இலங்கையின் தலைநகரை அழகாக்க காத்திருக்கும் துறைமுகநகரம்

சுற்றுலாவிற்குப் பெயர்போன இலங்கை சமீபத்திய காலமாக எத்தனையோ அசம்பாவிதச் சம்பவங்களை எதிர்கொண்டிருந்தாலும் தன் இயற்கை அழகாலும், வரலாற்றுப் பெயராலும் வெளிநாட்டவர்களை ஈர்க்கத் தவறியதில்லை. அத்தகு இலங்கையில், தலைநகர் கொழும்பானது சர்வதேச அளவில் பெயர்பெற்று வரும் நவீன நகரமாக மாற்றமடைந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. தாமரைத் தடாகம், தாமரைக் கோபுரம், வானுயர் கட்டிடங்கள் மற்றும் வரலாற்றுக் கட்டிடங்கள் என தன் அழகினை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த ஹைடெக் சிட்டியினை மேலும் அலங்கரிக்கும் விதமாக அனைத்துவசதிகளும் உள்ளடக்கி கட்டப்பட்டுவரும் கட்டிடத்தொகுதிகள் தான் Colombo Port City எனப்படும் கொழும்புத் துறைமுக நகரம்.  

கொழும்பு துறைமுக நகரத்தின் மாதிரி படம்
படஉதவி – PortCityColombo

கொழும்புத் துறைமுக பகுதியில் சர்வதேச வசதிகள் நிறைந்த கட்டிடத்தொகுதிகளை அமைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது தான் கொழும்பு துறைமுக நகரம் எனப்படும் Port City. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் சீன ஜனாதிபதி ஜிங்பின் அவர்களால் கடந்த 2014 ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சீன அதிபர் சிங்பின் மற்றும் இன்னும் சிலர்
படஉதவி – ejatlas.org

இதன் அமைவிடமானது கொழும்பு துறைமுகத்தின் தென்முனையிலுள்ள அலைதாங்கியுடன் கூடிய இடமாகும். இவ்விடத்தில் நவீன நகரமொன்று அமைக்கப்படுவதால் கொழும்பு நகரின் மத்திய வர்த்தக பிரதேசமாக இது வரும்காலங்களில் மாற்றமடையும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வர்த்தக கேத்திரங்களின் தரத்திற்கு இலங்கையின் இந்த போர்ட் சிட்டியும் உருவாகும் எனும் நோக்கில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொழும்பு துறைமுக நகரம் அமைக்கப்பட்டுள்ள கடல் பகுதி
படஉதவி – xinhuanet.com

கடல் பகுதியில் பெருமளவு மணல் நிரப்பட்டு இவ்விடம் உருவாவதால், ஆரம்பகாலங்களில் பலர் இதன் மீது விமர்சனங்கள் வைத்தாலும் தற்போது 60 சதவீத வேலைபாடுகள் நிறைவடைந்துள்ளதுடன் மீதமுள்ள வேலைகள் முழுமை பெறுவதற்காக பயணித்துக் கொண்டிருக்கிறது கொழும்புத் துறைமுக நகரம். 

2.69 கிலோமீட்டர்கள் பரப்பளவில் உருக்காகவுள்ள இந்நகரத்தினுள் வர்த்தக நிலையங்கள், வானளாவிய கோபுரங்கள், உல்லாச ஹோட்டல்கள், கடைத்தொகுதிகள், பூங்காக்கள் என அனைத்துவசதிகளும் உள்ளடக்கிய சர்வதேச தரம் கொண்ட இடமாக மாற இருக்கிறது தலைநகர் கொழும்பு. மேலும் இதனுள் பாரிய சூதாட்டங்கள் மற்றும் கொல்ஃப் மைதானங்கள் போன்றவையும் அமையப்பெற உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. 

படஉதவி – baotintuc.vn

சீனாவின் CCCC எனப்படும் China Communications Construction மற்றும் CHEC எனப்படும் இலங்கையின் துறைமுக நகர நிறுவனங்கள் இணைந்து தான் இதன் கட்டுமான வேலைப்பாடுகளை செய்துவருகின்றன. கொழும்பு துறைமுகத்தை ஒரு புறமாகவும் பிரபலமான காலிமுகத்திடலை மறு புறமாகவும் கொண்டு அமையக்காத்திருக்கிறது இந்த ஹைடெக் நகரம்.

Related Articles

Exit mobile version