பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு புராதன நகரமாகும். கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாக இது திகழ்திருக்கின்றது. அனுராதபுர ராசதானி காலங்களின் போதும் அனுராதபுரத்திற்கு பாதுகாப்பு வழங்கும் அரணாகவும் இந்நகரம் இருந்துள்ளது.
அனுராதபுர ராசதானியை சோழர்கள் கைப்பற்றிய பின்னர், இந்நகரை இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பொலன்னறுவை சோழர்களால் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. சோழர்கள் 52 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு தான் பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர் காலங்களிலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது.
பண்டைய இலங்கையின் இராசரட்டையையும் உருஹூணுரட்டையையும் இணைக்கும் பிரதான வீதி பொலன்னறுவை ஊடாக அமைந்திருந்தமை ஆக்கிரமிப்பாளர்கள் பொலன்னறுவையை தலைநகராக தெரிவு செய்ய முதன்மை காரணமாகும். பொலன்னறுவையை சுற்றி மகாவலி கங்கை ஓடுவதும் பொலநறுவை குளிர்மையாகவும் குளங்கள் நிறைந்தும் இருக்க காரணம். பல வருடங்கள் கழிந்த இன்னும் அக்குளங்கள் பயன்பாட்டில் உள்ளன.
அரண்மனைகள், மாளிகைகள், கோவில்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், மருத்துவமனைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் என்பன 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் தொல்பொருலியல் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டன. மற்றும் சோழர்களின் ஆட்சியின் போது இந்து மதம் வளர்ச்சியடைந்து இருந்ததற்கான சான்றாக இப்பகுதியில் சிவன் கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியக் கலை அம்சங்களின் செல்வாக்கு நிறைந்து காணப்பட்ட போதிலும் இவ் வட்டதாகே சிற்பங்கள் பண்டைய இலங்கையின் கட்டிடக்கலைக்கு உரிய தனித்துவமான அமைப்பை கொண்டுள்ளது. புத்தரின் புனித சின்னங்களை கொண்டு அமையப்பெற்ற தாதுகோபங்களைப் பாதுகாப்பதற்காக தான் இவ் வட்டதாகேக்கள் ஆரம்பகாலத்தில் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
முதலாம் பராக்கிரமபாகு மன்னனால் அமைக்கப்பட்ட கல்விகாரை, பாறையின் அமைப்புக்கு ஏற்ப முக்கோணப் பகுதியில் அமர்ந்த நிலை புத்தர் சிலையும், உயர்ந்தபகுதியில் நின்ற நிலை புத்தர்சிலையும், நீளமான தட்டையான பகுதியில் சயன நிலை புத்தர் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. இது மகாஞான பௌத்த எண்ணக்கருக்களுக்கு அமைவாகவே செதுக்கப்பட்டுள்ளது.
நிசங்க மல்லனால் கட்டப்பட்ட நிசங்க லதா மண்டபம், பொலன்னறுவையில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாகும். உயர் கற்தூண்கள், சிறிய கற்சுவர்கள் என கொண்டு அமைந்த மண்டபம் இது ஆகும், இவை ஒவ்வொரும் ஒரே அளவாக இருக்கும் இரண்டு வரிகளில் அமைந்த நான்கு கருங்கல் தூண்களால் ஆனது. இத் தூண்கள் கூரைகளை தங்குவதற்கு அமைக்கப்பட்டது.
இவ்விகாரையானது பொலன்னறுவையில் உள்ள நிசங்கமல்லனால் கட்டப்பட்ட விகாரைகளில் ஒன்றாகும். அனுராதபுரத்தில் உள்ள ரூவான்வெலிசாய விகாரையின் கட்டுமானத்தை ஒத்த ஒன்றாக இருக்கின்றது. 550 அடி விட்டமும், 108 அடி உயரமும் கொண்டு முற்றிலும் செங்கற்கள் கொண்டு அமைந்த விகாரையாகும்.
அநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மகிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராசேந்திர சோழன் என்ற சோழ மன்னனால் இராசரட்டை கைப்பற்றப்பட்டது, பின் அப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாகியதுடன் அது ‘மும்முடிச் சோழ மண்டலம்’ எனப்பெயரிடப்பட்டது.
பொலன்னறுவையை, தமிழர்களான சோழர்கள் தலைநகராக்கி ஆட்சி செய்ததுடன், சிவ வழிபாடு மற்றும் தங்கள் கலைகளில் திராவிட கட்டிடக்கலைப் பாணியையும் பயன்படுத்தியுள்ளதை அங்குள்ள பண்டைய கட்டிடங்கள் சான்றாக உறுதியளிக்கின்றது.
பொலன்னறுவைச் சிவன் ஆலயம்
பொலன்னறுவை நகரில் இருந்து வடக்கே 2 கிலோ மீற்றர் தொலைவில் பராக்கிரம சமுத்திரத்தை அண்டி அமைந்துள்ளது வானவன் மாதேவி ஈச்சரம். 10ஆம் நூற்றாண்டின் இறுதித் தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழர்கள் அமைத்த கோயில்களுள், முழுமையாக இன்றுவரை எஞ்சியுள்ளது இவ் ஆலயம் மட்டும் தான். இக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆரம்பகாலக் கல்வெட்டுச் சான்றைக் கொண்டு இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது.
UNESCO உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில், பொலன்னறுவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இவ்வாறு நம்மை சூழ கொட்டிக்கிடக்கும் நம் முன்னோர்களின் வரலாற்று பொக்கிஷங்களை பேணிப் பாத்துக்க வேண்டிது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.