அழியப் போகும் ஆடல் கலை !

“ஆடல் கலையே தேவன் தந்தது” இது வெறும் சினிமா பாடல் வரிகள் மட்டுமே இல்லை. நாம் கற்கால மனிதர்களாக இருந்தபோதே இணையை கவர்வதற்கும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் உடல் அசைவுகளின் மூலம் அதாவது ஆடல் முறைகளின் வழியே மட்டும் அதனை நிகழ்த்தினோம். அதன் வெளிப்பாடாகவே இறை நம்பிக்கையில் கூட ஆடல் கலைக்கென தனி இறைவனையே கொண்டிருந்தோம்.

படம்: flickr

அப்படிப்பட்ட நாம் தான் இன்றைய அவசர, அறிவியல் சூழலில் நம்முடைய அத்தனை கலைகளையும் அழித்துக்கொண்டிருக்கின்றோம். ஆம், 15 வருடங்களுக்கு முன் நம் தமிழக கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்திலும் இரவு நேர கேளிக்கைக்காகவும், அதோடு நம் வரலாற்றை வரும்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் வள்ளி திருமணம், அரவான் நாடகம், அரிச்சந்திர புராணம், தெருக்கூத்து மற்றும் நாட்டார் வழக்கு தெருக்கூத்துகள் நடைபெறும். ஆனால், இன்றோ திருவிழா கொண்டாட்டம் என்ற பெயரில் இளம்பெண்களை வேடிக்கைப் பொருட்களாக கொண்டு ஆடல்,பாடல் நிகழ்ச்சியாக ஆபாச நடனங்கள் அனைவர் முன்னிலையிலும் அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த  விஷயம் ஒன்றும் புதிதல்ல… ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தது தானே…! என்று எளிதில் உதாசீனப்படுத்தி விட முடியாது. காரணம், இந்த இழிவான நிகழ்ச்சியின் இன்னொரு முகம் சொல்லமுடியாத ஏழ்மையையும், வக்கிரத்தையும் கொண்டுள்ளது. தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி எண்ணற்ற பொது நல வழக்குகள் குவிந்து வந்தாலும், நம் நீதித்துறையோ தற்காலிகமாகத் தடை விதிப்பதும், நீக்குவதுமாக இருந்து வருகின்றது.

இந்த அவலநிலைக்கு காரணம் என்ன? இதற்கான ஏற்பாடுகளை செய்வது யார்? என்ற தேடலில் இறங்கியபோது தான், தமிழக மேடை நாடக நடிகர் சங்க உறுப்பினர் ஒருவரிடம் விசாரித்தோம்.”இப்பலாம் ஜனங்க புராண, சரித்திர நாடகத்தையோ, தெருக்கூத்தையோ விரும்பி பார்க்கிறது இல்லங்க. சில கிராமத்துல இருந்து புரோகிராம் புக் பண்ண வர்றவங்க கூட, நாடகத்துல ரெட்டை அர்த்த வசனமும், கவர்ச்சியும் வேணும்னு சொல்லித்தான் அட்வான்ஸே கொடுக்கிறாங்க. முடியாதுன்னு சொன்னா வயித்து பொழப்ப பார்க்க முடியாது” என்று கவலையுடன் சொல்லிவிட்டு திடீரெனெ ஆவேசம் அடைந்தவராய்,”இதுக்குலாம் காரணம், ******* பயலுக நடத்துற டான்ஸ் புரோகிராமு தாங்க. இதுக்குனே கரூர், திண்டுக்கல், ஈரோடு, கொடுமுடின்னு ஏஜெண்டுங்க சுத்திகிட்டு இருக்கானுங்க. அவனுங்கள புடிங்க, உங்களுக்கு நெறய விஷயம் கெடைக்கும்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய நாதஸ்வரத்தை எடுத்து சுத்தம் செய்யத் தொடங்கினார்.

படம்: பெண்ணியம்

இவரைத் தொடர்ந்து பல நாட்டுப்புறக் கலைஞர்களின் கஷ்டங்களையும் கேட்டு தெரிந்துகொண்டிருந்த வேளையில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்குபெறும் ஒரு நடனக்கலைஞரே கிடைத்தார். ஆனால், அவர் தன்னுடைய தொழிலைப் பற்றி கூறும்போது சில நியாயங்கள் இருப்பதாகவே தெரிந்தது. ஒருபுறம் கல்லூரி மாணவராகவும், திருவிழாக்கால இரவுகளில் மட்டும் நடனக்கலைஞராக செயல்பட்டு வரும் அந்த 20 வயது “இளைய இந்தியா” தன்னைப்பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாது என மிக கண்டிப்புடன் கூறிவிட்டார். அதற்கு உண்மையாய் இருக்கும் விதமாய், அவருடன் உரையாடியது மட்டும் இங்கே பதிவிடப்படுகின்றது.

