“Children of Heaven” சுவர்க்கத்துச் சிறுவர்கள்

உலக சினிமா என்றாலே ஈரானிய சினிமாக்களுக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் சினிமாவிற்கு கொடுக்கப்படும் உயர் விருதுகள் பலவற்றை ஈரானிய சினிமாக்கள் தன்வசப்படுத்திவிடுகின்றன. அதுபோன்று உலக சினிமா இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் “சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்” (Children of Heaven) படத்தை பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம் .

அலி, சாரா என்ற அண்ணன் தங்கையையும் அவர்களின் காலணியை பற்றியதும்தான் இந்தப் படம், ஒரு மசூதியில் வேலை செய்துகொண்டே, கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார் கதையின் நாயகன் சிறுவன் அலியின் தந்தை. மூன்றாவது குழந்தை பிறந்து உடல்நிலை சரி இல்லாததால் வீட்டு வேலைகள் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார் அலியின் தாய். எனவே அம்மாவுக்கு உதவியாக இருக்கும் பொறுப்பும் அலி, சாராவுக்கு வருகிறது .

(i.ytimg.com)

ஒருநாள் சாராவின் காலணி பழுதடைய அதை தைப்பதற்காக கொண்டு செல்லும் அலி அதை தொலைத்து விட சோகமாக வீடு திரும்புகிறான். (இனிமேல்தான் நாம் அலி, சாராவோட குழந்தையாகவே பயணிப்போம். அந்த உணர்வை இயக்குனர் நம்மிடையே கடத்திய விதம் உண்மையிலேயே அற்புதம்) வெறும் கையேடு வரும் அலியை கண்டு சாரவும் சோகமாக யார் இப்போது காலணி தொலைந்த விஷயத்தை சொல்லுவது என்று இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல் நம் மனதில் நீங்காமல் நிற்கும் ஒரு காட்சி. அப்பாவிடம் சொன்னால் கோபப்படுவார் என்பதை தாண்டி அவரால் புதிய காலணி வாங்கித்தர இயலாது என்று இறுதியில் அலியின் காலணியை காலையில் சாரா அணிந்து தன்னுடைய பள்ளிக்கு போவதும், சாரா போய் திரும்பிய பின் அதை மாட்டிக்கொண்டு அலி பள்ளி போவதாகவும் முடிவு செய்வார்கள். (அவுங்க ஊர்ல ஷிப்ட் முறைல ஸ்கூல் இருக்கும் போல)

காலையில் பள்ளி செல்லும் சாரா மணி அடித்ததும் அங்கிருந்து அண்ணனுக்காக ஓடி வருவதும் அங்கிருந்து அதை அலி அணிந்து ஓடும் காட்சி நாம் “நமது பாலியத்தில் புது சீருடை வாங்கமுடியாமல் நமது அண்ணன்களின் சீருடை அணிந்து சென்ற நியாபகம் வருகிறது”. பள்ளியில் சாராவிற்கு தேர்வு வர அண்ணன் காத்திருப்பதை எண்ணியபடியே பதில் தெரிந்தும் பாதியிலேயே தேர்வை முடித்து ஓடுகிறாள் சாரா. தாமதமாக வந்த தங்கையை திட்ட கண்ணீருடன் சாரா பார்கும் அந்தக்  காட்சி ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாலும் போதாது.

(eastcoaststories.com)

அதன் பின் ஒரு வார இறுதியில் நகர்ப்புற பெரிய வீடுகளில் தோட்டங்களை செப்பனிடும் பணி கிடைக்குமா என்று கேட்க கருவிகளோடு அலியையும் அழைத்து செல்கிறார் அவன் தந்தை. (அவர்களிடம் ஆங்கிலத்தில் மரியாதையாக பேச அலி உதவுவான் என்று) அந்த பெருநகர மாடி வீடுகளை அவர்கள் பார்க்கும் காட்சியும் அந்த ஏக்கமும் நம்மில் நுழைவதை தடுக்கமுடியாது. சில பல ஏமாற்றத்திற்கு பின் கிடைக்கும் ஒரு வாய்ப்பில் பணம் ஈட்டிய மகிழ்ச்சியில் அவர்கள் வேகமாக வர ஒரு சரிவில் விழுந்து சைக்கிள் உடைந்ததும் அலியின் புது காலணி கனவு மீண்டும் உடையும். (பணம் வந்த மகிழ்வில் அவர்கள் இறக்கத்தில் வேகமாக பயணிக்கும் காட்சியில் இயக்குனர் காட்டிய குறியீடு அருமை)

