நமது கலை கலாசாரத்தை எத்தனை விதமாக சொன்னாலும், நடனத்தின் மூலமாக சொல்லும்போது தமிழுக்கான அழகு மேலும் அதிகரிக்கின்றது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனங்களைப் பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நமது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இன்றுவரை புழக்கத்தில் இருக்கும் இந்தக் கலைகள் பற்றி நன்கு அறிந்துகொள்வோம். நமது அடுத்தத் தலைமுறைக்கு இதன் மகிமையை எடுத்துரைப்போம்.
கரகாட்டம்
தமிழர்களின் பாரம்பரிய நடனங்கள் பற்றி பேசினால் நமக்கு முதலில் தோன்றுவது கரகாட்டம் தான். அம்மனை மனதில் நினைத்துக்கொண்டு பலநாட்கள் விரதங்கள் இருந்து தலையில் கரகத்தை வைத்து ஆடுவதுதான் கரகாட்டம். பெரும்பாலான கோவில்களில் ஆடப்படும் கரகாட்டத்தை சக்தி கரகாட்டம் என்று கூறுவார்கள். மக்களை மகிழ்விக்கும் வகையில் ஆடப்படும் கரகத்திற்கு, ஆட்ட கரகம் எனும் பெயர் உள்ளது. தற்போது இந்த நடனக்கலை பல்வேறு உடல் பயிற்சி நிலையங்களில் உடலினை சீராக வைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்கப் படுகிறது. 1989 ஆம் ஆண்டு கரகாட்டத்தை மையமாக வைத்து வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படம் வெள்ளி விழா கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்மியாட்டம்
நகரத்தில் வசிக்கும் பலருக்கும் நமது பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கும்மியாட்டம் பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். கும்மியாட்டம் பெரும்பாலும் கிராமங்களில் திருவிழா நாட்களில் பல பெண்கள் சேர்ந்து வட்டமாக சுழன்றபடி ஆடும் ஓர் அற்புதமான நடனக் கலை ஆகும். எந்தவொரு இசைக்கருவியும் இல்லாமல் பெண்கள் ஒரு வட்டமாக சூழ்ந்துகொண்டு கைகளைத் தட்டிக்கொண்டே இறைவனை வேண்டி பாடுவது இதன் சிறப்பம்சம் ஆகும். கும்மியாட்டம் தமிழகத்தை தவிர்த்து கேரளாவிலும் ஆடப்படுகிறது. ஊரும், ஊர் மக்களும் என்றென்றும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று இந்த கும்மியாட்டம் ஆடப்படுகிறது.
ஒயிலாட்டம்
நாட்டுபுற கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் பெரும்பாலும் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடப்படும் நடனமாகும். இசைக்கு ஏற்றவாறு கைகளில் கைக்குட்டைகளை வைத்து கொண்டு ஆடும் நடனம் தான் ஒயிலாட்டம். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த நடனத்தை தற்போது பெண்களும் ஆடத் தொடங்கிவிட்டனர். இந்த நடனம் இராமாயணம், மகாபாரதம் மற்றும் முருகனின் வரலாற்றை கூறும்விதமாக அமைக்கப்படும் என்பது மதுரை கிராம மக்களின் கருத்தாகும்.
தப்பாட்டம்
தப்பாட்டம் தமிழ் பாரம்பரியத்தின் மிக பழமையான நடனங்களின் ஒன்றாகும். இந்த நடனத்திற்கு தென் மாவட்டங்களின் ‘பறையாட்டம்’ என்று மற்றொரு பெயரும் உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய நடனமான தப்பாட்டம் உணர்ச்சி மிகுந்த எழுச்சி நடனம் ஆகும். பறை என்பதற்கு பேசு என்பது அர்த்தம் ஆகும். பறை கருவியை அடித்துக்கொண்டு அதன் ஓசைக்கு ஏற்றபடி ஆடுவது இதன் கலை ஆகும். பல நுற்றண்டுகளுக்கு முன்பு ஆதி மனித சங்கம் விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எழுப்பிய சத்தம்தான் பறை என மக்களால் நம்பபடுகிறது. இதன் வரலாறு; பண்டைய காலத்தில் விலங்குகளை வேட்டையாடி அதில் மிஞ்சும் தோள்களை வைத்து தயரிக்கபடுவதுதான் பறை கருவியாகும்.
