அரசின் கடமை, தமிழகத்தின் பெருமை, சத்துணவுத்திட்டம்

தமிழகத்தின் கல்வியறிவு சதவிகிதத்தை உயர்த்தியதில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய திட்டம். இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிய மிகப்பெரும் மக்கள் நலத்திட்டம். இந்த தலைமுறையில் அதிகார மட்டத்தில் அமர்ந்திருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குதவிய ஓப்பற்ற திட்டம். இப்படி பல பெருமைக்குரிய அடையாளங்களைக் கொண்டது சத்துணவுத் திட்டம். அந்த திட்டத்தை எம்ஜிஆர், காமராஜர் உள்ளிட்ட தமிழகத்துத் தலைவர்கள் பலரும் செதுக்குவதற்கு முன்பே ஆரம்பப் புள்ளியாக இருந்தவர் சர். பிட்டி தியாகராஜர்.

ஆங்கிலேயர் காலத்தில் இத்திட்டம்

1920-களின் தொடக்கத்தில் பசியுடன் பள்ளிக்கு வந்த ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க ஒரு திட்டத்தைக் கொண்டுவர விரும்பினார் சென்னை மேயர் பிட்டி தியாகராய செட்டியார். அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தியதன் பலனாக மிட்டே மீல்ஸ் ஸ்கீம் என்கிற பகல் உணவுத் திட்டம் உருவானது. முதற்கட்டமாக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பகல் உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு மாணவனுக்கான உணவுச்செலவு ஓர் அணாவைத் தாண்டக்கூடாது என்ற நிபந்தனையுடன் பகல் உணவுத் திட்டம் அமலுக்கு வந்திருந்தது. ஆயிரம் விளக்கில் ஆரம்பிக்கப்பட்ட பகல் உணவுத் திட்டம் சென்னை ஒரப்பாளையம், மீர்சாகிப் பேட்டை, சேத்துப்பட்டு என்று மெல்ல மெல்ல விரிவுபடுத்தப்பட்டது. அதன் பலனாகப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது. பகல் உணவுத் திட்டம் அடுத்தடுத்து விரிவுபடுத்தப்பட்டதால் சென்னை மாநகராட்சியின் நிதிச்செலவும் அதிகரித்தது. அது பிரிட்டிஷ் நிர்வாகத்தினரை யோசிக்கவைத்தது. பகல் உணவுத் திட்டத்துக்கான  நிதிச் செலவு செய்வது நீண்டகால நோக்கில் சாத்தியமில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர். விளைவு, பிட்டி தியாகராய செட்டியார் கொண்டுவந்த பகல் உணவுத் திட்டம் 1925 ஏப்ரல் முதல் தேதியன்று நிறுத்தப்பட்டது.

எனினும், நீதிக்கட்சி அரசின் தொடர் முயற்சிகளின் பலனாக பகல் உணவுத் திட்டத்துக்கு மீண்டும் உயிர் தரப்பட்டது. மீண்டும் ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில் உணவு கிடைத்தது. என்றாலும் பிட்டி தியாகராயர் கொண்டுவந்த பகல் உணவுத் திட்டம் சென்னையைத் தாண்டி பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டவில்லை.

MIdday Meal Scheme (Pic: salem)

தமிழகத்தின் கல்வியறிவுக்காக திட்டத்தை அரசுப் பொறுபாக்கிய காமராஜர்

   சில பத்தாண்டுகளுக்கு பிறகு அந்த திட்டத்தை முழுமையாக வரையறுத்து, அரசின் பொறுப்பாக்கி தமிழகத்தின் பெருமையாக்கினார் கர்ம வீரர் காமராஜர். பகல் உணவுத் திட்டத்தைத் தமிழகமெங்கும் விரிவுபடுத்தினார். பகல் உணவுத் திட்டத்துக்குப் மதிய உணவுத் திட்டம் என்ற புதிய பெயரைக் கொடுத்தார். கல்விக்கண் திறந்த காமராஜர் என்றும் காமராஜர் அழைக்கப்படுவதற்கு அவர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் மிக முக்கியமான காரணம்.

   தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளில் மட்டும் பதினாறு லட்சம் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஒருவேளை சாப்பாடு போட எவ்வளவு ரூபாய் செலவாகும்? என்றார் காமராஜர்.  மிகப்பெரிய மக்கள் நலத் திட்டத்துக்கான அடித்தளம் போட்ட கேள்வி அது. நிச்சயம் ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாமல் செலவாகும் என்றார் கல்வி அமைச்சர் நெ.து.சுந்தரவடிவேலு. ”இப்போதே  ஒரு கோடி ரூபாய் என்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் எவ்வளவு செலவாக்கும்?” என்று கணக்குபோடத் தொடங்கினார் காமராஜர். தமிழக நிதித்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியத்தை அழைத்துப் பேசினார் முதலமைச்சர் காமராஜர். மாநில அரசிடம் நிதி இல்லை என்றால், பொதுமக்களின் உதவியுடன் தன்னார்வத் திட்டமாகக் கொண்டுவரும் முடிவுக்கு வந்தார் காமராஜர். அதன்படி 27 மார்ச் 1955 அன்று சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய காமராஜர், ”விரைவில் மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது முழுக்க முழுக்க மக்களை நம்பிக் கொண்டு வரப்படும் திட்டம். அதை நிறைவேற்ற மக்களிடம் சென்று பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன். ஆதரவு கொடுங்கள் என்றார் முதலமைச்சர் காமராஜர்.

அந்த திட்டத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு முதலமைச்சர் காமராஜரை உற்சாகப்படுத்தியது. எட்டயபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவுத் திட்டம் தொடங்க உத்தரவிட்டார். மக்களின் ஆதரவோடு நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இலவச மதிய உணவுத்திட்டம் அடுத்தடுத்து தொடங்கப்பட்டது. மக்களை உற்சாகப்படுத்திய அந்த அறிவிப்பு நிதித்துறை அதிகாரிகளை பதறச்செய்தது. நிதிப்பற்றாக்குறை வந்துவிடும், திடீரென திட்டம் நிறுத்தப்பட்டால் அது ஆளுங்கட்சியின் செல்வாக்கை சரித்துவிடும் என்று நிர்வாக ரீதியிலான எச்சரிக்கையும் அரசியல் ரீதியிலான எச்சரிக்கையும் அடுத்தடுத்து விடப்பட்டன.  காமராஜரின் முயற்சியில் அந்த திட்டம் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

மதிய உணவுத் திட்டத்தின் எதிரொலியாக பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. தமிழகத்தின் எதிர்காலத்திற்கான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மதிய உணவுத் திட்டம் காமராஜரின் அரசியல் வாழ்க்கையில் அசைக்க முடியாத சாதனையாக இன்று வரை நீடிக்கிறது.

Kamarajar (Pic: medium)

சத்துணவுத் திட்டமானது

மதிய உணவுத்திட்டம் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் மேலும் வலுப்பெற்றது. கடைக்கோடி மாணவனிடமும் சென்று சேர்ந்தது. “மூன்று வயதே ஆகியிருந்த நான், எனது தாயார், தமையனார் மூவரும் பட்டினி கிடந்தபோது, பக்கத்துவீட்டுத் தாய் முறத்தில் வைத்து அரிசி கொடுப்பார். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, சாப்பிட்டிருக்காவிட்டால், நாங்கள் இந்த உலகத்தை விட்டே மறைந்திருப்போம். பசித்தால் அழமட்டுமே தெரிந்த வயதில், பசிக்கொடுமைக்கு ஆளாகும் அனுபவத்தை நான் இளமையில் அறிந்ததன் விளைவுதான் இந்தத் திட்டம்”… மதிய உணவுத்திட்டம்  சத்துணவுத்திட்டத்திட்டமாக வளர்ந்த போது தமிழக முதல்வர் எம்ஜிஆர் உதிர்த்த வார்த்தைகள் இவை…

ஆனால் சத்துணவுத் திட்டம் அரசின் வருவாயில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்று சகாக்களும், அதிகாரிகளும் சொல்லத்தொடங்கினர். காமராஜர் எதிர்கொண்ட அதே பிரச்சனைகள் எம்ஜிஆரையும் சுற்றி வட்டமடித்தன.  எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் திட்டத்தைக் கொண்டுவந்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1982-83-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நூறுகோடி ரூபாய் செலவு கொண்ட சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார் எம்ஜிஆர்.

