roar தமிழ் வாசகர்களுக்காக நாம் கொண்டுவரும் புதிய தொடர் இது. நீங்கள் அறிந்த இலங்கையின் பிரபலங்கள் தாங்கள் ரசித்த உலக சினிமாக்கள் பற்றி roar தமிழ் வழியே பகிர்ந்துகொள்ள உள்ளனர். இனி, வாரம் ஒருமுறை உங்கள் திரைப்பட ரசனைக்கு இலங்கைப் பிரபலங்களின் ரசனை வழியே விருந்து படைக்கப்படும்.
A.R.V. லோஷன் – வானொலி அறிவிப்பாளர் / ஊடகவியலாளர்
கிட்டத்தட்ட 20 வருடங்களாக மலையாளப் படங்களின் ரசிகனாக – அவற்றின் பல்வகைமை, இயல்புத்தன்மை, எங்கள் வாழ்க்கையோடு ஒன்றிய கூறுகள் என்பவற்றுக்காக தெரிந்தெடுத்துப் பார்த்துவருவதுண்டு – ஆங்கில உபதலைப்புகளுடன்.
கொரோனா வீட்டிலிருத்தல் காலம், அண்மைக்கால பரபரப்பு வாழ்க்கையில் கொஞ்சம் இடைவெளி விழுந்த காலமாக அமைந்தது. இந்தக் காலம்தான், கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் வந்த மலையாளப் படங்களை Facebook நண்பர்கள் மூலம்கொண்டுவந்து சேர்த்தது. பார்த்தவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல. அவற்றில் இரண்டைப் பற்றி மட்டும்…
Trance (2020) மலையாளம்
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வந்த படம். Trance என்றால் அரை மயக்க நிலை என்று பொருள். வாழ்க்கையில் தொடர்ச்சியாக இழப்புக்களையும் விரக்தியையும் கண்டுவரும் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு செயலூக்கப் பேச்சாளன் – Motivational Speaker; எப்படியாவது வாழ்க்கையில் வென்றுவிடவேண்டும் என்ற திடம் கொண்டவன். அவன் தான் விஜூ. இந்த உலகத்தில் பெரும் பணத்தை சம்பாதிப்பது என்றால் அது மக்களை வசியப்படுத்தியும் பயப்படுத்தியுமே முடியும் என்று திடமான வழியை எடுத்த ஒரு கோப்பரேட் மாஃபியா, சாமான்யனான அந்த விஜூவை சர்வசக்தியும் வாய்ந்த ஒரு போதகராக உருமாற்றுகிறது; மக்களுக்கு மத போதை உருவேற்றுகிறது. ஃபஹத் ஃபாசில் என்ற ஒரு அற்புதக் கலைஞன் JC – ஜோஷுவா கார்ல்டன் என்ற ஒரு கோப்பரேட் போதகராக உருவெடுக்கும் அந்தக் காட்சிகள் சர்வதேசத் தரம். உடல்மொழி + முகபாவனைகள் வாய்பிளக்க வைத்துவிடும். மதம் என்ற விடயத்தை பல மதத்தவர் உள்ள கேரளாவில் அதுவும் முஸ்லிம் மதத்தவரான இயக்குனர், கதாநாயகர் இருவரும் சேர்ந்து எடுப்பது எவ்வளவு துணிச்சலானது என்று நாம் வியந்தாலும் மலையாளத் திரைப்பட உலகில் இது வெகு சாதாரணம்.
மதத்தை மையப்படுத்தி, அடித்தட்டு வர்க்க மக்கள் முதல் கோடிக்கணக்கான பணம் புழங்கும் மேல்வர்க்கம் வரை, மயக்கி அடிமைப்படுத்தி எப்படி ஒரு மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யம் உருவாக்கப்படுகிறது? அதற்குள் மிகவும் சென்சிட்டிவான மத விடயங்களை எவ்வாறு விமர்சனத்துக்கு உட்படுத்தலாம் என்று சாமர்த்தியமான திரைக்கதை. முக்கிய பாத்திரங்களில் இயக்குனர் கௌதம் மேனன், நஸ்ரியா, விநாயகன்.. ஏற்கெனவே (சில ஆண்டுகளுக்கு முதல்) மொழிகடந்து பலரையும் வியக்க வைத்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ என்ற படத்தின் பின் உறுமீன் வரக் காத்திருந்து இயக்கிய அன்வர் ரஷீத்; கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு சின்னங்களையும் குறியீடுகளையும் படம் முழுக்க விமர்சன ரீதியாக வைத்துள்ளார். தமிழில் எல்லாம் நினைத்தாலும் இப்படியொரு படம் வராது.
தொட்டப்பன் (2019) – மலையாளம்
சென்ற ஆண்டு வெளிவந்த ஒரு மலையாளப்படம். ஒரே வரியில் கதையைச் சொல்லிவிடலாம். நண்பனின் மகளுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் ஒரு பாசத்துக்குரிய முரடன். ஆனால் கதைப் பின்னணி, ஒரு கிராமத்தைச் சுற்றிய கதையும் மாந்தர்களும், அந்தக் கதை மாந்தர்களின் மனப் பிரதிபலிப்புகள் என்று எம்மையும் அந்தக் கிராமத்துக்கே கூட்டிச் சென்றுவிடும். ஒரு நேர்த்தியான சிறுகதை அழகான திரைப்படமாக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அதுதான் தொட்டப்பன். தமிழில் வில்லனின் அடியாளாக மட்டுமே விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நாம் பார்த்த விநாயகன் தான் படத்தின் நாயகன். கதாநாயகியாக வரும் அவரது ஞான மகள் கூட பெரிய அழகியெல்லாம் கிடையாது. படத்தில் வரும் ஒவ்வொரு மனிதரையும், ஏன் ஒரு பார்வையற்ற கடைக்காரரின் பூனையைக் கூட விட்டுவைக்காமல் படத்தின் ஓட்டத்துக்கு இயக்குனர் பயன்படுத்தியிருப்பார். எங்கள் மனங்களுக்குள் இருக்கும் சில கள்ள எண்ணங்களும் பாசத்தை மீறி எழும் சுய நலன்களும் எங்களோடு பேசுகின்ற விதமாகக் காட்சிகள் அமையும். திருடர்களுக்கென்றும் ஒரு மனசாட்சி உள்ளது என்பதும், வைக்கப்படும் உண்மையான பாசம் புரிந்துகொள்ளப்படாமல் போவதில்லை என்றும் உணர்த்தும் காட்சிகள் மெய்யுருகவைக்கும். படத்தோடு ஒன்றச் செய்யும் இசையும் அட போடவைக்கும் அற்புதமான ஒளிப்பதிவும் (சில drone காட்சிகள் கலக்கல்) – சற்றே நீளமான இப்படத்தை சலிப்பில்லாமல் ஒன்றிக்கச் செய்துவிடும்.
கிங் ரட்ணம் – திரைப்பட இயக்குனர்
Parasite (2019) – கொரியன்
அண்மையில் நான் பார்த்த திரைப்படங்களில் என்னை மிரட்டிய ஒரு திரைப்படம் என்று Parasite படத்தை சொல்வேன். அதற்குக் காரணம், இந்தப்படம் ஒஸ்கார் விருதை தட்டிச்சென்ற படம் என்பதற்காக அல்ல. உலக சினிமா என்றால் அதை எப்படி எடுக்கலாம் என்கிற சிறந்த எடுத்துக்காட்டாகவே நான் இந்தப் படத்தை பார்க்கிறேன். உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது, “மனிதர்களின் போராட்டம்”. அதை இப்படி ஒரு எளிமையான படத்தின் மூலம் எடுத்துச் சொல்லி, அதை உலகமே வியந்து பார்க்கச் செய்ய முடியும் என்பதை, படத்தின் இயக்குனர் செய்துகாட்டியிருக்கிறார்.
இயக்குனர்: Bong Joon-ho
நடிகர்கள்: Song Kang-ho, Lee Sun-kyun, Cho Yeo-jeong, Choi Woo-shik
Class war எனும் அம்சத்தை மையமாக்கிக் கொண்டு, பணக்காரர் – ஏழை எனும் இருபிரிவினருக்கு இடையில் இருக்கும் சமூக அவலநிலையை திரைப்படமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதில் விசேடம் என்னவென்றால், ஏழைகள் என்றால் அவர்கள் அப்பாவிகளாக இருப்பார்கள் எனும் கிளிஷேவை உடைத்து, நீதியென்று வரும்போது எப்படியும் இருக்கலாம் என்பதாக, பணக்கார பிரிவினரை விட ஸ்மார்ட்டானவர்களாக ஏழைகளை காட்டியிருப்பார்.
என்னை வெகுவாக கவர்ந்த இன்னுமொரு விடயத்தையும் சொல்ல நினைக்கிறேன். அதாவது, ஒஸ்காரை வென்றுவர பெரியளவில் ஒரு படத்தை எடுக்கவேண்டும், Slumdog Millionaire போல ஒரு படத்தையோ அல்லது ஒத்தசெருப்பு போன்று ஒருவர் மாத்திரமே நடித்தோ ஒஸ்காருக்கு அனுப்பவேண்டும் என்பதையெல்லாம் தாண்டி, நாம் இருக்கும் இடத்திலேயே, இருக்கும் நாட்டில் உள்ள நிஜத்தை எடுத்து அதை genuine ஆக படமாக்கினாலே போதும் என்பதை உணரச்செய்திருக்கிறது இந்தப்படம். சினிமாவை நேசித்து உண்மையாக ஒரு படத்தை எடுத்தால் அது எவ்வாறு உலகிற்கே போய்ச்சேரும் என்பது இந்தப்படத்தில் நான் பார்க்கிறேன்.
