நாலாபுறமும் கடலாலும் கடனாலும் சூழப்பட்டுள்ள இலங்கை, தற்போது முகங்கொடுத்து வரும் இன்னல்கள் தான் எத்தனை எத்தனை! இயற்கை காடுகள், நீர்வீழ்ச்சிகள், துறைமுகங்கள், மிதமிஞ்சாத பருவநிலை மாற்றங்கள் என இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளையாக, பார்த்து பார்த்து செதுக்கிய அழகு சிற்பமாக திகழ்ந்த இலங்கை இன்று பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளுக்கு முகங்கொடுத்து தன்னிலை தடுமாறுகிறது. இந்து சமுத்திர பட்டு பாதையின் வர்த்தக கேந்திர நிலையம், வகைவகையான பவளப்பாறைகள், அரிதான கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடம் என இலங்கையை சுற்றியுள்ள கடல்பரப்பு வர்த்தகத்திற்கும் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது.