சங்கதி தெரியுமா? பக்கங்களின் மறுபக்கம் – கல்கியின் கதைமாந்தர்கள் – பகுதி :03

அருண்மொழி வர்மன் 

கல்கி காவியத்தின் பாட்டுடைத் தலைவனாக உண்மையில் சிருஷ்டிக்கப்பட்ட பாத்திரமே அருண்மொழி வர்மன். பெரிதும் அறியப்படாத, அறியக் கிடைக்காத இராஜராஜப் பெருவேந்தரின் இளமைக் காலத்தை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதே உண்மையான பொன்னியின் செல்வன் நாவலின் கதைக்களம். ‘பொன்னியின் செல்வன்’ என்னும் பெயரே கதாநாயகனான அருண்மொழி வர்மனை சுட்டும் வகையில் தான் தேர்வு செய்யப்பட்டது. 

கி.பி 943ம் ஆண்டு ஐப்பசி மாத சதய நன்னாளில் சுந்தர சோழப் பராந்தகருக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்த அருண்மொழித் தேவன் தன்னுடைய வாலிபப் பராயம் வரை பழையாறையிலேயே கழித்தார். சிறு வயது முதலே இறைவன் பால் இருந்த பக்தியாலும், மக்களிடையே இருந்த செல்வாக்கினாலும் இளவரசு பட்டம் பெறுவதற்க்கு முன்னமே நாச்சியார் கோவிலுக்கு அருகே அருண்மொழிதேவ ஈஸ்வரம் என்ற பெயரில் ஈசனுக்கு ஆலயம் எடுப்பித்தார் சோழ இளவல். அருண்மொழி வர்மன், இராஜராஜனாக மாறுவதற்கு அரண்மனைப் பெண்டிரின் பங்களிப்பு கணிசமான அளவில் காரணமானது. செம்பியன் மாதேவி மற்றும் குந்தவை நாச்சியாரின் தாக்கத்தை இராஜராஜரில் பெரிதும் காணலாம். 

பொன்னியின் செல்வனில் கூறப்படுவது போல  அருண்மொழிவர்மர் தென்திசை மாதண்ட நாயக்கராக இருந்தமைக்கு ஆதாரங்கள் இல்லை. சுந்தர சோழரின் ஆட்சிக்காலத்திலே அவர் சோழ நாட்டில் ஏதேனும் உயர் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும். தஞ்சாவூரில் பெரிய கோவில் எடுப்பிக்க காரணம், அருண்மொழி இலங்கையில் கண்ட விண்ணுயர் விகாரைகளே என்று கல்கி ஒரு நியாயத்தை முன்னிறுத்தி இருப்பார். அளவுப் பிரகாரத்தில் இவ்வாதம் ஏற்புடையதாக இருக்கலாம். எனினும் அமைப்புப் பிரகாரம் தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயத்துக்கு முன்மாதிரியாக இருந்தவை தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் விட்டுச்சென்ற கலைப் பொக்கிஷங்களும் (குறிப்பாக காஞ்சி கைலாசநாதர் திருக்கோயில்), புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயாலய சோழர் எடுப்பித்த கற்றளியுமே என சமகாலத்து வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

அருள்மொழிவர்மன் -புகைப்பட உதவி -Pinterest.com

குந்தவை நாச்சியாரை போலவே அருண்மொழியின் திருமண உறவும் காதலுக்காக நடந்தேறி இருக்க வாய்ப்பில்லை. கிடைக்கப்பெறும் வரலாற்று சான்றாதாரங்களைக் கொண்டு நோக்கும் போது இராஜராஜனுக்கு 16 மனைவிகள் இருந்திருக்க வாய்ப்புண்டு. இவர்களில் மூவர் முக்கியம் வாய்ந்தவர்கள். இராஜேந்திரனின் தாயாக கல்கி நமக்கு காட்சிப்படுத்திய ‘உடையபிராட்டி தம்பிரானடிகள் திரிபுவன மாதேவியான வானவன் மாதேவி’, பட்டத்து அரசியான ‘ராஜராஜர் நம்பிராட்டியார் லோகமாதேவியான தந்திசக்தி விடங்கியார்’, இராஜேந்திரரால் பள்ளிப்படை எழுப்பப்பட்ட  ‘பழுவூர் நக்கன் பஞ்சவன் மாதேவியார்’. பெருவுடையார் கோவில் மூலவரின் திருச்சுற்றுப் பிரகாரத்தில் உள்ள இராஜராஜர் ஓவியத்தின் அருகில் இருக்கும் மூன்று பெண்மணிகளும் இந்த மூன்று அரசிகளுமே என்று கருதப்படுகிறது.

