தொடக்கநிலை வணிகம் (Startup Business) – இலங்கையில் ஓர் பார்வை

இலங்கையில் அண்மையகாலங்களில் ஏற்படுகின்ற சாதக பொருளாதார மாற்றங்கள் மற்றும் அபிவிருத்திகள் என்பன நம்மவர்க்கு “தொடக்கநிலை வணிகம்” (Startup Business) எனும் புதிய சொற்றொடரை அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் வருடம்தோறும் அதிகூடிய 150 மில்லியன் ரூபாக்களை வருமானமாக வழங்கக்கூடிய தொடக்கநிலை வணிகங்கள் இலங்கையில் ஆரம்பிக்கபட்டு, வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கின்றன என்பது நம்மில் எத்தனைபேர் அறிவோம்?

o-startup-facebook

படம் – topyaps.com

தொடக்கநிலை வணிகம் என்றால் என்ன?

தொடக்கநிலை வணிகம் என்பது விரிவான சந்தையில் புதிய முயற்சிகளை அல்லது புதிய பொருட்களை முயற்சியாண்மைக்கு உரித்தான பாணியில் அறிமுகம் செய்வதே ஆகும். இவை புதிய பொருட்கள், சேவைகளாகவோ அல்லது சந்தையில் ஏற்கனவே உள்ள பொருள்,சேவைகளின் மேம்படுத்தபட்ட புதிய முயற்சிகளாகவோ அமையலாம்.

தொடக்கநிலை வணிகங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய மூலகாரணியாக அமைவது முயற்சியாண்மை மனப்போக்கே! புதிய முயற்சிகளுடன், முயற்சியாளர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சிபெறும் வணிகங்கள் அடுத்ததாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக, துணிகர முதலீட்டாளர்கள் (Venture Capitalist) , தனியார் பணமுதலீட்டாளர்கள் (Private Wealthy Individual) , ஏஞ்சல் முதலீட்டு நிறுவனங்கள் (Angle Investor Company) துணையுடன் மேலும் தங்களை விரிவுபடுத்தி மிகப்பெரிய வெற்றி நிறுவனங்களாக தங்களை நிலைநிறுத்தி கொள்ளுகின்றன.

இலங்கை முயற்சியாளர்கள் (Entrepreneurs) எப்படியானவர்கள்?

ஏனையநாடுகள் போல் அல்லாமல், இலங்கையில் உள்ள முயற்சியாளர்களில் 75% மானவர்கள் 20-35 வயதுக்குபட்ட இளையவர்களாகவே உள்ளார்கள். இன்றைய இலங்கையை இது வெள்ளைகலாச்சார (White Collar Job) வேலை என்கிற நிலையிலிருந்து, மெதுவாக வியாபார முயற்சியாளர்களை கொண்ட ஒரு நாடாக மாற்றியமைப்பதை வெளிப்படுத்துகிறது.

முயற்சியாளர்கள் வயதுப் பரம்பல் - SLASSCOM அறிக்கை

முயற்சியாளர்கள் வயதுப் பரம்பல் – SLASSCOM அறிக்கை

அதேபோல, இலங்கையில் தற்சமயம் இயங்குகின்ற பெரும்பாலான  தொடக்கவணிகங்களின் முயற்சியாளர்கள் அல்லது தொடக்க உறுப்பினர்கள் கல்விமான்களாக அல்லது வியாபாரம் தொடர்பான அத்தியவாசிய அறிவுடன் சந்தையில் காலடியெடுத்து வைப்பவர்களாக உள்ளார்கள். இந்த நிலையானது, வியாபர தோல்வி அளவினை குறைப்பதில் மிகமுக்கிய காரணியாக அமைகிறது.

