சுதந்திர இலங்கையின் முதல் அரசியற் கொலை!

துப்பாக்கியால் சுடப்பட்டு மரணத்தைத் தழுவும் போது S.W.R.D. பண்டாரநாயக்கவுக்கு 60 வயது. சுதந்திர இலங்கையில் முதன் முதலாக கொலை செய்யப்பட்ட அரசியல் தலைவராக அவர் அறியப்படுகின்றார். சுடப்பட்ட உடனேயே அவர் இறந்துவிடவில்லை. காயமடைந்த பண்டாரநாயக்கவை தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அடுத்த நாள் தான் அவருடைய உயிர் பிரிந்தது.

இதுதான் நடந்தது

1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்று பதவியை ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பறித்தெடுத்து, பிரதமர் ஆகியிருந்தார் பண்டாரநாயக்க. அந்தப் பதவிக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு அவர் குடிபெயர்ந்திருந்தார். அவரது சொந்த வீடு கொழும்பு – ரொஸ்மிட் பிளேஸில் அமைந்திருந்தது. பண்டாரநாயக்க அடிக்கடி அங்கும் சென்று தங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பண்டாரநாயக்க அவர்கள் ரோஸ்மீட் பிளேஸில் அமைந்துள்ள அவரின் வீட்டு தாழ்வாரத்தில் அமர்ந்துள்ள காட்சி

பிரஜைகளை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டு அதற்கான தீர்வுகளை அளிப்பது அவர் வழக்கம்.  அவருடைய பாதுகாப்புக்காக காவல்துறை, சப்-இன்ஸ்பெக்டர் தர அதிகாரியொருவரை அளித்திருந்தது. ஆனாலும் பண்டாரநாயக்கா அந்த அதிகாரியை திருப்பி அனுப்பி விட்டு, சில கான்ஸ்டபிள் தர உத்தியோகத்தர்களைக் கோரிப் பெற்றிருந்தார். 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஒரு செவ்வாய்க்கிழமை. அன்று காலையில் பிரதமர் பண்டாரநாயக்கா தமது பிரஜைகளை ரொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில் வைத்து சந்தித்துக் கொண்டிருந்தார். அன்றைய தினம் பண்டாரநாயக்கவின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய ஒரே ஒரு கான்ஸ்டபிள் மாத்திரமே இருந்தார்.

அந்த வீட்டின் வராந்தா பகுதியில் இருந்த வண்ணமே, பண்டாரநாயக்க மிக எளிமையாக மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அந்த வராந்தாவில் அப்போது சுமார் இருபது பேர் தமது பிரதமரைச் சந்தித்து பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக காத்திருந்தனர். ஏறக்குறைய இன்னுமொரு நாற்பது பேர் வெளியே வரிசையில் நின்றனர். அப்போது காலை 9 மணி ஆகியது. பௌத்த பிக்குவான தல்டுவே சோமராம தேரர் வராந்தாவுக்கு உள்ளே வந்து அமர்ந்தார். தல்டுவே சோமராம தேரர், அரசாங்க ஆயுர்வேதக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். அந்தக் கல்லூரிக்கான சில தேவைகள் பற்றி உரையாடுவதற்காக பிரதமரைச் சந்திப்பதாகக் கூறியே அன்றைய தினம் அவர் அங்கு வந்திருந்தார்.

S.W.R.D. பண்டாரநாயக்கவுக்கு இறுதி மரியாதை செய்யும் பிள்ளைகள் மற்றும் அவரின் துணைவியார் காலஞ்சென்ற சிறிமாவோ பண்டாரநாயக்க

பிரதமரைச் சந்திக்க வருவோரது பெயர் கூப்பிடப்பட்ட பின்னரே, அந்தப் பெயருக்குரியவர் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு அருகில் செல்ல வேண்டும். ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு பிரதமரிடம் தமது குறைகளைச் சொல்லிச் சென்று கொண்டிருந்தனர். தனது பெயரை அழைக்கக் கேட்டதும், தல்டுவே சோமராம தேரர் எழுந்து பிரதமரை நோக்கிச் சென்றார். ஒரு பௌத்த பிக்கு தன்னை நோக்கி வருவதைக் கண்ட பண்டாரநாயக்க, மரியாதை நிமித்தம் தனது ஆசனத்திலிருந்து எழுந்து சற்று முன் சென்று வரவேற்று, ஆசனத்தில் அமரச் செய்தார். 

பிக்குவுக்கு தாம் எவ்வாறு உதவ முடியும் என்று பண்டாரநாயக்க கேட்ட போது, சோமராம தேரர் மிகவும் பதற்றமாக இருந்தார். அந்தப் பதற்றத்துடனேயே, ஆயுர்வேத கல்லூரிக்கான தேவைகளை பண்டாரநாயக்கவிடம் கூறினார். அப்போது சுகாதார அமைச்சராக இருந்த A.P. ஜயசூரியவை இந்த விடயம் குறித்து கவனிக்கச் சொல்வதாக, பண்டாரநாயக்கவினால் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை வழங்குவதற்காகத் தேடுவது போல் தான் கொண்டுவந்த கோப்புகளை எடுத்தார். பண்டார நாயக்கவும் அந்த நினைவுச் சின்னத்தைப் பெற்றுக் கொள்ளத் தயாரானார். அந்தக் கணத்தில் தனது ஆடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டுவந்த கைத்துப்பாக்கியினை எடுத்து, இலங்கையின் பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்க முன்பு நீட்டினார் தல்டுவே சோமராம தேரர்.

