நாடகமும் பின் அவற்றிலிருந்து தோன்றிய திரைபடங்களும் மகிழ்வித்தது நடுத்தர மற்றும் ஏழை மக்களையே. பணக்கார மேல்தட்டு மக்கள் எப்போதும் தங்களுக்கான பொழுதுபோக்கென நிறைய வைத்திருந்தார்கள் அவர்கள் சினிமா பார்பதென்றால் அது அவர்கள் போன்ற மேல்தட்டு வர்க்கங்கள் பார்க்கும் சிறப்பு காட்சியாக இருக்கும். பாமரன் தன்னால் செய்ய இயலாததை தான் செய்ய வேண்டும் என்று கனவு கண்டதை திரையில் கதாநாயகன் செய்வதை தானே செய்வதாக எண்ணி மகிழ்ந்தான் , அதன் விளைவே திரையில் நடிக்கும் தன் ஆதர்ச நாயகனுக்கு நாட்டையே ஆளும் உரிமையையே கொடுத்தான் .இது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை உலகத்தில் பல நாடுகளில் நடந்து உள்ளது . திருவிழாவில் உழைத்து களைத்தவனின் சோர்வை போக்கவும் அவனை இளைப்பாறவும் செய்தது வள்ளிதிருமண நாடகம், பாட்டு கச்சேரி என அனைத்தும் காலம் மாற அந்த இளைப்பாறளை சினிமா தந்தது. இப்போது பிரச்னை அந்த சினிமாவும் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் இருந்து மறைமுகமாக பிடுங்கப்படபோகிறது என்பதே .
கேளிக்கை வரி
திரைப்பட ரசிகனை திரையரங்கு பக்கமே வர விடாமல் துரத்தி அடிக்கும் முதல் விஷயம் ‘ டிக்கெட்டின் விலை ‘.சினிமா கட்டணத்தைபற்றி பேசும்முன் முதலில் சினமாவிற்குள் இருக்கும் சில பிரச்னைகளை பற்றி பார்போம். போன அக்டோபர் திரையரங்க உரிமையாளர்கள் ‘ லோக்கல் பாடி என்டர்டெய்ன்மென்ட் டாக்ஸ் என்ற கேளிக்கை வரியை ( Local Body Entertainment Tax (LBET) ) குறைக்க சொல்லி திரைப்படங்களை வெளியிடாமல் வேலை நிறுத்தம் செய்தார்கள் . பின் முதலமைச்சர் கேளிக்கை வரியை குறைத்தபின் அந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது அந்த ராசி இந்த ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டுமாதங்களுக்கு மேலாக எந்த திரைப்படங்களும் திரையிடாமல் இருந்தன , இந்த முறை கியூப் ,யூ.எஃப்.ஒ நிறுவன கட்டணங்களுக்கு எதிராக திரைபட தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு என எந்த புது திரைப்படங்களும் தமிழகத்தில் வெளியிடப்படவில்லை . சிலபல பேச்சுவார்த்தைக்குப்பின் அதுவும் முடிவுக்குவந்தது , பெப்சி தொழிலார்கள் பிரச்சனை எப்போதுமே இருக்கும் ‘சிந்துபாத் ‘ பிரச்னை அதுக்கு ஒரு எண்டுகார்டே கிடையாது.
சினிமாவில் இருக்கும் முதல் சிக்கல் அதனுடைய கட்டமைப்பு. நடிகர்களின் சம்பளம், படத்தின் உண்மையான பட்ஜெட் , தொழில்நுட்பகலைஞர்களின் உண்மையான சம்பளம் என எதிலும் வெளிப்படைதன்மை இல்லாது இருப்பது . மிக முக்கியமாக பல பெரும் புள்ளிகளின் கருப்புப்பணமும் இதில் கலப்பதும்தான் .ஹீரோவின் மார்கட்டை மையபடுத்தி வியாபாரம் நடப்பதால் பல நல்ல சின்ன பட்ஜெட் படங்கள் காணமல் போய்விடுகிறது. சரி எதற்காக சினிமாவின் மீது நாம் இத்தனை அக்கறைகொள்ள வேண்டும் ? ஒரு நாட்டின் அல்லது ஒரு இனக்குழுவின் முந்தைய மற்றும் நிகழ்கால கலாச்சார மாற்றங்களை பதிவு செய்வதில் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது.போங்கப்பா அதுக்குதானே நம்ம இலக்கியங்கள் இருக்குனு சொல்ற நபர்களே கூட நம் தமிழ் இலக்கியத்தை முழுவதும் படித்திருக்க வாய்ப்பில்லை .
