நேற்றைய தினம் இங்கிலாந்தின் மகாராணி இறுதி முறையாக பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தைக் கடந்து சென்றார். செப்டெம்பர் 8 ம் திகதி இயற்கையெய்திய இரண்டாம் எலிசபெத் மகாராணி நேற்று, செப்டெம்பர் 19ம் திகதியன்று பொதுநலவாய நாடுகள் உள்ளிட்ட 100 நாடுகளின் அரச தலைவர்கள், ஐரோப்பாவின் பல்வேறு அரச குடும்பங்கள் மற்றும் ஜப்பான், மலேஷியா மற்றும் ஜோர்தான் அரச-அரசிகளின் இறுதி மரியாதைகளை ஏற்று நல்லடக்கம் செய்யப்பட்டார். சர் வின்சென்ட் சர்ச்சில் அவர்களின் நல்லடக்கத்தை அடுத்து நடைபெற்ற மிகப்பெரிய அரச இறுதிச் சடங்காக மாகராணியின் நல்லடக்கம் இடம்பெறுகிறது.
மகா ராணியின் இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் ஆபியில் நடைபெற்றது. அவரது பூதவுடல் நான்கு நாட்கள் பொது மக்கள் அஞ்சலி மற்றும் மாகராணியின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் மரியாதை விழித்திருப்புகள் ஆகியவற்றை பெற்ற பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஆபிக்கு அரச குடும்ப உறுப்பினர்கள் பின் தொடர ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதிச் சேவை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, மேலும் தேசிய அளவில் இரண்டு நிமிட மௌனவஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதிச் சடங்குகள் நிறைவேறிய பின்னர் மகாராணியின் பூதவுடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபியிலிருந்து வெலிங்டன் ஆர்ச் வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து வின்ட்சர் கோட்டைக்கு பயணித்தது. அங்கு மகாராணியின் பைப்பர் (மகாராணியின் தனிப்பட்ட குழலூதுனர்) இறுதியாக இரங்கல் கீதமொன்றை இசைத்தார். இங்கிலாந்தின் அரசர்கள் அடக்கம் செய்யப்படும் வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் சேப்பலின் அரச பெட்டகத்திற்குள் மகாராணியின் பூதவுடல் இறக்கப்பட்டதுடன் அரச நல்லடக்கம் முழுமை பெற்றது.
எனினும் நேற்றிரவு மகாரணியின் உடல் அவரது இறுதி ஓய்வு இடமான வின்ட்சரின் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் உள்ள அரசர் ஆறாம் ஜோர்ஜ் அவர்களின் நினைவு தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. இது அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு தனியார் அடக்க நிகழ்வாக அமைந்தது. ராணியின் பெற்றோர்களும், சகோதரியான இளவரசி மார்கரெட்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த தேவாலயத்தின் பெட்டகத்திலேயே மகாராணியும், அவரது கணவரான எடின்பெர்க் கோமானான இளவரசர் ஃபிலிப் அவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.
இறுதிச் சடங்குகள் செவ்வனே முடிவடைந்த நிலையில் இனிமேல் பிரித்தானியாவில் பல அரசியல் ரீதியான மாற்றங்களை காணலாம். ஆனால் அதற்கு முன்னமே மகாரணியின் இறப்பைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் உண்டாகிவிட்டன. இங்கிலாந்தின் தேசிய கீதம் “God save the Queen” என்பதில் இருந்து “God save the King” என மாறியுள்ளது. மேலும் இதுவரை புழக்கத்தில் இருந்த மகாராணியின் முகம் பாதிக்கப்பட்ட பணத்தாள்களுக்கு பதிலாக அரசர் சார்ல்ஸ் அவர்களின் முகம் பாதிக்கப்பட்ட பணம் வெகுவிரைவில் நடைமுறைக்கு வரும். இது மட்டுமல்லது பழைய பிரித்தானிய கடவுசீட்டின் வடிவமைப்பு முழுமையாக மாற்றப்பட்டு அரசரின் பெயரில் புதிய வடிவமைப்புடனான கடவுச்சீட்டு வெளியாகும்.
இங்கிலாந்தின் அடுத்த மிகப்பெரிய அரச நிகழ்வாக அரசர் மூன்றாம் சார்ல்ஸ் அவர்களின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. நடைமுறைப்படி மகாராணி இறந்த மறுகணமே சார்ல்ஸ் அரசாரான போதும் முடிசூட்டு விழா இன்னும் நடைபெறவில்லை . இதற்கான சரியான திகதி இன்னும் குறிப்பிடப்பட்டவில்லை. எனினும் ஒரு வருடத்துக்குள் அரச முடிசூட்டு விழா நிச்சயம் நடைபெற்றாகும். உலக அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தை உண்டாக்கவிருக்கும் இந்த முடிசூட்டு விழாவுக்காக உலகின் பல்வேறு தரப்புகளும் தற்போது காத்துக்கொண்டிருக்கின்றன.