மக்களிடையே அருண்மொழிவர்மருக்கு இருந்த பெரும் செல்வாக்கும், ஆதரவும் கல்கியால் மிக அழகாக வெளிக்காட்டப்பட்டிருக்கும். அதற்கு வலு சேர்க்கும் வரலாற்று ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. திருவாலங்காட்டு செப்பேடுகள் ஆதித்தரின் மறைவைத் தொடர்ந்து அருண்மொழியை ஆட்சிப் பீடமேற மக்கள் மன்றாடும் காட்சி கூறப்படுவதில் இருந்து, முடி இளவரசராக இல்லாத போதிலும் மக்கள் மத்தியில் அருண்மொழிக்கு இருந்த செல்வாக்கை காட்டுகிறது. இராஜராஜர் மீது மக்கள் கொண்ட பேரன்பினால் அவருடைய பிறந்த தினமாகிய ஐப்பசி சதயம் சோழ நாடெங்கும் பல திருக்கோயில்களில் பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. திருவெண்காட்டில் சாதயா விழா ஏழு நாட்கள் கொண்டாடப்படும் வழமை இருந்தது. பெருவுடையார் ஆலயம் உள்ளிட்ட சில ஆலயங்களில் மாதம் தோறும் வரும் சதய நாட்களில் கூட ராஜராஜாருக்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் வழமை இருந்தது. இராஜராஜரின் இளமைப் பருவத்திற்கு கல்கி நல்லதொரு நியாயம் செய்துள்ளார் என்பதில் ஐயமில்லை. 

ஆதித்த கரிகாலன்

பொன்னியின் செல்வனில் வடிவமைக்கப்பட்ட மிக ஆழமான கதாபாத்திரங்கள் சிலவற்றுள் அதிகளவு பேசப்படாத பாத்திரம் ஆதித்த கரிகாலன். ஆதிக்கத்தன்மை, முன்கோபம், காதல் தோல்வி என பல  யதார்த்தமான குணவியல்புகளை கொண்டு கல்கி இக்கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். கதையோட்டத்தில் நந்தினியின் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து கொள்வது, மர்மமான முறையில் கொலை செய்யப்படுவது முதல் வரலாற்றின் பார்வையில் வரை புதிரோடி இருக்கும் ஒரு பெயராகவே ஆதித்த கரிகாலன் பெயர் அணுகப்படுகிறது. அந்த வகையில் கல்கி இந்த வரலாற்றுப் பெயரை ஒரு புது வகையில் கையாண்டுள்ளார்.

சேவூர் போரில் வென்று வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகாலன் ராஷ்ட்ரகூட படையெடுப்பால் சோழராட்சியில் இருந்து கைநழுவிய தொண்டை மண்டலத்தை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.  பொன்னியின் செல்வனில் கூறப்படுவது போலவே ஆதித்தன் வடதிசை மாதண்ட நாயக்கனாக பணியாற்றியிருக்கக் கூடும். மீண்டும் சோழராட்சிக்கு உட்பட்ட வடதமிழகம் எங்கும் ஆதித்தனின் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன; ஆனால் பிறிதொரு பெயரில். பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த கரிகாலனின் நண்பர்களாக/பணியாளர்களாக மூவர் தோன்றுவர். அவர்கள் வாணர் குல வீரன் வந்தியத்தேவன், சம்புவரையர் மகன் கந்தன் மாறன் மற்றும் பல்லவ குலத்து பார்த்திவேந்திர வர்மன். கல்கியின் கதையில் ஆதித்த கரிகாலனும், பார்த்திவேந்திர வர்மனும் தனித்தனி கதாபாத்திரங்களாக தோன்றினாலும் கிடைக்கப்பெறும் வரலாற்று ஆதாரங்களின் படி அவர்கள் இருவரும் ஒரே நபராக இருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

ஆதித்த கரிகாலன்  -புகைப்பட உதவி – artstation.com/jaycreation

யார் இந்த பார்த்திவேந்திர வர்மன்? கல்கியின் எழுதுக்களின் படி பார்த்திவேந்திரன், பல்லவ மரபில் வந்த சோழரதிகாரத்துக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவன். ஆரம்பத்தில் கரிகாலனின் நண்பனாய் இருந்து, பின்னர் நந்தினியால் மனமாற்றமடைந்து, சோழரதிகாரத்தில் இருந்து சுதந்திரம் பெற விளையும் ஒரு கதாபாத்திரமாக கதையில் பயணிக்கும் இவன் பிற்காலத்தில் சோழருக்கு எதிரான போரில் சிறிய பழுவேட்டரையாரால் கொல்லபடுமாறு நந்திபுரத்து நாயகி நாவலில் கூறப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் இவன் பல்லவ மரபினனா? சோழரதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்தவனா? என்பது குறித்து பார்ப்போம். 

