தற்கொலைக்களமாகும் விவசாயகளம்

ஆசியாவில் விவசாயத்தில் தன்நிறைவை கொண்ட முன்னணி நாடுகளில் இந்தியாவுக்கும் இடமுண்டு. இந்தியாவின் பாரம்பரியமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கபட்ட ஒன்றே! அப்படியான நாட்டில், ஒவ்வரு 30 நிமிடத்திலும் ஏதோவொரு மூலையிலுள்ள விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டே இருக்கிறார் என்பதனை ஜீரணித்து கொள்ள முடிகிறதா ? இதுவரைக்கும், பெறுமதிமிக்க 250,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை இந்தியா இழந்திருக்கிறது என்ற உண்மையை இலகுவாக கடந்து செல்ல முடிகிறதா ?

இந்திய விவசாயம்

(asianworldnews.co.uk)

தற்போது ஆறு, ஏரி, கிணறுகளில் நிலத்தடி நீர் 60 முதல் 65 சதவிகிதம் வரை வறண்டு விட்டது. இந்நிலை நீடித்தால் 2030-ம் ஆண்டு இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் என்று சொல்லப்படுகிறது. (asianworldnews.co.uk)

இந்தியா உலகளவில் விவசாயம்சார் உற்பத்தியில் இரண்டாவது நிலையில் உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 10க்கு மேற்பட்ட விவசாய முறைமைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மான பங்களிப்பு விவசாயத்துறையிலிருந்து வருவதுடன், நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 60%த்தினை விவசாயத்துறையே பூர்த்தி செய்கிறது.

பாரிய சனத்தொகையை கொண்ட இந்திய மக்களுக்கு தவறாது உணவளித்துவரும் துறையின் இன்றைய நிலையினை கேட்டால், மிக பரிதாபத்துக்குரியதாக உள்ளது. தவறுகள் எங்கேயிருந்து ஆரம்பிக்கிறன என ஆராய்ந்தால், ஒவ்வருவரும் மற்றவர்களை நோக்கி கைகளை காட்டுகிறார்களே தவிர, யாரும் பொறுப்பேற்று இன்றைய நிலையினை சீராக்கி, தவறுகள் காரணமாக இழக்கின்ற அப்பாவி உயிர்களை காப்பற்ற தயாராகவில்லை.

விவசாயத்தின் இறங்குமுகத்துக்கு காரணம் என்ன ?

இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் எந்த மூலையிலும் உள்ள ஒவ்வரு விவசாயிக்கும் ஓர் சாபக்கேடு உண்டு. அது, உலகுக்கே உணவளித்தாலும் விவசாயிக்கு உணவளிக்கவோ, அவர்கள்பால் கவனத்தை செலுத்தி அவர்கள் குறை தீர்க்கவோ யாருமில்லாத நிலையே அந்த சாபக்கேடு!

குறிப்பாக, முயற்சியாளர்களை உருவாக்க உதவுகிறோம் என சொல்லும் இந்திய அரசே, பருவங்களின் நிச்சயமற்றதன்மையுடன் போட்டிபோட்டுக்கொண்டு விளைச்சலுக்காக போராடும் விவசாய முயற்சியாளர்களை சரியாக கவனிப்பதில்லை. இப்படியாயின், எப்படி ஏனையவர்கள் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் போதிய முக்கியத்துவத்தை வழங்குவார்கள் ?

(i2.cdn.cnn.com)

இன்னும் 35 ஆண்டுகளில் ஆசியா கண்டத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் 100 கோடி மக்கள் அவதிப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. (i2.cdn.cnn.com)

செழித்து வளர்ந்திருந்த இந்தியாவின் விவசாயத்துறையின் இறங்குமுகம் பல்வேறு வழிகளில் ஆரம்பித்தது என்றாலும், அவற்றுக்கு அடிப்படையான காரணமாக, இந்திய அரசில் ஊடுருவியுள்ள ஊழல் நிலையே மிகப்பெரும் காரணியாக உள்ளது என திடமாக சொல்லலாம்.

