பழங்கால ஏழு உலக அதிசயங்களில் என்றுமே எகிப்திய பிரமிடுகளுக்கு ஒரு நீங்கா இடம் உண்டு. இறந்த உடல்களை பாதுகாக்கவே இந்த பிரமிடுகள் என்று வெறுமனே சொல்லிவிட முடியாது. இதில் பழங்கால எகிப்தியர்களின் பிரம்மாண்டம், ஆன்மீக நம்பிக்கைகள், திகைப்பூட்டும் பழக்கங்கள், மர்மங்கள் என்று பல விஷயங்கள் புதைந்துள்ளன. அவை பழங்கால எகிப்தின் பண்பாட்டு குறியீடாக கருதப்படுகிறது. பண்டைய எகிப்தை ஆண்ட மன்னர்களில் ஒருவர் துட்டகாமுன். இவர் எகிப்த்தை ஆட்சி செய்து சுமார் மூவாயிரம் ஆண்டுகள் கழித்து துட்டகாமுனால் சென்ற நூற்றாண்டின் பிரபலமான மனிதர்களில் ஹாவர்ட் கார்ட்டர் ஒருவரானார். மன்னராட்சி முடிந்து மக்களாட்சி துவங்கியவுடன் அவர்களின் கோட்டைகளிலும் வழித்தடங்களிலும் ஆட்சியாளர்களும் சாமானியர்களும் புதையல் வேட்டையில் ஈடுபடுவது இயற்கையே. இதன் வழியில் நூற்றாண்டுகள் கடந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்ட் கார்ட்டர் கண்டுபிடித்த பிரமிடுகளும் அதன் சுவராஸ்யங்களும் நம்மை கவரும் என்பதில் ஐயமில்லை.
ஆதிகால நம்பிக்கைகள்
எகிப்திய மன்னர்கள் “பரோக்” என்றழைக்கப்பட்டார்கள். நாகரீகம் வளராத ஆரம்ப காலங்களில் மன்னரையே கடவுளாக எதிப்தியர்கள் கருதினார்கள். அவரின் கட்டளைப்படியே சூரியன் கிழக்கே உதயமாகிறான், நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்று எண்ணிக்கொண்டார்கள். பின் காலப்போக்கில் கடவுள் வேறு, மன்னர் வேறு என்றானது. பின் படையெடுப்பு, ஆட்சி மாற்றம், காட்சி மாற்றம், நாகரீகம் போன்றவைகளால் அவர்களின் நம்பிக்கைகள் மாறிக்கொண்டே வந்தது. பெரும்பாலான பண்டைய எகிப்தியர்களின் வாழ்க்கை மூன்று காலங்களை நம்பியே இருந்தது. விதைக்கும் காலம், அறுவடை காலம், நைல் நதியின் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலம். முறையான விவசாயத்தை அவர்களால் பின்பற்ற முடியாததால் அவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி பிரமிடுகளை கட்டுவதிலேயே கழிந்தன.
எகிப்திய மம்மிகள் உருவான முறை
உலகளாவிய நாடுகளின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தை நோக்கி படையெடுத்த தருணம் அது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அகழ்வாராய்ச்சியின் இறுதியில் கிடைக்கும் செல்வங்களில் பாதியை அவர்களே வைத்துக்கொள்ளலாம் என்று ஒரு விதிமுறை அமுலில் இருந்தது. எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி இந்த உடல் இறந்தவுடன் அது மறு உலகிற்கு செல்வதாகவும் அப்படி செல்லும்பொழுது அங்கு வாழ இந்த உடல் தேவை என்பதால் அந்த உடலை அழிக்காமல் பதப்படுத்தி பாதுகாத்து வந்தனர். உடலை பதப்படுத்துவதற்கு பல கட்டங்களாக அதன் ஈரப்பதம் நீக்கப்படுகிறது. இதை அவர்கள் வெற்றிகரமாக செய்ததால் தான் ஒரு மம்மியின் உடலை வைத்து இன்றும் அவர்கள் உருவத்தை நாம் கணிக்க முடிகிறது. எகிப்தில் குறிப்பிடத்தக்க மழை பெய்வதில்லை. எனவே வரலாற்று காலத்திற்கு முன் உலர்ந்த மணல் மற்றும் காற்றை பயன்படுத்தி உடலை பதப்படுத்தி பாலைவனத்தின் நிலப்பரப்பில் பெரும் குழியினை தோண்டி உடலை வைத்தனர். நூற்றாண்டுகள் கடந்து பின்பு இந்த முறை கட்டணத்திற்கு ஏற்றவாறு என்று மாறியது.