சோழராட்சியில் பல சிற்றரசர்கள் வலுவான அதிகாரத்துடன் பேரரசின் பல பகுதிகளை ஆண்டுவந்தனர், பல நிவந்தங்களை வழங்கியுள்ளனர், கல்வெட்டுக்களை விட்டுச்சென்றுள்ளனர். ஆனால் இதில் எவரும் தங்கள் பெயரால் தனித்து கல்வெட்டுக்களை பொரித்தது இல்லை. அதிகாரம் மிக்க கொடும்பாளூர் வேளிர்கள், பழுவூர் பழுவேட்டரையர்கள், திருக்கோவிலூர் மலையமான்கள், கடம்பூர் சம்புவரையர்கள் என எந்த சிற்றரசாரும் தங்கள் பகுதியில் கல்வெட்டுக்களை வெளியிடும் போது ஆட்சியில் இருக்கும் சோழ அரசர் அல்லது இளவரசர் பெயரிலேயே வெளியிடுவது வழமை. ஆனால் பார்த்திவேந்திரன் கல்வெட்டுக்கள் அனைத்தும் நேரடியாக அவன் பெயரிலேயே வெளியிடப்பட்டன. இவனது 13 வருட ஆட்சிக் காலத்தில் கிடைக்கும் 40 கல்வெட்டுகளும் நேரடியாக இவன் பெயரிலேயே கிடைப்பதுடன், இக்கல்வெட்டுக்கள் எதிலும் இவனை பல்லவன் என குறிப்பிடும் காடவன், தொண்டைமான் என்ற விருதுப் பெயர்கள் இல்லை.  மேலும் இவன் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது அரசிகள் ஏந்தியிருக்கும் வில்லவன் மாதேவி மற்றும் திரிபுவன மாதேவி ஆகிய பட்டங்கள் சுதந்திர பேரரசின் அரசிகள் மட்டுமே சூடிக்கொள்ளும் சிறப்பு பட்டங்கள். ஆகவே இவன் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவ சிற்றரசனாக இருக்கக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. 

பார்த்திவேந்திரன் கல்வெட்டுக்களுக்கும், ஆதித்த கரிகாலன் கல்வெட்டுக்களுக்கும் இடையே சில சுவாரஸ்யமான ஒற்றுமைகள் உள்ளன. இவ்விருவரும் ‘வீரபாண்டியன் தலை கொண்ட’ என்ற விருதுப் பெயரை மட்டுமே தங்களது அனைத்து கல்வெட்டுகளிலும் குறிப்பிடுகின்றனர். பொன்னியின் செல்வன் கதையின் பிரகாரம் இருவரும் சேவூர் போரில் வீரபாண்டியனை எதிர்த்து வென்றமையால் இந்த பட்டம் கிடைக்கப்பட்டிருக்கும் என விளக்கம் அளிக்கலாம். ஆனால் இன்னும் ஒரு சில முக்கிய ஒற்றுமைகள் இவ்வாறான விளக்கங்களுக்கு அப்பால் நிற்கின்றன. இடைக்கால சோழ அரசர்கள் ராஜகேசரி மற்றும் பரகேசரி என்ற பட்டங்களை மாறி மாறி சூடிக்கொள்ளும் வழமை இருந்தது. இது சோழர்களுக்கே இருந்த தனி உரிமை. திருவிடந்தை பகுதியில் கிடைத்த பார்த்திவேந்திரன் கல்வெட்டில் அவன் பரகேசரி வேந்திர வர்மன் எனக் குறிப்பிடப்படுகிறான். ஆதித்த கரிகாலனின் தந்தை சுந்தர சோழர் ஒரு ராஜகேசரி என்பதால் அடுத்து பட்டத்துக்கு வரவேண்டிய கரிகாலன் பரகேசரி என்ற விருது பெயரை சூடியிருந்தான். கரிகாலனின் அனைத்துக் கல்வெட்டுகளும் பரகேசரி என்ற பட்டத்தையே தாங்கி நிற்கின்றன. பார்த்திவேந்திரனும் ஒரு பரகேசரி என தன்னை குறிப்பிடுவது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு  தொடர்பாகும்.

