விவசாயத்தில் புதிய யுகத்தை அடைதல்: எதிர்காலம் இளைஞர்கள் கையில்.

விவசாயம் உலகின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான தொழில்களில் ஒன்றாகும். விவசாய நாடான இலங்கை, 2,500 ஆண்டுகளுக்கு மேலான விவசாய வரலாற்றைக் கொண்டுள்ளது. இது நாட்டில் வறுமை ஒழிப்புக்கான முக்கிய உந்துகாரணியாக உள்ள வேளையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) சுமார் 8.4% பங்களிப்பு செய்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே காலநிலை மாற்றம் காரணமான பருவநிலை மாற்றம், வறட்சி, வெள்ளம் மற்றும் உயிர்ப் பல்வகைமை இழப்பு, மண் அரிப்பு, பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் காரணமாக விவசாய உற்பத்திச் சங்கிலிகளில் பெண்களின் பங்கேற்பு குறைதல், விவசாயத் துறையில் குறைந்தளவிலான இளைஞர்களின் பங்கேற்பு மற்றும் மார்ச் 2020 முதல் அமுலான கோவிட் -19 கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு சவால்களுடன் விவசாயத் துறை போராடி வருகிறது. 

வேளாண் தொழிலை வலுப்படுத்த, தீர்க்கப்பட்டாக வேண்டிய இப்பிரச்சினைகளின் பட்டியலில் குறிப்பாக, ஒன்று மட்டும் தனித்து நிற்கிறது:

இளைஞர்கள் எங்கே? (Photo credits: Chang Duong via Unsplash)

இளைஞர்கள் எங்கே?

“இளைஞர்களே நமது எதிர்காலம்” எனும் கூற்று எல்லா வகையிலும் உண்மையானதே. அதிலும் குறிப்பாக விவசாயம் போன்ற தொழிலாளர் பங்களிப்பில் கீழ்நோக்கிய போக்கை எதிர்கொள்ளும் ஒரு தொழிற்துறையில், இளைஞர்கள் தொழிலாளர் அடிப்படையில் மட்டுமல்லாமல், நவீன காலத்தில் அதன் நிலைத்தன்மையை சரியான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றுடன் விவசாயத் தொழில் துறையை இணைப்பதற்கு பொருத்தமான தீர்வையும் வழங்கக்கூடும்.  

இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல், இந்த தொழில் துறை வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இது இரண்டு முக்கியமான கேள்விகளை நம் முன் கொண்டுவருகிறது: 

  1. ஏன் இன்னும் அதிகப்படியான இளைஞர்கள் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடவில்லை?
  2. இந்தத் துறையில் இளைஞர்களின் ஈடுபாட்டை எவ்வாறு அதிகரிப்பது?

ஏன் இன்னும் அதிகப்படியான இளைஞர்கள் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடவில்லை?

விவசாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதற்கு மூன்று காரணிகள்  பங்களிப்பதாகக் கருதப்படுகிறது: 

  1. குறைந்த அளவிலான சமூக பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், ஊதியம் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறை நிலைத்தன்மை;
  2. இலங்கையின் வேளாண் துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் பற்றாக்குறை; 
  3. இலங்கை விவசாயத் தொழிலின் குறைவான வணிக மதிப்பு.

இந்தத் துறையில் இளைஞர்களின் ஈடுபாட்டை எவ்வாறு அதிகரிப்பது?

இதற்குப் பதிலளிக்க, நாம் முதலில் வேறுசில முக்கிய பகுதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

கவனம் செலுத்தப்படும் முதல் பகுதி பொருளாதார தாக்கம். கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 இல் இலங்கையின் பொருளாதாரம் 3.6% சுருங்கியது. இது மிக மோசமான வருடாந்திர வளர்ச்சி வீதமாக அறியப்படுகிறது. வேலை இழப்பு மற்றும் வருவாய் வீழ்ச்சி என்பன புதிய மட்டங்களை தொட்டன, வறுமை விகிதம் 2019 ல் 9.2% லிருந்து 2020 ல் 11.7% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், இலங்கையில் வேலை செய்யும் நபர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 8.2 மில்லியனாக இருந்தது, அவர்களில் சுமார் 26.5% பேர் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள்.