சத்துணவுத் திட்டம் அரசாங்கத்தின் திட்டம் என்றபோதும் பொதுமக்களின் நிதியும் கிடைத்தால் மட்டுமே திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றமுடியும் என்ற நிலையில் இருந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆகவே, பொதுமக்கள் சத்துணவுத் திட்டத்துக்கு நன்கொடை அளிக்கவேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார். கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் கிராம வளர்ச்சி இயக்குனருக்கு நன்கொடை அனுப்புங்கள். நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் முதலமைச்சர் சத்துணவுத் திட்ட நிதிக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அறுபது லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் சேர்ந்து சாப்பிட்டனர். மாநிலம் தழுவிய அளவில் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் திறக்கப்பட்டன. ஏழைக் குழந்தைகளுக்கு உணவு என்ற அளவோடு நின்றுவிடாமல், சத்துணவு சமைப்பதற்கான பணியாளர்கள், பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் என்று பலருக்கும் வேலை வாய்ப்பைக் கொடுத்தது சத்துணவுத் திட்டம். அதன் காரணமாக, நூறு கோடியில் தொடங்கிய திட்டம் விரைவிலேயே இருநூறு கோடிக்கு விரிவுபடுத்தப்பட்டது. கூடுதல் நிதி தேவைப்பட்டபோது கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். அவர்களில் முக்கியமானவர், ஜெயலலிதா. சத்துணவுத் திட்டத்துக்கு அப்போதே நாற்பதாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தார் ஜெயலலிதா. சத்துணவுத் திட்டத்தைப் பிரபலப்படுத்த எம்.ஜி.ஆர் தேர்வு செய்த நபர், ஜெயலலிதா. அதிமுகவில் இணைந்த கையோடு சத்துணவுத் திட்டம் பற்றி ஒவ்வொரு மேடையிலும் பேசினார் ஜெயலலிதா.

MGR (Pic: offprint)

சர்ச்சைகள்

அந்த நேரத்தில் சில அதிர்ச்சியூட்டும் செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிட்டன திண்டுக்கல்லை அடுத்த சுக்காம்பட்டியில் சத்துணவு சாப்பிட்ட எட்டு குழந்தைகள் வாந்தியெடுத்து மயங்கினர்,  புதுக்கோட்டை மாவட்டம் இருதயபுரத்தில் சத்துணவு சாப்பிட்ட 63 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி, திருச்சி மாவட்டம் வயல்பட்டி கீரனூரில் சத்துணவில் பல்லி விழுந்ததால் 47 குழந்தைகள் வாந்தி, மயக்கம் என்பன போன்ற செய்திகள் அடுத்தடுத்து வெளியான போது சலசலப்புகள் சர்ச்சைகளாக வெடித்தன. பத்திரிகையில் வெளியான செய்திகள் திமுகவை உந்தித்தள்ளின. சத்துணவுத் திட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை எல்லாம் பட்டியல் போடத் தொடங்கியது திமுக. உணவு சமைப்பதற்கு ஏற்ற சரியான கட்டடங்கள் கட்டப்படாத நிலையில், எவ்வித அடிப்படைத் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக விமரிசித்தது திமுக. சத்துணவுத் திட்டத்தின் நோக்கம் சிறப்பானது என்றபோதும் அந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் நிலவிய குறைபாடுகளை முன்வைத்து இந்திரா காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்தத் திட்டத்தைக் கடுமையாக விமரிசித்தன.

