இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலமொன்றை அமைக்கும் முயற்சிகள் குறித்து கடந்த காலங்களில் பெருமளவு பேசப்பட்டது. அது குறித்து அரசியல் அதிகாரிகள் பேசினார்களேயொழிய சமீபகால பொறியியல், நிதி செயலாக்க ஆய்வு முயற்சிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், இது குறித்து இலங்கை சமூகத்திடம் பெரும் முரண்பாடு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் உருவாக முடியுமான இவ்வாறான சேவைகளில் இருக்கக்கூடிய முதன்மைப் பண்புகள் குறித்த எளிய புரிதலுடனேனும், பலர் கருத்துச் சொல்வதாகத் தெரியவில்லை.
இப்போது விமானநிலையம் ஊடாக இந்தியாவுக்கு செல்வதாயின், இந்தியாவுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள வேண்டும். விமான நிலையத்தில், சர்வதேச சட்டங்களுக்கேற்ப சோதனையும் நடைபெறும். அவ்வாறே இந்திய விமான நிலையத்திலும், தரவுகள், பிரயாண பொதிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்படும். அத்தோடு, பயணியும் சோதனைக்குட்படுத்தப்படுவார். பொதுவாக, இரு நாடுகளுக்கும் இடையில், தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் தொடர்பு இருந்தாலும்கூட, கடவுச்சீட்டு, வீசா, பிரயாண பொதிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்படும். அவ்வாறே பிராயாணியும் சோதனைக்குட்படுத்தப்படுவார். அவ்வாறல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையில் திறந்த வழிகள் அரிதாகவே உள்ளன.
இலங்கையில் இல்லாத விலங்கு மற்றும் தாவர நோய்கள், இந்தியாவில் உள்ள காரணத்தால், இந்திய இலங்கைத் தொடர்புமூலம், அவை இலங்கையிலும் பரவலாம் என்றும் சிலர் வாதிக்கின்றனர். எனினும், விமான நிலையம் மற்றும் கப்பல் ஊடாக சரக்கு கொண்டு செல்லப்படுவதன் மூலமும்கூட , இவ்வாறான நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.
“இன்று சர்வதேச வியாபாரத்தைப் பொறுத்தவரை கொழும்பு துறைமுகத்துக்கு, ஓர் முக்கிய இடம் உள்ளது. இன்னும் 10 வருடங்களில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், புகையிரதம் ஊடாக ஐரோப்பாவுக்கு அனுப்பப்படும். அப்போது கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் குறையும்.”
மேலே உள்ளது, அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, பிபிசியிற்கு தெரிவித்த கருத்தாகும். உண்மையில், சீனா மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பாவுக்கு புகையிரத பயணத்தை ஆரம்பித்துள்ளது. அவ்வாறே தாய்லாந்து ஊடாக சிங்கப்பூர் வரையிலும், அந்த புகையிரத பாதையை விரிவுபடுத்துவதற்கு சீனா சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றது. இவ்வாறான நிலையில், பிரதி அமைச்சர் சொல்லும் வகையில் பார்க்கும்போது, இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளதனால் ஏற்படும் சாதகமான வாய்ப்புக்கள், இலங்கைக்கு தொடர்ந்தும் கிடைக்கும் என்பது சிக்கலானதாகும்.
அண்மையிருந்தபோதும் பிரிந்திருக்கும் நண்பர்கள்
இற்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னர் இலங்கையும், இந்தியாவும் பெரிய பிரித்தானியாவின் காலனிகளாக இருந்தபோது, தளர்வான எல்லை சட்டங்களே இருந்தன. எனவே, அப்போதைய ஏழை இந்தியர்கள், இந்நாட்டின் மலைநாட்டு தோட்டத் தொழில் துறையில் பணியாற்றுவதற்காக வருகை தந்தனர். பின்னர், மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டு, 1965 இல், சிரிமா – சாஸ்திரி உடன்படிக்கை மூலம், அப்போது இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒரு மில்லியன் அளவிலானோரில் 5 இலட்சம் பேரை, இந்தியாவுக்கே அனுப்புவதற்கு, சிரிமாவோ பண்டாரநாயக்கவின் அப்போதைய அரசுக்கு முடிந்தது. இந்தியாவும் இலங்கையும் படகு சேவை மூலமாகவேனும் இணைந்தால், அவ்வாறான ஏழைகள் பலரும், இங்கு வந்து தங்கிவிடுவர் என்று இலங்கையர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இப்போது தமிழ்நாடு, இந்தியாவின் அபிவிருத்தியடைந்த மாநிலாமாகும். 2015 இல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2500 அமெரிக்க டொலராகும். அத்தோடு இலங்கையின் தனிநபர் வருமானம் 3279 அமெரிக்க டொலராகும். இது பெரியதொரு வித்தியாசம் அல்ல. சிங்கபூரின் தனிநபர் உள்நாட்டு தேசிய உற்பத்தி 50,000 டொலரையும் விட அதிகமாக உள்ளபோதும், 3500 டொலர் தனிநபர் வருமானத்தை கொண்டிருக்கின்ற, அவர்களது அயல் நாடான இந்தோனேசியாவுடன், பயணிகள் படகு சேவையை அவர்கள் நடத்தி வருகின்றனர்.