அதிகரித்துவரும் இந்திய சனத்தொகைக்கு போதிய இடங்களை ஒதுக்கவேண்டிய அவசியத்தில் இந்திய அரசு உள்ளபோது, அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ள ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் ஊழலை துணைகொண்டு, ஏரிகளையும் அதுசார் பிரதேசங்களையும் வீட்டு திட்டங்களுக்காக ஒதுக்கிவிடுகிறார்கள். இறுதி விளைவு, விவசாயிகளையே பாதிப்படையச் செய்கிறது.

பல்தேசிய கம்பனிகளை இந்தியாவுக்குள் காலூன்ற விடுவதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கிறோம் என்கிற போர்வையில் இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பல்தேசிய கம்பனிகளின் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள். இறுதி விளைவு, அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கையையே தெரிந்தோ, தெரியாமலோ பந்தாடி விடுகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக தற்போதும் தாமிரபரணி ஆற்றில் இடம்பெறும் நீர்கொள்ளையை சொல்லலாம்.

இவற்றுக்கு மேலாக விவசாயிகளின் அப்பாவித்தனமையையும், அறியாமையும் பயன்படுத்தி இடம்பெறும் மனிதாபமற்ற செயல்களும் விவசாயிகளின் உயிரை பறிப்பதில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன்களில் கடைப்பிடிக்கப்படும் இறுக்கமான மனிதாபிமானமற்ற நடைமுறைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

விவசாயிகளின் பக்கநிலை

நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை சீர்கேடு என்பன பல விவசாய குடும்பங்களை விவசாயத்தை விட்டே விரட்டிவிட்டதாக விவசாயிகளுக்காக போராடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன. 2015ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களை காப்பாற்றுவதற்காக இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் நானா படேகர் (Nana Patekar)னினால் உருவாக்கப்பட்ட நாம் அமைப்பின் அறிக்கைகளின் பிரகாரம், இந்தியாவில் மகராஸ்டிரா மாநிலமே அதிகளவான விவசாய தற்கொலைகளை கொண்ட மாநிலமாக சுட்டிகாட்டப்படுகிறது. குறிப்பாக, 2015ம் ஆண்டில் மாத்திரம் 3,030 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இது, அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுமிடத்து 18%மான அதிகரிப்பாகும். இதற்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில், தெலுங்கனா மாநிலம் உள்ளது. இங்கு 2015ல் மாத்திரம் சுமார் 1,350பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் என அறிக்கைகள் சுட்டி காட்டுகிறன.

பாதிக்கப்பட்ட 85 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 13 இலட்சம் நன்கொடையாக வழங்கிய நானா படேகர் (s4.scoopwhoop.co)

பாதிக்கப்பட்ட 85 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 13 இலட்சம் நன்கொடையாக வழங்கிய நானா படேகர் (s4.scoopwhoop.co)

நானா படேகர் (Nana Patekar) கூற்றுப்படி, இந்தியாவில் பாரம்பரியமாக விவசாயத்தையே தொழிலாக மேற்கொண்டு வந்தவர்களில் 30%க்கு மேற்பட்டவர்கள் தற்சமயம், கைக்கூலிகளாக இந்தியா முழுதும் தொழில் புரிந்துகொண்டு இருப்பதாகவும், குறைந்தது 10% மானவர்கள் இந்தியாவில் சாதாரணமானவர்கள் கூட கடந்துசெல்லும் பிரபலமான வீதியோரங்களில் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள் என அதிர்ச்சிகரமான தகவல்களை போட்டு உடைக்கிறார். இவர்களை காப்பாற்றவும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்ப சூழ்நிலைகளை மேம்படுத்தவுமே “நாம்” அமைப்பை உருவாகியதாக கூறும் இவர், இதுவரை தனது சொந்த உழைப்பையும், தன்னார்வ நிறுவனங்களின் நிதியையும் பயன்படுத்தி விவசாயம் பாழடைந்த கிராமங்களை தத்தெடுத்தல், விதவை விவசாயிகளுக்கு மறுவாழ்வு பெற்றுக்கொடுத்தல், கூட்டு விவசாய முறையை ஊக்குவித்தல் போன்றவற்றை நிகழ்த்தி வருகிறார்.