முயற்சியாளர்கள் - கல்வித் தகைமை அடிப்படையில்

முயற்சியாளர்கள் – கல்வித் தகைமை அடிப்படையில்

SLASSCOM 2015ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கைகளின்படி, துணிகர வணிக முயற்சிகளை ஆரம்பிப்பவர்களில் பாலின வேறுபாடு மிக அதிகளவில் காணப்படுகிறது. 94% மான ஆண்களும், 6% வீதமான பெண்களுமே துணிகர முயற்சியாளர்களாக தற்போதைய நிலவரப்படி இலங்கையில் இருக்கின்றனர். அத்துடன், இவர்களில் 52%மானவர்கள் புதிய முயற்சிகள் காரணமாக தூண்டப்பட்டு சந்தையில் தங்களது வணிகத்தை ஆரம்பித்து வெற்றி பெற்றவர்களாக உள்ளநர். இது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் புத்தாக்க முயற்சிகள் அல்லது புதிய சிந்தனைகளுக்கான தொடக்க வணிகங்களில் இலங்கைக்கும் முக்கிய இடத்தை பெற்றுதந்துள்ளது. இதன் காரணமாகவே, இலங்கையில் மாதங்கள்தோறும் பல்வேறு வகையான தொடக்க வணிகங்களுக்கான நிகழ்வுகள் (Startup Events) இடம்பெறுகிறது. இவை, பெரும்பாலான முயற்சியாளர்களையும், முதலீட்டாளர்களையும் ஒன்றிணைக்கின்ற புள்ளியாக செயல்பட முனைகின்றன.

இலங்கையின் தொடக்க வணிகங்கள் எவ்வாறு உள்ளன?

கடந்த வருடங்களில் இலங்கையில் ஆரம்பிக்கபட்ட தொடக்க வணிகங்களில் 55% மானவை விரிவாக்க கட்டத்தை அடைந்துள்ளன. அவற்றுள் 65% மான வணிகங்கள் அதிகரித்து செல்லும் வருமான உழைப்பினை கொண்டுள்ளது.

அபிவிருத்திப் படிநிலைகள் - SLASSCOM அறிக்கை

அபிவிருத்திப் படிநிலைகள் – SLASSCOM அறிக்கை

தொடக்கநிலை வணிகங்களில் 38%மானவை ஆரம்பிக்கபடுகின்ற போதே, 2-5 பேர் கொண்ட குழுவாக ஆரம்பிக்கபடுகிறது. அதுபோல, 7%வீதமான வணிகங்கள் தனித்து ஒருவரால் ஆரம்பிக்கபடுவதாக SLASSCOM ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதுபோல, EY அறிக்கைகளின் பிரகாரம், (EY’s Global job creation and entrepreneurship survey for 2015) 47%மான தொடக்க வணிகங்கள் தாங்கள் ஆரம்பித்த முதல் வருடத்திலேயே தங்களுடைய வணிகங்களை விரிவுபடுத்துவதுடன், மேலதிக ஆட்சேர்ப்பையும் செய்யகூடிய அளவுக்கு வளர்ச்சி அடைவதாக சுட்டிகாட்டபட்டுள்ளது.

இலங்கையின் தொடக்க வணிகங்களில் 55%மான வணிகங்கள் முயற்சியாளர்களின் சொந்த சேமிபில்தான் ஆரம்பிக்கபடுகிறது என்பது நெருடலான ஒன்றாகும். இன்றும், புதிய முயற்சிகளுக்கு நிதியினை பெற்றுக்கொள்ளுவதில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்தன்மையினால் தமது சொந்த முதலீட்டுடனேயே சந்தைக்குள் நுழைகிறார்கள்.

முதலீட்டு முறைகள்

முதலீட்டு முறைகள்

தொடக்க வணிகங்களுக்கு இலங்கையிலுள்ள தடைகள் என்ன ?

  1. விசேடத்துவ தன்மை (Specialization)

இலங்கையில் ஆரம்பிக்கபடுகின்ற தொடக்கவணிகங்கள் பெரும்பாலானவை, ஆரம்பகாலத்திலேயே அல்லது மிகவிரைவாகவே ஒன்றுக்கு மேற்பட்ட தயாரிப்பு பொருட்களை (Product Mix) சந்தைக்கு வழங்குகிறது. இந்தநிலை தொடக்க வணிகங்கள் சந்தையில் தங்களை நிலைநிறுத்தி கொள்வதற்காகவும், மக்களுக்கு தொடர்ச்சியாகவே புதிய பொருட்களை அல்லது தயாரிப்புக்களை வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில் உருவாகிறது.. இது தொடக்க வணிகங்களுக்கு சாதகத்தன்மையை வழங்கினாலும், நீண்டகாலத்தில் சந்தையில் நிலைத்துநிற்கக்கூடியவகையில், விசேடதத்துவத்தன்மை கொண்ட பொருளை சந்தைக்கு வழங்குவதில் தவறிழைக்கின்றன.