“சார், நான் பி.காம் ரெண்டாவது வருஷம் படிக்கிறேன். என்னோட ஃப்ரெண்ட்  மூலமாத்தான் ஆடல், பாடல் புரோகிராமுக்கு போக ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல கூட்டத்துல ஒருத்தனா ஆடிக்கிட்டு இருந்தப்போ 300 – 400 ரூபாய் குடுத்தாங்க. 2 வருஷம் ஆயிடுச்சு. இப்ப எங்க ட்ரூப்பில நானும் ஒரு மெயின் டான்ஸர். அதனால, 1000 ரூபாய் வரைக்கும் வாங்குறேன். அப்பா, அம்மா ரெண்டு பேருமே திருப்பூர்ல டையிங் வேலை. அவங்க சம்பாத்தியம் அவங்களுக்கு. என் செலவுக்கு நான் பார்த்துகிறேன். டான்ஸ் ஆடிப்  பொழைக்கிறது எனக்கெதுவும் தப்பா தெரியல. இதே டான்ஸ் புரோகிராம் டி.வி ல குடும்பத்தோட பார்க்கிறாங்க, அதுக்காக, அவங்க பசங்கள ட்ரைனியிங் பண்றாங்க. அது  சரின்னா.. இதுவும் சரிதான் சார்..” என்று சர்வசாதாரணமாக சொன்னபோது,

“நாங்கள் நடனத்தை பற்றி குறை சொல்லவில்லை. அதிலுள்ள ஆபாசமே எங்களை உறுத்துகின்றது” என எங்களின் ஆதங்கத்தை தெரிவித்தோம். “அட என்ன சார் நீங்க… இன்னைக்கு ஸ்கூல் படிக்கிற பையன்கிட்ட மொபைல் இருக்கு, இலவசமா கொடுக்கிற நெட் இருக்கு, இதுல அவனுங்க பார்க்காத விஷயத்தையா நாங்க காட்டப்போறோம். சார், மேடைக்கு கீழ நின்னு வேடிக்கை பார்க்கிற உங்களுக்கு அது ஆபாசமாத்தான் தெரியும். ஆனா, ஆடுற எங்களுக்குத் தான் எங்க கஷ்டம் தெரியும், கூட ஆடுற பொண்ணுங்கள அக்கா, தங்கச்சியாத்தான் சார் பார்க்குறோம். எங்கள விட அதிகம் சம்பாதிக்கிறதும் அவங்க தான், கஷ்டப்படறதும் அவங்க தான் சார். “ஒரு ஊருக்கு புரோகிராம் போயிட்டு, ட்ரூப்ல உள்ள பொண்ணுங்களோட பத்திரமா திரும்பி வர்றது, பாகிஸ்தான் பார்டருக்கு போயிட்டு வர்ற மாதிரி சார். எந்த டான்ஸ் ட்ரூப்ல கிளாமர் அதிகமா இருக்கோ, அவங்களுக்குத்தான் மார்க்கெட். கிட்டத்தட்ட சினிமா ஹீரோயின் மாதிரிதான் சார், எங்க வாழ்க்கையும்” எனச் சொல்லி சிரித்துவிட்டு கல்லூரிக்கு காலதாமதமாவதை காரணம் காட்டி கிளம்பினார்.

ஒரு கலாச்சாரத்தின் சீரழிவினை எப்படி இவர்களால் இலகுவாக எடுத்துக்கொள்ள முடிகின்றது? இந்த நிகழ்ச்சிகள் நடப்பது எல்லாமே கோவில் திருவிழாவிற்காகத்தான். நமது ஊரில் பெண் தெய்வங்களான அம்மன் கோவில்கள் தான் அதிகம். பகல் முழுதும் அம்மன் என்ற பெண்ணைத் தெய்வமாக வழிபட்டுவிட்டு, இரவில் அதே கோவில் வளாகத்தில் ஆட்டக்காரி என்ற பெயரில் வேறொரு பெண்ணை அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆடச்செய்வது தான், நம்முடைய பக்தி மார்க்கத்தின் மூலம் முக்தி அடையும் செயலா?

படம்: youtube

சரி… இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து கொடுக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என்று சொல்லக்கூடிய ஏஜெண்டுகளை தேடத்தொடங்கினோம். அதன் பயனாய் திருச்செங்கோடு அருகே உள்ள சிறுகிராமத்தைச் சேர்ந்த ஒரு நிகழ்ச்சி அமைப்பாளர் கிடைத்தார். இவரிடம் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இவருடைய மனைவி 6,7 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கவர்ச்சி நடன மங்கைகளில் ஒருவர்.

