந்த ஜூலை 7 அன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஒரு சாட்சியாக ஆஜராகி இருந்தார், அதாவது அன்றைய தினம் நீதிமன்றிற்கு சமூகமளித்த அனைவரும் கண்டறியப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

MOBITEL கிளை அலுவலகம் மூடல்

COVID-19ஆல் பாதிக்கப்பட்ட ஒருவர் வருகை தந்ததை அடுத்து டபிள்யூ. ஏ. டீ. ராமநாயக்க மாவத்தை, கொழும்பு 2 இல் அமைந்துள்ள மொபிடெல் அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது.

“COVID-19 தொற்றுக்குள்ளான ஒருவருடன்(மூன்றாம் வட்டம்) தொடர்பிலிருந்தாரென சந்தேகிக்கப்படும் ஒருவர் டபிள்யூ. ஏ. டீ. ராமநாயக்க மாவத்தை, கொழும்பு 2 இல் அமைந்துள்ள கிளைக்கு வருகை தந்தார் என அறியக்கிடைத்ததும் நாம் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன் முற்காப்பு நடவடிக்கையாக முற்றாக கிருமி நீக்கம் செய்யும்பொருட்டு தற்காலிகமாக குறித்த கிளையை மூடியுள்ளோம்” என மொபிடல் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Caption

 

கிளிநொச்சி பல்கலை வளாகம் மூடல்

குறித்த அதே நாளில் யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பல்கலை வளாகமும் மூடப்பட்டது, அங்கு கல்வி கற்ற மாணவர் ஒருவரின் சகோதரரான கந்தக்காடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் பணியாற்றிய இராணுவ வீரருக்கு வைரஸ் தொற்றுறுதியான பின்பதாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கந்தகாடு புதிய தொற்றுப் பரவல்

மிக அண்மையில் இடம்பெற்ற இந்த எதிர்பாராத தொற்றுப் பரவலானது கந்தக்காடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் தோன்றி நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வந்தது. இக்கட்டுரை எழுதும் கணம் (14/07/2020) வரை வெறுமனே ஆறு நாட்களில் 519 நோயாளர்கள் குறித்த கொத்தணி பரவலில் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி உரை

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நோய்த்தொற்றுகள் பதிவாகுவதை தொடர்ந்து ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களை வைரஸிடமிருந்து காப்பதாக உறுதியளித்தார்.

அதுமட்டுமின்றி PCR பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் முறைகளை கற்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதேவேளை ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையானது பொது மற்றும் தனியார் அமைப்புகள் தமக்கு வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் அவசியத்தையும் நிறுவனங்களின் பொறுப்புடைமையையும் மீள வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.

 

Related Articles

Exit mobile version