இந்த நேரத்தில் சாரா தன் பள்ளியில் பயிலும் சக மாணவி அந்த காலணியை அணிந்திருப்பதை பார்த்து அலியிடம் சொல்ல, இருவரும் அந்த குழந்தையை பின் தொடர்வார்கள். அந்த குழந்தை வீட்டிற்கு சென்றதும் கண் தெரியாத தந்தை வியாபாரத்திற்காக வெளியே வருவார். இதை பார்த்த சாராவும் அலியும் எதுவும் கேட்காமல் வந்துவிடுவார்கள். இவ்வளவு ஏழ்மையிலும் தாங்கள் கஷ்டபட்ட போதும் பிறர் துன்பத்தை பெரிதாக அந்த குழந்தைகள் எண்ணியது இயக்குனர் தெய்வமே நீங்க வேற லெவல் (அந்த காட்சி அமைக்கப்பட்ட விதமும் செம! இந்த ஒரு காட்சி குழந்தைகள் தெய்வத்திற்கு சமம் என்று உணர்த்திவிடும்)

(amazon.com)

ஒருநாள் அவர்கள் ஊரில் ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது. முதல் இரண்டு இடத்திற்கு கோப்பையும், மூன்றாவது இடத்திற்கு புது காலணி ஒன்றையும் பரிசாக அறிவிக்க, பள்ளி விளையாட்டு ஆசிரியரிடம் தானும் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்கிறான் அலி. ஆனால் ஏற்கனேவே ஓடும் நபர்களை தேர்ந்தெடுத்துவிட்டதாக சொல்ல, அவர் முன் அலி மைதானத்தில் ஓடிக்காட்டுவான். அவனது முயற்சியை கண்டு அவனையும் போட்டியில் சேர்த்துகொள்வார் ஆசிரியர். தங்கையிடம் புது காலணியுடன் வருவதாக சொல்வான் அலி.

ஓட்டப்பந்தயம் நடக்கும் இடத்தில எல்லா குழந்தைகளும் புது காலணி, டிராக் என வர தன் பழைய காலணியுடன் நிற்பான் அலி. பந்தயம் தொடங்க, அனைவரையும்விட வேகமாக ஓடிய அலி, மூன்றாமிடத்திற்குத்தான் காலனி என்பதை உணர்ந்து வேண்டுமென்றே மெதுவாக ஓட, மூன்றாவது இடத்திற்கும் சிக்கல் வந்து விழுந்துவிடுவான். இங்கு சாரா ஓடுவது காட்டப்படும். ஆம் சாரா பள்ளியில் ஓடிருவரும் காட்சி அலியின் நினைவுக்குவர மீண்டும் ஓடுவான். கடைசி சிலநொடிகள் நான்கு மாணவர்களும் எல்லைக்கோட்டை கடக்க அனைவரும் கீழே விழுந்துவிடுவர். விழுந்த அலியை அவனது ஆசிரியர் தூக்கியதும், அலி அவரிடம் சார் நான் மூணாவதா வந்துட்டனா? என்று கேட்க, நீ தான்டா முதலிடம் என்று சொல்வர் ஆசிரியர். அங்கிருந்த அனைவரும் அலியை தூக்கிவைத்து கொண்டாட, கிடைக்காத காலணியை பார்த்து அழுதுகொண்டிருப்பான் அலி. அலிக்கும்சாராவுக்கும் புது காலணி கிடைத்ததா இல்லையா என்று இறுதி ஷாட்டில் காட்டியிருப்பார் இயக்குனர். அதை படம் பாத்து தெருஞ்சுக்கோங்களே! (இந்த இறுதி காட்சியை நமது தமிழ் சினிமா நிறைய காப்பி அடித்திருக்கிறது)

(simbasible.com)

1997ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது. சாரா தன் அண்ணனின் காலணியை கால்வாயில் தவறவிட்டு துரத்தும் காட்சி, கடைசி ஓட்டப்பந்தய காட்சி போன்றவை கண்டிப்பாய் தவறவிடக்கூடாத காட்சிகள். ஈரானில் சினிமா என்பது பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. அங்கு இதுபோன்ற படைப்புகள் வருவதுதான் வியப்பு. வெறும் குழந்தைகள் திரைப்படமாக எடுக்காமல் எல்லாரும் ரசிக்கும்படி எடுத்த இயக்குனர் “மஜீத் மஜீதி“க்கு எத்தனை விருது கொடுத்தாலும் தகும் ..

மீண்டும் ஒரு உலக சினிமாவோடு சந்திப்போம் …

Related Articles

Exit mobile version