ஆதித்த கரிகாலன்,மலையமான், பார்த்திவேந்திரன்-புகைப்பட உதவி Pinterest.com

மேலும் உருத்திரமேரூர் பகுதியில் கிடைத்த பார்த்திவேந்திரன் கல்வெட்டு ஒன்று அவனை பார்த்திவேந்திர ஆதித்த வர்மன் என விளிக்கிறது. இது நேரடியாக பார்த்திவேந்திரன் மற்றும் ஆதித்தனை ஒன்றாக இணைக்கிறது. ஆகவே, மேற்கூறிய காரணங்களில் இருந்து  பார்த்திவேந்திரனும், ஆதித்த கரிகாலனும் ஒரே நபரே என்ற நிலைப்பாட்டுக்கு வரலாம். எனவே சுந்தரச் சோழர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற அதே வருடத்தில் தன் மகன் ஆதித்த கரிகாலனை இளவரசனாக முடிசூட்டி சோழ நாட்டை வலுவூட்டும் வேலைகளில் அவனை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். கரிகாலன் பதிமூன்று ஆண்டுகள் இளவரசனாக பணியாற்றி சோழ அரசுக்காக பணியாற்றியிருக்க வேண்டும். கரிகாலனின் இயற்பெயர் பார்த்திவேந்திர வர்மன் (அருண்மொழி வர்மன் போல) என அமைந்திருக்க வேண்டும், அவனது சிறப்புப்பெயராக ஆதித்த கரிகாலன் அறியப்பட்டிருக்க வேண்டும். 

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் கல்கி ஏன் ஆதித்த கரிகாலனும், பார்த்திவேந்திரனும் வெவ்வேறு நபர்கள் என தன்னுடைய கதையில் நிறுவியுள்ளார்?. முதல் காரணம் பார்த்திவேந்திரன் கல்வெட்டுக்களில் பெரும்பான்மையானவை தொண்டை மண்டலத்து எல்லைக்குள்ளாகவே கிடைக்கின்றன. ஆனால் கரிகாலன் கல்வெட்டுக்கள் சோழ நாட்டில் மட்டுமே கிடைக்கின்றன. ஆகவே இருவரும் வெவ்வேறு நபர்களாக இருக்கும் வாய்ப்பு இருக்கும் என கல்கி எண்ணியிருக்கலாம். மேலும் இந்த தொண்டை மண்டலக் கல்வெட்டுகளே பார்த்திவேந்திரனை பல்லவ மரபினனாக நிறுவ கல்கி எடுத்துக்கொண்ட ஆதாரம். அடுத்த காரணம் பார்த்திவேந்திரனும், கரிகாலனும் ஒரே நபர்கள் எனக் கூறினால் கதை பிரகாரம் கரிகாலனுக்கு மூன்று மனைவிகள் இருக்கும் சூழல் உருவாகும். இது நந்தினி-ஆதித்தன் உறவில் நாம் கண்ட வசீகரத்தை இல்லாது செய்வதுடன், கதையின் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கலாம். மேலும் இந்த கல்வெட்டுக்கள் பொன்னியின் செல்வன் கதையை கல்கி வரைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டன, ஆகவே வரலாற்று ஆசிரியர்கள் ஒருமித்த முடிவொன்றுக்கு வர முன்னர் தாமாக நடுநிலை முடிவை மேற்கொண்டு அப்பாத்திரங்கள் இரண்டையும் கல்கி உருவாக்கியிருக்க வேண்டும். ஒரு கதாசிரியராக வாசகர்கள் நமக்கு விருவிருப்பை ஏற்படுத்தவே இந்த மாற்றங்கள் உருவாகின. 

பொன்னியின் செல்வன் நாவலின் அட்டைப்படம் -புகைப்பட உதவி-Pinterest.com

 

சங்கதி தெரியுமா?! தொடரின் அடுத்த பகுதியில் ஆதித்த கரிகாலனின் கொலையுடன் தொடர்புடையதாக இன்றளவும் சந்தேகிக்கப்படும் மதுராந்தக உத்தம சோழரையும், அவரை திருவயிறு வாய்த்த செம்பியன்மாதேவி அம்மையாரை பற்றியும் ஆராய்வோம்.

Related Articles

Exit mobile version