இரண்டாயிரம் வருடத்திற்கும் மேல் பழமையான தமிழ் மொழியின் செழுமையிலும், வளர்ச்சியிலும் பல கவிகளின் பங்களிப்பு இருக்கிறது. மொழி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், எழுத்தை சமூக மாற்றத்திற்காக பயன்படுத்துகின்ற மரபும் கூட தமிழ் மொழிக்கு இருக்கிறது. சமூக நீதிக்கான செயல்பாடாக இலக்கியத்தை உபயோகிக்கும் எவருமே வரலாற்றில் திடமான தடமாகப் பதிந்து தான் போவார்கள். ஆனாலுமே கூட, எமது வரலாற்றை எமக்கே நினைவுபடுத்த வேண்டிய கட்டாயமும் நினைவு கொள்ள வேண்டிய நிர்பந்தமும் நமக்கு தொடர்ந்தும் உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தமது எழுத்தின்,பாடல்களின், செயல்பாட்டின் வழியே சமூக மாற்றத்தை அடைய நினைத்த கவிகளை எல்லாம் ஒரே பட்டியலுக்குள் அடக்கிவிட முடியாது. மேலோட்டமாக தெரிந்து வைத்திருப்பதை இன்னும் கொஞ்சம் ஆழமாக தெரிந்து கொள்வோம் என படிக்கத் தொடங்கிய போது ஆச்சரியம் அளித்த ஆளுமைகளில் ஒரு சிலரை பற்றி இங்கே எழுதுகிறேன்.
வள்ளலார் :
1823 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்தவர் இராமலிங்கம் என்கிற வள்ளலார். வள்ளலார் என்றதுமேயே அவருடைய ஆன்மீகப் பாடல்கள் தான் நினைவு வரும் என்றாலுமே, வள்ளலார் மிகச் சிறந்த சமூக நோக்கோடு இயங்கினார் என்பதையும் எழுதத் தான் வேண்டும். இளம் வயதிலேயே நல்ல சிந்தனை திறமையோடு இருந்த இராமலிங்கம் கல்வி கற்க சென்ற இடத்தில் ஆசிரியரையே தன் பாட்டுத் திறமையாமல் திணறடித்தவர் என்ற ஒரு கதை உண்டு. இத்தனைக்கும் வள்ளலார் எவரிடமும் சென்று பயிற்சி பெற்றிருக்காதவர்.
வள்ளலாரின் சமூகப் பணிகள் எனும் கட்டுரையில், பேராசிரியர் டாக்டர் சிவகாமசுந்தரி , “சன்மார்க்கத்தின் அடிப்படைக்கொள்கைகள் -மனிதன் வாழுகின்ற சமுதாயத்தை நினைத்துப் பார்ப்பது, மண்ணுயிர்க்கு இரங்குதல், பசி போக்குதல், உயிர்க்கொலை தவிர்த்தல், ஆருயிர்க்கும் அன்புசெய்தல், யமனிதச் சமத்துவம் காணுதல் எனலாம். மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் சன்மார்க்கத்தின் வழி தம் காலத்தில் முதற்கட்டமாகப் பசி நீக்கும் பேரறத்தை இவ்வுலகத்தில் நிலைநாட்டி அதன்வழியாகச் சமுதாயத்தை உயர்த்த எண்ணிய வள்ளலார் தம்மைச் சுவாமிகள் என அழைப்பதோ , வணங்குவதோ தமக்கு உடன்பாடல்ல என்பதைப் பல இடங்களில் உணர்த்துவார்” என்று எழுதுகிறார்.
செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு இக்கால மக்களுக்கு தேவை ‘அன்பு’ மட்டுமே என்று மொழிந்ததுவும் (“அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே”) , பஞ்சத்தால் இறந்த மக்களை பார்த்து மனமுருகி உள்ளூர் மக்களின் பசி போக்க வடலூரின் “தருமசாலை”துவங்கியதும் ( “ஈதிடு என்ற போதவர்க்கிலை என்று சொல்லாமல்), சாதி மதம் சமயம் எல்லாம் பொய் – அவை மனிதர்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்றும் (“கலையுரைத்தகற்பனையே நிலையெனக்கொண்டாடும்கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக”), சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் என பாரபட்சம் பார்க்காமல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் மொழிந்ததுவும் வள்ளலாரின் கருத்துக்களில் சில.