பிரமிடு கலாச்சாரம்
முதன் முதலில் பிரமிடு கட்டும் கலாச்சாரத்தை தோற்றிவித்த மன்னர் டிஜோசர். இவரது ஆட்சிக்காலம் கிமு. 2630 – கிமு. 2611. இவர் மூன்றாவது சாம்ராஜ்ய மன்னராவார். இதன் பின்னர் காலப்போக்கில் பிரமிடுகள் கட்டும் முறைகளிலும் அதன் வேலைப்பாடுகளிலும் பல மாற்றங்கள் செய்தனர். இறுதியாக இதற்கென்று ஒரு வடிவம் கொடுத்து, சிறந்த முறையில் பின்பற்றியது துட்டகாமுன் வாழ்ந்த நூற்றாண்டில் தான். எனினும் இதன் செலவுகள், தேவையான ஆட்கள், நேரம் இவற்றை கருத்தில் கொண்டு அடுத்த சில நூற்றாண்டுகளிலேயே இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டின் மன்னர் மிக குறைவான செலவிலான பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டார்.
இறுதி சடங்குகளும் பிரேத பரிசோதனைகளும்
ராஜ பரம்பரையை பொருத்தவரை அவர்கள் உயிருடன் திடகாத்திரமாக இருக்கும் பொழுதே அவர்களுக்கான பிரமிடுகளை விருப்பப்படி கட்டி வேலைப்பாடுகளுடன் தயார் செய்து கொண்டார்கள். அவர்களின் மறைவுக்கு பின்னர் உடல் கட்டில் மேல் வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தது. அந்த உடல் பேரீட்சை மதுவால் குளிப்பாட்டப்பட்டு நைல் நதி நீரால் கழுவப்படுகிறது. பின் ஒரு பக்கமாக உடல் அறுக்கப்பட்டு பாகங்கள் ஒவ்வொன்றாக வெளியில் எடுக்கப்படுகிறது. அந்த பாகங்கள் பிரத்யேக பெட்டிகள் அல்லது கானோபிக் ஜார்கள் (Canopic Jars) எனும் காற்றுப்புகாத பளிங்கினாலான ஜாடிகளில் கல் உப்பு கொண்டு பதப்படுத்தப்படுகிறது. இதயம் மட்டும் உடலுடனே விடப்படுகிறது. மனித உடலின் வடிவம் கெடாமல் முழுவதுமாக சுத்தம் செய்யப்படுகிறது. உடல் முழுவதும் உப்பு மற்றும் இதர கலவைகள் கொண்டு ஈரப்பதம் அகற்றப்பட்டு சணல் நார்களை கொண்டு துணியினால் முழுவதும் சுற்றப்படுகிறது. பின்பு போலி கண்கள் பொருத்தப்படுகிறது. உடலுக்கு விபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க சில மந்திரங்கள் சுற்றப்பட்ட துணிகளில் எழுதப்படுகிறது. மோதிரம் அனுவிக்கபட்டு இறுதி சடங்குகளை மதகுருமார்கள் கொண்டு நடத்தினார்கள். பிரமிடுகளுக்குள் பல அறைகள், பல பாதைகள் மற்றும் மன்னரின் உடலுக்கான சிறப்பு அறை என்று அனைத்துமே பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. பின்னர் கலைநயம் கொண்ட ஓவியங்கள், சிற்ப வேலைப்பாடுகள், பல ஆடம்பர பொருட்கள் கொண்ட பிரமிடுக்குள் உடல் வைக்கப்பட்டு பிரமிடு மூடப்படுகிறது.