மிகவும் தயக்கத்தோடு பேசத்தொடங்கிய இவர்,”எங்களப் பத்தி எழுத என்ன சார் இருக்கு? காத்து நல்லா வீசுற காலத்துலத்துலயே உமிய தூத்திக்கிற மாதிரியான பொழப்பு தான் சார், எங்க பொழப்பு. சிவகங்கை, ராம்நாடு பக்கமெல்லாம் பங்குனி மாசம் தான் திருவிழா அதிகம். அதேமாதிரி விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி பக்கம் ஆடிமாசம் பிஸியா இருக்கும். வருஷத்துல 4,5 மாசம் தான் சார் இந்த பொழப்பு. மத்த டயத்துல கூலிவேலை. இல்லைனா லேண்ட் புரோக்கர் வேலை செஞ்சு எங்க பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்கோம்”

” இத விட கஷ்டமான ஒரு வேலை, ட்ரூப்ல ஆள் சேர்க்கிறது தான். பசங்கள கூட ஈஸியா புடிச்சுடலாம். ஆனா, பொண்ணுங்க கிடைக்கறது ரொம்ப கஷ்டம் சார். நல்லா டான்ஸ் ஆடணும் அதே நேரத்துல கிளாமர் காட்டவும் சம்மதிக்கணும். அப்பதான் வண்டி ஓடும்” என்று சொல்லி புன்னைகைத்தவர், தன் மனைவியை அருகே அழைத்து எங்களிடம் பேசச்சொன்னார்.

படம்: பெண்ணியம்

மிகவும் அடக்கத்துடன் எங்கள் எதிரே அமர்ந்த அந்த பெண்மணியை, கவர்ச்சி நடனம் ஆடியவர் என்று சொன்னால் யாருக்கும் துளி நம்பிக்கை கூட வராது. கல,கல வென்று பேசத்தொடங்கிய அவர்,”நாங்கள்லாம் வேணும்னே இந்த தொழிலுக்கு வரல சார். எங்க அப்பா, அம்மா அந்த காலத்துல தெருக்கூத்து ஆடி சம்பாதிச்சவங்க தான். இப்போ அதுக்கு மவுசு இல்லாததுனால, நாங்க இந்த பக்கம் திரும்பிட்டோம். இப்பகூட தாரை தப்பட்டைனு ஒரு சினிமாப்படம் வந்துச்சே.அது முழுக்க முழுக்க எங்க கதை தான். நாங்க கிளாமர் காட்டுற அளவுக்கு ஏத்த மாதிரி தான் எங்க சம்பளமும் இருக்கும். சில சமயம் சிகரெட் புடிச்சுக்கிட்டும், பீரு குடுச்சுக்கிட்டும் ஆடணும். இளவட்ட பசங்களுக்கு பிடிச்ச மாதிரி ஆடுனா தான் சார், பேசுன பேமண்ட் கரெக்டா குடுப்பாங்க” என்று சொல்லும்போதே அவரின் கண்கள் லேசாக கலங்கின. வாழ்வாதாரத்திற்கு எவ்வளவோ தொழில் இருக்க, இதை தேர்ந்தெடுத்தது எதற்காக என்ற கேள்விக்கு,”விதி” என்ற ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.

இடையில் குறுக்கிட்ட அவர் கணவர், “இந்த ஏரியா பொண்ணுங்கள இங்க ஆட விட மாட்டோம் சார். நெறைய பொண்ணுங்க நைட்டு மில்லு வேலைக்கு போறதா சொல்லிட்டுத்தான் புரோகிராமுக்கே வருவாங்க. மாசம் முழுக்க சம்பாதிக்கிற பணம், ஒரு நைட்டுல கிடைக்குது. அதுக்காக இந்த கஷ்டம் ஒண்ணும் பெருசா தெரியல சார். ஏன்னா, இத விட பெரிய கஷ்டத்தோட தான் அவங்க வாழ்க்கை இருக்கு. எல்லாருமே ஆடல்,பாடல் நிகழ்ச்சின்னா கிளாமர் மட்டும் தான் இருக்குனு நெனச்சுக்கிட்டு இருக்காங்க. அது ரொம்ப தப்பு சார். நிகழ்ச்சி ஆரம்பிக்கறப்போ கடவுள் பாட்டுக்கும், தேசபக்தி பாட்டுக்கும் ஆடுவோம். அப்புறம், குழந்தைகளுக்கு புடிக்கிற மாதிரி மம்மி டான்ஸ், ரோபோ டான்ஸ், ஜோக்கர் டான்ஸ்னு வெரைட்டி இருக்கும். இதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கெடச்சுச்சுனா 2 மணி நேரமும் இதையே ஆடி புரோகிராம முடிச்சுருவோம். முடியாத பட்சத்துக்கு தான் சார் கிளாமர் பக்கமே போவோம்”

