சந்தைப்படுத்தல் (மார்க்கெட்டிங்) நிபுணர் ஆகலாம்

கடைக்குச்செல்கிறீர்கள். அங்கே மிட்டாய், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களில் தொடங்கிப் பேனா, பென்சில், பொம்மைகள், ஆடைகள் என்று பலவிதமான பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்குகிறீர்கள்.

ஆனால், இது பிடித்தது, இது பிடிக்காதது என்று எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

எடுத்துக்காட்டாக, பச்சை நிறத்தில் ஒரு மிட்டாய், சிவப்பு நிறத்தில் ஒரு மிட்டாய், இந்த இரண்டில் எதை வாங்குவது?

Chocolate Colors (Pic: maxpixel.freegreatpicture.com)

நேற்றைக்குத் தொலைக்காட்சியைப் பார்க்கும்போது பச்சை மிட்டாயின் விளம்பரம் வந்தது. அந்த விளம்பரம் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இன்று காலை செய்தித்தாளில் காமிக்ஸ் படித்துக்கொண்டிருந்தீர்கள். அதற்குப் பக்கத்தில் அதே பச்சை மிட்டாயின் விளம்பரம் இருந்தது.

சில நிமிடங்களுக்குமுன்னால் இந்தக் கடைக்குள் நுழையும்போது, அங்கே ஒரு பிரமாண்டமான பொம்மை வைத்திருந்தார்கள். அந்தப் பொம்மையின் கையில் ஏழெட்டுப் பச்சை மிட்டாய்கள் இருந்தன.

இப்படிக் கடந்த சில நாட்களில் அந்தப் பச்சை மிட்டாய் தொடர்பாக நீங்கள் பார்த்த வெவ்வேறு விஷயங்கள் உங்களையும் அறியாமல் உங்கள் மனத்தில் பதிந்துவிட்டன. ஆகவே, பக்கத்திலேயே சிவப்பு மிட்டாய் இருந்தாலும்கூட, நீங்கள் அந்தப் பச்சை மிட்டாயைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அதைவிட இந்த மிட்டாய் ருசியானது என்று நினைக்கிறீர்கள்; அதற்காக ஓரிரு ரூபாய் கூடுதலாகத் தரவும் தயாராக இருக்கிறீர்கள்.

இதைப்பார்த்துவிட்டு அந்தச் சிவப்பு மிட்டாய் நிறுவனம் சும்மா இருக்குமா? நாளைக்கு அவர்களும் தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையத்தளம், மொபைல், கடைவாசல்கள், விளம்பரப் பதாகைகள் எனப் பலவிதங்களில் உங்களை ஈர்க்க முற்படுவார்கள். இந்த இரண்டில் யார் உங்களை அதிகம் ஈர்க்கிறார்களோ அவர்கள்தான் ஜெயிப்பார்கள்.

ஐந்து ரூபாய் மிட்டாய்க்கே இப்படியென்றால், இன்னும் பெரிய பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எப்படியெல்லாம் திட்டமிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று யோசியுங்கள். இதைத்தான் சந்தைப்படுத்துதல் (Marketing) என்கிறோம்.

Marketing (Pic: wikimedia)

இன்றைய தேதிக்கு ஒரு சிறிய குண்டூசியில் தொடங்கிக் கார், வீடு, விமானம் போன்ற பெரிய பொருட்கள்வரை அனைத்தையும் சந்தைப்படுத்தவேண்டியிருக்கிறது. இன்னொருபக்கம், உணவகங்கள், கடைகள், பொருட்களைப் பழுதுபார்க்கிறவர்கள், மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு, தொலைபேசி இணைப்பு, இணையம் போன்ற அத்தியாவசியச் சேவைகளை வழங்குகிறவர்கள், அவ்வளவு ஏன், பள்ளி, கல்லூரிகள்கூட வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கப் போட்டிபோடுகிறார்கள். இதனால் உலகெங்கும் மார்க்கெட்டிங் நிபுணர்களுக்குத் தேவை பெருகியிருக்கிறது.

குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களைச் சென்றடைவது மிக எளிதாகிவிட்டது. அதேசமயம் எல்லாரும் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதால், கடும் போட்டிக்கு நடுவே நம்முடைய நிறுவனத்தை, தயாரிப்புகளை மக்கள் மனத்தில் நிலைநிறுத்துவதற்குத் திறமையான மார்க்கெட்டிங் நிபுணர்கள் வேண்டும்.

Marketing Expert (Pic: pixabay.com)

நாம் மார்க்கெட்டிங் நிபுணர்கள் ஆவது எப்படி?

பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, சந்தைப்படுத்துதல் துறையில் பட்டப்படிப்பு பெறலாம். அல்லது, வேறொரு துறையில் படித்தபடி பகுதிநேரமாகச் சந்தைப்படுத்துதல் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம். பல இணையத்தளங்களும் இப்போது இதனைக் கற்றுத்தருகின்றன. இதுபற்றி விரிவான நூல்களும் உள்ளன.

