கேரளா, இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் ஒன்று. 94 வருடங்களில் கேரளா காணாத வெள்ளம் தான் இன்றைக்கு அநேக தென்னிந்திய ஊடகங்களின் முக்கிய செய்திகள். அது 14 மாவட்டங்களை மட்டுமே கொண்டுள்ள ஒரு சிறிய மாநிலம் என்றாலும், “காட்ஸ் ஓன் கண்ட்ரி”, என்பதே இந்த மாநிலத்தின் அழகிய செல்லப்பெயர். இதற்கான காரணம் இதன் இயற்கை எழில் கொஞ்சும் அழகு தான். மரங்களால் நிறைந்த காடுகளும் , பல நீர் நிலைகளும் தான் இதன் பிரதான சிறப்பே. தென்னிந்தியாவைச் சேர்ந்தோர் அனைவரும் கோடை காலத்தில் சுற்றுலா செல்ல விரும்பும் இடங்களில் முதலாவதாக குறிப்பிடும் மாநிலம் கேரளா. இதற்கு காரணம் இதன் குளுமையான தட்பவெப்பம். இங்கு தான் வெள்ளம் சூழ்ந்து, கேரளா மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
மழை பதியும் அளவு
இந்திய வானியல் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்கள் படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆண்டுக்கு, பருவ கால மழை அளவு என்று சராசரியாக ஒரு அளவு இருக்கின்றது. இந்த ஆண்டு, ஒரே வாரத்தில், மொத்த ஆண்டின் சராசரி அளவை காட்டிலும் 30% அதிகமாக மழை பெய்தது தான் இத்தகைய கொடுமையான நிலைக்கான காரணம். இத்தனைக்கும் மேற்குத்தொடர்ச்சிமலையில் உள்ள நீர்நிலைகள் தனக்கான கொள்ளளவைக் கொண்டு ஓரளவு சமாளித்து பெரிய பாதிப்பை தடுத்துவிடும் என்று கருதி தான் மக்கள் திடமாக இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு 5 மாவட்டங்களில் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதில், கேரளாவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது தமிழகத்தின் வறண்ட நீர் நிலைகள் தான். ஏனென்றால், கேரளா மற்றும் கர்நாடகத்தின் அநேக நீரோட்டங்கள் தமிழகத்தைதான் வந்தடைகின்றது.இங்கே வறண்டு இருந்த நீர்நிலைகளுக்கு அந்த வெள்ள நீர் வந்து சேர்வது, நிச்சயம் வெள்ளம் வடிய ஒரு நல்ல வாய்ப்பு தான். அதுமட்டுமல்ல.. செய்திகளில் “பாலக்காடு வெள்ளத்தில் மூழ்கியது” என்று வந்ததும், நமது தமிழக முதல்வர், கேரள அரசுக்கும் நிவாரண நிதியாக ரூ.5 கோடியை வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த வருட நீட் தேர்வு மையம் விவகாரத்தின் போது, தமிழகத்திலிருந்து கேரளம் சென்று தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, எடப்பாடி கேட்பதற்கு முன்பே கேரள முதல்வர் பினராய் விஜயன், மாணவர்களுக்கான உதவி மையங்களை அமைத்து உதவ உத்தரவிட்டவருக்கு, செய் நன்றி மறவாது, உதவ முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது.
கேரள வெள்ளத்தின் வரலாற்றுப் பார்வை
நிச்சயமாக 9 தசாப்தங்களுக்கு மேலாக கேரளம் காணாத வெள்ளம் தான் இந்த ஆகத்து 2018-ல் வந்துள்ளது, அதனை மறுப்பதற்கில்லை. சரியாக 94 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளத்தின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த தகவல்களும் சமீப செய்திகளில் வந்திருந்தது. சரியாக 1924 ஆம் ஆண்டு வந்திருந்த “தி கிரேட் ஃப்லட் 99” என்று அழைக்கப்பட்ட அந்த பெரிய வெள்ளத்திற்கு முன்பு ஒரு போதும் கேரளம் வெள்ளத்தை கண்டதில்லை. அதனால், அதற்கு காரணம் முல்லைபெரியார் அணை என்று தான் அன்றைய அநேக கேரள ஊடகம் பதிந்திருப்பது நம்மை குழப்பத்தான் செய்யும். அதற்கு காரணம் முல்லைப்பெரியார் அணை திறந்து 29 ஆண்டுகளுக்குப்பின் தான் அந்த பெரிய வெள்ளம் கேரளத்தில் வந்தது.