காட்சி ஊடகத்தின் பலம்
ஒரு காட்சி ஊடகத்தின் வழியே அது மக்களை சென்று அடையும்போது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக ஏழாம் அறிவு படத்திற்குபின் தான் போதிதர்மர் என்ற நபர் தமிழகத்தின் எல்லா மூலைக்கும் கொண்டுசெல்லப்பட்டார். சினிமா எதையும் எளிதில் மக்களை சென்றடைந்துவிடும் என்பதால்தான் பல நல்ல சினிமாக்கள் தடைசெய்யப்பட்டுள்ளது, தணிக்கை குழு வைத்து மக்களுக்கு எவையெல்லாம் சொல்லகூடாது என்பதில் தெளிவாக உள்ளது அரசாங்கம். இருந்தும் மக்கள் சினிமாவின் மீது காட்டு ஈடுபாட்டாலும் மக்கள் சார்ந்து பல நல்ல விஷயங்கள் இருப்பதாலும்தான் தமிழில் பெயர் வைத்தால் வரி நீக்கம் என்றெல்லாம் அரசும் சலுகைகள் வழங்குகிறது, விருதுகள் தந்து ஊக்கப்படுத்துகிறது.அது வெறும் தொழில் மட்டும்தான் என்றால் அரசு இத்தனை அக்கரை காட்டிருக்காது.
சரி , சினிமாவுக்கு பாமரன் என்னவெல்லாம் செய்கிறான் ? சினிமா தனது துன்பங்களை தொலைக்கும் ஒரு இடமாகவே கருதி அதை கொண்டாடி தீர்க்கிறான் , ரசிகனாக மட்டும் தன்னை நிறுத்திகொள்ளாமல் சினிமாவை தன் வாழ்கையில் ஒரு அங்கமாகவே பார்கிறான் ( இது சரி தவறு எல்லாம ஒரு புறம் இருக்கட்டும் அவனுக்கு அந்த மூன்று மணிநேர மாயை பிடிக்கவே செய்கிறது ) எப்போதெல்லாம் சினிமா பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்கிறதோ அப்போதெல்லாம் ,கலைநிகழ்ச்சி , விளையாட்டு என நிகழ்த்தி அதில் வரும் வருமானத்தைகொண்டே அவர்கள் அதில் இருந்து மீண்டு வருகிறார்கள் ,அதனால்தான் ஒவ்வொருமுறையும் அதுபோன்ற நிகழ்வுக்கு மக்களின் பெரும் ஆதரவை வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்கள் . நேரடியாகவோ மறைமுகமாகவோ மக்கள் சினிமாவுடன் தொடர்பிலேயே இருக்கிறார்கள்.அப்படி இருக்கும் போது , சினிமா பாமரனை விட்டு தன்னை துண்டித்துக்கொள்ள என்பது நம்பும் படியாக இல்லை சரிதானே ?
சினிமாவின் இன்றைய முகம்
எனது சிறுவயதுமுதலே சினிமா ஒரு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகவே இருந்தது , பெரும்பாலும் குடும்பம் குடுமபமாகத்தான் திரைபடங்களுக்கு செல்வார்கள் ஆனால் இப்போது அது கண்டிப்பாய் சாத்தியம் இல்லை , ஒரு நடுத்தர வர்கத்தின் ஒரு மாத சம்பளத்தை ஒரேஒரு திரைப்படம் பிடிங்கிகொள்ளும் என்பதில்தான் ஆரம்பிகிறது பாமரனின் பிரச்னை. சரத்குமாரில் ஆரம்பித்து இப்போது விஷால் வரை சினிமா டிக்கெட்டின் விலை முறைபடுத்தப்படும் என்று சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள் ஆனால் அது நடந்தபாடாய் இல்லை . அவர்களுக்கு நேரடி பிரச்னை என்றால் வேலைநிறுத்தம் அரசிடம் முறையிடுவது என்று காட்டும் முனைப்பில் சிறிய அளவைகூட அவர்களை வாழ வைக்கும் ரசிகனின் பிரச்சனை மீது இல்லை என்பதே நிதர்சனம் .