இந்த மக்கள்தொகையில் பெரும்பகுதி கிராமப்புற மற்றும் தோட்டத் துறைகளில் அமைந்துள்ளது, விவசாயத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ள மக்கள்தொகையில் 80% கிராமப்புறங்களில் வாழ்பவர்களாக உள்ளனர். இது முன்னர் 2019 ஆம் ஆண்டு இலங்கை ஊழியப்படை கணக்கெடுப்பில் வேலைவாய்ப்பு மக்கள்தொகை பரம்பல் குறித்த, குறுக்கு மாவட்டக் காட்சிப்படுத்தலில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த புள்ளிவிவரங்கள் விவசாய வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதை காட்டியது, கொழும்பில் இருந்து 1.6% ஆனோர் விவசாயத்தில் ஈடுபடும் வேளையில், பதுளையில் இருந்து 55.4% ஆனோரும் , நுவரெலியாவில் இருந்து 51.2% ஆனோரும், மொனராகலையில் 48.6% ஆனோரும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். சுமார் 1.65 மில்லியன் சிறுதொழில் விவசாயிகள் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்துடன் பணியாற்றினாலும் மொத்த வருடாந்த உணவு உற்பத்தியில் சுமார் 80% பங்களிப்பு செய்கிறார்கள். அதே நேரம், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மொத்த விவசாயிகளில் பாதி பேர் சிறிய அளவிலான விவசாயிகளே ஆவர்.

விவசாயத்துறையில் நுழையும் போது பெண்கள் மற்றும் யுவதிகள் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர் (Photo credits: Gyan Shahane via Unsplash)

அடுத்த கவனத்துக்குரிய பகுதி விவசாயத்தில் உள்ள பாலின வேறுபாடு. வாய்ப்புகள், சேவைகள் மற்றும் சிறப்பான கல்வி, சமூக அணுகுமுறைகள் என்பவற்றில் உள்ள பற்றாக்குறை அல்லது விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் உந்துதல் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளை ஒதுக்குவதானது இந்த துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 34.3% ஆக இருந்தது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை கூறியுள்ளது. அதில் 27.7% பேர் விவசாயத் துறையில் பணியாற்றுபவர்கள்.

வேளாண் துறையில் உள்ள முறைசாரா பெண் தொழிலாளர்கள் இந்த எண்ணிக்கையில் பிரதிபலிக்கவில்லை, இதனால் தொழில் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாமலேயே போகிறது. விவசாயத் துறையில் உள்ள பெரும்பாலான பெண்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தை மேற்கொள்ளும் வேளையில் ஆண்கள் நெல் விவசாயத்தில் ஈடுபடுவதுடன் சந்தைகளில் விற்பனைக்கு அதிக மதிப்புள்ள புதிய விளைபொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்கின்றனர். மேலும், விவசாயத்துறையில் நுழையும் போது பெண்களும் யுவதிகளும் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். இந்த சவால்களில், கடன்களைப் பெறுவதில் சிரமம், வளங்களின் அணுகல் மற்றும் கட்டுப்பாடு, குழந்தை பராமரிப்பு ஆதரவு இல்லாமை மற்றும் விவசாயம் ஆணாதிக்கம் மிக்க தொழிலாக பார்க்கப்படும் தவறான கண்ணோட்டம் ஆகியவை அடங்கும்.

மூன்றாவது கவனத்துக்குரிய பகுதி இலங்கையில் விவசாய தொழில்நுட்பத்திற்கு திறந்த தன்மை இல்லாமையும், விவசாயத்தின் பழைய முறைகள் மற்றும் பாரம்பரியங்களை பெரிதும் நம்பியிருப்பதும் ஆகும். இந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமையின்மை இளைஞர்களை தொடர்ந்தும் இந்த தொழில் துறையில் ஈடுபடாமல் இருக்க பங்களிக்கிறது.

பழைய தலைமுறையினர் தங்கள் செயல்முறைகளில் விவசாய தொழில்நுட்பத்தை இணைக்க மறுப்பது அல்லது இயலாது இருப்பது, நவீன சவால்களை எதிர்கொள்ளும் விவசாயத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நாட்டில் விவசாயத் தொழில்நுட்பத்தை மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்வது என்பது கொள்வனவு மற்றும் பயன்பாடு ஆகிய இரண்டு வகையிலும் அணுக முடியாதது. தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ள வேளையில், நகர்ப்புற துறைக்கு மாறாக கிராமப்புற மற்றும் தோட்டத் துறைகளுக்கு இடையே தொழில்நுட்பப் பிளவு பரவலாக உள்ளது.