பாலத்தின் தொழில்நுட்ப நிலை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாலமொன்றை அமைப்பதற்கான எண்ணம் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் அது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் இந்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, 2016 ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார். இந்திய பாராளுமன்றத்திலும் இது குறித்து பேசப்பட்டிருந்தது. இந்திய மாநில அதிகாரிகளும், மத்திய அரசும் இது குறித்து பல தடவை கருத்து தெரிவித்துள்ளபோதும், இவ்வாறான செயற்றிட்டமொன்றை பேச்சுவார்த்தை மட்டத்திலிருந்து கீழ்மட்டத்திற்கு கொண்டுவருவது, உண்மையிலேயே ஒரு சவாலாகும்.
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கிலோ மீற்றர் அளவு நீளமுள்ள, கரடுமுரடான கடலில் சில தீவுகளைக் கொண்டிருக்கின்ற வழி, பவள பாறைகள் மற்றும் மணல் பாறைகள் உள்ளமையால், மேலிருந்து பார்க்கும்போது, ஒரு பாலம் போன்று காட்சியளிக்கின்றது. இந்திய புராதண தேவ கதைகளின்படி, அகந்தை கொண்ட இலங்கை மன்னனான இராவணன் கடத்தி வந்த சீதையை தேடி வந்த அனுமான், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும்போது, இவ்வாறு ஒரு பாலத்தை அமைத்துக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கதைகள் தவிர்ந்து, வேறு பௌதிக தொல்பொருள் ரீதியான ஆதாரங்கள் இல்லாதபோதும், மிதக்கும் கற்களின் மீது அவ்வாறான ஒரு பாலத்தை அமைத்து, அனுமான் இலங்கைக்கு வந்ததாக நம்புகின்றோர், இன்றும் இந்தியாவில் உள்ளனர்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சேது சமுத்திரம் எனப்படும் கப்பல் கால்வாயொன்றை அமைப்பது குறித்து பேச்சுக்கள் நடைபெற்ற 2005 காலப் பகுதியில், மனிதனால் அமைக்கப்பட்ட பாலமொன்று பாக்கு நீரிணையில் ஒருபோதும் இருக்கவில்லை என்று இந்தியாவின் டில்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இவ்வாறானா பாலங்களும், சுரங்கப்பாதைகளும் உள்ள வேறு இடங்கள்
பாக்கு நீரிணை ஆழமற்ற கடற்கரையாக உள்ளபோதும், அது குளம், ஏரி போன்று சலனமற்ற நீருள்ள நிலையான நிலத்தைக் கொண்ட இடமல்ல. பவளப் பாறை, கற் குன்றுகள், மணல் குன்றுகள் மற்றும் ஆழ்கடல் கொண்டுள்ள மேலே எழுந்து விழும் அலைச்சறுக்குகளை கொண்டுள்ள இந்தக் கடல் எல்லையினுள் அமைந்துள்ள நிலமும் ஒற்றைத்தன்மையானது அல்ல. இங்கு சில இடங்கள் 100 மீற்றரை விட ஆழமானதாகும்.
1955 இல் அமெரிக்காவின் லுசியானாவில் அமைக்கப்பட்ட Lake Pontchartrain Causeway என்ற பாலமே, உலகில் நீருக்கு மேலால் அமைக்கப்பட்டுள்ள நீளமான பாலமாகக் கருதப்படுகின்றது. சாந்தமான நீரைக் கொண்ட ஏரியொன்றுக்கு மேலாக, 38 கிலோ மீற்றர் நீள அளவில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாக்கு நீரிணை ஊடாக பாலமொன்றும், சுரங்கப்பாதையொன்றும் அமைப்பதற்கான எண்ணம் உள்ளபோதும், சுரங்கம் தோன்டுவது போன்ற விடயங்கள் தொழினுட்ப ரீதியாகவும், பண ரீதியாகவும் பெரும் செலவுக்குரிய விடயங்களாக உள்ளன.
பிரான்ஸிலிருந்து பெரிய பிரித்தானியாவை நோக்கி செல்கின்ற 50.5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட செனல் சுரங்கம் (Channel Tunnel), இவ்வாறு கடலுக்கு கீழால் அமைக்கப்பட்ட வெற்றிகரமான சுரங்கமாகும். பெரிய பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் என்பன உலக பொருளாதார ஜாம்பவான்களாக திகழும் நாடுகளாகும். ஆனால், ஐரோப்பாவில் இடைக்கிடையே ஏற்பட்ட சட்டவிரோத குடியேற்ற பிரச்சினைகள், இந்த சுரங்கம் ஊடான போக்குவரத்து சேவைககளிலும் பாதிப்பு செலுத்தின.