அது ஒரு வெப்லே ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி. அந்தத் துப்பாக்கியிலிருந்து சீறிக்கொண்டு வெளிவந்த இரு குண்டுகள் பண்டாரநாயக்கவின் நெஞ்சுப் பகுதியையும் அடிவயிற்றுப் பகுதியையும் துளைத்தன. அவர் பெருத்த சத்தமிட்ட வண்ணம் கீழே விழுந்தார். ஆனால், மீண்டும் எழுந்த பண்டாரநாயக்க மிகுந்த சிரமத்துடன் வராந்தாவிலிருந்து வீட்டுக்கு உள்ளே ஓடுவதற்கு முயன்றாரெனக் கூறப்படுகின்றது.

பண்டாரநாயக்க அவர்களை வெப்லே ரிவோல்வர்
என்ற துப்பாக்கியால் சுட்ட தல்டுவே சோமராம தேரர்

அன்றைய தினம் பிரதமர் பண்டரநாயக்கவைச் சந்திப்பதற்கு பொலன்னறுவையிலிருந்து மற்றுமொரு பௌத்த பிக்குவும் வந்திருந்தார். அவர் பெயர் ஆனந்த தேரர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறும் போது அவர் அருகிலேயே ஓர் ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். அதிர்ச்சியின் காரணமாக திடீர் என்று எழுந்த ஆனந்த தேரரை நோக்கியும், சோமராம தேரரின் துப்பாக்கி முனை நீண்டது. ஆனந்தர் பெருத்த சத்தமிட்டு கத்தினார். இதனையடுத்து ஆனந்தரை விட்டுவிட்டு, காயம்பட்ட நிலையிலும் தட்டுத்தடுமாறி வீட்டுக்குள் செல்ல முனைந்த பண்டாரநாயக்கவைப் பின் தொடர்ந்ததோடல்லாமல், துப்பாக்கியால் மீண்டும் சுட்டார்.

அப்போது வெளியான ஒரு தோட்டா பண்டாரநாயக்கவின் கையைத் துளைத்தது. மற்றொரு தோட்டா, பிரதமரைக் காண வந்திருந்த ஒரு பாடசாலை ஆசிரியரைத் தாக்கியது. இன்னும் இரண்டு தோட்டாக்கள் வெளியாகி, ஒன்று கதவில் பொருத்தப்பட்ட கண்ணாடியை உடைத்தது. மற்றொன்று பூச்சாடியை உடைத்தது.

S.W.R.D. பண்டாரநாயக்க அவர்களின் இறுதிச் சடங்கிற்கு நாட்டு மக்கள் அலைமோதும் காட்சியை படத்தில் காணலாம்

இங்கு இவ்வளவும் நடந்து கொண்டிருக்கும் போது, இலங்கைப் பிரதமரின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய ஒரே ஒரு காவல் உத்தியோகத்தர், வீட்டு வளவுக்கான படலைக்கு அருகில் காவலுக்கு நின்றிருந்தார். ஆனந்த தேரர் வெளியே வந்து பிரதமர் சுடப்பட்டாரென கத்தியதை அடுத்து காவல் உத்தியோகத்தர் உள்ளே ஓடினார். அந்த உத்தியோகத்தரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா, சோமராம தேரரின் இடுப்புப் பகுதியில் பாய்ந்து அவரைக் காயப்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டார்.

கடுமையாக காயப்பட்டிருந்த நிலையிலும் தம்மைக் கொல்ல வந்த சோமராம தேரர் மீது கருணை காட்டுமாறு பண்டாரநாயக்க கோரினார் எனக் கூறப்படுகின்றது. இலங்கையின் பிரதமர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த சோமராம தேரர், கைது செய்யப்பட்ட நிலையில் துறைமுகக் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அதேவேளை, முழுமையான பாதுகாப்புடன் பண்டாரநாயக்க தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

S.W.R.D. பண்டாரநாயக்க அவர்களின் சமாதியும்
சுடப்பட்ட வேளையில் அவர் அணிந்து இருந்த ஆடையும்

தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்கள் இடம்பெற்ற சத்திர சிகிச்சையின் பின்னர் அவர் வார்ட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு தனது சுய உணர்வைப் பெற்ற பண்டாரநாயக்க தேசத்துக்கான தனது இறுதிச் செய்தியைத் தெரிவித்தார். அப்போதும் தனது கொலையாளி மீது கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்தார்.  அவரது உடல்நிலை சீரடையாது மோசமடையத் தொடங்கியது. துப்பாக்கியால் சுடப்பட்டு 22 மணித்தியாலங்களின் பின்னர், அவர் மரணமடைந்தார். 1959ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று அவரது மரணம் வைத்தியசாலையிலேயே நிகழ்ந்தது.

இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரமடைந்து சில ஆண்டுகளே அப்போது ஆகியிருந்தன. பண்டாரநாயக்க மீதான கொலை முயற்சியும் அவரது மரணமும், இலங்கையர்களை மட்டுமல்லாது முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 26ம் திகதியன்று 60 வருட நிறைவுடன் அவரது ஞாபகார்த்த தினம் அனுட்டிக்கப்பட்டது.

Related Articles

Exit mobile version