பன்முகத்தன்மை கொண்ட தயாரிப்புக்களை சந்தைக்கு விரிவாக்க நிலையில் அறிமுகம் செய்வதே சிறந்ததாகும். அதற்கு முன்னதாக, முதன்மைத் தயாரிப்பில் (Primary Production) கவனத்தை செலுத்தி குறித்த ஒரு பொருளை சந்தைக்கு தரமானதாக வழங்க வேண்டும்.

  1. புற நிதிவளங்கள் (External Funding)

இலங்கையில் ஆரம்பிக்கபடுகின்ற பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்கள் தங்களது சொந்த சேமிப்பை ஆதாரமாகக்கொண்டு ஆரம்பிக்கபடுகிறன. ஆரம்பநிலையில், முதலீட்டாளர்களை அணுகுவதில் உள்ள தடங்கல்கள், அரச வினைத்திறன் போதாமை, நிதிநிறுனவங்கள் ஆரம்பநிலை வணிகங்களை பொருட்படுத்தாமை என்பனவும் பலகாரணங்களாக அமைகிறன.

இதன்விளைவாக, புத்தாக்க முயற்சி கொண்ட பல தொடக்கவணிகங்களும் போதிய புறநிதிவளங்கள் கிடைக்கபெறாமல் ஆரம்பத்திலேயே முடக்கபட்டு விடுகின்றது.

  1. சந்தைத்தேவைகளை கண்டறிதல் (Identify the Market Needs)

இன்றைய இலங்ககையில் தொடக்க வணிகங்களில் பெரும்பாலானவை, முன்னைய வணிகங்களின் வெற்றியை அடிப்படையாக கொண்டு, புத்தாக்க முயற்சிகளை உள்ளடக்கி ஆரம்பிக்கபடுகிறன. அவை, முதலீட்டாளர்களின் தேவைகளை அல்லது சந்தைத் தேவைகளைக் கண்டறிவதில் தவறிழைகிறது.

உதாரணமாக, PickMe என்கிற போக்குவரத்துச் சேவைத் தொடக்க வணிகத்தைத்  தொடர்ந்து அதேவகையான பல்வேறு புத்தாக்க முயற்சிகள் தோற்றம் பெற்றன. அதபோல, Calorie Counter என்கிற புத்தாக்க உணவுவிடுதியின் தோற்றத்துடனும் பல்வேறு புத்தாக்க முயற்சிகள் தோற்றம் பெற்றன. ஆனால், முதலீடு செய்யவிரும்பும் முதலீட்டாளர்கள் அதனை விரும்புவதில்லை என்பதை முயற்சியாளர்கள் மறந்துவிடுகிறார்கள். இது அவர்கள் தங்கள் முயற்சிகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதில் சிக்கல்நிலையை ஏற்படுத்துகிறது.

எனவே, முயற்சியாளர்கள் எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் உதவியுடன், வணிகத்தை விரிவுபடுத்த எண்ணியிருப்பின், அவர்கள் முதலீட்டாளர்களை கவரதக்கவகையிலும் தங்கள் வணிகங்களை அமைத்துகொள்ளுவது அவசியமாகிறது.