Parasite படம் என் ஞாபகத்தில் இருந்து அழிக்கமுடியாத ஒரு படமாகவே வாழ்நாள் முழுவதும் இருக்கும். மீண்டும் மீண்டும் பார்க்கையில் எதையாவது புதிதாக ஒன்றை நான் கற்றுக்கொள்வேன் என நிச்சயம் சொல்வேன். Parasite – உலக சினிமாவின் சிறந்த எடுத்துக்காட்டு.
A Separation (2011) – ஈரானியன்
என்னுடைய அடுத்த தெரிவு, 2011 ஆண்டு வெளியான ஒரு ஈரானியத் திரைப்படம். வெறுமனே 5 முக்கிய கதாபாத்திரங்களை கொண்டு, அதிகப்படியாக (90%) ஒரே லொகேஷனில் எடுக்கப்பட்ட படம். கலாசார கட்டுப்பாடுகள் எப்படி எமை கட்டிப்போடுகிறது என்பதை சொல்லும் ஒரு படம். முஸ்லிம் மத அடிப்படையில் வாழும் இரானிய குடும்பத்தில் வாழும் கணவருக்கும் மனைவிக்கும் இடையே வரும் சிக்கலில், மத கலாசார பின்னணியில் எது சரி, எது பிழை என்பதை எப்படி தேர்ந்தெடுப்பது என்கிற போராட்டம் தான் கதைக்கரு.
எழுதி, இயக்கி, தயாரித்தவர்: Asghar Farhadi
நடிகர்கள்: Leila Hatami, Peyman Moaadi, Shahab Hosseini, Babak Karimi, Sareh Bayat
அடிப்படை சமய விழுமியங்களுக்குள் வாழும் ஒரு இஸ்லாமிய கணவன் மனைவிக்கு இடையே வயதான தந்தையை எப்படி பார்த்துக்கொள்ளவது என்பது தொடர்பில் எழும் பிரச்சினைகளும், திருமண உறவில் பிரிவு வரை எப்படி அது பாதிக்கிறது என்பதையும், அந்தப்பிரிவு எப்படி அவர்களின் குழந்தையை பாதிக்கிறது என்பதையும் காட்டும் திரைப்படம்.
முன்னரே பார்த்திருந்தாலும், இந்த கொரோனா காலத்தில் மீண்டும் ஒருமுறை பார்க்கக் கிடைத்தது. என்னைவிட்டு எப்போதுமே அகலாத ஒரு திரைப்படமாக மாறிவிட்டது இந்தப்படம். என் சொந்த வாழ்க்கைக்கும் இந்த படத்திற்கும் ஒற்றுமைத்தொடர்புகள் இருப்பதாலோ என்னவோ, இந்த படத்தில் காட்டப்படும் struggle என் மனதில் நெகிழ்வான தருணங்களை கொட்டி விட்டுப்போனதாலும் மிகவும் நெருக்கமான ஒரு படமாக இதைச் சொல்வேன்.
இந்தப்படத்திலும் என்னை மிகவும் கவர்ந்தது, இப்படத்தின் எளிமை. எத்தனையோ விருதுகளை வாங்கிக்குவித்த ஒரு திரைப்படமும் கூட. இரானியத்திரைப்படங்களின் விசேடத்துவமே அவர்களின் மண்சார்ந்த இயல்பான கதையம்சங்கள் தான். அந்தக் கதைகளைக் கொண்டு அபாரமான சினிமாக்களை அவர்கள் தந்திருக்கிறார்கள். நான் நினைக்கிறேன், இலங்கையிலும் சினிமா மீது காதல் கொண்டு வரும் புதிய இளைஞர்கள் இதுபோலான திரைப்படங்களில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியதும் அதைதான். கதைகள் எப்போதுமே எம்மை சுற்றிதான் இருக்கின்றன. அதை சினிமாவாக்கினாலே போதும்.
மேலே நான் சொன்ன இரண்டு சினிமாக்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இவைதான். உலகமயமாக்களில், மனிதனின் போராட்டமும் எல்லா இடத்திலும் ஒன்றுதான். அந்தப்போராட்டத்தை நாம் எங்கிருந்துக் கொண்டும் எந்த மொழியிலும் சொல்லலாம், என்கிற தைரியமும் ஆழமும் கதை சொல்பவர்களுக்கு வரவேண்டும். இன்னுமொன்று, Simplicity. அதாவது MAGIC is in the simplicity of the movie. படங்களை பெரிதாக எடுத்து, twistகளை பெரிதளவில் காட்டுவதில் மட்டும் கெட்டிக்காரத்தனம் இருப்பதில்லை, simplicity இலும் அது இருக்கிறது. அதைதான் இந்த இரண்டு படங்களும் சொல்லிச்செல்கிறது.