பழைய புத்தகக் கடை ஒன்றுக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள பிரபலமான அசைவ உணவகத்துக்குக்கு பக்கத்தில் உள்ள அக்கடையில் ஏராளமான ஆங்கில, தமிழ் புத்தகங்கள் உள்ளன. அதை நடாத்திவரும் வேற்று மொழி பேசும் மனிதர் புத்தகத்தின் பெறுமதியை அதன் தடிப்பத்தை வைத்தே மதிப்பிடுவார். புத்தகம் கிழியாமல் கொள்ளாமல் இருந்தால் அதிகம் விலை சொல்லுவார். அதிகம் சேதமான மிக நல்ல எழுத்தாளரின் புத்தகத்தை கூட குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
அப்படி ஒரு நாள் அந்தப் பழைய புத்தகக் கடைக்குப் போனபோது, குமுதம், ஆனந்த விகடன், ஒரு சில பழைய “பக்தி” சஞ்சிகைகளுக்கு இடையே சில “ராணி காமிக்ஸ்” புத்தகங்களும் கிடந்தன. கிட்டத்தட்ட பதினைந்து இருபது வருடங்களுக்குப் பிறகு இந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களை பார்க்கிறேன். ஒரு பெண்ணின் முக முத்திரை பதித்த ராணி கொமிக்ஸ் புத்தகங்கள் இன்னும் வெளிவருகின்றனவா என்பது தெரியவில்லை. அதில் கிடந்தவை இரண்டாயிரமாம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்தவை.
ராணி காமிக்ஸ் மீதான என் ஈடுபாடு ஆறாம், ஏழாம் ஆண்டுகளில் மிக அதிகமாக இருந்தது. எட்டாம் ஆண்டுகளில் அதை படித்திருந்ததாக எனக்கு நினைவு இல்லை. அதற்கு பிறகு இன்றைக்குத்தான் முகமூடி வீரர் மாயாவி வாழ்ந்திருந்த ராணி காமிக்ஸ் புத்தகங்களை பார்க்கிறேன்.
ஹாரி போட்டார்கள், அனிமேசன் படங்கள் எல்லாம் வெளிவராத அந்தக்காலத்தில் எங்களின் கனவுலக ஹீரோவாக இருந்தது மாயாவி தான். அவர் குத்தினால் தாடையில் மண்டை ஓட்டு குறி பதியும், அதை அழிக்கவே முடியாதாம், என்னதான் பிரச்சனை இருந்தாலும் கடைசி நேரத்தில் விஜயகாந்த், எம்.ஜி. ஆர் போல மாயாவி வந்து எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி விடுவார். மாயாவிக்கு ஒரு கேர்ள் பிரெண்டும், சில உதவியாளர்களும் இருந்ததாக நினைவு இருக்கிறது. மாயாவியும் கேர்ள் பிரேண்டும் தங்க கடற்கரையில் குளிப்பதாக படங்களுடன் வரும் கிளாமர் காட்சிகளில் கூட எதிரிகள் குறுக்கிடுவதும் மாயாவி அவர்களை தாக்குவதுமாக ஆக்ஷன் நிறைந்ததாகவே இருக்கும். பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
என்னைப் போலவே பாடசாலையில் நிறையப்பேர் ராணி கொமிக்ஸ் பைத்தியங்களாகவே திரிந்தார்கள். யார் அதிகம் புத்தகங்கள் வாசித்தார்கள் என்று போட்டியே நடக்கும். பாடம் நடக்கும்போதுகூட கொப்பிக்குள் வைத்து சிலர் வாசித்து ஆசிரியரிடம் அடியும் வாங்குவார்கள். பாடசாலைக்குள் இந்த புத்தகங்கள் கொண்டு வரக்கூடாது என்று தடைச்சட்டம் கூட இருந்தது. அதை மீறி ரகசியமாக கொண்டுவருவதும் அதை நண்பர்களுடன் பரிமாற்றி கொள்வதும் மாயாவி கதையை விட சுவாரசியமாக இருக்கும்.
சில நண்பர்கள் இந்த புத்தகங்களை வாடகைக்கும் விடுவார்கள். வாடகை இரண்டு “stickers” ஆகவோ அல்லது வேறு பண்ட மாற்றுப் பொருளாகவோ இருக்கும். ரெக்ஸ், ரேயான் என்று வேறு பாத்திரங்கள் இருந்தாலும் மாயாவிக்குத்தான் அதிகம் மவுசு இருந்திருக்கிறது. சில அரிதான மாயாவி புத்தகங்கள் எட்னா சொக்கோலேட்டில் வரும் கிரிக்கெட் வீரர்களின் ஐந்து “stickers” வரை விலை போயிருக்கின்றன.
சில சமயங்களில் ஆசிரியரோ , மாணவர் தலைவர்களோ இந்த ராணி காமிக்ஸ் புத்தகங்களை கண்டு பிடித்து கிழிக்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஒரு நாள் நண்பன் ஒருவனின் நான்கு புத்தகங்களை மாணவ தலைவர் கிழித்து விட்டதால் அவன் நாள் முழுக்க அழுது கொண்டு இருந்தான். நாங்கள் எல்லாம் போய் ஆறுதல் கூறினோம். பின்னர் ஒரு காலத்தில் வகுப்பறை நூலகம் என்று ஒரு நடைமுறை வந்த போது எங்கள் வகுப்பு அலுமாரியில் நிறையவே ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் ஒரு சில பாரதியார், ராமகிருஷ்ணர் புத்தகங்களும் இருந்தன.
இப்படி சில காலங்களில் அறுபது எழுபது பக்கங்களுடன் வந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் முகமூடி வீரர் மாயாவியின் வீர சாகசங்களும் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி விட்டிருந்தன. இன்றைக்கு வாசிக்கும் சுஜாதாக்களுக்கும், ராபின் ஷர்மாக்களுக்குமான ஆரம்பம் இது போன்ற மாயாவிகள் வாழ்ந்த கொமிக்ஸ் புத்தகங்களால்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம்?
வசதிவாய்ப்புக்கள் மட்டுப்பட்டிருந்த, தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மாயாவிக்கள், அம்புலிமாமாக்கள் தந்த அனுபவத்தினையும் திருப்தியினையும் எம் ஸ்மார்ட் போன்களிலும் ,Tab களிலும் இருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களும் கேம்ஸ்களும் எப்போதுமே தருவதில்லை.