இவை அனைத்திலும், நாம் எதைச் சந்தைப்படுத்த விரும்புகிறோமோ அதைப்பற்றி நம் வாடிக்கையாளர்களுக்குப் புரியும்படி ஒரு தெளிவான கருத்தை உருவாக்குவது எப்படி, அதன்மூலம் அவர்களுக்கு என்ன கூடுதல் நன்மை என்பதைத் தெரிவிப்பது எப்படி, அதனைப் பல்வேறு ஊடகங்களின்வழியே கொண்டுசெல்வது எப்படி என்கிற அடிப்படை அம்சங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, நாம் ஒரு பேனாவை மார்க்கெட்டிங் செய்கிறோம் என்றால், அந்தப் பேனாவினால் எழுதுபவருக்கு என்ன நன்மை என்று யோசிக்கவேண்டும்:

* முத்துமுத்தாக எழுதும்

* நெடுநேரம் எழுதும்

* கையில் பிடித்து எழுதினால் விரல்கள் வலிக்காது

* தாளில் எழுத்து நன்கு தெளிவாகத் தெரியும்

* விலை குறைவு

Fountain Pen (Pic: wikimedia.org)

இப்படி ஒவ்வொரு பொருளிலும் பல நன்மைகள் இருக்கும். அவற்றை மக்களுக்குப் புரியும்படி தெளிவாகச் சொல்லத்தெரிந்துகொள்ளவேண்டும். அது எழுத்தாக இருக்கலாம், படமாக இருக்கலாம், வீடியோவாக இருக்கலாம், வேறுவிதமான பொருளாகவும் இருக்கலாம்.

அடுத்து, அந்த விஷயத்தை மக்களிடையே கொண்டுசெல்கிற ஊடகங்களைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி, இணையம், வாடிக்கையாளர்களை நேருக்குநேர் சந்தித்தல் என்று இவை பலவகைப்படும்.

சந்தைப்படுத்துதல் நிபுணரின் பணி, ஒரு பொருளைப்பற்றி வாடிக்கையாளர்களிடம் சொல்வதுமட்டுமில்லை; வாடிக்கையாளர்களுக்கு என்னவிதமான பொருட்கள் தேவை என்பதைக் கண்டறிவதும் அவருடைய வேலைதான்.

எடுத்துக்காட்டாக, பேனா வாங்கும் வாடிக்கையாளர்கள் யார், அவர்களுக்கு என்னமாதிரியான பேனாக்கள் தேவைப்படுகின்றன, அவற்றில் அவர்கள் என்ன நன்மைகளை எதிர்பார்க்கிறார்கள், அவற்றுக்காக அவர்கள் எவ்வளவு விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்… இப்படிப் பல விஷயங்களை ஆராய்ந்து அந்தப் பேனாத் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொல்லப்போவது, மார்க்கெட்டிங் நிபுணர்களான நீங்கள்தான்.

நன்கு திட்டமிட்டு, நல்ல பொருளாகத் தயாரித்து, சிறப்பானவகையில் நீங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயன்றுகொண்டிருக்கும்போது, உங்களுடைய போட்டியாளர்களும் அதேபோன்ற பொருட்களுடன் உங்களோடு மோதுவார்கள். அல்லது, சந்தையில் வாடிக்கையாளர்கள் உங்களுடைய தயாரிப்புகளைப் பயன்படுத்திப்பார்த்துவிட்டு அதில் சில குறைகளைச் சொல்வார்கள். இதுபோன்ற சவால்களின்போது ஒரு மார்க்கெட்டிங் நிபுணர் கவனமாகச் சிந்தித்துச் சரியானவகையில் திட்டமிட்டு அவற்றைச் சமாளிக்கவேண்டும்.

மார்க்கெட்டிங் என்பது மிகவும் செலவுபிடிக்கிற விஷயம். ஆகவே, நாம் செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியான பலன் வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அப்படி வரவில்லையென்றால் சட்டென வேறுவகையில் சிந்திக்கத்தொடங்கவேண்டும்.

மொத்தத்தில், சந்தைப்படுத்துதல் என்பது ஒரு சவாலான விளையாட்டு; அதேசமயம், அந்தத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஓர் ஆனந்தமான அனுபவமாகவே இருக்கும். ஒவ்வொரு வெற்றியிலும் தோல்வியிலும் பாடம் கற்றுக்கொண்டு வேகமாக முன்னேறுவார்கள், தங்கள் பொருட்களை இன்னும் அதிகப்பேரிடம் கொண்டுசெல்வார்கள்.

Front Wrapper Of The Book (Pic: amazon.com)

மாணவர்களுக்கு வெவ்வேறு துறைகளைப்பற்றிய அறிமுகத்தை வழங்கும் ‘பள்ளிக்குப்பிறகு’ என்ற மின்னூலிலிருந்து (Kindle eBook) வழங்கப்பட்டுள்ள கட்டுரை இது. ரூ49 விலையுள்ள இந்நூலை நீங்கள் அமேசான் இணையத்தளத்தில் வாங்கலாம், Kindle Unlimited சந்தாதாரர்கள் இதனை இலவசமாகவே படிக்கலாம்: http://amzn.to/2G52Il7

Web Title : To Become a Marketing Expert

Featured Image Credit : gettyimages.in

Related Articles

Exit mobile version