  1. இணையப் பணப் பணபரிமாற்றல் தடைகள் (Restriction in Online Payment)

SLASSCOM ஆய்வறிக்கையின்படி, முதலீட்டாளர்களுக்கும், முயற்சியாளர்களுக்கும் இலங்கையில் பணப்பரிமாற்றல் சேவையினைச் செய்வதற்கு பொருத்தமான பணப்பரிமாற்றல் முறையின்மை எது எனச் சுட்டிகாட்டப்படுகிறது. PayPal போன்ற பிரசித்தமான பணபரிமாற்றல் வலையமைப்புக்கள் இலங்கையில் இன்னும் அனுமதிக்கப்படாமை அதற்கு சிறந்தவோர் உதாரணமாக உள்ளது. அதற்கு மாற்றீடாக பல்வேறு, சிறிய பணபரிமாற்றல் முறைமைகள் இருந்தாலும், அவை தொடக்க வணிகங்களுக்குப் போதுமானதாக இல்லை. அத்துடன், இலங்கை அரசும் இவ்வாறான தடைகளை நிவர்த்திக்க போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமை புத்தாக்க வணிகங்களுக்கு ஓர் தடையே ஆகும்.

புத்தாக்க வணிகமுயற்சிகளின் வளர்ச்சிக்கு தேவையானவை எவை?

படம் - chandigarhmetro.com

படம் – chandigarhmetro.com

  1. நிதி வழங்கல் (Funding)

இலங்கையின் தொடக்க வணிகங்களுக்கு முறையான நிதிவளங்களை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகிறது. அரச நிதி நிறுவனங்கள் ஊடாக அல்லது தனியார் முதலீட்டாளர்களை இலகுவில் அணுகக்கூடியவகையில் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக முயற்சியாளர்கள் தங்கள் வணிகநிலைமைகளை மேம்படுத்திகொள்ள முடியும்.

  1. வியாபார செலவினங்கள் (Business Costs)

இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் செலவினங்கள் அதிகரித்தே செல்கிறன. பெரும்பாலான வணிகங்கள் பொருத்தமான இடத்தினை அமைத்துக் கொள்வதிலும், மாதாந்த மின்வலுப் பயன்பாட்டிற்கான செலவிற்குமே தமது முதலீடுகளைப் பயன்படுத்தவேண்டியுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகிறன. இதற்குப் பொருத்தமான தீர்வு ஒன்றினைக் கண்டறிவது அவசியமாகிறது. தொழில்சார் வலயங்களைக் கொழும்பை தவிர்த்து ஏனையபகுதிகளில் உருவாக்குதல், தொடக்க வணிகங்களுக்கு வரிச்சலுகை உட்பட தீர்வை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  1. முயற்சியாண்மை எண்ணத்தை உருவாக்குதல்

இலங்கையின் கலாச்சாரத்தில் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடிய தன்மை குறைவாகவே உள்ளது. இது புத்தாக்க முயற்சிகளை ஆரம்பிக்கின்ற முயற்சியாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தடையாக உள்ளது. இந்த மனோநிலையை மாற்றவேண்டிய மிகப்பெரும் பொறுப்பு உள்ளது. இதனை இலங்கை அரசோ, தனியார் முயற்சியாளர்களோ செய்யவேண்டும். அண்மைகாலத்தில் இதற்காக செய்யப்படுகின்ற நிகழ்வுகள், கருத்தரங்குகள் என்பனவும் பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பினும், இன்னமும் அதிகமானவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு உள்ளது.

2016/17ல் புத்தாக்க முயற்சியில் செய்ய வேண்டியவை

capture

இன்றைய நிலையில், தொடக்கநிலை வணிகம் என்பது இலங்கையில் வேலையின்மை பிரச்சினைக்கு மிகசிறந்த தீர்வு மையமாக உள்ளது. ஆயினும், தொடக்கநிலை வணிகர்களுக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகள் சென்றடைவதில் மிகப்பெரும் தடைகள் உள்ளன. அறிவு சார் ரீதியிலும், வளப்  பரம்பல் அடிப்படையிலும் தொடக்க வணிகங்களை முறையாக அனுசரிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும், அரசுக்கும் உண்டு. அவற்றை முறையாக செயற்படுத்துவதன் மூலமே, இன்றைய புதிய வணிகங்கள் நாளைய இலங்கையை பிரதிநிதிதத்துவப்படுத்தக்கூடிய தரங்களாக (Brands) மாறக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.

Related Articles

Exit mobile version