சத்துணவுத் திட்டம் பலத்த விமரிசனத்துக்கு ஆளாகிக் கொண்டிருந்த சமயத்தில் மதுரை மாவட்டத்துச் சென்ற ஜெயலலிதா, அங்குள்ள சத்துணவுக்கூடம் ஒன்றுக்குள் காவல்துறை அதிகாரிகள் சகிதம் திடீரென நுழைந்து, சோதனை செய்திருக்கிறார். விஷயம் பத்திரிகைகளில் வெளியானதும் எதிர்க்கட்சிகள் விமரிசிக்கத் தொடங்கிவிட்டன. அரசுப் பதவியில் இல்லாத ஜெயலலிதா எப்படி அரசுத் திட்டத்தை சோதனை செய்யமுடியும் என்று கேட்டனர் எதிர்க்கட்சிகள். அப்படிப் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினருக்குத் தன்னுடைய உத்தரவின் மூலம் பதிலடி கொடுத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.  சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராக ஜெயலலிதாவை நியமித்தார் எம்.ஜி.ஆர்.

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தபோதும் வரிசையாகக் கேள்விகள் எழுப்பப்பட்டபோதும் சத்துணவுத் திட்டம் சிறப்பாகவே நடந்துகொண்டிருந்தது. அந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிக்கொண்டுதான் இருந்தது. எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு காரணம் தான். பசி. அதைத் தீர்த்து வைத்திருந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சத்துணவைச் சாப்பிடுவதற்காகவே ஏழை மாணவர்கள் பலரும் பள்ளிக்கூடம் வந்தனர். கல்வி கற்றனர். அதன்மூலம் தமிழகத்தின் கல்வியறிவு சதவிகிதம் கணிசமாக உயர்ந்தது.

School Boys (Pic: hypotheses)

முட்டை வழங்கினார் கருணாநிதி

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சத்துணவுத் திட்டத்தைக் கடுமையாக விமரிசித்தவர் கருணாநிதி என்பதால் அநேகமாக சத்துணவுத் திட்டத்தை ரத்து செய்துவிடுவார் என்று பொதுவாக எல்லோரும் கணித்தனர். ஆனால் முதலமைச்சர் கருணாநிதியோ சத்துணவுத் திட்டத்துக்குச் செறிவூட்டும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பருப்பு, காய்கறியைத் தாண்டி முட்டை என்பது பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் கிடைக்காத ஒன்றாக அப்போது இருந்தது. அந்த வகையில் சத்துணவோடு கோழி முட்டை தரப்பட்டது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்தத் திட்டத்துக்கு பெற்றோர்கள், குழந்தைகள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒருமுறை முட்டை என்பது வாரம் ஒருமுறை முட்டை என்று விரிவுபடுத்தப்பட்டது. பிறகு ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் பயிறு, சுண்டல், என்று விரிவுபடுத்தப்பட்டது.

Leaders Of Dravidian Parties (Pic: thequint)

பின்னாளில், சைவம் சாப்பிடுகின்ற அல்லது முட்டையை விரும்பாத குழந்தைகளுக்காக வாழைப்பழம் தரப்பட்டது. சில இடங்களில் சத்துமாவு தரப்பட்டது. பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்குச் சத்துணவு, முட்டை, வாழைப்பழம், சத்துமாவு என்றெல்லாம் கொடுத்தது தமிழக அரசு. இவையெல்லாம் பெற்றோருடைய பொருளாதாரச் செலவைப் பெருமளவு குறைத்தது என்பதைத் தாண்டி, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தியது. குறிப்பாக, மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை வெகுவாகக் குறைத்தது.

அரசுக்கும் மக்களுக்குமான பிணைப்பை உறுதி செய்த ஒப்பற்ற திட்டம் சத்துணவுத்திட்டம். 

Web Title: The Greatest Noon Meal Scheme, Tamil Article

Featured Image Credit: thewire

Related Articles

Exit mobile version