சமகாலத்தில் ஆன்மீகத் தாக்கத்துடன் இயங்குபவர்களோ, எழுதுபவர்களோ இங்கிருக்கும் மதங்களுக்கு எதிராக பேசிக் கொண்டு இயங்கிவிட முடியாது. அதுவும் 1800-களில் சன்மார்க்கத்திற்கு எதிராக நிறைய குரல்கள் எழுந்த நிலையில், தொடர்ந்து தன் இலக்கில் இருந்து மாறாமல் இயங்கிக் கொண்டிருந்தவர் வள்ளலார்.
“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே”
எனும் இவர் பாடல் , வள்ளலாரின் தீர்க்கத்தை சொல்கிறது.
செங்கோட்டை ஆவுடையக்காள்:-
தமிழ்ச் சமூகம் பல பெண் கவிகளை கொண்டிருந்தது என்றாலும், ஒளவையார், வெள்ளிவீதியார் எனும் வெகு சில பெண்களின் பெயர்கள் மட்டும் தான் வெகுசனத்திற்கு அறிமுகமானதாக இருக்கிறது. இந்த கட்டுரைக்கான ஆய்வுப் பணியை தொடங்கும் வரை, ஆவுடையக்காள் எனும் பெயர் எனக்கு தெரிந்திருக்கவில்லை தான். கோவை இந்துஸ்தான் கல்லூரியின் பேராசிரியர் சுப செல்வியிடம் பேசுகையில் அவர் தான் ‘ செங்கோட்டை ஆவுடையக்காள்’ எனும் கவியின் சாதனைகள் குறித்து எழுதச் சொன்னார்.
ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலியில் பிறந்த ஆவுடையக்காள், குழந்தை திருமணத்திற்கு ஆட்படுத்தப்பட்டு இளம் வயதில் விதவையானவர். இருந்தாலும் கல்வி கற்றே ஆக வேண்டும் என தீர்க்கமாக இருந்து படிப்பை தொடர்ந்திருக்கிறார். பாடல்கள் எழுதவும் செய்திருக்கிறார். கைம்பெண்ணாக இருந்து கல்வி கற்று பாடல்கள் எழுதியதனால் அவரை அவர் சாதியினர் விலக்கி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இயங்கிக் கொண்டுமே இருந்திருக்கிறார் ஆவுடையக்காள்.
சமகாலத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நம்மால் யூகிக்க முடிகிறது, ஆவுடையக்காளின் காலத்தில் எந்தெந்த கோணங்களில் அவர் ஒடுக்கப்பட்டார் என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அப்படியான ஒரு காலத்தில் குழந்தை திருமணம் எனும் வழக்கத்தினால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளித்ததுவும், சமூக வழக்கங்கள் என சொல்லப்படுபவை பலவற்றில் இருக்கும் பிற்போக்குத்தனங்களையும் பாட்டில் கொண்டு வந்ததுவும் தான் ஆவுடையக்காள் செய்த சாதனை.
ஆவுடையக்காள், பாரதியாருக்கு பெரும் ஊக்கமளிக்கும் ஒரு ஆளுமையாகவும் இருந்திருக்கிறார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆவுடையக்காளின் புத்தகத்தை அறிமுகம் செய்யும் கட்டுரை ஒன்றில், பாரதியின் வரிகளுக்கும் ஆவுடையக்காளின் வரிகளுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை இப்படி குறிப்பிடுகிறார்,
//ஜாதி வர்ணாசிரமம் போச்சே
வேத சாஸ்திரம் வெறும் பேச்சே//
என்று அக்காள் ( ஆவுடையக்காள்) பாடினால்,
//ஜாதிச் சண்டை போச்சோ- உங்கள்
சமயச் சண்டை போச்சோ//
என்று பாரதி பாடுகிறார்.