நம் மனதில் எழுந்த குழப்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு முல்லைப்பெரியார் அணை காரணமல்ல என்று தீர்மானப்படுத்த முடியாது. ஏனெனில் இப்போதைய தலைமுறையான நமக்கு, அன்றைய கேரள மக்கள்தொகை பற்றியும், அப்போது பெய்த மழையின் அளவு பற்றியும், அன்றைய மக்களின் விழிப்புணர்வு, ஆக்கிரமிப்புகள் பற்றியும் விரிவாக தெரிந்தால் தான் அதை பற்றி நாம் சரியான கருத்து தெரிவிப்பது சாத்தியம்.
ஒரு அவசியத் தகவலை பகிர்ந்துகொண்டு அடுத்த தகவல்களுக்குச் செல்கிறேன். அந்த 1924ல் வந்த கேரள வெள்ளத்திற்கு காரணம் முல்லைப்பெரியாறு அணை தான் என்று நம்பிய கேரள அரசும், மக்களும் தான் இன்று வரை கடுமையாக முல்லைப்பெரியாறு அணையை, எதிர்க்கின்றனர்.
2018ல் வந்த இந்த வெள்ளத்திற்கும், அந்த 1924 ல் வந்த வெள்ளத்திற்கும் இடையில் எந்த வெள்ளமும் கேரளத்தை பாதிக்கவில்லை. இது ஒரு புறமிருக்க, இந்த ஆண்டு வந்த வெள்ளத்திற்கு, நகரமயமாக்கலும், அதனால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.
தண்ணீர் வடிய எத்தனை நாளாகும் என்பது சரியாக கணிக்க முடியவில்லை, என்று கூறினர். ஆனால், தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரம் நகரும் அருகில் கடந்தோடும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம். திருச்சி கொள்ளிடம் பாலம் சரிந்தது போன்ற செய்திகள் கூட, கேரள வெள்ளத்தின் வீரியத்தை சற்று ஆழமாக உணர்த்துகின்றது.
அரசின் கவனம்
முதலில் நான் கேரள முதல்வரையும், அரசியல்வாதிகளையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். கேரளம் பொருளாதார ரீதியில் வளர்ந்த மாநிலம். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, உணவு, உடைகள் அனுப்புவதை விட மருந்துகளும், மின்சார இணைப்புகளை சரி செய்வது, ஆசாரி வேலைகளை செய்வது என ஆற்றல் மிகுந்த மனிதர்களின் சேவை தான் தேவை என்பதை காலம் தாழ்த்தாமல் உணர்ந்து அண்டை மாநில அரசுக்கும், மக்களுக்கும் தெரிவித்தது ஒரு சரியான திட்டமிடல். மத்திய அரசு கேரளத்தின் நிலையை கண்டுகொள்ளவில்லை என விமர்சனங்கள் வெகுவாக சமூக வலைத்தளங்களில் பரவுவதற்குள் மத்திய அரசு ரூ 500 கோடியை வழங்கியுள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பிலிருந்தே, பலர் கேரள அரசின் முதலமைச்சர் துயர நிவாரண நிதியின் வங்கிக் கணக்கிற்கு, உலகெங்கிலும் வந்து பணம் குவிகிறது. குறிப்பாக நமது தமிழகத்திலிருந்து பலர் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்து, உடனடியாக கிடைக்கும் பரிமாற்ற சான்றிதழை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, பலரை ஊக்குவித்தது, மனித நேயத்தின் சின்னங்கள். தமிழகம் மட்டும் தான் உதவுமா, கர்நாடகம் என்ன சும்மாவா? என்று மேற்கோலிடும் வண்ணம் எங்களது விடுதியில் இலவசமாக ஒரு வாரம் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கிக்கொள்ளலாம் என்று பல உணவக முதலாளிகள் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களாக பரப்பி வழிய வந்து உதவுகின்றன(ர்.