தொல்லியல் தேடல்
அது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தின் நேரம். தொல்பொருள் ஆட்சியாளர்களுக்கு பாதி புதையல் என்ற விதி அமலுக்கு வருவதுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரமிடு கொள்ளையர்களால் பல செல்வங்கள் களவு போனது. எஞ்சியுள்ளதை தூர்வாரிய ஆய்வாளர்கள் தங்கள் பணி முடிந்ததென ஒதுங்கி கொண்டனர். “கிங் டட்” அன்று அழைக்கப்படும் துட்டகாமுன் கல்லறை மட்டும் கண்டுபிடிக்கபடாமலே இருந்தது. கார்ணர்வோன் என்பவர் இதற்காக நிதியளிப்பதாக கூறி தொல்பொருள் ஆய்வாளர் ஹாவர்ட் காட்டரை அழைத்தார். கிங் டட் எகிப்தின் பரோக்காக கி.மு. 1324 ஆண்டில் 1௦ ஆண்டுகள் ஆட்சி செய்து தனது 19 ஆவது வயதில் இறந்து விடுகிறார். இவரை பற்றிய வரலாறு அதிகம் வெளியுலகிற்கு தெரியாத காலம் அது.
ஹாவர்ட் காட்டர்
ஆங்கிலேய தொல்பொருள் ஆய்வாளரான காட்டர் பிறந்தது 1874 ஆம் ஆண்டு. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போல் பள்ளியில் இவரும் ஒரு புரிந்துகொள்ள முடியாத மந்தமான குழந்தையாக இருந்தார். பின்பு அவரை அவரின் அத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அங்கு தனியாக அவருக்கு கல்வியளிக்கப்பட்டது. இவரது தந்தை தொல்பொருள் ஆய்வாளர். அவருடன் இணைந்து பல பணிகளில் ஈடுபட்டு பின்பு இவரும் தனித்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
ஹாவர்ட் காட்டர் “கிங் டட்” டின் கல்லறையை கண்டறிய ஒரு குழு ஒன்றை அமைத்து பணிகளை தொடங்கினார். சுமார் வருடம் 1907 ஆண்டு தொடங்கிய பணிகள் 1922 வரை நடந்தது. காட்டரால் “கிங் டட்” டின் கல்லறையை கண்டுகொள்ள முடியவேயில்லை. நிதியாளர்கள்களின் அழுத்தம் கழுத்தை நெரித்தது. காட்டர் சட்டவிரோதமாக தன்னுடைய சொந்த தேவைகளுகாக புதையலை எடுத்துக்கொண்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவியது. கடுமையான சிக்கல்களுக்கு ஆளானார்.
அந்த வருடத்தின் இறுதியில் ஒரு நாள், எதேச்சையாக அவர் அந்த பாதையை கண்டார். ஒரு கல்லறையின் சிதைந்த பாகங்களுக்கு அடியில் ஒரு படிக்கட்டுகள் இறங்கியது. அதன் வழியாக சென்ற பொழுது மன்னர் துட்டகாமுன் கல்லறையை இறுதியாக அடைந்தார். அரசு அதிகாரிகள் முன்னிலையில் நான்கு பெட்டிகள் திறக்கப்படுகிறது. மூன்றில் தங்க ஆபரணங்கள், ஆயுதங்கள், பிற பொருட்கள் இருந்தன. நான்காவது பெட்டியை வேகமாக திறக்கிறார் காட்டர். அது “கிங் டட்” டின் கல்லறை. காட்டரின் கனவு நிறைவேறியது என்றாலும் அந்த கல்லறையில் எழுதியிருந்த வாசகம் அனைவருக்கும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. “கல்லறையை திறப்பவர்கள் விரைவில் மரணம் அடைவார்கள்” என்று எழுதியிருந்தது. ஏறத்தாழ 5௦௦0 பொருட்கள் அவரது பிரமிடுக்கு சுற்றி இருந்த அறைகளிலும், கல்லறையில் இருந்தும் கிடைத்துள்ளது. சுத்தமான இரும்பினால் ஆன குத்துவாள் அங்கிருந்து கிடைத்துள்ளது. எகிப்திய வரலாற்றில் அந்த பொருட்கள் அனைத்தும் மற்றொரு பரிமாணத்தை உலகிற்கு தந்தது.