//காம குரோதமும் போச்சே
மோக இருளும் போச்சே’//
என்று அக்காள் பாடுகிறாள்.
தம்பி பாரதியோ,
//பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே//
என்று பாடுகிறார்.
“வேதாந்தக் கும்மி” என ஆவுடையக்காள் பாடியது,
//கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர சம்சார சாகரத்தில்
ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்
சிந்தித்துக் கும்மியடியுங்கடி- தினம்
வந்தித்துக் கும்மியடியுங்கடி//
என இத்துடன் பாரதியின் ‘பெண்கள் விடுதலைக் கும்மியை’ ஒப்பிடலாம்.
வெள்ளியங்காட்டான்:
கோவையின் வெள்ளியங்காடு கிராமத்தில் பிறந்தவர் இராமசாமி. அடிப்படை கல்வியறிவை மட்டுமே பெற முடிந்தது என்றாலும், இலக்கணங்கள் இலக்கியங்கள் எனத் தொடர்ந்து வாசித்திருக்கிறார். எழுதவும் தொடங்கியிருக்கிறார். பல எழுத்தாளர்களை போலவே, வெள்ளியங்காட்டானும் தொடர்ந்து வறுமையால் பாதிக்கப்பட்டவர் தான். காந்தியவாதியும் கூட. கர்நாடகாவிற்கு சென்று ஏதாவது வேலை செய்து பிழைப்போம் என்று போயிருக்கிறார். வேலையை தொடர்ந்தாரா தெரியவில்லை, கன்னடம் கற்றுக் கொண்டு அம்மொழி படைப்புகளைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். சில காலம் தையல் வேலை செய்தார். திண்ணைப் பள்ளியின் ஆசிரியராக இருந்திருக்கிறார், விடுதிக் காப்பாளராகவும் இருந்திருக்கிறார். பத்திரிக்கைக்கு மெய்ப்பு பார்க்கும் பொறுப்பிலும் இருந்திருக்கிறார், தோட்ட மேலாளராகவும் இருந்திருக்கிறார்.
1940-ல் ஊர் முழுக்க பலர் காலராவால் உயிரிழந்து கொண்டிருந்த போது, பக்கத்தில் இருந்த வேலைக்காரர் ஒருவரை தன் குடிசையில் வைத்து காப்பாற்றியதற்காக ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். பால் வியாபாரம் செய்து தினசரி தேவைகளை சமாளித்துக் கொண்டிருந்ததாம் கவிஞரின் குடும்பம் – ஒரு நாள் அவருடைய மனைவி பாலில் தண்ணீர் கலப்பதை பார்த்ததும், பால் இருந்த பாத்திரத்தை எட்டி மிதித்திருக்கிறார். தடுமாற்றங்களுக்கு மத்தியில் அவர் வெளியிட்ட முதல் கவிதை தொகுப்பு விற்றுத் தீர்ந்து கொஞ்சம் வறுமை மாறும், புத்தகத்தை படிப்பவர்கள் யாரேனும் புரட்சிப்பாதையை தேர்வு செய்வார்கள் என்று கவிஞர் நம்பியிருந்தார். ஆனால், புத்தகங்களை பழைய பேப்பர் எடைக்கு வாங்குபவரிடம் கொடுத்து காசு வாங்க வேண்டிய நிலை உண்டானது. இருந்தாலும் “ சுண்டலோ கடலையோ வாங்கி கொறிப்பவன் என் கவிதையையும் படிப்பானே!” என்றாராம் வெள்ளியங்காட்டான்.
தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அளவு பிரம்மாண்டமான சாதனைகளை வெள்ளியங்காட்டான் செய்து விடவில்லை என்றாலுமே, தனிநபராக தன்னுடைய அறம் எந்த பொழுதிலும் மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் அவர். கூடவே, ஒரு தனிநபருக்கு இருக்கும் உரிமை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார் என்பது அவருடைய கவிதைகளின் வழியே தெரிகிறது.