ஊடகமும் அதனுடைய பங்கும்
மத்திய அரசை, பிரதமர் பெயரைக் கொண்டு ஒரு வாரமாக விமர்சித்துக்கொண்டிருந்த ஆர்வலர்கள் கவனிக்க தவறிய ஒன்று தான் தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் அயராத அர்பணிப்பும், முப்படை வீரர்களின் பங்கீடும். அவர்கள் பல உயிர்களை பத்திரமாக மீட்ட காணொளிகள் பல சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனைக் கொண்டு தான் ஊடகங்களே, மக்களுக்கு செய்திகளை வழங்குகிறது.
ஊடக நண்பர்களால் அனைத்து இடங்களுக்கும் சென்று செய்தியை திரட்ட முடியாத நிலையை நினைக்கும்போதே, வெள்ளத்தின் தீவிரம் புரிகின்றது. ஆயினும் இதைப்போன்ற பேரிடர் காலங்களில் சமூக வலைத்தளங்களின் வலிமை நமக்கு பல முறை புரிந்திருக்கின்றது. உதாரணத்திற்கு 2015ல் வந்த சென்னை வெள்ளத்தின் போது நடந்த கதைகளை கூறலாம். அதே போல, வதந்திகளும் சமூக வலைத்தளம் மூலமாக தான் அதிகம் பரவுகின்றது. சில ஊடகங்களும் சில நேரங்களில் இந்த வதந்திகள் பரவுவதற்கு காரணமாக இருப்பதை நினைக்கையில் மனம் வருந்துகின்றது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் இவ்வாறு செய்தது என்றால் நிச்சயம் மனம் திருந்த வேண்டும். அவ்வாறான வதந்தி காணொளிகளுக்கு பின் ஊடகங்களோ அல்லது எந்த தனி மனிதரோ இருப்பாராயின் மனம் மாற வேண்டும். ஒரு இந்திய குடிமகனாக நமது பொறுப்பு, இப்போது, தகவல் பரிமாற்றமும், சமூக அக்கறையோடு செயல்படும் அகன்ற பார்வையும் தான். அதை மனதில் கொண்டு செயல்பட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
கிட்டத்தட்ட நிலைமை சரியாக தொடங்கிவிட்டது. இப்போதிருக்கும் பெரும் சவால்கள் தேங்கியிருக்கும் தண்ணீரில் இருக்கும், கொசுக்களாலும், பூச்சிகளாலும், அசுத்தமான தண்ணீரின் தேக்கத்தால் காற்றில் உருவாகும் கிருமிகளாலும் ஏற்படும், காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை எப்படி சமாளிப்பது என்பது தான். அதையும் தாண்டி, சில இடங்களில் பாலங்களும், சாலைகளும் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. இவை அனைத்தையும் சரி செய்ய கணிசமான அளவில் மனித சக்தி தேவைப்படும். அதனை திட்டமிட்டு செயல்படுத்துவதில் முதல்வர் பினராய் விஜயன் வல்லவர் என்றாலும், மனித சக்திகளாக சென்று நிற்க எத்தனை நபர் தயாராக உள்ளோம்? நமது சென்னை வெள்ளத்தின் போது பிகாரிலிருந்தும் லாரிகளில் குழுக்களாக மனித சக்திகள் வந்து பராமரிப்பு பணிகளில் ஈடுபடவில்லையா?
கேரளத்தில், ஐயப்பனை தரிசிக்க மட்டும்தான் இலட்சக்கணக்கான தமிழர்கள் அம்மாநிலத்திற்கு செல்வோமா என்ன? அவர்களுக்கு ஆதரவளிக்க மனித சக்திகளாக ஏன் லட்டக்கணக்கில் சென்று, குறைந்த காலத்தில் கேரளத்தின் இயல்பு வாழ்க்கையை மீட்கக்கூடாது. அவர்களும் இந்தியர்கள் தானே?
Web Title: After The Kerala Flood
Featured Image Credit: cnbctv18