கல்லறையில் எழுதியிருந்த இறுதி வரிகள் உயிர்பெற்றது. குறுகிய காலத்திலேயே காட்டருக்கு நிதியளித்தவர் மர்மக்காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விடுகிறார். பின்பு குழுவினரில் சிலர் இறந்து விடுகின்றனர். 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு விதமான புற்றுநோய் வந்து ஹாவர்ட் காட்டர் இறந்துவிட்டார். அந்த கல்லறையை திறந்த குழுவில் ஏறத்தாழ 12 பேர் குறுகிய காலத்தில் இறந்து விட்டனர். மிக இளவயதில் இறந்த “கிங் டட்”டின் சாபம் பலித்தது என்றே சொல்லலாம். அந்த பொருட்கள் உள்ள எகிப்தின் அருங்காட்சியகத்தை லட்சக்கணக்கான மக்கள் வருடா வருடம் பார்வையிட்டு செல்கின்றனர். ஹாவர்ட் காட்டர் பெயரை வரலாறு என்றும் நினைவில் கொள்ளும்.
பிரமிடுகளின் ஆழமான ரகசியங்கள்
நமக்கு பிரமிடுகள் என்றுவுடனே எகிப்து மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் இது போன்ற ஆயிரக்கணக்கான பிரமிடுகள் மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா பகுதிகளில் காணப்படுகிறது. சீனாவில் 3௦௦ பிரமிடுகள், சூடானில் 200 பிரமிடுகள் என்று உலகளாவிய தேசங்களில் பரவலாகவே பிரமிடுகளை கட்டும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் இவையனைத்துமே எகிப்தியர்கள் பயன்படுத்தியது போலான தேவைகளுக்கென்று குறிப்பிட்டு வரையறுக்க முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு ரஷ்ய மருத்துவரின் விளக்கங்களை கேட்டு ரஷ்ய அரசு சுமார் 1 44 அடி உயரம் கொண்ட பிரமிட் ஒன்றை கட்ட ஒப்புக்கொண்டது. ரஷ்ய மருத்துவரான விளாடிமிர் கிரஷ்னோஹோலோவெட்ஸின் பிரமிடுகள் பற்றிய கண்டுபிடிப்பு ஒரு புரட்சி என்றே சொல்லலாம். பிரமிடுகளுக்கு உள் இருப்பதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
ரத்தத்தின் வெள்ளை அணுக்களின் கூட்டு எண்ணிக்கை உயர்கிறது. உடலின் திசுக்கள் மறுசுழற்சி வேகமாக நடக்கிறது. தாவர விதைகளை பிரமிடுற்குள் ஐந்து நாட்கள் வைத்தால் அதில் அதிகமான அறுவடை கிடைக்கிறது. செலிகர் நதியோரம் கட்டப்பட்ட பிரமிடு ஒன்றினால் அதன் ஓசோன் படலம் மிக தூய்மையானது. இவ்வளவு சிறப்பு மிக்க பிரமிடுகள் இந்தியாவில் ஏன் இல்லை என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதென்றால் சற்றே சிந்தியுங்கள். நமது தஞ்சாவூர் கோவில், கங்கை கொண்டசோழபுரம், ஐராதீஸ்வரர் கோவில், தாராசுரம், திருச்சி ஸ்ரீ ரங்கம் அனைத்து கோவில் கோபுரங்களும் அந்த பிரமிடுகளே.
Web Title: Egypt Pyramids and Howard Carter
Featured Image Credit: wikipedia/newhistorian