தொழில்நுட்ப பற்றாக்குறையானது இளைஞர்களை தொழில்துறையிலிருந்து விலக்கி வைக்க பங்காற்றுகிறது (Photo credits: jeshoots.com via Pexels)

முன்னோக்கிய பாதை

வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு மத்தியில் உணவு பற்றாக்குறை உலகை அச்சுறுத்துவதால், விவசாயம் இன்று இருப்பதைப் போல எப்போதும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததில்லை. விவசாயத்தின் இலாபம் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் வெற்றிகளின் மூலம் பிரதிபலிக்கிறது. இதற்கு முக்கியமாக பாரம்பரியம் மற்றும் நவீன வேளாண் செயல்முறைகளை ஒன்றிணைத்து தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், புதிய முறையின் விளைவாகும். இது விளைச்சலை அதிகரிக்கிறது, மனித நேர விரயத்தைக் குறைக்கிறது, ஆரோக்கியமான பயிர்களுக்கு பங்களிப்பு செய்கிறது மற்றும் நீண்ட கால செலவுகள் மற்றும் இழப்புகளை குறைக்கிறது. தானியங்கி அறுவடை  முதல் ட்ரோன்கள், பிளாக்செயின் தொழில்நுட்பம், மரபணு திருத்தம், நகர்ப்புற வேளாண்மை மற்றும் செங்குத்து விவசாயம் வரை என விவசாயத் தொழில்நுட்பமே விவசாயிகளிடையே வறுமை, விவசாய நிலப் பற்றாக்குறை, வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் வேகமாக மாறிவரும் நுகர்வோர் விருப்பங்கள் போன்ற உலகப் பிரச்சினைகளுக்கு நேரடி பதிலாக அமைகிறது.

இளைஞர்களிடையே வேளாண் தொழில்முனைவை ஊக்குவிப்பது என்பது, உலகம் முழுவதும் தொழில் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்து வரும் விவசாயத் தொழில்நுட்பத்தை இலங்கை ஏற்றுக்கொள்வதை பெரிதும் மேம்படுத்தலாம். ‘இலங்கையில் விவசாய முயற்சியாண்மை மீதான இளைஞர்களின் ஆர்வத்தை பாதிக்கும் காரணிகள்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது “விவசாய தொழில்முனைவுக்கான இளைஞர்களின் விருப்பங்களானது, அணுகுமுறை, ஏற்றுக்கொள்ளுதல், விவசாய வருமானத்தில் பெற்றோரின் திருப்தி, பெற்றோரின் வருமானம், வேளாண் இயந்திர உரிமை, நில உடைமை, எதிர்பார்க்கப்படும் அரசாங்க ஆதரவு மற்றும் கடன் வசதிகள் ஆகியவற்றால் வலுவாக பாதிக்கப்படுகிறது” என்பதை கண்டறிந்துள்ளது. 

எனவே, இளைஞர்களுக்கு சாத்தியமான தொழில் வாய்ப்பாக விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும், அதற்கான முதல் படியாக முறையான கல்வி வழங்கப்பட வேண்டும். விவசாயத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொள்வது, அதில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அது அளிக்கும் ஏராளமான வாய்ப்புகள் பற்றி தெளிவடைவது என்பன இளைஞர்கள் விவசாயத்தில் தாங்கள் சிறந்து விளங்க முடியும் என உணர உதவி செய்யும்.

விவசாய உற்பத்தியின் வளர்ச்சியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்வதில் சிறு உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தித்திறனை தொடர்ந்து அதிகரிக்க உதவுவது முக்கியமாகும். (Photo credits: @no_one_cares via Unsplash)

தொழில்நுட்பம், கல்வி, மேம்பாடு மற்றும் நிதி உதவிக்கான அணுகலை மேம்படுத்துவதில் தனியார் துறையை ஈடுபடுத்துவது மற்றொரு முக்கிய படியாகும். வேளாண்மையில் தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை இளைஞர்களின் ஈடுபாட்டை கணிசமாக அதிகரிக்க உதவும், அதே சமயம் இந்த துறையில் ஒரு தொழிலை நிறுவுவதற்கான அடிப்படையையும் அவை வழங்கும்.

விவசாய உற்பத்தியின் வளர்ச்சியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்வதில் சிறு உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தித்திறனை தொடர்ந்து அதிகரிக்க உதவுவது முக்கியமாகும். இதற்கு இயற்கை வளங்களின் சீரழிவைக் குறைத்தல், விவசாயத் தொழில்நுட்பத்தை இணைத்தல் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சியை ஒன்று சேர்த்தல் என்பவற்றில் கவனம் செலுத்தும் பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. கிராமப்புற பெண்களையும் ஆண்களையும் மதிப்பு சங்கிலி வளர்ச்சியில் அதிகரிக்க உதவுவதன் மூலம் அவர்கள் தங்களை மேம்பட்ட சந்தைகளுடன் சிறப்பாக இணைத்துக் கொள்ள முடியும். 

அரசாங்க ஆதரவைப் பொறுத்தவரை, விவசாய குறுகிய, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (MSMEs) தங்கள் முயற்சிகளைத் தொடங்க அல்லது விரிவுபடுத்தத் தேவையான நிதியைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்ட சிறப்பு திட்டக் கடன்களைப் பயன்படுத்தலாம்.