படம்: மகதம்

“சில கிராமங்கள்ல கிளாமரே இருக்க கூடாதுனு கண்டிப்பா சொல்லிருவாங்க. அவங்க தான் சார், எங்க பொண்ணுங்களுக்கு தெய்வம்” என நெகிழ்ச்சியுடன் கூற, அவரது மனைவியோ சற்று கோபத்துடன்,”சார்,டெல்லியில ஒரு புள்ளைய கெடுத்தானுங்களே, அவனுங்கள விட மோசமானவனுங்க நெறய பேரு நம்ம ஊர்லயே இருக்கானுங்க. அவனுங்க பார்க்கிற பார்வையிலே குடும்பத்தை கருவறுத்து விட்ருவானுங்க” என்று சொல்லிகொண்டே எழுந்து சென்றார். தொடர்ந்து பேசிய அவரது கணவர், “நம்ம பக்கம் நடக்குற நிகழ்ச்சிக்கூட பரவாயில்ல சார். ஆந்திரா, கர்நாடகா பார்டர் பக்கமெல்லாம் தீக்குச்சி டான்ஸுன்னு சொல்லிக்கிட்டு பொண்ணுங்கள ட்ரெஸ் எதுமே இல்லாம ஆடவைக்கிற புரோகிராம் நடத்துறானுங்க” என்று கூற எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.

சொல்லமுடியாத மனபாரத்துடன் அங்கிருந்து கிளம்பினோம். இதுகுறித்து மேலும் சில தகவல்கள் திரட்டியபோது, கடந்த 10 வருடங்களில் அரசாங்கம் இதுகுறித்து சில நடவடிக்கைகள் எடுத்திருப்பது தெரிய வந்தது. நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் கண்டிப்பாக காவல்துறையினர் இருக்க வேண்டும். நடனத்தில் ஆபாசத்தின் அளவு அதிகமானால் உடனடியாக நிகழ்ச்சி தடை செய்யப்படும். ஜாதி அல்லது மதம் சம்பந்தமான பாடல்களுக்கும், ஜாதீயத் தலைவர்களின் போஸ்டர்களுக்கும், பேனர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதேபோல, இரவு 8 மணிக்கு தொடங்கப்படும் நிகழ்ச்சியை 10 மணிக்குள் முடித்தாக வேண்டும். புகை பிடிப்பது, குடிப்பது போன்ற நடனங்கள் இருக்கக்கூடாது. இது போன்ற தடைகள் இருந்தாலும் இதில் எதுவுமே சரிவர நடைமுறையில் இல்லை என்பது தான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

படம்: பெண்ணியம்

இந்த கொடுமைகளின் உச்சகட்டமாய் ஆடல்,பாடல் நிகழ்ச்சியினை வீடியோ ரெக்கார்ட் செய்து டி.வி.டி.க்களாக விற்பனை செய்யும் வியாபாரமும் வெகு சிறப்பாக நடந்து வருகின்றது.பெண்களை ஆபாசமாக சித்தரித்து காட்டினால் சிறைத்தண்டனை உண்டு என்று சட்டங்கள் இருந்த போதிலும் இந்த அவலங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. எது,எதற்கோ போர்க்கொடி தூக்கும் சமூக ஆர்வலர்களின் கவனத்திற்கு இந்த விஷயமும் சென்றடைந்தால் நாளைய சமூகம் சற்று மேம்பட வாய்ப்பு உள்ளது. “முன்னங்கையை நீட்டாமல், முழங்கையை நீட்ட முடியாது” என்பதற்கேற்ப நம்மை நாமே முதலில் சரிசெய்து கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம். தெருக்கூத்து நடத்தி சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட பரம்பரையைக்கூட உடலை காட்டி ஆட வைக்கும் அளவிற்கு நமது ரசிப்பு தன்மை பால்வெறியின் உச்சத்தில் உள்ளது . கலைகளை நேசிப்பது போல் கலைஞர்களையும் நேசிப்போம். எப்பொழுதும் போல அரசு இதையும் கவனிக்காது என்பது தெரிந்த ஒன்றே…!

 

Related Articles

Exit mobile version