இவரைப்போல, பல்வேறு தொண்டார்வ நிறுவனங்கள் வெவ்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருவதுடன், அவர்களது வாழ்வை மறுசீரமைக்க போராடியும் வருகின்றன. ஆனால், இந்திய அரசியலில் புரையோடியிருக்கும் ஊழலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை விடவும் பலம்வாய்ந்த பல்தேசிய கம்பனிகளின் செயல்பாடுகளும் இழந்த விவசாயத்தை மீள பெற்றுக்கொடுப்பதில் தாக்கம் செலுத்துவதோடு, இருக்கின்ற விவசாயத்தை மேலும் நெருக்கடி நிலைக்குள்ளாகுவதிலும் முனைப்பாகவே இருக்கிறது.

தமிழக விவசாயிகளின் நிலை

ஜல்லிக்கட்டு தடை, தாமிரபரணி நீர்கொள்ளை, காவேரி நீர் பிரச்சனை, வரட்சி நிவாரணங்கள் கிடைக்காமை என தமிழக விவாசியிகளின் நிலை மோசமான கட்டத்தை எட்டிக்கொண்டு இருக்கிறது.

(thelogicalindian.com)

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2014ல் 895, 2015ல் 606 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், இப்போது ஒரே நாளில் மட்டும் 6 விவசாயிகள் மரணம் (thelogicalindian.com)

காவேரி நீரின் தடை காரணமாக, காவேரியை அண்டிய தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் மாத்திரம் பருவகாலத்தில் இந்திய மதிப்பில் குறைந்தது 20,000 லாபமாக மட்டும் பெற்றுவந்த விவசாயிகள் தற்போதைய நிலையில், விவசாயத்தையே கைவிடுகின்ற நிலைமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனைவிடவும், காலநிலை கோளாறுகள் தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகளையும் பாதித்து இருக்கிறது. இதன்காரணமாக, வங்கிக்கடனில் வேளாண்மை பார்க்கும் விவசாயிகள் தொடர்ந்தும் கடனாளிகளாகவே தங்கள் வாழ்க்கையை கழிக்கவேண்டியிருப்பதுடன், வங்கிகளின் மனிதாபிமானமற்ற கடன் மீளப்பெறும் முறைமையினால் விரக்தி நிலையில் உயிர் துறக்கும் நிலைக்கே செல்லவேண்டி ஏற்படுகிறது.

தீர்வு என்ன ?

“சுற்றி சுற்றி சுப்பர்ட கொல்லைக்குள்தான் ஓடிக்கொண்டிருக்கணும்” என்கிற பழமொழிக்கு ஏற்ப, பிரச்சனைகளுக்கு காரணமான இடத்திலேயேதான் தீர்வுகாளையும் எதிர்பார்க்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இந்திய விவசாயிகள் உள்ளார்கள். குறிப்பாக, விவசாயிகளுக்காக யார் போராடினாலும் சரி,உதவி செய்தாலும் சரி, அவர்கள் இறுதியாக எத்தகைய தீர்வையும் பெற்றுக்கொள்ள அரச நிர்வாகத்தையே நோக்கி செல்லவேண்டி இருக்கிறது. ஊழல் நிறைந்த அரச நிர்வாகமோ, பணமுதலைகளுக்காக வேலைகளை செய்கின்றபோது, அப்பாவி விவசாயிகளை கவனத்தில் கொள்ள தவறிவிடுகிறது. இதன்போது, சாமானிய இந்தியர்களும் கூட, நமக்கென்ன வந்தது என்கிற போக்கில் தமது கடமைகளில் கண்ணும் கருத்துமாகவிருப்பதால், அப்பாவி விவசாயிகளின் நிலை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை.

இந்தநிலை மாற்றப்படவேண்டுமெனில், சாதாரண மக்களுக்கும் இன்றைய விவசாயிகளின் கஷ்டநிலையும், எதிர்காலத்தில் சாதாரண மக்களுக்கு இதுதொடர்பில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களும் தெளிவுபடுத்தபட வேண்டும். அதன்போதுதான், பிரச்சனைக்கான வீரியத்தை அனைவரும் உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அரச இயந்திரத்திற்கு பொருத்தமான் அழுத்தத்தை வழங்க முடியும். இல்லையெனில், ஜல்லிக்கட்டை இழப்பதுபோல, எதிர்கால சந்ததியினர் உழவர் திருநாளாம் பொங்கலை கொண்டாடுவதற்கான காரணங்கள் கூட அழிந்துபோக கூடும்..

 

Related Articles

Exit mobile version