மாபெரு மிந்த வுலகம் முழுவதும் மக்களுடைமையடா – அடா மக்களுடைமையடா” எனும் வரியும், ” அடிமையாக மாட்டேன், எவர்க்கும் அடிமையாக மாட்டேன் ; கொடுமை கோடி செய்து என்னை கொன்று விட்ட போதிலும்..” எனும் வரியும் கவிஞரின் வைராக்கியத்தையும், பொதுநலன் குறித்த பார்வையையும் விளக்குகிறது.
வாழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் “ நான் ஒரு கவிஞன்” என்று திமிரோடு சொல்லித் திரிந்த வெள்ளியங்காட்டான், புற்றுநோயால் இறந்து போனார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அவர் எழுதியவற்றை கவிதைகளை தொகுப்பாக்கியதில் கவிஞர் புவியரசுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
பாரதிதாசன் :
”மானுட சமுத்திரம் நானென்று கூவு” எனும் வரி தான் பாரதிதாசன் எனும் மகாகவிவை எனக்கு அறிமுகப்படுத்தியது. தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பவை எல்லாம் பிரிவினைவாதத்திற்குக் காரணமாகி இருக்கும் நூற்றாண்டு இது. இதை அனுமானித்துத் தானே கவிஞர் இப்படி ஒரு வரியை எழுதியிருப்பார் ? எல்லைகளை பற்றுகளை எல்லாம் கடந்து நீ மனித இனமாக ஒற்றுமையோடு இரு எனும் கருத்து இன்று எவ்வளவு அவசியமாக இருக்கிறது?!
1891 ஆம் ஆண்டு பிறந்த கனக சுப்புரத்தினம், சக கவிஞர் பாரதியின் மீது கொண்ட அன்பினால் தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். இளம் வயதிலேயே கவி பாடும் திறமை இருந்தது. இலக்கண இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார். எழுத ஆரம்பித்த போது ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு இருந்ததால் இந்து தெய்வங்களை வணங்கி நிறைய எழுதினார். பிறகு பகுத்தறிவின் தாக்கத்தில் இயங்கினார் –கடவுள் மறுப்பு, பெண் கல்வி, விதவை மறுமணம் என பெண் விடுதலைக்காக எழுதினார். “ தலைவாரி பூச்சூட்டி உன்னை பாடசாலைக்கு..” எனும் பாடல் முந்தயை தலைமுறை பெண்களுக்குக் கிடைத்த பெரும் ஊக்கம் .விடுதலை போராட்டத்திலும் பங்கு கொண்டார். ஃபிரெஞ்சு அரசுக்கு எதிராக இயங்கினார் என சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். விடுவிக்கப்பட்ட பிறகு ஆசிரியர் பணியை தொடர்ந்தார்;தொடர்ந்து எழுதினார்; அரசியலிலும் இயங்கினார்.
“இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே,
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
வாயடியும் கையடியும் மறைவதென்னாள்
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றை
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார்தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே இல்லையாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்!!!”
என்ற கவிதை பாரதிதாசன் பேசிய பகுத்தறிவை முன்னிலைப்படுத்திக் காட்டுகிறது.
பாரதிதாசன் நாட்டின் மீதும், மொழியின் மீதும் பற்றோடு இருந்தவர் என்றாலுமே, அது பிரிவினைவாதாக கோட்பாடுகளாக மாறாமல் இருக்கும்படி சமநிலையை பாதுகாத்துக் கொண்டே இருந்தார் என்பது தான் அவருடைய சாதனையாக தெரிகிறது.
பாரதியார், ஒளவையார், வெள்ளிவீதியார், தாயுமானவர் என இப்பட்டியலில் நிறைய பெயர்களை இணைக்க முடியும். மக்கள் செயல்பாடு என்பது தமிழர் மரபில் ஒன்றிப் போன ஒரு விஷயமாக இருப்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்!