திரையரங்கின் பிற சேவை கட்டணம்
முதலில் பார்க்கிங்கில் இருந்து ஆரம்பிப்போம் ,அரசு நிர்ணயிக்கப்பட்ட பார்கிங் கட்டணத்தை எந்த தியேட்டரிலும் வசூலிப்பதே இல்லை , ‘மால்’களில் இன்னும் கொடுமை படத்தின் டிக்கெட்டுக்கு இணையாக பார்க்கிங் கட்டணம் மட்டுமே செலுத்தவேண்டிவரும் , பின் நாம் வெளியில் இருந்து கொண்டு செல்லும் உணவு பொருள்களுக்கு அனுமதி இல்லை காரணம் கேட்டால் மயக்க மருந்து கலந்துகொடுத்து பொருட்களை திருடி சென்ற ஒரு சில சம்பவங்களை சொல்கிறார்கள் , ஆயிரத்தில் ஒன்றுதான் இப்படி நடந்து இருக்கிறது கண்டிப்பாய் இதற்கு ஒரு தீர்வு சொல்லித்தான் ஆக வேண்டும் . சென்ற ஆண்டு மால்களிலும் தியேட்டரிலும் தண்ணீர்கூட தர மறுக்கிறார்கள் என்று ஒரு பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அதன்பின் கட்டாயமாக தண்ணீர் வைக்கப்பட்டது . இன்னும் நிறைய தியேட்டரில் தண்ணீர் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதி யாருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. ! பார்வையாளனுக்கு எந்த வசதியையும் இலவசமாக வழங்க கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். ஒரு லிட்டர் பாட்டில் தண்ணியின் விலை சாதாரண தியேட்டரில் ரூ 3௦-5௦ ரூபாய் வரை விற்கப்படுகிறது மால்களில் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதே தண்ணீர் பாட்டில் அதே திரையரங்க வாசலில் இருக்கும் கடையில் வாங்கினால் அதன் விலை ரூ 15-20 வரை மட்டும் தான்.
தியேட்டர் மற்றும் மால்களில் விற்கும் உணவு பொருள்களின் விலையை உண்மையில் நிர்ணயிப்பது யாரு? ஏன் அதை அரசு கேள்வி கேட்க மறுக்கிறது? பார்சல் கவருக்கு கூட இரண்டு ரூபாய் கேட்பவர்களுக்கு நாம் ஏன் எந்த கேள்வியையும் கேக்காமல் அவர்கள் கேட்கும் பணம் கொடுக்க வேண்டும் ? உடனே உங்களை யார் அங்கு சென்று படம் பார்க்க சொன்னார்கள் என்று எதிர் கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள் ! பணக்காரர்கள் மட்டும் வாழும் தேசம் அல்ல இது , இங்கு எல்லாருக்குமான இடம் உண்டு. சினிமா டிக்கெட்டின்விலை கிராமம் ,நகரம் என்று அரசு விலையை நிர்ணயித்து உள்ளது கடைசியாக ஜி.எஸ்.டிக்குப்பின் சென்னையில் இருக்கும் மல்டிபிலக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட்டின் விலை 16௦ ரூபாய் மற்றும் குறைந்தபட்சம் 5௦ரூபாய் . சென்னைக்கு வெளியே இருக்கும் மல்டிபிலக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட்டின் விலை 14௦ குறைந்தபட்சம் 5௦ . இது போன்றே நகராட்சி மற்றும் கிராமபகுதிகளுக்கான டிக்கட்டின் விலையை நிர்ணயித்து உள்ளது. இங்க எழும் ஒரே கேள்வி எத்தனை தியேட்டர்களில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது . அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மக்கள் ஒவ்வொரு முறையும் நுகர்வோர் நீதிமன்றத்தை மட்டுமே அனுக வேண்டுமா?.
ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் பட டிக்கெட்டின் விலை பல ஆயிரங்களை எட்டுகிறதே அதை தடுக்காமல் இருப்பது ஏன்? சினிமாவின் அழிவிற்கு காரணம் திருட்டு வி,சி.டி மற்றும் இணையதள திருட்டு வெளியீடு என்று தொடர்ந்து குமுறும் திரையுலகம் , ரசிகனை திரையரங்கை நோக்கி வரவே பயப்படும் அளவு செய்துவிட்டதை கவனிக்க மறுக்கிறது . எனது பள்ளி நாட்களின்போதுதான் பருத்திவீரன் படம் வந்தது . படம் திரைக்கு வரும்முன்னரே படத்தின் திருட்டு வி,சி.டி வந்ததாக புகார் அளித்தார் நடிகர் கார்த்திக் , இன்னும் நினைவிருக்கிறது அந்த செய்தி .படம் மிகப்பெரிய வெற்றி. பருத்திவீரன் வெளியான அதே தினத்தில் வெளியான இன்னொரு படம் “மொழி”. இத்தனைக்கும் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. கதா நாயகி ஊமை வேற. அந்த படமும் தனி கவனத்தை பெற்றதோடு, தயாரிப்பாளருக்கும் லாபம் சேர்த்தது. காரணம் நல்ல படத்தை மக்கள் தியேட்டரில் சென்று பார்ப்பதையே விரும்பினார்கள் . மக்கள் வருகிறார்கள் என்ற ஒற்றை காரணத்திற்காக அவர்களிடம் எல்லா விதமாகவும் கட்டணத்தை வசூல் செய்ய ஆரபித்ததின் விளைவு. மக்கள் தியேட்டர் வருவதை குறைத்து கொண்டார்கள் பல திரையரங்கம் திருமண மண்டபமாக மாறியதுதான் மிச்சம் ! .நூறு நாட்கள் ஒடும்படத்தையே அரை மனதோடுதான் வெற்றிபடமாக அறிவிப்பார்கள் அனால் இன்றோ வெற்றிகரமான மூன்றாம் நாள் என்று போஸ்டர்கள் பார்க்கிறோம். விரைவில் சினிமா என்பது மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமானதாக மாறும் என்பதில் சிறு ஐயமும் இல்லை!.
ஒரு பொருளின் விலை என்பது பொருளின் உற்பத்தி செலவை பொறுத்தே அமையும். தொழிலாளர்கள் சம்பளம் ,போக்குவரத்து செலவு , விளம்பர செலவு எல்லாவற்றையும் சேர்த்து. இப்போது சினிமாவில் அதே உத்தியை பயன்படுத்த முடியாததே இங்கு பெரும் பிரச்னை . அந்த பொருளின் உற்பத்திக்கு தேவை இல்லாத விஷயங்களுக்கு செய்யப்படும் எல்லா செலவும் அந்த பொருளின் மீது வந்து விழுகிறது அது கடைசியாக ரசிகனிடம் வசூல் செய்யப்படுவதே கொடுமை . சினிமா கொஞ்சமாது ரசிகனின் நலன் சார்ந்து சிந்திக்குமா என்பதே தொங்கி நிற்கும் கடைசி கேள்வி !
ஒரு பொருளின் விலை என்பது பொருளின் உற்பத்தி செலவை பொறுத்தே அமையும் தொழிலாளர்கள் சம்பளம் ,போக்குவரத்து செலவு , விளம்பர செலவு எல்லாவற்றையும் சேர்த்து இப்போது சினிமாவில் அதே உத்தியை பயன்படுத்த முடியாததே இங்கு பெரும் பிரச்னை . அந்த பொருளின் உற்பத்திக்கு தேவை இல்லாத விஷயங்களுக்கு செய்யப்படும் எல்லா செலவும் அந்த பொருளின் மீது வந்து விழுகிறது அது கடைசியாக ரசிகனிடம் வசூல் செய்யப்படுவதே இங்கு பெரும் பிரச்னை.
Web Title: Cinema and its Business
Featured Image Credit: starviews