மயிலாட்டம்
மயில் தோகைகளை சேகரித்து ஆடையுடன் சேர்த்து வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்துக்கொண்டு ஆடப்படும் நடனமாகும். பெரும்பாலும் பெண்கள் இந்த நடனத்தை ஆடுவார்கள். தமிழ்க் கடவுள் முருகனுக்கு பிடித்த நடனம் மயிலாட்டம் தானாம். அதனால் தான் அவர் தனது வாகனமாக மயிலை வைத்துள்ளார் என முன்னோர்களால் நம்பப்படுகிறது. ஆனால் மற்ற நடன கலைகளை போல் மயிலாட்டம் பிரபலம் அடையாமல் இருப்பதால் தற்போது இந்த கலை அழியும் அபாயத்தில் உள்ளது.
பொய்க்கால் குதிரையாட்டம்
‘பொய்க்கால் குதிரையாட்டம்’ தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பிரபலமான நடனம் ஆகும். கிராமப்புறங்களில் ஐய்யனாரை வேண்டி இந்த பொய்க்கால்குதிரை ஆட்டம் நடைபெறுகிறது. இந்த நடனம் எந்தளவுக்கு பிரபலம் என்றால் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று டெல்லியில் இந்த பொய்க்கால்குதிரை ஆட்டம் அரங்கேறும். பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் இது பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம் ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக ஒருசில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புலியாட்டம்
உலக நாயகன் கமல்ஹாசன் முதல் இன்றைய புதுமுக நடிகர்கள் வரை அனைத்து முன்னணி திரையுலகினரும் ஆடிய ஆட்டம் என்றால் அது புலியாட்டம் தான். உடலில் புலி போன்று வர்ணம் பூசிக்கொண்டு ஆவேசமாக ஆடுவதினால் இந்த நடனக் கலை புலியாட்டம் என்று அழைக்கபடுகின்றது. இந்த ஆட்டத்தினை தற்போது தமிழகத்தில் பெரும்பாலோனோர் மறந்துவிட்டனர். ஆனால் கேரளா மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் மிகவும் பிரபலமான நடனமாக கருதப்படுகிறது.
காவடியாட்டம்
தை மாதத்தில் தைப்பூச திருநாளில் முருகப்பெருமானை துதிக்கும் பக்தர்களால் வில் வடிவில் காவடி அலங்கரித்து ஆடப்படுவது காவடியாட்டம் ஆகும். இந்த காவடியாட்டம் பெரும்பாலும் பழனி, சிங்கப்பூர், திருச்செந்தூர், இலங்கை மற்றும் புது தில்லி போன்ற பெருமை வாய்ந்த முருகன் கோவில்களில் பிரபலம் ஆகும். காவடியாட்டதில் பலவகையான காவடிகள் உள்ளன. பால் காவடி, பன்னீர்க் காவடி, மச்சக் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, மற்றும் தூக்குக் காவடி என பல்வேறு காவடிகள் உள்ளன.
இதனைத் தவிர்த்து தமிழகத்தில் பல்வேறு நடனங்கள் பிரபலமாக உள்ளது. அவைகளில் தேவராட்டம், பொம்மலாட்டம், கோலாட்டம், பாரத நாட்டியம் கூத்து ஆட்டம், பாம்பாட்டம், சேவலாட்டம் போன்ற பல்வேறு ஆட்டங்கள் தமிழகத்தில் பிரபலமான நடனங்கள் ஆகும்.
இந்தப் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தாலோ அல்லது எங்களது தகவல்களில் தவறு இருந்தால் தயவுசெய்து உங்களது கருத்தை எங்களுடன் பகிரவும். மீண்டும் ஒரு சுவாரசியமான தகவலுடன் சந்திப்போம்.
Feature Image Credit: aa.com