கூடுதலாக, நாடு பாலின கரிசனை மிக்க  கொள்கைகள் மற்றும் பாதீட்டு உத்திகளை இயற்றுவதன் மூலம் விவசாயத்தில் பங்கேற்கும் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். பெண்கள் வலுவூட்டல் விசேட நிபுணர் விகிதா ரெங்கநாதன் அவர்கள் “இலங்கையில் பல பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் இந்த பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும், சமீபத்தில், பல பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்பத்தியாளர்களாக மாறியுள்ளனர், மேலும் சிறந்த அறுவடை மற்றும் வருமானத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க கற்றுக்கொள்வதில்  ஆர்வமாக உள்ளனர்” என கூறினார்.  

அவர் மேலும் கூறியதாவது, “ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்டு இலங்கையில் Oxfam, Save the Children மற்றும் Leads மூலம் நடைமுறைப்படுத்தப்படும்   பாலின உள்ளடக்கிய  சமூக-பொருளாதார மேம்பாட்டு திட்டம் (EGSD) பல விவசாய உற்பத்தியாளர்களை அடையாளம் கண்டதுடன் அவர்களின் முயற்சிகளை மாற்றும் வகையில் திறனை வலுப்படுத்த மிகவும் உதவி உள்ளன.”

பல பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்பத்தியாளர்களாக மாறியுள்ளனர், மேலும் சிறந்த அறுவடை மற்றும் வருமானத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்த கற்றுக்கொள்வதில்  ஆர்வமாக உள்ளனர்

இந்தத் திட்டத்தின் மூலம், “Save the Children” பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மற்றும் தோட்டத்து இளைஞர்களுக்கு தொழிலாளர் சந்தை தேவைகளுடன் பொருந்தக்கூடிய திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. விதை உருளைக்கிழங்கு, பால், இலவங்கப்பட்டை மற்றும் கொக்கோ மதிப்பு சங்கிலிகள் தொடர்பான சந்தை சார் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இது நடாத்தப்படுகிறது.

விவசாயத் துறையில் வேலை தேடும் பயிற்சி பெற்ற இளைஞர்களை அதிகரிப்பதன் மூலம், மூன்று மாவட்டங்களில் விவசாயத் தொழில் மற்றும் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியில் TVET திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறிப்பாக பள்ளியை விட்டு முன்னதாகவே வெளியேறிய இளம் வயதினரை இலக்காகக் கொண்டது, இவர்கள் ஏற்கனவே வேலைவாய்ப்பு வயதுக்குள் அமைவதுடன் வேலையில்லாத இளைஞர் தொகுதியின் பகுதியாக அமைக்கிறார்கள். 

EGSD திட்டத்தைப் போலவே, பல பொதுத்துறை மற்றும் தனியார் துறையால் அனுசரணை அளிக்கப்பட்ட திட்டங்கள் பல ஆண்டுகளாக விவசாயத்தில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கு  தன்முன்னேற்றம் வழங்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, கிராமப்புற சமூகங்களில் உள்ளவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், ஆண் ஆதிக்க தொழிலில் தங்கள் இடத்தை உறுதி செய்யவும் ஒரு முக்கிய பாதையை வழங்கியுள்ளனர்.

பல கிராமப்புற தொழில்முனைவோரான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மற்றும் விவசாயத் துறையில் உள்ள ஊழியர்களுக்கான வளர்ச்சிக்கான ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதற்கு பல பொது-தனியார் கூட்டாண்மை பங்களிப்பு செய்துள்ளது.

அரசாங்க நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நடிகர்களின் தற்போதைய முயற்சிகளுக்கு நன்றி, இவர்களின் தொடர் முயற்சியால் இளைஞர்கள் விவசாயத் தொழிலில் நுழைவது மற்றும் அதன் மூலம் ஒரு நீடித்த தொழிலை உருவாக்குவது முன்பை விட எளிதாகிவிட்டது.

விவசாயத்தைப் பற்றிய பொதுவான மனநிலைகள் மாறும்போது, விவசாயத்தில் அதிக இளைஞர்கள் சாத்தியமான பாதை இருப்பதை உணரத் தொடங்கியுள்ளனர், இதனால் தொழில்துறைக்கு ஒரு புதிய எதிர்காலம் உருவாகியுள்ளது. வேளாண் தொழிற்துறையை நவீன கால இளைஞர்களைக் கவர இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுமென்றாலும், இலங்கை அதன் புதிய பொருளாதாரம் மற்றும் குடிமக்களுக்கு நன்மை பயக்கும் புதிய யுகத்தை உருவாக்க சரியான பாதையில் பயணிக்கிறது. அதன் முன்னணியில் இலங்கையின் இளைஞர்கள் உள்ளனர்.

Related Articles

Exit mobile version