இந்த இரு நாடுகள் ஊடாக பரிமாறப்படும் பொருட்களைப் போன்றே, இந்த இரு நாடுகள் ஊடாக பெரும் தொகையான மக்களும் பயணிக்கின்றனர். பிரான்ஸிலிருந்து பெரிய பிரித்தானியாவை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த செனல் சுரங்கம், அதாவது இக்காலப் பகுதியின் உலக அதிசயமொன்றாக கருதப்படுகின்ற இந்த சுரங்கத் தொகுதி ஊடாக நாளாந்தம் 400 புகையிரதங்களும், 54,000 டொன் பொருட்களும் பயணிப்பதோடு, 50,000 பிரயாணிகளும் பயணிக்கின்றனர். 2000 ஆம் ஆண்டு, இந்த சுரங்கத்தின் ஊடாக பயணிப்போருக்கு, நாய்களையும் பூனைகளையும் கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததோடு, அதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நாய்களும் பூனைகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. உலகில் அதிக சுறுசுறுப்பாக இருக்கின்ற மற்றும் கடலுக்கு கீழால் அமைக்கப்பட்டுள்ள நீண்ட சுரங்கமாகிய செனல் சுரங்கத்தின் ஊடாக, எவ்வளவு பொருட்களும், பிரயாணிகளும் கொண்டு செல்லப்படுகின்றனர் என்பது தெளிவாகின்றது.
பெரிய பாலமொன்றை அமைப்பதற்கான திறன் எமக்கு உள்ளதா?
பெரும் தொகை பணத்தை செலவழித்து அமைக்கும் பாலத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் பெற்றுக் கொள்ள முடியுமான விசேட சாதகங்கள் எதுவுமில்லை. வடக்கில் யுத்த நிலை முடிவடைந்து, 2010 முதல் இதுவரையிலும் 6 வருடங்கள் கடந்துள்ளபோதும், இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிய தலைமன்னார் – ராமேஷ்வரம் படகு சேவையை தொடங்குவதற்கேனும், வெற்றிகரமான கீழ்மட்ட முயற்சிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான நிலையில் பாலம் அல்லது சுரங்கம் என்பது யதார்த்தமாக மாற முடியாத பெரும் கனவாகும்.
1950 களில் அமெரிக்கா உலகின் மாபெரும் சிவில் கட்டுமானங்களை அமைத்தபோதும், இன்று உலகின் பெரும் புகையிரத பாதை, பாலங்கள் அடங்கலாக அமைப்பதில் பிரபலமானவர்கள் சீனர்களே. இன்று உலகில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட பாலங்களின் பட்டியலில் உள்ள பல பாலங்கள் சீனா நிர்மானித்தவையாகும். புவிஅரசியல் நிலைகளைப் பார்க்கும்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலமொன்றை அமைப்பதற்கு, சீனர்கள் ஒருபோதும் தமது ஒத்துழைப்பை வழங்கமாட்டார்கள்.
கரடுமுரடான கடலின் மேல்; 32 கிலோ மீற்றர் நீளமான பாலம் அல்லது சுரங்கத்தை அமைப்பது ஒருபுறமிருக்க, அவ்வாறான ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கேனும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும், காஷ்மீருக்கும் புகையிரத பாதைகளை அமைக்கும் தேவை, நீண்டகாலமாகவே இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவின் மலைப்பாங்கான மாநிலமான காஷ்மீரை நோக்கி செல்லும் புகையிரத பாதையையேனும் அமைப்பதற்கு இந்தியாவுக்கு முடியாதுள்ளது. வெற்றிபெறா திட்டங்களும், ஊழல் நிரம்பிய அரசியல் செயற்பாடுகளுமே இதற்கான காரணங்களாகும். சீனா தனது பொறியியல் தொழினுட்பத்திறனையும், முகாமைத்துவ திறனையும் பயன்படுத்தி, திபெத் ஊடாக நோபாளம் வரையிலும், இன்னுமொரு புறத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரையிலும் பாதைகளை அமைத்துள்ளது. அவற்றில் சில திறக்கப்பட்டுமுள்ளன. ஆனால், இந்தியாவில் புதிதாக அமைக்கப்படவுள்ள எல்லை பாதைகள் பலவற்றின் பணிகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.
மொத்தமாகப் பார்க்கையில், அரசியல் ரீதியாக இலங்கையை இந்தியாவின் செல்வாக்கில் வைத்துக் கொள்வதற்கு இந்தியர்கள் விரும்புகின்றனர். எனவே, இந்திய மாநிலங்கள் போன்றே, தேசிய அரசியல்வாதிகளும் இடைக்கிடையே தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். உண்மையிலேயே பாக்கு நீரிணை ஊடான, 32 கிலோ மீற்றர் நீளமான கரடுமுரடான கடலின் ஊடாக, பாலம் அல்லது சுரங்கம் வழியாக இலங்கைக்கு வருவது, இந்தியர்கள் காணும் அழகிய கனவாகவாக ஆகிப்போவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன.
தமிழாக்கம் – அஷ்கர் தஸ்லீம்